WFTW Body: 

ஆண்டவராகிய இயேசு மார்த்தாளைப் பார்த்து “தேவையானது ஒன்றே!” (லூக்கா 10:42) என மிக ஆணித்தரமாகக் கூறியதைப் பாருங்கள்! செய்யப்பட வேண்டிய எத்தனையோ நன்மையான காரியங்கள் உண்டு! நியாயபூர்வமாகக்கூட முக்கியமானவைகளென அநேக காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன! ஆகிலும், இவை அனைத்தைக் காட்டிலும் மேலாக “ஒன்று” தேவையாயிருக்கிறது என்று இயேசு உறுதிபடக் கூறினார். எது அந்த 'ஒன்று'?

இயேசுவும் அவருடைய சீஷர்களும் பெத்தானியா கிராமத்திற்குள் சற்று முன்புதான் பிரவேசித்தார்கள். மார்த்தாள் அவரைக் கண்ட மாத்திரத்தில் மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்குள் வரவேற்றாள்! இயேசுவுக்கு ஆசனங்களை விரித்து அமரச் செய்தாள்! சமையல் அறைக்குள் விரைந்து சென்று நல்ல உணவு தயாரிக்கவும் சென்று விட்டாள்!! இயேசுவோ அவ்வேளையில் அங்கு அமர்ந்திருப்பவர்களுக்குப் பிரசங்கித்து போதிக்கத் தொடங்கிவிட்டார். தன் சகோதரி அங்கு இயேசுவின் போதகத்தைக் கேட்க அமர்ந்துவிட்டதைக் கண்ட மார்த்தாள், மிகுந்த கோபத்தோடு சமையலறையிலிருந்து வெளியே வந்தாள். நியாயம் கேட்கும் தொனியில் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இதோ பாரும், உங்கள் அனைவருக்காகவும் சமையலறையில் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், என் சகோதரி மரியாளோ ஒரு வேலையும் செய்யாமல் இங்கே வந்து அமர்ந்திருக்கிறாள்! எனக்கு உதவி செய்யும்படி அவளை எழுந்திருக்கச் சொல்லும்!!” என வினவினாள். ஆனால், அவளுக்கே அதிர்ச்சி உண்டாகும்படி இயேசு மார்த்தாளைத்தான் கடிந்துகொண்டார்! மரியாளிடம் அல்ல, மார்த்தாளிடமே தவறு இருக்கிறது எனவும் இயேசு கூறிவிட்டார்!!

மார்த்தாள் யாதொரு பாவமான காரியத்தை செய்ததற்காக கடிந்து கொள்ளப்படவில்லை என்பதையே இங்கு நாம் கவனிக்க வேண்டும். அவள் என்ன செய்தாள்? இயேசுவை மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்குள் ஏற்றுக்கொண்டாள். சமையலறையில் தனக்காக அல்ல, அவருக்கும் அவருடைய சீஷர்களுக்குமே சமைத்துக் கொண்டிருந்தாள். இந்த மார்த்தாள் இன்றுள்ள ஒரு விசுவாசியின் நிலையையே இங்கு சித்தரிக்கிறாள். இவர்கள் தங்கள் இருதயத்தில் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். மேலும், சுயநலமின்றி ஆண்டவருக்கும் மற்றவர்களுக்கும் ஊழியம் செய்யவே நாடுகிறார்கள்! இப்படிப்பட்ட வைராக்கியம் மார்த்தாளுக்கு இருந்தபோதிலும் இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டாள். அவளுடைய செயலில் அப்படி என்ன தவறு இருந்தது? இதற்கான விடை இயேசு கூறிய அந்த இரண்டு வார்த்தைகளில்தான் அடங்கியிருக்கிறது: ஆம், “தேவையானது ஒன்றே!” என்பதே அந்த விடையாகும். பார்த்தீர்களா, அவள் செய்த ஊழியத்திற்காக அவள் கடிந்துகொள்ளப்படவில்லை. ஆனால், முதலாவது எதுவோ அதை முதலாவது வைத்திடாதபடியால் கடிந்து கொள்ளப்பட்டாள்!!

"மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள்” என்றே ஆண்டவர் கூறினார். இயேசு இங்கு குறிப்பிட்ட “நல்ல பங்கு” யாது? அவள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டாள். அவ்வளவுதான்! இருப்பினும் இதுவே இயேசு குறிப்பிட்ட நல்ல பங்காகும். வேறு யாதொன்றைக் காட்டிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒன்றே தேவையானதாகும்! நம்முடைய ஜீவியத்தில் “கர்த்தரை கவனித்துக் கேட்பதில்” எவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கிறோம்? கர்த்தருடைய பாதத்தில் எவ்வளவு நேரம் அமர்ந்து, அவருடைய வார்த்தையை வாசித்து, அதன் மூலம் அவர் பேசுவதைக் கேட்க வாஞ்சையாயிருக்கிறோம்? இந்த வாஞ்சை இன்று அநேகரிடத்தில் இல்லையே! அதற்குப் பதிலாய் ஏராளமான பல்வேறு காரியங்கள் நம்மை சூழ்ந்து கொள்கிறபடியால், மார்த்தாள் செய்த அதே தவற்றின் குற்ற உணர்விற்கே நாம் ஆளாகிறோம். உலக அலுவல்கள் மாத்திரமே நம்மை ஆட்கொள்கிறது என்பதில்லை, கிறிஸ்தவ ஊழியங்கள் கூட நம்மை ஆட்கொண்டிருக்க முடியும்! கூட்டங்களுக்குச் செல்வது, ஆராதனைக்குப் போவது, சாட்சி சொல்வது என இப்படியெல்லாம் சுறுசுறுப்பான நம்முடைய ஆவிக்குரிய ஊழியத்தின் நடுவில்தான், மார்த்தாளைக் கடிந்து கொண்டதைப் போலவே நம்மையும் கடிந்துகொள்ளும் ஆண்டவரின் சத்தத்தை நாம் கேட்கிறோம்.

மரியாள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்த நிகழ்ச்சியிலிருந்து மூன்று ஆவிக்குரிய சத்தியங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்

1. அமர்ந்திருப்பது (நடப்பதோ, ஓடுவதோ அல்லது நிற்பதோ அல்ல) இளைப்பாறுதலின் ஒரு பிரதானமான சித்திரம். இது நமக்கு போதிப்பது யாதெனில், தேவன் நம்மிடத்தில் பேசுவதை நாம் கேட்பதற்கு முன்பாக நம்முடைய இருதயமும், நம்முடைய மனதும் “அமைதியாய் அமர்ந்திருக்கும்” இடத்திற்கு வந்திருக்க வேண்டும்! அறிக்கை செய்யாத பாவங்கள், நம் இருதயம் அமர்ந்திருப்பதற்கு ஊறு விளைவித்துவிடும்! உலகக் கவலைகள், ஐசுவரியத்தின் ஈர்ப்புகள் நம் மனம் அமர்ந்திருப்பதற்கு இடையூறாய் வந்து நின்றுவிடும்!! மன சாட்சியில் சேதம் உண்டாகியோ அல்லது மனதில் பதட்டமும், பயமும் குடி கொண்டிருந்தாலோ “தேவனுடைய மெல்லிய சத்தத்தை" நாம் எப்படிக் கேட்க முடியும்? நாம் தேவனை நெருங்கி அவரை அறிய வேண்டுமென்றால் சங்கீதம் 46:10 கூறுகிறபடி நாம் கண்டிப்பாய் அமர்ந்திருக்க வேண்டும்!

2. ஒருவருடைய பாதத்தருகே அமர்வது தாழ்மையை சித்தரிப்பதாயிருக்கிறது. மரியாள் ஒரு நாற்காலியில் இயேசுவுக்கு சமமாய் உட்காரமல் ஓர் தாழ்ந்த ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாள். பெருமை கொண்ட ஒரு மனிதனிடம் தேவன் ஒரு போதும் பேசுவதில்லை… கடைசி நியாயத்தீர்ப்பு நாள் தவிர!! ஆனால், தமக்கு முன்பாக ஒரு பாலகனைப் போல் தாழ்மை கொண்டிருக்கும் ஆத்துமாவிற்கோ தம் கிருபையை வழங்கி அவனோடு பேசுவதற்கு எப்போதும் ஆயத்தமுள்ளவராகவே தேவன் இருக்கிறார்! (மத்தேயு 11:25).

3. மரியாள் செய்தது போல அமர்ந்திருப்பது அடங்கியிருப்பதின் ஒரு சித்திரம். இதுவே தன் எஜமானனுக்கு முன்பாக ஒரு சீஷன் கொண்டிருக்கும் மனநிலையாகும். நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதன் மூலமாகவே அடங்கியிருக்கும் சுபாவம் வெளிப்படுகிறது! நம்முடைய ஆர்வத்தை பூர்த்தி செய்வதற்கோ அல்லது சில அறிவுபூர்வமான தகவல்களை நமக்குத் தருவதற்கோ தேவன் தம் வார்த்தையின் மூலமாய் நம்மிடத்தில் பேசுவதில்லை. மாறாக, அவருடைய வார்த்தை அவருடைய இருதயத்தின் விருப்பத்தை நமக்குத் தெரிவிப்பதேயாகும்! நாம் கீழ்ப்படிய வேண்டுமென்றே நம்மோடு அவர் பேசுகின்றார். நமக்கு “தேவனுடைய சித்தத்தை செய்திட வேண்டும்” என்ற மனதிருந்தால் மாத்திரமே, அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ளவும் முடியும் என இயேசு யோவான் 7:17ல் தெளிவுபடக் கூறினார்.

வேதவசனத்தின் மூலமாய் தங்களோடு தேவன் எதைப் பேசிட விரும்புகிறார் என அறிந்திடும் ஆர்வமே இல்லாமல், இன்றைய திரளான கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை வருடக்கணக்கில் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள்! வேதத்தை வாசிப்பதில் ஒரு திருப்தியடைந்தால் அது அவர்களுக்குப் போதும்!! வேதம் வாசித்திடும் ஒவ்வொருநாளும் ஆண்டவருடைய சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்களா? அப்படியில்லையென்றால் அதற்கு என்ன காரணம்? தம்மை கவனித்துக் கேட்பவர்களுக்கோ ஆண்டவர் நிச்சயமாய் பேசுகிறார்! அவ்வாறு இருக்க, உங்கள் ஆவியின் செவிகளை எது அடைத்து வைத்திருக்கிறது? அவருக்கு முன்பாக அமர்ந்திருக்கத் தவறியதினிமித்தமா? தாழ்மையுள்ள ஆவி இல்லாததனிமித்தமா? அவர் ஏற்கனவே உங்களிடத்தில் பேசியவைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாதிருந்த குற்றத்தினிமித்தமா? அவர் சத்தம் கேட்க வேண்டுமென்ற பேரார்வம் உங்களிடம் இல்லாததனிமித்தமா? எதுவாயிருந்தாலும், அவை அனைத்திற்கும் உடனடியாகவும், நிரந்தரமாகவும் பரிகாரம் ஏற்படவே தேவன் விரும்புகிறார்! தேவனுக்கு முன்பாக இந்த பரிகாரத்தை நீங்கள் சரிசெய்த பின்பு, சாமுவேலின் ஜெபமாகிய “கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்!" என்ற ஜெபத்தை நீங்களும் ஏறெடுங்கள்! பிறகு, உங்கள் வேதாகமத்தைத் திருப்பி ஆண்டவருடைய முகத்தை ஆர்வமுடன் தேடுங்கள், இப்போது நீங்களும் அவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள், நிச்சயமாய் கேட்பீர்கள்!!