இன்னுமொரு ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நாம், இவ்வாண்டில் உற்சாகம் அடையும்படிக்கு ஒரு சில அற்புதமான சத்தியங்களைத் தேவனுடைய வார்த்தையிலிருந்து பார்ப்பது நமக்கு நலமான விஷயமாக இருக்கும்.
உம்முடைய இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள்: (புல 3:22,23) இதன் அர்த்தம் என்னவென்றால், இப்புதிய ஆண்டிலே, ஒவ்வொரு நாள் காலையிலும், நீங்கள் உங்களுடைய வாழ்நாளிலே இதுவரைக்கும் ஒரு பாவம்கூட செய்யாதவர்களாகவே தேவன் உங்களைக் காண்கிறார் என்பதாகும். ஆனால் அதற்கான நிபந்தனை என்னவெனில், நீங்கள் உங்களுடைய கடந்த காலப் பாவங்கள் அனைத்தையும் குறித்து மனந்திரும்பி, தேவனிடத்தில் அறிக்கையிட்டிருக்க வேண்டும். நீங்கள் அறிக்கையிட்ட பாவம் எதையும் அவர் நினைவுகூரவே மாட்டார் (எபி 8:12). அதனால்தான் அவர் ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம்புது இரக்கங்களுடன் உங்களைக் காண்கிறார். தேவன் உங்களை எப்படி மன்னித்திருக்கிறாரோ, அது போலவே நீங்களும் மற்றவர்களை மன்னித்துவிட வேண்டும். நீங்கள் ஜனங்களுக்கு எதிராக அவர்களுடைய கடந்த காலத்தை நினைவில் வைக்காமல், அவர்களை ஒவ்வொரு நாளும் புதிய இரக்கங்களுடன் பார்க்க வேண்டும்.
தேவன் ஒவ்வொரு நாளும் படிப்படியாக உங்களுக்கு முன்பாக வழியைத் திறப்பார் : (நீதி 4:12- பொழிப்புரை) நீங்கள் உங்களுக்கு முன்னதாக இரு படிகளைத் தாண்டி அங்கே என்ன உள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்புதிய ஆண்டிலே, ஒவ்வொரு நிலையிலும், உங்களுடைய கண்களுக்குத் தெரியும் அடியிலே காலெடுத்து வையுங்கள். அதன் பிறகு அடுத்த அடி எதுவென்று உங்களுக்குத் தெரிந்து விடும். தேவன் இப்படித்தான் உங்களை நடத்துவார். உங்களுக்கு முன்பாக எல்லாக் கதவுகளும் மூடப்பட்டது போலத் தோன்றலாம். ஆனால் நீங்கள் அவற்றை நெருங்க, நெருங்க அவைத் தானாகவே திறந்து கொள்ளும். ஆனால் நீங்கள் அவற்றிற்குக் கிட்ட நெருங்கும் வரை அவைத் திறக்காது. அப்படித் தான் தேவன் உங்களை நடத்திச் செல்வார். ஆகவே உங்களுக்கு முன்பாகப் பூட்டப்பட்ட கதவை நீங்கள் காணும் போது, அதினிமித்தம் நீங்கள் தயக்கமோ, பயமோ கொள்ள வேண்டாம். தேவன் உங்களுக்குக் காட்டும் அடியின் மேல் கால் வைத்து முன்னேறுங்கள். "இதோ, ஒருவனும் பூட்டாத திறந்த வாசலை உனக்கு முன்னதாக வைத்து இருக்கிறேன்" (வெளி 3:8) என்று கர்த்தர் உரைக்கிறார்.
தேவன் உங்களுடைய பாதையைப் பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக்குவார் : (நீதி 4:18) இங்கு மறுபிறப்பு என்பது சூரியோதயமாகவும், கிறிஸ்துவின் வருகையானது நண்பகல் சூரியனாகவும் ஒப்பிட்டு உருவகப்படுத்தப்படுகின்றது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மறுபிறப்பு அடைந்தது முதற்கொண்டு, கிறிஸ்து மறுபடியும் வரும்வரைக்கும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் நீங்கள் கிறிஸ்துவைப் போல மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் தேவசித்தமாக உள்ளது. இதுதான் நீதிமான்களின் பாதையாகும். இப்பாதையிலே நீங்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து அதிகதிகமாய் வெளிப்பாடுகளைப் பெறுவீர்கள்; உங்களுடைய சுய வாழ்க்கையின் அவலத்தைக் குறித்த வெளிச்சத்தைப் பெறுவீர்கள்; நீங்கள் சந்திக்கும் நடைமுறைச் சூழ்நிலைகளுக்கு வேண்டிய ஞானத்தை அதிகதிகமாகப் பெற்றுக் கொள்ளுவீர்கள். நீங்கள் இந்தப் பாதையில் பயணிப்பீர்களானால், முன்னோக்கி நகரும் சூரியன் எப்படிப் பின்னோக்கி ஒரு போதும் நகருவதில்லையோ, அது போலவே நீங்களும் ஒரு போதும் பின் மாற்றம் அடைய மாட்டீர்கள்.
தேவனுடைய வார்த்தைக்காக அவருக்கு முன்பாகக் காத்திருக்கும் உங்களை அவர் ஆசீர்வதிப்பார் : (நீதி 8:34) தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையின் மூலமாகத்தான் மனுஷனால் பிழைக்க முடியும் என்பதுதான் இயேசு தமது திறந்தவெளி ஊழியத்தில் முதலாவதாகப் பேசின வார்த்தைகளாகும். இவ் வார்த்தைகளைக் கேட்பதற்கு நாம் நம்முடைய ஆவியில் தணியாத எதிர்பார்ப்புடன் தேவன்மீது சார்ந்திருக்க வேண்டும். இந்த மனோநிலையை நாம் நாள் முழுவதும் தொடர்ச்சியாய்க் கொண்டிருக்க வேண்டும்.
அவருடைய சமுகத்திலே வாழுகிறவர்களுக்கு தேவன் நிறைவான சந்தோஷத்தைக் கொடுக்கிறார்: (சங் 16:11) இயேசு தேடின "தமக்கு முன் வைக்கப்பட்ட இந்த சந்தோஷம்தான்" அவரைத் தினந்தோறும் சிலுவையைச் சகிக்க வைத்தது (எபி 12:2). பிதாவுடன் கொண்ட ஐக்கியம்தான் இயேசுவின் விலைமதிப்பற்ற சொத்தாக இருந்தது. இயேசு எவ்வண்ணமாய் பிதாவின் ஐக்கியத்தை மதித்தாரோ அவ்வண்ணமாய் நாமும் மதிப்பதுதான், இயேசுவைப் பின்பற்றுவதாகும். அன்பான பரமப் பிதாவுடன் அறுபடாத ஐக்கியம் கொள்ளுகிற வாழ்க்கைக்குக் குறைவான எதுவும் மெய்யான கிறிஸ்தவமாகாது.
நீங்கள் பிறப்பதற்கு முன்னமே உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் தேவன் திட்டமிட்டு விட்டார் : "கர்த்தாவே நான் பிறப்பதற்கு முன்னமே நீர் என்னைக் கண்டுவிட்டீர். நான் சுவாசிப்பதற்கு முன்னமே நீர் என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அட்டவணைப்படுத்தி விட்டீர். ஒவ்வொரு நாளும் உம்முடைய புத்தகத்திலே பதியப்பட்டுள்ளது. நீர் என்னைத் தொடர்ந்து நினைவு கூருகின்றீர் என்று உணர்ந்து கொள்ளுவது எவ்வளவு அருமையானது, கர்த்தாவே. ஒரு நாளிலே எத்தனை முறை உம்முடைய எண்ணங்கள் என் பக்கமாகத் திரும்புகின்றது என்பதைக் கூட என்னால் எண்ண முடியவில்லை. நான் காலையில் கண் விழிக்கும் போதும், நீர் என்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிருக்கின்றீர்". (சங் 139:16-18 Living). உங்களது பெயர் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை தேவன் பரலோகத்திலே வைத்துள்ளார். ஒவ்வொரு நாளுக்குரிய உங்களுடைய திட்டம் பற்றி அப்புத்தகத்திலே எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு வளமான ஆவிக்குரிய கல்வியைப் பெறவேண்டுமென்பதற்காக, 2016-ம் ஆண்டிலே உங்களுக்காக அவர் திட்டம் பண்ணின பாடுகளைக் குறித்து அதிலே எழுதி வைத்துள்ளார். இந்த ஆண்டிலே நீங்கள் செய்யப் போகும் தவறுகளையும் அவருடைய மகிமைக்காக மாற்றப் போகிறதைக் குறித்தும் அவர் அதிலே எழுதி வைத்திருக்கிறார். நீங்கள் என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்பதைக் குறித்தும் அதில் எழுதி வைத்துள்ளார். ஆகவே நீங்கள் உங்களது முழு இருதயத்தோடும் அந்தத் திட்டத்தை அறிந்து கொள்ள நாடித் தேடுங்கள்.
அவர் இப்பொழுதும் அன்பிலே உங்களுக்காக மௌனமாகத் திட்டம் தீட்டுகின்றார்: (செப் 3:17 பொழிப்புரை). தேவன் உங்கள் மீது வைத்துள்ள அளப்பரிய அன்பை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆண்டு முழுவதும் உங்களுடன் எல்லாவற்றிலும் இடைப்படுவார். இந்த ஆண்டிலே தேவன் உங்களுடைய வாழ்க்கையில் அனுமதிக்கின்ற ஒவ்வொன்றும் அன்பினாலே திட்டமிடப்பட்ட ஒரு இருதயத்திலிருந்து புறப்பட்டதாகவே இருக்கும். அது உங்களுக்கு பிரத்யேகமானதாகவும் இருக்கும். உங்களுக்கு வெகு அருகிலேயே இனிமையான ஆச்சரியங்களை வைத்திருக்கிறார்.
தேவன் எல்லாவற்றையும் உங்களுடைய நன்மைக்காகவே செய்கின்றார் : (ரோம 8:28) புதிய உடன்படிக்கையின் சுவிசேஷ நற்செய்தியின் விளக்கவுரையை ரோமர் 1 முதல் 8 அதிகாரங்களில் காண்கிறோம். பாவிகளாகத் (1 முதல் 3) தொடங்கின நாம், நம்முடைய பாவங்களுக்கான பாவ மன்னிப்பைப் (அதிகாரம் 3) பெறுகிறோம். பின்பு நாம் தேவனாலே நீதிமான்களென்று அறிவிக்கப்படுகிறோம் (அதிகாரங்கள் 4,5). அதன் பின்பு தேவன் நம்மைப் பாவத்தின் வலிமையிலிருந்தும் (அதிகாரம் 6), சட்டதிட்டங்கள் மற்றும் பிரமாணங்கள் ஆகியவற்றைச் சார்ந்து வாழுவதிலிருந்தும் (அதிகாரம் 7) விடுவிக்கிறார். இறுதியில் பரிசுத்த ஆவியில் வாழும் வாழ்க்கைக்குள் பிரவேசிக்கிறோம் (அதிகாரம் 8). இப்படியாக நாம் நம்முடைய வாழ்க்கையை முற்றிலுமாய் பரிசுத்த ஆவியானவரிடத்தில் ஒவ்வொரு நாளும் ஒப்புவித்து வாழும் இறுதி நிலையை அடையும் போதுதான், நம்முடைய பிதாவானவர் எல்லாச் சூழ்நிலைகளையும் நம்முடைய நித்திய நன்மைக்காகவே நடத்த ஆரம்பிக்கின்றார். ஜனங்கள் நமக்குச் செய்யும் தீமைகளை அவர் நம்முடைய நன்மைக்காக மாற்றும்படி கிரியை செய்கின்றார். நீங்கள் ரோமர் 8:28-ஐ விசுவாசித்தால், அதன் பிறகு எஞ்சியிருக்கும் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஜனங்களையோ, சூழ்நிலைகளையோ கண்டு ஒரு போதும் அஞ்ச மாட்டீர்கள். ஏதாவது விபத்து ஏற்பட்டு விடும் என்ற பயமோ, அல்லது புற்று நோயால் மரித்துவிடுவோம் என்ற பயமோ, அல்லது கிறிஸ்தவரல்லாத வெறியர்களால் தீமை நடக்கும் என்ற பயமோ அல்லது வேறு எதைக் குறித்த பயமோ இன்றி வாழுவீர்கள். ஏனெனில் நம்முடைய பிதாதான் ஒவ்வொன்றையும், ஒவ்வொருவரையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். "எல்லாவற்றையும்" என்று ரோமர் 8:28 கூறுவதால், நாமும் "எப்போதும், எல்லாவற்றிற்காகவும் தேவனை ஸ்தோத்தரிக்க" (எபே 5:20) முடியும். இந்த ஆண்டில் நீங்கள் சந்திக்க இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும், ஒவ்வொரு நபரையும், ரோமர் 8:28 முழுவதுமாய், முற்றிலுமாய் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு தண்ணீர் சுத்திகரிப்பான் நீரிலுள்ள மாசுகளையெல்லாம் வடிகட்டி சுத்தமான குடிநீராக மாற்றுவதைப் போல, உங்களுடைய சர்வ வல்ல பிதாவும் இந்த ஆண்டிலே உங்களுக்கு ஏற்படும் எல்லாவற்றையும் உங்களுடைய பரிபூரண நன்மைக்காகவே நடத்துவார். ஆனால் நீங்களோ அவரையே அன்பு கூர்ந்து, உங்களுடைய வாழ்க்கையிலே அவருடைய சித்தத்தை மாத்திரமே வாஞ்சித்து நடக்க வேண்டும்.
கர்த்தர்தாமே உங்களுக்கு ஆசீர்வாதமான, கிறிஸ்து நிறைந்த புதிய ஆண்டைத் தருவாராக.