1. 2 சாமுவேல் 1-ஆம் அதிகாரத்தில், சவுலின் மரணத்தைக் குறித்து வாசிக்கிறோம். தாவீதைக் கொல்ல வேண்டுமென வெறித்தனமாக இஸ்ரவேல் முழுவதும் 10 ஆண்டுகளாக துரத்தின மனிதன்தான் இந்த சவுல். அவன் இப்போது மரித்துவிட்டான். தாவீதின் இடத்திலே நீங்கள் இருந்திருந்தால், இந்த செய்தியைக் கேட்டவுடன் உங்களுடைய எதிர்வினை எவ்வாறு இருந்திருந்திருக்கும்? தாவீதின் எதிர்வினைகளைக் கவனியுங்கள். சவுல் தற்கொலை செய்து கொண்டதை நாம் அறிவோம் (1 சாமு 31). ஓர் அமலேக்கிய மனுஷன் தாவீதிடம் விரைந்து வந்து, தாவீதின் மனதிலே இடம் பிடிப்பதற்காக ஒரு பொய்யைச் சொன்னான். சவுலின் வேண்டுகோளுக்கிணங்க, தான் சவுலைக் கொன்றுவிட்டதாகக் கூறி, அவனுடைய முடியையும் (கிரீடத்தையும்), அஸ்தகடகத்தையும் (கைக்காப்பையும்) தாவீதிடத்திலே கொடுத்தான். தன்னுடைய செயலிலே பூரிப்படைந்து, தாவீது தனக்கு வெகுமதி அளிப்பான் என அவன் எதிர்பார்த்தான். ஆனால் அதைக் கேட்ட தாவீதோ, தன்னுடைய வஸ்திரத்தைக் கிழித்து, அழுது. உபவாசித்து, நாள் முழுவதும் சவுலுக்காக துக்கம் கொண்டாடினான் (2 சாமு 1:1-11). கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்டவனைக் கொல்வதற்கான தைரியம் அவனுக்கு எங்கிருந்து வந்தது எனக் கேட்டான். சவுலைக் கொல்லத் துணிந்த அந்த அமலேக்கியனைக் கொல்லும்படி தன்னுடன் இருந்த ஒரு வாலிபனிடத்திலே சொன்னான். அம்மனிதன் தான் சொன்ன பொய்யிற்குத் தக்க விலையைப் பெற்றுக்கொண்டான். ஆனால் தாவீதின் மனப்பான்மையைப் பாருங்கள். தாவீதை தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் மாற்றின காரியங்களுள் இதுவும் ஒன்றாகும். "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்" என்று இயேசு சொன்னதை நாம் அறிவோம். தாவீது அதைச் செய்துவிட்டான். அவன் பழைய உடன்படிக்கை நாட்களிலே, புதிய உடன்படிக்கையின் மனோபாவத்தைப் பெற்றிருந்தான். தாவீது சவுலை வெறுக்கவில்லை. சவுல் அபிஷேகத்தை இழந்திருந்த நிலையிலும், தாவீதோ எப்பொழுதுமே, "நான் அவனைத் தொடமாட்டேன்" என்றுதான் சொன்னான்.
2. அதன்பிறகு தாவீது, சவுலுக்காகவும், யோனத்தானுக்காகவும் ஒரு புலம்பல் பாட்டைப் எழுதினான். இதய உத்தமத்தோடு அவர்களைப் பற்றி அவன் அற்புதமான துதியின் வார்த்தைகளினால் பேசினான். நம்மிடத்தில் தீமையாய் நடந்து கொள்ளுகிறவர்களோடு, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தேவ மனிதனான தாவீதிடத்திலிருந்து நாம் யாவரும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியும். "இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று…… பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே" (1 சாமு 1:19, 25,27). யோனத்தான், தாவீதின் நெருங்கிய நண்பனாய் இருந்தபடியால், அவனைப் பற்றி தாவீது புகழ்ந்து பாடியதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது. ஆனால் அவன் சவுலையும் புகழ்ந்து பாடினான். அநேக வெற்றிகளுக்கு வித்திட்ட பராக்கிரமசாலி என அவனைப் புகழ்ந்து பாடினான். தான் சவுலிடம் பார்த்த நல்ல விஷயங்களைப் பாராட்டிவிட்டு, அத்துடன் நிறுத்திக் கொண்டான். சவுல் நியாயந்தீர்க்கப்படுவதை தேவனிடம் விட்டுவிட்டு, தான் அவனை நியாயந்தீர்க்க மறுத்துவிட்டான். இந்த இடத்தில் அவன் தேவனுடைய இருதயத்திற்கேற்றவனாக விளங்குகிறான். இத்தகைய மனுஷனையே தேவன் தெரிந்தெடுத்து, இஸ்ரவேலின் அரியணையிலே அமர வைக்கிறார்.
3. 2 சாமுவேல் 2:1. "தாவீது கர்த்தரிடத்திலே விசாரித்தான்.." என்று இங்கு எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் கர்த்தருடைய சித்தம் என்னவாய் இருக்குமென்பது தாவீதின் தொடர் தேடுதலாக இருந்தது (1 சாமு 23:2-4; 30:8). 2 சாமு 5:17-25-ல் பெலிஸ்தியருக்கு எதிராக நடைபெற்ற இரு யுத்தங்களிலே, தாவீது தேவ சித்தத்தை அறிய நாடுவதைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது முறை அவனுடைய வியூகத்தை மாற்றி, பின்னாலிருந்து தாக்குதலைத் தொடுக்குமாறு தேவன் அவனிடம் சொன்னார். ஒவ்வொரு முறையும் கர்த்தர் வியூகத்தை மாற்றினார். தாவீது ஒரு யுத்தப் புருஷன் என்பதில் சந்தேகமில்லை. எனினும், அவன் தன்னுடைய போர் வியூகத்தைக் கர்த்தரிடமிருந்தே பெற்றுக் கொண்டபடியால், அவன் எப்போழுதுமே வெற்றிக் கொடி நாட்டினான். ஒரு முறை தேசத்திலே பஞ்சம் உண்டான போது, அவன் கர்த்தரிடம் அது ஏன் உண்டானது என்று விசாரித்தான் (2 சாமு 21:1).
4. யூதாவின் மனுஷர்தான் முதன்முதலில் தாவீதை யூதா கோத்திரத்திற்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். அதற்குப் பின்புதான் அவன் இஸ்ரவேல் முழுமைக்கும் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான் (2 சாமு 5:3-5). அவன் தன்னுடைய 30-ஆம் வயதிலே யூதாவின் ராஜாவானான். அதைத் தொடர்ந்து இஸ்ரவேல் முழுவதையும் ஆளுகை செய்ய அவன் 7½ ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனவே தேவன் தமது வாக்குத்தத்தை அவனில் நிறைவேற்றுவதற்கு ஒட்டு மொத்தமாக 20 ஆண்டுகள் அவன் காத்திருக்க வேண்டியிருந்து. இவனும் ஆபிரகாமைப் போலவே நெடுநாளாய் காத்திருந்தான். ஆனால் தாவீது பொறுமையுடன் காத்திருந்தான். விசுவாசத்தினாலும், பொறுமையினாலும் தேவனுடைய வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக் கொண்ட இது போன்ற மனிதர்களின் முன்மாதிரியைப் பின்பற்றும்படிக்கே நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம். தாவீது தனக்கென்று அரியணையைத் தட்டிப் பறித்துக் கொள்ளவில்லை. தேவன் தம்முடைய காலத் திட்டத்தின்படியே அதைத் தனக்குத் தரட்டும் என்று காத்திருந்தான்.
5. 2 சாமுவேல் 6:20. "தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பினான்." வீதியிலே பல மைல்கள் நடனமாடி மிக்கக் களைப்புடன் காணப்பட்டாலும், வீட்டிற்குத் திரும்பி அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விழைகிற செயலானது எவ்வளவு அருமையான காரியமாகும்! ஒவ்வொரு கணவனும் ஒவ்வொரு நாளின் கடின உழைப்பை முடித்து வீடு திரும்பும்போது, ஒரு மோசமான மனநிலையுடன் வந்து, மனைவியிடம் ஏகப்பட்ட காரியங்களைச் செய்யும்படி எதிர்பாராமல், அவளை ஆசீர்வதிப்பவனாக இருப்பதையே நான் அதிகமாய் ஆசிக்கிறேன். மீகாளுக்குள் ஒரு நச்சரிக்கிற மனைவியை தாவீது கண்டான். ஆனால் கர்த்தருக்குள் அவன் பெற்ற சந்தோஷத்தை அது சற்றேனும் தணிக்கவில்லை. அவன் வாசற்படியை மிதித்தவுடனேயே, அவள் தனது தொல்லையை ஆரம்பித்துவிட்டாள். அவன் ராஜ கெம்பீரமாய் நடந்து கொள்ளாமல், ஒரு சாமானியனைப் போல நடந்து கொண்டான் என்று அவன்மீது கூச்சலிட்டு, அவனைக் கடுமையாய்ச் சாடினாள். தாவீதின் பதில் என்னவாய் இருந்தது? தன்னுடைய மனைவியின் கருத்துக்களை துச்சமென மதித்த அவன் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதுமாக கர்த்தருக்கு முன்பாக நடனமாடுவேன் என்று சொன்னான் (வ 21).
6. 2 சாமுவேல் 7:2. தாவீது கர்த்தருக்கென்று ஓர் ஆலயத்தைக் கட்ட வேண்டுமென விரும்பினான். ஆலயத்தைக் கட்டும்படி அவனிடத்தில் யாரும் சொல்லவில்லை. "நான் அழகான வீட்டில் வசிக்கிறேன். ஆனால் தேவனுடைய பெட்டியோ ஒரு கூடாரத்திலே இருக்கிறது" என்று அவன் நினைத்தான். "ஆண்டவரே, நான் எனக்கென்று ஓர் அழகிய வீட்டைக் கட்டியுள்ளேன். என்னுடைய சொந்த வீட்டின் மேல் நான் எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறேன். உம்முடைய வேலைக்காக நான் எவ்வளவு குறைவாகக் கொடுத்திருக்கிறேன். உம்முடைய வேலையைக் குறித்து நான் எவ்வளவு குறைவான அக்கறை உடையவனாக இருக்கிறேன்" என்று அதிகமான விசுவாசிகள் யோசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். தங்களையும், தங்களுடைய இலட்சியங்களையும், தங்களுடைய நேரத்தையும், தங்களுடைய பணத்தையும் தியாகம் செய்கிற வேலையாட்கள்தான் இன்று தேவனுடைய பணிக்குத் தேவைப்படுகின்றனர். அநேக விசுவாசிகள் ஓவர்டைம் வேலை செய்து, தங்களுடைய கம்பெனிக்கு அதிக வருவாயை ஈட்டித் தருகின்றனர். தேவனுடைய ஊழியர்களான நாம், எவ்வித ஊதியமுமின்றி, எவ்வித முறுமுறுப்புமின்றி. அவருக்காக கொஞ்சம் ஓவர்டைம் வேலை செய்ய முடியாதா? தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாக இருந்தான்; அவன் தேவனுடைய வீட்டைக் குறித்த அக்கறை கொண்டிருந்தான். நாமும் தாவீதைப் போலவே, நம்முடைய சொந்த வீட்டைக் குறித்ததான அக்கறையைக் காட்டிலும், தேவனுடைய வீட்டைக் குறித்ததான அக்கறையில் மேலோங்கின இருதயம் உடையவர்களாக, நம்முடைய இறுதி மூச்சு வரை வாழ்வோமாக. நீங்கள் தேவனுடைய வீட்டைப் பொறுப்பெடுத்துக் கொண்டால், தேவன் உங்களுடைய வீட்டைப் பொறுப்பெடுத்துக் கொள்வார்.
7. தாவீது இஸ்ரவேலின் சத்துருக்களையெல்லாம் முறியடித்து, சாலமோனுக்கு முன்னேற்பாட்டு வேலைகளைச் செய்து கொடுத்தான். ஆலயத்திற்குத் தேவையான தங்கம், வெள்ளி ஆகிய எல்லாவற்றையும் சேகரித்து வைத்தான். ஆனால் சாலமோன் கட்டினான். நமக்கும் இவ்வாறு செய்ய விருப்பம்தானா? கடின உழைப்பையெல்லாம் செய்துவிட்டு, அவ்வுழைப்பிற்கான கனத்தை இன்னொருவருக்கு விட்டுத் தருவதற்கு சம்மதம்தானா? அல்லது கனமும் நமக்குத்தான் வேண்டுமென்று விரும்புகிறோமா? தேவனுடைய இருதயத்திற்கேற்ற மனுஷன், பின்புலத்திலிருந்து எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, மற்றவர்கள் தொடர்ந்து அவ்வேலையை எளிதிலே செய்து முடித்து, அதற்கான கனத்தையும் பெற்றுக் கொள்ளும்படி பார்த்துக் கொள்வான்.