WFTW Body: 

வெளிப்படுத்தல் புத்தகத்தின் 2, 3-ஆம் அதிகாரங்களில், சபையின் மத்தியில், முழு இருதயங்கொண்டவர்களும், உண்மையுள்ளவர்களும் அடங்கிய விசுவாசிகளை, பரிசுத்த ஆவியானவர் அங்கீகரித்து அவர்களை “ஜெயங்கொள்ளுகிறவர்கள்” என அழைப்பதைக் காண்கின்றோம். தங்களைச் சுற்றிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆவிக்குரிய வீழ்ச்சியின் மத்தியில், பாவத்தையும், உலகப் பற்றையும் ஜெயித்து, கர்த்தருக்கென்று உண்மையுள்ளவர்களாய் இருப்பவர்கள் இவர்கள்தான். கர்த்தர், பிரதானமாய் ஜெயங்கொள்ளுகிறவர்கள் மீதுதான் ஆர்வமுள்ளவராய் இருக்கிறார். ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு ஏழு வாக்குத்தத்தங்கள் தரப்பட்டுள்ளன.

முதலாம் வாக்குத்தத்தம்: (வெளி 2:7) எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியதாவது: ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு, தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுகிறவர்களுக்குக் கர்த்தர் ஒரு பலனை வாக்குத்தத்தம் செய்கிறார். அது ஜீவ விருட்சத்திலிருந்து புசிக்கும் சிலாக்கியமாகும் – இது ஆதாம் இழந்துபோன சிலாக்கியமாகும். ஜீவ விருட்சம் என்பது தெய்வீக ஜீவியம் மற்றும் திவ்ய சுபாவத்தின் அடையாளமாக உள்ளது. தேவனால் மனுக்குலத்திற்குக் கொடுக்கத் தக்க மிக உன்னதமான பலன் என்னவெனில், அவருடைய திவ்விய சுபாவத்தில் நம்மைப் பங்கு கொள்ளச் செய்வதாகும். இப்பூமியில், அநேக விசுவாசிகளும்கூட அதை அவ்வளவு உயர்வாய் நினைப்பது கிடையாது. ஆனால், தேவன் இம்மனுக்குலத்திற்குத் தரத்தக்க மிக உயரிய பலனென்று ஒன்று இருக்குமானால், அது இதுதான் என்பதை நித்தியத்தின் தெளிவான வெளிச்சத்தில் நாம் கண்டு கொள்ளுவோம்.

இரண்டாவது வாக்குத்தத்தம்: (வெளி 2:11) சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியதாவது: ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. இரண்டாம் மரணம் என்பது நித்திய மரணமாகும். அது நித்திய காலமாய் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து தள்ளப்பட்டு, அக்கினி கடலில் கிடப்பதாகும். இரண்டாம் மரணத்திற்குத் தப்பும் வாக்குத்தத்தமானது, ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு மாத்திரமே கையளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஆகவேதான் பாவத்தின்மீது ஜெயங்கொள்ளுவது அதிக முக்கியமானதாக உள்ளது. ஏனெனில் மரணம் என்பது பாவத்தின் இறுதி விளைவாக உள்ளது (யாக் 1:15). பாவமாய்த் தோன்றுகிற எல்லாவற்றிலிருந்தும் நாம் ஜெயங்கொள்ள வேண்டும் என்பதுதான் புதிய ஏற்பாடு முழுவதும் ஆவியானவரின் அடிப்படைச் செய்தியாக இருக்கிறது.

மூன்றாம் வாக்குத்தத்தம்: (வெளி 2:17) பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியதாவது: ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும், அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுறவனின் நாமம் எழுதப்பட்ட வெண்மையான குறிக்கல் என்பது ஒரு மணமகள் தனது மணமகனோடு கொண்டுள்ள நெருக்கமான உறவைப் போல நாமும் ஆண்டவரோடு வைத்துக் கொள்ளத்தக்க உறவைக் குறிக்கின்றது. இது (பெயர் பொறிக்கப்பட்ட விலையுயர்ந்த கல்லானது) உலக மனிதர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயதார்த்தத்தில் அணிவிக்கும் மோதிரத்திற்குச் சமமானதாகும். மணவாளன் தம் மணவாட்டியை வேறொருவரும் அறியாத ஒரு நெருக்கமான பெயரிட்டு அழைக்கிறார் (வெளி 2:17). கர்த்தருடன் கொள்ளத்தக்க நெருங்கிய விவாக உறவே, ஜெயங்கொள்ளுகிற யாவருக்கும் தாம் அருளும் பலனாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்கிறார். ஒரு சராசரி விசுவாசிக்குக் கிறிஸ்துவுடன் உள்ள உறவானது வறட்சியாகவும், சலிப்பூட்டுவதாகவும் உள்ளது. ஏனென்றால், அவன் பாவத்தையும் உலகப் பற்றையும் வெறுப்பதில் தீவிரமுள்ளவனாக இருப்பதில்லை. ஆனால், ஒரு மணமகள் தன்னுடைய மணமகனை ஆழ்ந்த அன்பு கொண்டு நேசிக்கும் உறவைப் பெற்றிருப்பதைப் போலவே, உண்மையாய் ஜெயங்கொள்ளுகிறவனும், ஓர் ஆவிக்குரிய களிப்புள்ள உறவினுள் பிரவேசிக்கிறான். இத்தகைய உறவுதான் “உன்னதப்பாட்டிலே” விவரிக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொள்ளுகிறவனால் மாத்திரமே அதை முற்றிலும் புரிந்து கொண்டு, அதின் உண்மையை அனுபவிக்க முடியும்.

நான்காம் வாக்குத்தத்தம்: (வெளி 2:26-28) தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியதாவது: … ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றது போல, ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக் கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள். விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். இங்கு ஜெயங்கொள்ளுகிறவன் என்று கர்த்தரால் விவரிக்கப்படுபவன், முடிவுபரியந்தம் அவருடைய கிரியைகளைக் கைக் கொள்ளுகிறவனாவான் (வெளி 2:26). இயேசுவானவர் மாம்சத்திலிருந்த நாட்களில் தமக்கு உண்டான சோதனைகளில் பெற்ற வெற்றிகளே அவருடைய கிரியைகளாகும். ஜெயங்கொள்ளுகிறவன் என்றால், இயேசு சோதனைகளை ஜெயங்கொண்டதைப் போலவே ஜெயங்கொள்ளுபவன் என்பதாகும். அவன் முடிவுபரியந்தம் அதில் நிலைநிற்கிறான். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு எதிர்காலத்தில், ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பதாகக் கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணுகிறார் (வெளி 2:26). “அவர்களை ஆளுவான்” (வெளி 2:27) என்பதின் உண்மையான பொருள் என்னவெனில், “அவர்களை மேய்ப்பான்” என்பதாகும். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு “விடிவெள்ளி நட்சத்திரமும்” (வெளி 2:28) வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. இயேசுதாமே அந்த விடிவெள்ளி நட்சத்திரமாவார் (வெளி 22:16). இயேசுதாமே நீதியின் சூரியன் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் அக்கிரமஞ்செய்கிறவர்களைச் சுட்டெரித்து, ஜனங்களுக்கு ஆரோக்கியத்தை அருளுவார் (மல்கியா 4:1,2). உலகத்தார் அவரை நீதியின் சூரியனாக மட்டுமே காண்பார்கள். ஆனால் ஜெயங்கொள்ளுகிறவர்களோ, அவரை விடிவெள்ளி நட்சத்திரமாகக் காண்பார்கள். விடிவெள்ளி நட்சத்திரமானது சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக வானில் தென்படுவதாகும். இக்காலத்தின் கடைசி கணப் பொழுதுகளில், மிகுந்த உபத்திரவத்தின் முடிவில், இவ்வுலகமானது இருளில் மாய்ந்து கிடக்கையில், கடைசி எக்காளம் தொனிக்கும். அப்போது கர்த்தர்தாமே வானத்திலிருந்து மிகுந்த ஆரவாரத்தோடே இறங்கி வருவார். எல்லாத் தலைமுறைகளில் வாழ்ந்த ஜெயங்கொண்டவர்கள் யாவரும் எடுத்துக் கொள்ளப்பட்டு, மத்திய ஆகாயத்தில் அவரைச் சந்தித்து, அவரை இப்பூமிக்கு வரவேற்பார்கள். அப்பொழுது அவர்கள் அவரை விடிவெள்ளி நட்சத்திரமாகக் காண்பார்கள்.

ஐந்தாம் வாக்குத்தத்தம்: (வெளி 3:5) சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியதாவது: ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். தங்கள் இருதயத்தைச் சுத்தமாகக் காத்துக் கொண்டவர்களின் பெயர்ப் பட்டியலை தேவன் வைத்திருக்கிறார். இதய சுத்தம் என்பது மாம்சப் பாவத்திலிருந்து விடுதலை பெற்றிருப்பது மாத்திரமல்ல; அது மனுஷரின் கனத்தைத் தேடும் பாவத்திலிருந்தும், ஆவியிலுள்ள மற்ற பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்றிருப்பதாகும். சர்தையில் ஜெயங்கொண்டவர்களின் மீதியானவர்கள் தேவனுடைய முகத்திற்கு முன்பாக வாழ்ந்தவர்களாவர். ஜெயங்கொள்ளுகிற அனைவருக்கும் வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும் என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொள்ளுகிறவர்கள்தான் கிறிஸ்துவின் மணவாட்டியாக மாறுகிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஜெயங்கொள்ளுகிறவர்களின் நாமங்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கப்படாது என்றும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன் என்றும் கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். இந்த வாக்குத்தத்தமானது அவருடைய நாமத்தை மனுஷருக்கு முன்பாக வெட்கப்படாமல் அறிக்கையிட்டவர்களுக்குக் கிடைக்கும் பலனாகும் (மத்தேயு 10:32; லூக்கா 12:8). நாம் நம்முடைய உறவினர்களுக்கு முன்பாகவும், நண்பர்களுக்கு முன்பாகவும், அயலகத்தார்களுக்கு முன்பாகவும், உடன் பணிபுரிபவர்களுக்கு முன்பாகவும் அவருடைய நாமத்தை வெளிப்படையாக அறிக்கையிடுவதை ஆண்டவர் மிகவும் உயர்வாய் மதிக்கிறார்.

ஆறாம் வாக்குத்தத்தம்: (வெளி 3:12) பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியதாவது: ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்தின் தூணாக்குவேன். ஜெயங்கொள்ளுகிறவன் சபையின் நிரந்தரத் தூணாக ஆக்கப்படுவான். அதன் அர்த்தம் என்னவென்றால், அவன் மற்றவர்களின் பாரங்களைச் சுமந்து, அவர்களுக்கு ஆதரவாக இருப்பான் என்பதாகும். அவன் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய “தகப்பனாக” இருப்பான். ஒவ்வொரு சபையிலும் இப்படிப்பட்டத் தூண்களின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. ஜெயங்கொள்ளுகிறவன் தேவனுடைய நாமத்தையும், புதிய எருசலேம் நகரத்தின் நாமத்தையும் மற்றும் கர்த்தருடைய புதிய நாமத்தையும் தன்னுடைய நெற்றியிலே எழுதப் பெற்றிருப்பான். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவன் செல்லுமிடமெங்கும் இயேசுவின் முழு இருதயங்கொண்ட சீஷன் என்று வெளிப்படையாக அறியப்பட்டிருப்பான் எனலாம்.

ஏழாம் வாக்குத்தத்தம்: (வெளி 3:21) லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியதாவது: நான் ஜெயங்கொண்டு என் பிதாவின் சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். கர்த்தர் இப்பூமியிலிருந்த நாட்களில் எவ்வண்ணமாய் ஜெயங்கொண்டு வாழ்ந்தாரோ அவ்வண்ணமே நாமும் ஜெயங்கொண்டு வாழ முடியும் என்று குறிப்பாக அவர் நமக்கு உணர்த்துகிறார். இயேசுதான் முதன்முதலில் ஜெயங்கொண்டவர். உலகத்தையும், பிசாசையும் ஏற்கனவே ஜெயித்த அவரே நமக்கு முன்னோடியாக உள்ளார். இவ்வாறாக அவர் பிதாவுடன் அவருடைய சிங்காசனத்திலே உட்காரும்படி உயர்த்தப்பட்டார். இப்போது அவர் செய்ததைப் போலவே, நம்மாலும் இவை எல்லாவற்றையும் ஜெயங்கொள்ள முடியும். நாம் ஜெயங்கொண்டால், ஒரு நாளிலே, நாமும் அவருடன் அவருடைய சிங்காசனத்திலே அவருடைய மணவாட்டியாக உட்கார முடியும்.