நாம் எல்லா சூழ்நிலைகளிலும், எல்லாவற்றிற்காகவும், எல்லா மனுஷருக்காகவும் ஸ்தோத்தரிக்கும்படி வேதம் கூறுகிறது.
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து” (எபேசியர் 5:20).
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1தெசலோனிக்கேயர் 5:18).
“நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும்... ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” (1தீமோத்தேயு 2:1).
சர்வத்தையும் ஆளும் தேவனது சர்வ வல்லமையை நாம் கண்டுகொள்ளும்போது மாத்திரமே, நாம் இவ்வாறு தேவனை அர்த்தத்துடன் ஸ்தோத்தரித்திட முடியும்!
தேவன் எவ்வாறு இயேசுவை கவனித்துப் பாதுகாத்தாரோ “அதே போலவே” நம்மையும் காக்கிறார்! இயேசுவுக்கு உதவி அளித்த அதே கிருபை, அவர் ஜெயம் பெறுவதற்கு அருளப்பட்ட அதே பரிசுத்தாவியின் வல்லமை, இப்போது நமக்கும் அருளப்படுகிறது!
யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுத்தான், பேதுரு அவரை மறுதலித்தான், அவருடைய சீஷர்களும் அவரைக் கைவிட்டுச் சென்றனர், திரளான ஜனங்கள் அவருக்கு எதிராகத் திரும்பினர்! அவர் அநீதியாய் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவராய், பொய்யாய்க் குற்றம் சாட்டப்பட்டவராய், சிலுவையில் அறையப்படும்படி அழைத்துச் செல்லப்பட்டார்! இருப்பினும் அவர் கல்வாரிப் பாதையில் செல்லும்போது, திரளானோரைத் திரும்பிப்பார்த்து, “எனக்காக அழாதீர்கள், நான் நன்றாகவே இருக்கிறேன்” என்று அவரால் சொல்ல முடிந்தது!! (லூக்கா 23:28).
ஆம், அவரிடம் சுய அனுதாபத்தின் சிறிய தடயம்கூட காணப்படவில்லை!
தாம் பானம் பண்ணின பாத்திரம் பிதாவினாலேயே அனுப்பப்பட்டது என்று அவர் நன்றாய் அறிந்திருந்தார். யூதாஸ்காரியோத்து, அந்தப் பாத்திரத்தைக் கொண்டுவந்த பணிவிடையாள் மாத்திரமே! எனவேதான் அவர் யூதாஸை அன்போடு பார்த்து “சிநேகிதனே” என்று அழைக்க முடிந்தது. தேவனுடைய பரிபூரண ஆளுகையில் விசுவாசம் இல்லாமல் நீங்கள் இவ்விதமாய் சொல்லிவிட ஒருக்காலும் முடியாது!
இயேசு பிலாத்துவிடம், “என் பிதா அதிகாரம் கொடாவிட்டால், உமக்கு என்மேல் ஒரு அதிகாரமும் இல்லை” என்றார் (யோவான் 19:11).
இந்த உறுதியான நம்பிக்கையே, இயேசுவை இந்த உலகில் கனம் பொருந்திய ஒரு ராஜாவைப்போல் நடக்கச் செய்தது! அவர் ஆவிக்குரிய கனத்தோடு ஜீவித்து அதே ஆவிக்குரிய கனத்தோடு மரித்தார்!
இப்போது நாமும் “இயேசு நடந்தபடியே நடப்பதற்கு” அழைக்கப்படுகிறோம். அவர் பிலாத்துவுக்கு முன்பாக “நல்ல அறிக்கையை சாட்சியாக விளங்கப் பண்ணியது” போல, நாமும் இந்த அவிசுவாசமுள்ள சந்ததி முன்பாக நல்ல அறிக்கை செய்திடக்கடவோம்!!
1தீமோத்தேயு 6:13-14 -இல் பவுல் தீமோத்தேயுவிடம், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு, எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார்.
தேவன் சகலத்தையும் நடந்தேறப்பண்ணும் தலையாய நன்மை என்னவெனில், நம்மை அவருடைய பரிசுத்தம் என்னும் திவ்விய சுபாவத்தில் பங்குபெறச் செய்வதேயாகும்! இந்த நோக்கத்தை நம்மில் நிறைவேற்றுவதற்காகவே, தம் மகத்துவமுள்ள ஆளுகையினால் நம் வாழ்வின் பாதையைக் கடக்கும் ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளுகிறார்! ஆகவேதான் நாம் எல்லா மனுஷருக்காகவும் ஸ்தோத்தரிப்பது நமக்கு சாத்தியமாகிறது!!!
ஏன் நச்சரிக்கும் அண்டைவீட்டாரும், தொந்தரவு கொடுக்கும் உறவினர்களும், கொடுமையான மேலதிகாரியும் உங்களுக்கு எப்போதும் இடைஞ்சல் தரும்படி தேவன் அனுமதித்திருக்கிறார்? அவர்களுடைய ஜீவனை கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பறித்துக்கொண்டு, வாழ்க்கையை உங்களுக்கு மிகவும் சௌகரியமாய் ஆக்கியிருக்க முடியுமே! ஆனால் அவர் அப்படிச் செய்வதே இல்லை! ஏனென்றால், உங்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காகவே அவர்களை அவர் உபயோகிக்க விரும்புகிறார். அநேக சமயங்களில் உங்கள் மூலமாக அவர்களை இரட்சிக்கவும் விரும்புகிறார்!!