தேவ ஆவியினால் அருளப்பட்ட வேத வாக்கியங்களில், யோபுவின் புத்தகம்தான் முதலாவது புத்தகமாகும். இது (கிறிஸ்துவுக்கு முன் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக மோசேயினால் எழுதப்பட்ட) ஆதியாகமம் புத்தகத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது.
தேவன், வேத வாக்கியங்களை எழுத வேண்டுமென தீர்மானித்த போது, அவர் முதலாவதாக சிருஷ்டிப்பைப் பற்றி எழுதாமல், ஒரு தேவ மனிதனைப் பற்றித்தான் எழுதினார் என்பதைக் காணும் போது, அது மிகவும் சுவாரஸியமாக உள்ளது. தேவன் எதை எல்லா காலங்களிலும் எதிர்பார்க்கிறார் என்பதை இது நமக்குப் போதிக்கின்றது. அவர் ஏனோக்கின் காலத்திலும், நோவாவின் காலத்திலும், யோபுவின் காலத்திலும் ஒரு தேவ மனிதனைக் கண்டார். வேதத்தில் நமக்கு 66 புத்தகங்களைத் தர வேண்டுமென தேவன் ஆதிமுதலே திட்டம் பண்ணியிருந்தார். ஒரு தேவ பக்தியுள்ள மனிதன் என்ற காரியமே அவருடைய இருதயத்தில் மேலோங்கியிருந்தது. எனவே அந்தக் காரியத்தையே முதன்மையாக வைத்து அவர் தமது 66 புத்தகங்களில் முதலாவது புத்தகமாக எழுதினார். தேவ ஆவியினால் அருளப்பட்ட முதலாவது புத்தகத்தின் முதலாவது வாக்கியத்தைக் கவனியுங்கள்: “ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்” (யோபு 1:1). வேதத்தின் முதல் வாக்கியத்திலே, தேவனுடைய இருதயத்தை உங்களால் காண முடிகின்றதா? அது ஒரு மனுஷனைப் பற்றியது. அது (வேறெங்கோ வாழ்ந்த வேறொரு யோபுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதற்காக) யோபு என்னும் பெயராலும், அவன் வாழ்ந்த ஊரான ஊத்ஸ் என்னும் பெயராலும் திட்டவட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. அவர் அந்த மனுஷனைக் குறித்து சாட்சி கொடுக்கும் போது, அவனது புத்திசாலித்தனத்தைக் குறித்தோ அல்லது செல்வத்தைக் குறித்தோ அல்லது மற்ற மனுஷர் மத்தியில் அவனுக்கிருந்த கீர்த்தியைக் குறித்தோ எதுவும் சொல்லாமல், அவனது குணத்தை பற்றி மாத்திரமே சொல்லுகின்றார். தேவன் எவற்றிற்கு மெய்யான மதிப்புகளைக் கொடுக்கிறார் என்பதை நாம் அங்கு காண்கின்றோம். ஒருவனுடைய உத்தமம், தேவ பயம், பொல்லாப்புக்கு விலகுதல் ஆகியவற்றிற்கே அவர் மதிப்பளிக்கின்றார். இது நமக்கு ஓர் சவாலாக இருக்குமென நான் நம்புகிறேன்.
சாத்தான் உலகெங்கும் சுற்றித் திரிந்து, விஷேஷமாக விசுவாசிகள் மீதுதான் கண்ணோட்டமாய் இருக்கிறான். அவன் ஒரு கர்ஜிக்கிற சிங்கத்தைப் போல யாரை விழுங்கலாமோவென்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான் (1பேதுரு 5:8). “என் தாசனாகிய யோபுவின் மேல் கவனம் வைத்தாயோ?” என தேவன் சாத்தானிடம் வினவிய போது, அவன், “ஆம், நான் அவனை நன்கறிவேன்” என்று பதிலளித்தான். ஒவ்வொரு நபரின் உண்மையான ஆவிக்குரிய நிலையும் சாத்தானுக்குத் தெரியும். அவனுடைய ஆவிகள் எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்து, ஜனங்களின் ஜீவியங்களை ஆராய்ந்து, அவனுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றன. ஆகவே இவ்வுலகில் எல்லாரைப் பற்றியும் எல்லாமுமே சாத்தானுக்குத் தெரியும். கர்த்தர் சாத்தானிடம் யோபுவின் ஒப்பற்ற தன்மை எதுவென்று சொன்னார்: “உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனுமில்லை“ (யோபு 1:8). தேவ பயம் – தேவனுக்கான பயபக்தி – என்பதுதான் தேவ ஆவியினால் அருளப்பட்ட வேதத்தின் முதலாவது புத்தகத்தில் அதிகமாய்ச் சொல்லப்படுகின்ற விஷயமாகும். இங்கு தேவன் யோபுவை இப்பூமியில் வாழ்ந்த மற்றவர்களுடன் ஒப்பிட்டார். அதையேதான் இன்றும் செய்கின்றார்.
அப்பொழுது சாத்தான் தேவனிடம், “நீர் அவனையும், அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைத்திருக்கிறீர்“ (யோபு 1:10) என்று சொன்னான். சாத்தான் சொன்னவற்றிலிருந்து நாம் முப்பெரும் சத்தியங்களை அறிந்து கொள்ளுகின்றோம். ஒரு தேவ மனிதனை சுற்றிலும் தேவன் மும்மடங்கு வேலிகளைப் போட்டிருக்கின்றார். முதலாவது தனிப்பட்ட முறையில் அவனைச் சுற்றிலும், இரண்டாவது அவனது குடும்பத்தைச் சுற்றிலும், மூன்றாவதாக அவனது பணம், சொத்து ஆகியவற்றைச் சுற்றிலும் வேலியிட்டிருக்கிறார். சாத்தானால் ஆவிக்குரிய பகுதியைப் பார்த்து, அறிந்து கொள்ள இயலும். நம்மால் அந்த வேலிகளைக் காண இயலாது என்றாலும், அவை அங்கேதான் உள்ளன. ஆனால் இவ்வேலிகளில் ஒன்றேனும் தேவனுடைய அனுமதியின்றி திறக்கப்பட முடியாது.
யோபு தனது எல்லா சோதனைகளிலும் எவ்வாறாக எதிர்வினை புரிந்தான் என்பதைப் பாருங்கள். எல்லாவற்றையும் இழந்து விட்டதாக கேள்விப்பட்டான். அவனுடைய வேலைக்காரரில் ஒவ்வொருவனாக வந்து, எல்லாம் போய்விட்டது என்ற விஷயத்தை அவனுக்குத் தெரியப்படுத்தினர். யோபு எழுந்து, அவனுடைய சால்வையை கிழித்து, தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து, அவரைத் தொழுதுகொண்டான் (யோபு 1:20). இது தேவ ஆவியினால் அருளப்பட்ட வேதத்தின் முதல் பக்கத்தில் நாம் பார்க்கும் இன்னொரு சங்கதியாகும்: தேவ பக்தியுள்ள ஒருவன் தொழுதுகொள்ளுகிறவனாய் இருப்பான். தேவ மனுஷனானவன், வேதத்தை அறிவதைக் காட்டிலும், கர்த்தருக்கு ஊழியம் செய்வதைக் காட்டிலும் பிரதானமாய் தொழுது கொள்ளுகிறவனாய் இருக்கிறான். உங்களுக்கு எல்லாமே இருக்கும் போது, நீங்கள் தொழுது கொள்ளுகிறவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் இழந்து போனாலும் தொழுது கொள்ளுகிறவர்களாய் இருக்க வேண்டும். இயேசு சொன்னார், “தேவன் ஆவியாயிருக்கிறார். அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும்” என்றார் (யோவான் 4:24). தேவனை தொழுதுகொள்ளுவது என்பது, எல்லாவற்றையும் அவரிடத்தில் அர்பணிப்பதே ஆகும். யோபு சொன்னார், “நிர்வாணியாய் என் தாயின் கற்பத்திலுருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடதிக்கு திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்றான்“ (யோபு 1:21). இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவும் இல்லை, தேவனைப்பற்றிக் குறை சொல்லவுமில்லை (யோபு 1:22) யோபுவின் வாழ்வில் தேவன் அனுமதித்த எல்லாவற்றையும், அவன் மனவிருப்பத்தோடு ஏற்றுக் கொண்டான்.
யோபுவின் புத்தகத்திலே, யோபுவின் மூன்று நண்பர்களும் (எலிப்பாஸ், பில்தாத், சோப்பார்) அவனைக் குற்றப்படுத்தியதாக நாம் வாசிக்கிறோம். நான்காவது நபரான எலிகூவும் குற்றப்படுத்தத்தான் செய்தான். ஆனால் அவனுடைய குற்றச்சாட்டு சற்று மிதமானதாக இருந்தது. சாத்தானுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் (Agents) குற்றப்படுத்துதல் என்பது அவர்களுடைய குணத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் உண்மையான தேவ மனிதன் இந்த குற்றச்சாட்டுகளால் பாதிக்கபட அனுமதிக்க மாட்டன். ஆவிக்குரிய பகுத்தறிதலுள்ளவர்கள், ஒரு தேவ பக்தியுள்ள மனிதனை இனங்கண்டுகொள்வார்கள். அவனைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்தாமல் அப்படிச் செய்வார்கள்.
வேதத்தின் முதல் புத்தகத்திலேயே, நவீன கால “சுக செல்வ சுவிசேஷத்தின்” ஆரம்பத்தை நம்மால் காண முடிகின்றது. யோபு தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்துவிட்டதால்தான், அவன் தன்னுடைய சுகத்தையும், செல்வத்தையும் இழந்துவிட்டதாக அந்த மூன்று பிரசங்கிகளும் கூறினர். தேவனுடைய ஆசீர்வாதமானது எப்பொழுதுமே வளத்தையும் சுகத்தையும் கொண்டுவரும் என்பதுதான் அவர்களின் செய்தியாக இருந்தது. இந்தச் சுக செல்வ சுவிசேஷமானது முதன் முதலில் தேவனை அறியாதவர்களால் பிரசங்கிக்கப்பட்டது என்பதைக் கவனித்துப் பாருங்கள். இன்றைய நாட்களிலும் இதுவேதான் நடக்கிறது. யோபு தேவனுடைய பூரண சித்தத்தின்படிதான் தன்னுடைய எல்லா சுகத்தையும் செல்வத்தையும் இழந்தான் என்பதை நினைவில் வையுங்கள். ஆனால் “சுக செல்வ” சுவிசேஷத்தைப் பிரசங்கித்த அந்த மூன்று பிரசங்கிகளும் தேவ சித்தத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டு இருந்தனர். “என்னுடைய கோபம் உங்கள் மேல் மூளுகிறது. நான் உங்களைத் தண்டிக்காதபடிக்கு உங்களுக்காக யோபுவை வேண்டுதல் செய்யச் சொல்லுங்கள்” (யோபு 42:8) என்னும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து இது தெளிவாகின்றது.
தேவன் யோபுவுக்குத் தமது ராஜரீக வல்லமையையும், சிருஷ்டிப்பின் மீதுள்ள தமது கட்டுப்பாட்டையும் காண்பித்தார். அது மாத்திரமே சொல்லப்பட்டால் போதும் என்ற தேவை இருந்தது. யோபு தாழ்த்தப்பட்டான். பிரசங்கிகளின் மணிக்கணக்கான நேரடி தாக்குதல்கள் எதையுமே சாதிக்கவில்லை. தேவனுடைய மறைமுகமான அணுகுமுறையானது சில நிமிடங்களிலேயே எல்லாவற்றையும் சாதித்துவிட்டது. சர்வ சிருஷ்டியின்மீது தேவனுக்குள்ள ராஜரீக கட்டுப்பாட்டின் மேல் நாம் விசுவாசம் வைக்கும்போதுதான், நாம் பிரச்சனைகளையும், போராட்டங்களையும், சத்துருக்களையும் எதிர்கொள்ளும்போது, நம்முடைய இருதயங்களிலும் இளைப்பாறுதல் குடிகொள்ளும். “சர்வவல்லவரோடு நீ இன்னும் வழக்காட விரும்புகிறாயா?” (யோபு 40:2) என்று கர்த்தர் யோபுவிடம் கேட்டார். ஒவ்வொரு வாதத்திற்கும் துரிதகதியில் உத்தரவு சொல்லிவந்த யோபு, இப்போது மௌனியாகி நின்றான். “கர்த்தாவே, நான் ஒன்றுமில்லை, சொல்வதற்கு என்னிடத்தில் எதுவுமில்லை. இனி நான் எதுவும் பேச மாட்டேன்” என்று யோபு சொன்னான். தேவ ஆவியினால் அருளப்பட்ட வேதத்தின் இந்த முதல் புத்தகமானது, நம்முடைய ஜீவியங்களில் நம்முடைய ஒன்றுமில்லாமையை நாம் உணர்ந்து, அதன் மூலமாக அவரே நமக்கு எல்லாமாய் இருக்கும்படி தேவன் விரும்புகிறார் என்பதை நமக்குப் போதிக்கின்றது. அப்போது நம்முடைய ஜீவியங்களில் அவரது நோக்கம் நிறைவேறி, திரளானவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்போம். தேவன் ஒருவரைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, அவர் அந்நபரை ஒன்றுமில்லாமைக்கு நேராகக் குறைக்க வேண்டியிருக்கிறது.
தேவ ஆவியினால் அருளப்பட்ட வேதத்தின் முதல் புத்தகத்திலிருந்து சில மகிமையான சத்தியங்கள் இதோ:
1. தேவன் தம்மைத் தொழுதுகொள்ளுகிற தேவபக்தியுள்ள மனுஷர்களைக் கண்டுபிடிப்பதற்காக பூமியெங்கும் தேடுகிறார்.
2. தேவ பக்தியுள்ள மனுஷரும், அவர்களது குடும்பங்களும் சாத்தானின் தாக்குதல்களுக்கு இலக்காக உள்ளனர்.
3. தேவனுடைய அனுமதியைப் பெற்ற பிறகுதான் சாத்தானால் நம்மைத் தாக்க முடியும்.
4. ஒரு தேவபக்தியுள்ள மனுஷனுக்கு கடினமான மனைவி இருக்கலாம். ஆனால் தேவனால் அவளை மாற்ற முடியும்.
5. தேவபக்தியுள்ள மனுஷர்கள் மதரீதியான மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவார்கள்.
6. தேவபக்தியுள்ள மனுஷரின் செயல்பாடுகள் தேவனாலும் சாத்தானாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.
7. பூரணத்தை அடையும் பாதையானது உபத்திரவங்கள், தவறாகப் புரிந்துகொள்ளப்படுதல் ஆகியவற்றினூடாகச் செல்லுகின்றது.
8. சுகமும் செல்வமும் தேவ ஆசீர்வாதத்தின் அடையாளங்களாக இருப்பதில்லை.
9. நாம் தேவனை அவர் உள்ளபடியே கண்டுவிட்டால், நாம் ஒன்றுமில்லை என்பதையும் கண்டுகொள்வோம்.
10. தேவன் நம்முடைய இறுதி நன்மைக்காகவே எல்லாவற்றையும் திட்டம் பண்ணுகிறார்