எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   சீஷர்கள்
WFTW Body: 

அப்போஸ்தலனாகிய பேதுரு, ஒன்று பேதுருவிலே அடங்கியிருத்தலைக் குறித்துப் பேசுகிறார். தேவனுடைய மெய்யான கிருபையை அனுபவித்து வருகிற மனிதன், தான் செல்லுமிடமெங்கும் அனைத்து அதிகாரங்களுக்கும் எப்பொழுதும் அடங்கியிருப்பான். அடங்கியிருப்பது அவனுக்கு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. ஆதாமின் சிருஷ்டிப்புக்கு முன்னரே, கலகத்தினால் பாவம் பிறந்தது. தேவனுடைய அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் பண்ணினதால், பிரதான தூதனானவன் உடனடியாக சாத்தானாக உருவெடுத்தான். ஆகவேதான் , "கலகம் பண்ணுதல் பில்லிசூனியப் பாவத்தைப் போன்றது" (1 சாமு 15:23) என்று சொல்லப்படுகின்றது. பில்லிசூனியம் செய்பவர்கள் அசுத்த ஆவிகளுடன் நேரடி தொடர்பு கொள்வதைத் தவிர்க்க முடியாததைப் போலவே, கலகம் செய்பவர்களும் அசுத்த ஆவிகளுடன் நேரடி தொடர்பு கொள்கிறார்கள். இயேசுவோ இதற்கு நேர்மாறாக வாழ்ந்து சாத்தானை வென்றார். இயேசு தன்னைத் தானே தாழ்த்தி, தன்னுடைய பிதாவுக்குப் பூரணமாய்க் கீழ்ப்படிந்தவராய், இப் பூவுலகிற்கு இறங்கி வந்தார்; இப்பூவுலகிற்கு இறங்கி வந்த அவர், தன் பரமப் பிதாவினால் ஏற்படுத்தப்பட்டிருந்த மனுஷ அதிகாரங்களான பூரணமில்லாத யோசேப்புக்கும், மரியாளுக்கும் 30 ஆண்டுகள் அடங்கி வாழ்ந்தார். தேவனுடைய மெய்யான கிருபையை ருசித்து வாழ்கின்ற ஒரு நபர், தன்னுடைய ஆத்துமாவிலே கலகத்தின் ஆவியிலிருந்து கிடைக்கும் இரட்சிப்பையும் ருசித்து வாழ்வான். அதிகாரத்திற்கு அடங்கியிருப்பதிலே உங்களுக்கு ஏதேனும் தகராறு இருக்குமானால், நீங்கள் உங்களுடைய ஆத்துமாவிலே இரட்சிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ராஜாக்கள், ஆளுநர்கள் முதலிய மனித அதிகாரங்களுக்கு அடங்கி இருக்கும்படியாக கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (1 பேது 2:13,14). இந்த நிருபம் எழுதப்பட்ட நேரத்தில் ரோமப் பேரரசனாக நீரோ என்பவன் இருந்தான். ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கொடுங்கோல் மன்னர்களில் மிகக் கொடூரமானவனான அவன் கிறிஸ்தவர்களைச் சித்தரவதை செய்து கொன்று குவித்தான். இருப்பினும், அவனுக்கு அடங்கியிருங்கள் என்று மாத்திரம் பேதுரு சொல்லாமல், "ராஜாவைக் கனம் பண்ணுங்கள்" (1 பேது 2:17) என்றும் சொல்லுகிறார். அது மட்டுமின்றி, "எல்லாரையும் கனம்பண்ணுங்கள்" (1 பேது 2:17) என்று சொல்லுகிறார். பழைய உடன்படிக்கையிலே, முதிர்வயதுள்ளவர்களைக் கனம்பண்ண வேண்டும் என்று சொல்லப்பட்டது (லேவி 19:32). ஆனால் புதிய உடன்படிக்கையிலோ நாம் எல்லா மனிதரையும் கனம்பண்ண வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. புதிய உடன்படிக்கையின் தரமானது எல்லாப் பகுதிகளிலுமே உயர்ந்ததாக உள்ளது. பழைய உடன்படிக்கையில் வாழ்ந்த மக்கள், தேவனுக்கென்று 10% மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் புதிய உடன்படிக்கையில், நாம் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் (லூக் 14:33). பழைய உடன்படிக்கையில், ஒரேயொரு நாள் (ஓய்வு நாள்) மட்டுமே பரிசுத்தமாக ஆசரிக்கப்பட வேண்டும். புதிய உடன்படிக்கையிலோ, ஒவ்வொரு நாளுமே பரிசுத்தமானதாகும். பழைய உடன்படிக்கையில், முதற்பேரான ஆண் பிள்ளை மட்டுமே தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். புதிய உடன்படிக்கையில் நம்முடைய பிள்ளைகள் அனைவருமே பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். தேவனுடைய கிருபையை அனுபவித்தவனுக்கு, எல்லா மனுஷரையும் கனம்பண்ணுவது கஷ்டமானதாக இருக்காது. இயேசுவைப் போலவே நாமும் பணிவிடைக்காரராய் இருப்பதால், "எல்லாரையும் கனம் பண்ணுங்கள்" என்பதை நிறைவேற்றுவதும், "மற்ற எல்லாரையும் உங்களைவிட முக்கியமானவராகக் கருதுங்கள்" (பிலி 2:3 CEV) என்பதை நிறைவேற்றுவதும் நமக்கு இன்பமான விஷயங்களே.

அதன்பின்பு அவர் வேலைக்காரர்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவர்களை எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருக்குமாறு சொல்கிறார். எல்லா அப்போஸ்தலருமே வேலைக்காரர் எல்லாரும் தங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்று சொல்கின்றனர். அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ அதிகாரிகளுக்கு எதிர்த்து நிற்கும் கலகத்தின் ஆவி உடைய கிறிஸ்தவன், கிறிஸ்துவுக்கு மிக மோசமான சாட்சி உடையவனாகத்தான் இருப்பான். பள்ளியிலோ, கல்லூரியிலோ ஆசிரியர்களுக்கு எதிராக முரட்டாட்டம் செய்யும் மாணவர்கள் அனைவருமே கிறிஸ்துவுக்கு மிக மோசமான சாட்சி உள்ளவர்களாகத்தான் இருப்பர். அத்தகைய கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்க்கையில், "தேவனுடைய மெய்யான கிருபையைப்" பற்றி ஒன்றுமே விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு இப்பூமியில், பூரணமற்ற பெற்றோருக்கு 30 ஆண்டுகளாகக் கீழ்ப்படிந்திருந்தார் என்பதைப் பற்றி அவன் புரிந்து கொண்டது எதுவுமில்லை. இது நாம் யாவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும். வேலைக்காரரே, நீங்கள் எல்லாவித மரியாதையுடனும் உங்களது எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். நீங்கள் அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ, பள்ளியிலோ, மருத்துவமனையிலோ அல்லது வேறு எங்கு பணியாற்றினாலும், உங்களுக்கு மேலுள்ளவர்களுக்கு மரியாதையைக் காண்பிக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு ஆசிரியர்களை மதிக்கவும், பிற பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு ஆசியர்களைக் கிண்டலடிக்கக் கூடாது என்றும் கற்றுத்தர வேண்டும். வேலைக்காரராய் இருப்பவர்கள் நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அன்றி, முரட்டுக்குணமுள்ள எஜமான்களுக்கும் மரியாதை தரக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல எஜமான்களுக்குக் கீழ்ப்படிவது சுலபமாகும். ஆனால், "தேவனுடைய மெய்யான கிருபையை" ருசித்த கிறிஸ்தவனுக்கு மாத்திரமே, முரட்டு எஜமான்களுக்கும் கீழ்ப்படிவது சாத்தியமாகும் (1 பேது 2:18).

ஒரு முரட்டு எஜமானனுக்கு நீங்கள் கீழ்ப்படிந்திருக்கும் போதுதான், ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் உங்களுடைய வெளிச்சமானது நன்றாகப் பிரகாசிக்கும். எரிகிற மெழுகுவர்த்தியானது சூரிய ஒளியில் இருக்கும்போது கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அதன் வெளிச்சத்தை இருளிலே எல்லாராலும் காண முடியும். அவ்வண்ணமே, ஒரு கிறிஸ்தவனின் வெளிச்சமானது இருள் சூழ்ந்த சூழ்நிலைகளிலே வெகுவாகப் பிரகாசிக்கும்.

நீங்கள் செய்த தவறுக்காகத் தண்டிக்கப்படும்போது, பொறுமையோடு அடங்கி இருந்தால், அதில் எவ்வித நற்குணமும் வெளிப்படுவதில்லை. ஆனால் நீங்கள் நல்லதைச் செய்து, தண்டனையைப் பெறும்போது, அதைப் பொறுமையோடு சகித்தால், அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும் (1 பேது 2:20). அநியாயமாய் பாடநுபவிப்பது என்ற காரியம், பேதுருவின் நிருபங்களில் காணப்படும் மிகப் பெரும் கருப்பொருள்களில் ஒன்றாகும். இந்தப் பிரகாரமாகத்தான் இயேசு பாடநுபவித்தார் என்று பேதுரு தொடர்கின்றார். அவர் அநியாயமாய்ப் பாடுபட்டு, நாம் பின்பற்றத்தக்க அடிச்சுவடுகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

"இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்"

(1 பேது 2:21-23).

"தேவனுடைய மெய்யான கிருபையை"

நன்றாய் விளங்கிக்கொண்டவன் இவ்விதமாகத்தான் நடந்து கொள்வான்.