WFTW Body: 

கடைசி நாட்களின் ஒரு பெரிய ஆபத்து என்னவென்றால், "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு அதின் பெலனை மறுதலிப்பதே" (2தீமோத்தேயு 3:5) ஆகும். நம்முடைய வரங்கள் மற்றும் தாலந்துகள் காரணமாக நமக்கு இருக்கும் வல்லமையில் திருப்தி அடைவது மிகவும் எளிது. ஆத்தும வல்லமையானது அறிவுசார் வல்லமை (intellectual power), உணர்ச்சிவசத்தின் வல்லமை (emotional power), மனோ வல்லமை (will power) ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் இவைகளில் எதுவும், கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் நமக்குக் கொடுக்கும்படி வந்த திவ்விய வல்லமை (Divine power) அல்ல.

அறிவுசார் வல்லமையானது, சிறந்த விஞ்ஞானிகளிடமும் கல்விமான்களிடமும் புத்திசாலியான பிரசங்கிமார்களிடமும் காணப்படுகிறது. உணர்ச்சிவசத்தின் வல்லமையானது ராக் இசைக் கலைஞர்களிடம் காணப்படுகிறது - பல பிரசங்கிமார்களிடம் கூட இந்த வல்லமை காணப்படுகிறது. மனோ வல்லமையானது யோகா வல்லுநர்களிடமும் துறவிகளிடமும், தங்களது ஆளுமையின் மூலம் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயலும் பிரசங்கிமார்களின் மத்தியிலும் காணப்படுகிறது. இந்த மூன்றில் எதையும் நாம் ஆவிக்குரிய வல்லமை என்று தவறாக நினைக்கக்கூடாது.

ஆவிக்குரிய வல்லமையானது முதன்மையாக, எல்லாவற்றிலும் நம்மை தேவனுக்குக் கீழ்ப்படிய வைக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, துல்லியமான நேரத்தில் அவற்றின் சுற்றுப்பாதைகளுக்குள் நகரும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் காணப்படும் தேவனுடைய வல்லமையை கவனித்துப்பாருங்கள். அவைகள் தேவனுடைய பிரமாணங்களுக்கு உள்ளடங்கி கீழ்ப்படிந்ததே அந்தப் பரிபூரணத்திற்குக் காரணம். தேவனுக்கு முழுவதுமாகக் கீழ்ப்படிவதே மிகச்சிறந்த காரியம் என்பதற்கு இந்த வான்வெளி அங்கங்கள் ஒரு வாய்பேசாத சான்றாகும்.

இயேசு சாத்தானை முரட்டுத்தனமான சரீர வல்லமையினால் ஜெயிக்கவில்லை, மாறாக ஆவிக்குரிய வல்லமையினால் ஜெயித்தார். சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, ​​இயேசு தம்மால் அதைச் செய்ய முடியுமென்றாலும், கற்களை அப்பமாக மாற்ற மறுத்துவிட்டார்; அதுவும் 40 நாட்கள் உபவாசத்திற்கு பிறகு, அவரது சரீரம் உணவுக்காக ஏங்கியபோதிலும் மறுத்துவிட்டார். பசி இல்லாவிட்டாலும், பரதீசிலிருந்த ஏதேன் தோட்டத்தில் தன் சரீர வாஞ்சையை உடனடியாகத் தீர்த்துக் கொண்ட ஏவாள் செய்ததற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம். பாலியல் உறவுக்கான விருப்பமானது உணவின் மீதான விருப்பத்தை போலவே நம் சரீரத்தில் இருக்கும் மற்றொரு விருப்பமாகும். அதுவும் தொடர்ந்து தன்னை திருப்திப்படுத்தும் படியாய் ஏங்குகிறது. நம்மிடம் ஆவிக்குரிய வல்லமை இருக்கும்போது, ​​​​அவருடைய சரீர விருப்பத்தை திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக "தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பேன்" என்று சொன்ன இயேசுவைப் போல நாமும் இருப்போம்.

சிம்சோன், சிங்கங்களைப் பீறிப்போடத்தக்கதான சரீர பெலத்தைக் கொண்டிருந்தான். ஆனால் அவனுக்குள் இருந்த பாலியல் இச்சை என்னும் சிங்கம் அவனைத் திரும்பத் திரும்பப் பீறிப்போட்டது. எந்தவொரு சிங்கத்தையும் விட பாலியல் இச்சை மிகவும் வலிமையானது என்பதை இது நிரூபிக்கிறது. யோசேப்போ சிம்சோனை விட வலிமையான மனுஷனாக இருந்தான், ஏனென்றால் அவனால் பாலியல் இச்சை என்னும் சிங்கத்தை நாளுக்கு நாள், மீண்டும் மீண்டும் துண்டு துண்டாகப் பீறிப்போட முடிந்தது (ஆதியாகமம் 39:7-13).

தேவன் நமக்கு ஆவிக்குரிய வல்லமையைக் கொடுப்பாரா இல்லையா என்பதை நமது மனநோக்கங்களே தீர்மானிக்கின்றன. உங்களுடைய வாழ்க்கையில் தேவனைப் பிரியப்படுத்துவதும் மகிமைப்படுத்துவதும் மட்டுமே உங்கள் இலக்கும் இலட்சியமுமாயிருக்குமென்றால், அவர் உடனடியாக அவருடைய வல்லமையை உங்களுக்குத் தருவார். "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், தகாதவிதமாய் (தவறான மனநோக்கங்களோடு) விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்" (யாக்கோபு 4:3).

ஒரு வேலை அல்லது தொழில் என்பது நம் வாழ்வாதாரத்திற்கான ஒரு வழி மட்டுமேயாகும். நம்முடைய வாழ்க்கையின் இலட்சியமோ தேவனைப் பிரியப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும் - நமக்காக வாழ்வதோ அல்லது இந்த உலகில் பெரிய மனிதர்களாக ஆகவேண்டும் என்பதாகவோ இருக்கக்கூடாது. சாத்தான் இயேசுவையே கூட அவருக்கு இந்த உலகத்தின் மகிமையைக் காண்பித்தே சோதிக்க முயன்றான். எனவே, அவன் நிச்சயமாக நமக்கும் அதையே கொடுப்பான். ஆனால் நாம் (இயேசு செய்ததைப்போல்) தொடர்ந்து அதை மறுக்க வேண்டும், ஏனெனில் சாத்தானை ஏதோ ஒரு வகையில் பணிந்து கொள்வதின்மூலமாக மட்டுமே அந்த மகிமையை நாம் பெற முடியும். நம்முடைய வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதிலிருந்து விலக்கி, பண ஆசையானது நம்மைத் தன்வசப்படுத்தாமல் இருக்க நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்றிலிருந்து 2000 ஆண்டுகள் கழித்து, நாம் இப்போது தெரிந்துகொண்டவைகளைக் குறித்து நாம் எந்த வருத்தமும் கொண்டிருக்கக்கூடாது.