WFTW Body: 

ஆகஸ்டு 1975-ஆம் ஆண்டு எங்கள் வீட்டில் நாங்கள் கூடி வரத்துவங்கிய போது “ஒரு புதிய சபையை” ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் ஒரு துளியளவும் எங்களிடத்தில் இல்லை! அப்போஸ்தலர்கள் மாத்திரமே சபைகளை ஸ்தாபித்தார்கள்! எனக்கு அந்த தகுதி இருப்பதாக நான் சிறிதேனும் உணரவில்லை. ஆனால், நாட்கள் செல்லச்செல்ல அதிக அதிகமான ஜனங்கள் எங்களோடு சேர்ந்து கூடினார்கள். ஆகவே எங்கள் கூடுகையைத் தொடரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நாங்கள் யாரையும், ஒருபோதும் எங்களிடம் வந்து சேரும்படி அழைத்ததேயில்லை. ஒருவர் தன் சொந்த சபையில் சலிப்படைந்ததினிமித்தம் எங்களிடம் சேர்ந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை.. ஏனெனில் இதுபோன்ற ஒருவர் வெகுசீக்கிரத்தில் எங்களிடமும் சலிப்படைந்து போவார் என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம்! இயேசு எப்போதும் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களை மட்டுமே தம்மிடம் வரும்படி அழைத்தார் (மத்தேயு 11:28), அதாவது, யாரெல்லாம் தோல்வியடைந்த தங்கள் ஜீவியத்தினிமித்தம் துயர் அடைந்து, தீராத வாஞ்சையுடன் வெற்றி வாழ்க்கையைத் தேடினார்களோ, அவர்களை மாத்திரமே தம்மிடம் வரும்படி அழைத்தார். நாங்களும் அது போன்ற ஜனங்கள் மாத்திரமே எங்களோடு வந்து சேர்வதை விரும்பினோம்!

இந்திய தேசத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆகவே எங்கள் மூலமாய் மற்றொரு ஸ்தாபனத்தை ஆரம்பித்திட தேவன் விரும்பவில்லை என்பதை நாங்கள் தெளிவுபட அறிந்திருந்தோம். புராட்டஸ்டெண்ட் சபை மறுமலர்ச்சியின் காலங்களில் தோன்றிய ஒவ்வொரு புதிய இயக்கமும், அன்றைய சபைகளில் வலியுறுத்தப்படாத “புதிய உடன்படிக்கை ஜீவியத்தின் சில அம்சங்களை” வலியுறுத்தும்படி தேவனால் துவங்கப்பட்டதேயாகும்! அதை அல்லாமல் ஏதாகிலும் புதியதொன்றைத் துவங்கிட அப்போது தேவனுக்கு அவசியமில்லாதிருந்தது!!

ஆனால் இப்போதோ எங்கள் மத்தியில் ஒரு புதிய சபையை ஆண்டவர் துவக்கியிருக்கிறார்! ஆகவே எங்கள் மூலமாய் தேவன் வலியுறுத்தவிரும்பும் "விசேஷங்கள்” என்னவாயிருக்குமென்று நாங்கள் வியப்படைத்தோம்! நாங்களோ, மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஆவிக்குரியவர்களுமல்ல. நாங்கள் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவிகள் மாத்திரமே! மேலும் எங்கள் ஜீவியத்தின் பல பகுதிகளில் எங்கள் சொந்த குறைபாடுகள் இருப்பதையும் நாங்கள் உணர்ந்திருந்தோம்! அதேசமயம், அனேக சபைகளில் காணப்படும் பல பகுதிகளை எங்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை! ஏனெனில் அவர்கள் பல்வேறு காரியங்களில் புதிய ஏற்பாட்டு போதகங்களையும் அதன் நடைமுறைகளையும் விட்டு விலகிவிட்டார்கள் என்றே நாங்கள் உணர்ந்தோம். இவ்வாறு நாங்கள் தொடர்ந்து கூடிவந்த சமயத்தில், எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத சில பகுதிகள் எங்கள் மனதில் ஆணித்தரமாய் படிந்தன:

  1. தண்ணீர் ஞானஸ்நானம்: நாங்கள் விசுவாசிகளுக்கு திரியேக தேவனுடைய நாமத்தில் தண்ணீரில் மூழ்கவைத்தே ஞானஸ்நானம் கொடுப்பதை நடைமுறையாகக் கொண்ண்டோம். ஆகவே குழந்தை ஞானஸ்நானத்தை நடைமுறையாய் கடைப்பிடித்த பிரதானமான ஸ்தாபனங்களுக்கு முற்றிலும் வித்தியாசமாயிருந்தோம்.
  2. பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: நாங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், பரிசுத்த அவியின் எல்லா வரங்களையும் விசுவாசித்தோம். ஆகவே பிரதரன் மற்றும் பேப்டிஸ்ட் சபைகளுக்கு நாங்கள் வித்தியாசமாயிருந்தோம்! ஆனால் அதேசமயம், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு "அந்நிய பாஷை பேசுவதை" அடையாளமாய் நாங்கள் விசுவாசிக்காமல், தேவனுடைய வல்லமையைப் பெறுவதே அடையாளமென விசுவாசித்தோம் (அப்போஸ்தலர் 1:8, அப்போஸ்தலர் 10:38). ஆகவே, நாங்கள் பெந்தேகொஸ்தே சபைகளுக்கும், ஆவியின் எழுச்சி (Charismatics) சபைகளுக்கும் வித்தியாசமாயிருந்தோம்!!
  3. சீஷத்துவம்: நம் ஆண்டவர் சீஷர்களை உருவாக்கும் படிக்கே கட்டளை கொடுத்திருந்தார் (மத்தேயு 28:19). ஒருவன் சீஷனாய் மாறுவதற்கு நிறைவேற்ற வேண்டிய மூன்று நிபந்தனைகளை லூக்கா 14:26,27,33 வசனங்களில் இயேசு வரையறுத்துள்ளார். ஆகவே, 'சீஷத்துவத்தை விட்டு விட்டு' சுவிசேஷ ஊழியத்தை மாத்திரமே வலியுறுத்திய அநேக சபைகளிடம் எங்களால் ஒத்துப்போக முடியவில்லை.
  4. பாஸ்டர்கள்: “பாஸ்டர்” என்பது வரங்களில் ஒன்றாய் இருப்பதையே நாங்கள் கண்டோம் (எபேசியர் 4:11), அல்லாமல், சபையிலுள்ள ஒரு “அலுவல்” (Office) அல்ல! சபைகள் “மூப்பர்களால்” நடத்தப்படவேண்டுமேயல்லாமல் ஒரு பாஸ்டரைக் கொண்டல்ல என புதிய ஏற்பாடு தெளிவாகப் போதிக்கிறது (தீத்து 1:5). “தனி மனித ஆதிக்கம்” என்ற அபாயத்தைத் தவிர்த்து, தலைமைத்துவத்தில் ஒரு சமநிலையைக் கொண்டுவருவதற்கு ஒவ்வொரு சபையிலும் குறைந்தது இரண்டு மூப்பர்கள் வேண்டும்! இவ்வாறு நாங்கள் பெற்ற உணர்த்துதல், கிட்டத்தட்ட எல்லா சபைகளிலிருந்தும் எங்களை வேறுபடுத்திவிட்டது!
  5. பணம்: பணத்தை தேவனுக்கு சமமான “எஜமான்” என இயேசு குறிப்பிடும் அளவிற்கு பணம் அத்தனை வலிமை கொண்டதாகும் (லூக்கா 16:13), இந்தப் பகுதியில் ஒரு தெளிவான சாட்சி தேவையாயிருந்ததை நாங்கள் கண்டோம்! ஏனெனில், இந்திய தேசத்திலுள்ள எண்ணற்ற கிறிஸ்தவ ஊழியங்கள் “அவபக்தியான பொருளாதார கையாளுகையால்” கெட்ட பெயரைச் சம்பாதித்திருக்கின்றன. பிரசங்கிகளும் பாஸ்டர்களும் தங்கள் அறிக்கைகள் மூலமாகவும், தங்களின் ஜெப விண்ணப்ப கடிதங்கள் மூலமாகவும் பணத்தை யாசித்து கெஞ்சி நிற்கிறார்கள்! இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும் தங்கள் ஊழிய விவரங்களை தங்களின் சக ஊழியர்களுக்கு மாத்திரமேயல்லாமல் வேறு ஒருவருக்கும் அனுப்பியதேயில்லை! தங்களுக்கோ அல்லது தங்கள் ஊழியத்திற்கோ ஒருவரிடத்திலும் பொருளாதார ஆதரவை கேட்டதில்லை. அதற்குபதிலாக, தங்கள் பரலோக பிதாவை மாத்திரமே நம்பியிருந்தார்கள்! பரலோக பிதா மனுஷர்களை ஏவி ஊழியத்திற்குத் தேவையான பணத்தைக் கொடுக்கும்படி செய்வார் என்று அவர்கள் தேவன் பேரில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இவ்வாறாகவே நாமும் நம்முடைய பரம பிதாவை நம்பியிருக்க முடியும்! ஆகவே எங்கள் சொந்த சபையின் குடும்பங்களுக்குத் தவிர எங்கள் ஊழிய அறிக்கைகளை யாதொருவருக்கும் அனுப்புவதில்லை, எவரிடமும் பணம் கேட்பதில்லை எனத் தீர்மானித்தோம். மேலும் எங்கள் சபை ஆராதனை வேளைகளில் ஒருபோதும் காணிக்கை எடுக்கக்கூடாது எனவும் தீர்மானித்தோம். ஜனங்கள் தாங்களாக மனமுவந்து கொடுப்பதற்கு ஒரு பெட்டியை மாத்திரமே வைத்தோம். ஏனெனில் எல்லா காணிக்கைகளும் அந்தரங்கத்தில் கொடுக்கப்பட வேண்டுமென்றே இயேசு கூறியிருக்கிறார் (மத்தேயு 6:1-4), இவ்வாறு எங்களுடைய பொருளாதார அணுகுமுறை 'அடிப்படை பூர்வமாக' இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சபைக்கும் வேறுபட்டிருந்தது!
  6. சுய-ஆதரவு: இந்தியாவிலுள்ள ஏராளமான கிறிஸ்தவ ஊழியர்கள், கிறிஸ்தவ ஊழியங்களைப் “பிழைப்பிற்கடுத்த சம்பாத்தியமாக” கண்டார்களேயல்லாமல், “தேவனிடமிருந்து வந்த அழைப்பாகக்” கண்டதேயில்லை. இவர்களில் பெரும்பாலோர் மேற்கத்திய நாட்டு கிறிஸ்தவ ஸ்தாபனங்களில் சம்பள அடிப்படையில் சேர்ந்திருக்கிறார்கள். கிறிஸ்தவ ஊழியம் என்பது இவர்களுக்கு ஒரு வியாபாரம்! அதன் மூலமாய், பெருத்த லாபம் சம்பாதிக்கிறார்கள்! தன் நாட்களிலிருந்த இதுபோன்ற பிரசங்கிகளிடமிருந்து பவுல் தன்னை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காக, அவர் தன் சொந்தக் கைகளால் வேலை செய்து, தானே தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார் (2கொரிந்தியர் 11:12), அதேசமயம், முழு நேர மூப்பர்களாயிருந்து தங்கள் சபையின் விசுவாசிகளால் தாங்கப்படுவதிலும் எந்தத் தவறுமில்லை! ஆகிலும், இந்தியாவிலுள்ள பின்தங்கிய சூழ்நிலையை முன்னிட்டு, பவுல் எவ்வாறு தன் நாட்களில் மற்ற ஊழியர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி வாழ்ந்தாரோ, அதைப்போலவே மூப்பர்களாகிய நாங்களும் சுய-ஆதரவு கொண்டவர்களாயிருக்கத் தீர்மானித்தோம். இந்தப்பகுதியிலும் எங்களின் நடைமுறை வழிகள் இந்தியாவிலுள்ள மற்றெல்லா சபைகளிலிருந்தும் வேறுபட்டிருந்ததைக் கண்டோம்.
  7. மேலை நாடுகளைச் சார்ந்திருத்தல்: இந்தியாவிலுள்ள அநேக சபைகள் தங்கள் ஊழியத்திற்கும் பணத்திற்கும் மேலை நாட்டு கிறிஸ்தவர்களையே அதிகமாய் சார்ந்திருந்தார்கள். இதுபோன்ற நிலை, கிறிஸ்தவரல்லாத இந்தியர்களிடம் கிறிஸ்தவர்களாகிய எங்களது சாட்சிக்குப் பெரும் குந்தகம் ஏற்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். மேலும் அனேக இந்தியப் பிரசங்கிகள் கண்மூடித்தனமாய் அமெரிக்க ஊழியமுறைகளை, யாதொரு கேள்வியும் கேட்காமலே அமெரிக்க உபதேச போதனைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற அவலத்தையும் நாங்கள் கண்டோம். ஆகவே எந்தவொரு வெளிநாட்டு ஸ்தாபனங்களோடும் நாங்கள் தொடர்பு கொண்டிருக்க கூடாது எனவும், பணத்திற்கோ அல்லது ஊழியத்திற்கோ அயல் நாட்டின் யாதொரு மூலதனங்களையும் சார்ந்திருக்கக்கூடாது எனவும் தீர்மானித்தோம். எங்கள் ஊழியம் மெய்யாகவே ஓர் இந்திய ஊழியமாகவும், இந்தியத் தலைமைகொண்டதாகவும் இருந்திடவே விரும்பினோம். அதே சமயத்தில் பிற தேசங்களிலுள்ள விசுவாசிகளை ஏற்றுக்கொள்வதற்கு மனம் திறந்தவர்களாயிருந்தோம். இந்த விஷயத்திலும், இந்தியாவிலுள்ள அநேக சபைகளிலிருந்து நாங்கள் வேறுபட்டிருந்தோம்.

ஒரு புதிய சபையை தேவன் ஏன் ஆரம்பித்தார்? என்பதற்கு இவைகளே காரணங்களாயிருந்தது! இதுபோன்ற சாட்சி நம் தேசத்தில் தேவனுக்குத் தேவையாயிருந்ததை எங்களால் காண முடிந்தது! ஆகவே தேவனுக்கு எங்களை சமர்ப்பணம் செய்து, எங்களைக் கொண்டு என்ன செய்ய விரும்புகிறாரோ அதன்படி செய்ய அவருக்கு இடம் கொடுத்தோம்!

ஒவ்வொரு சபையும் ஆரம்ப காலத்தில் அருமையான கோட்பாடுகளை முன்வைத்தே ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அவ்வித கோட்பாடுகளின் உறுதித்தன்மையை “காலம்” சோதித்தறிகிறது! ஆம், சில வருடங்களுக்குப் பிறகு அவர்களின் கோட்பாடு என்ன நிலையிலிருக்கிறது? என்பதே அதன் நிரூபணமாயிருக்கிறது. கடந்த 49 ஆண்டுகளில் நாங்கள் திரும்பிப்பார்க்கும் வேளையில், இன்னும் பல பகுதிகளில் எங்கள் குறைவை நாங்கள் கண்டபோதிலும், மேற்கண்ட ஏழு பகுதிகளில் யாதொரு ஒத்தவேஷமும் நிகழாதபடி தேவன் எங்களைப் பாதுகாத்து வருவதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம்!

எல்லா மகிமையும் அவருடைய நாமத்திற்கே உரித்தாகக்கடவது!