WFTW Body: 

யாக்கோபு 4:2-இன் பிற்பகுதியில், “நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை” என்று வாசிக்கிறோம். தேவன் எத்தனையோ காரியங்களை கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறபோதிலும், அவர்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே அவற்றைப் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறார்கள். இது குறிப்பாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கு மிகவும் சரியாகப் பொருந்தும். லூக்கா 11:13-இல் உள்ள வசனத்தைப் பாருங்கள், “பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” என்று கூறுகிறது. நம்மைப் பரிசுத்தமாக்குகிற பரிசுத்த ஆவியின் மேல் நமக்கு விருப்பம் இல்லையென்றால், இயேசுவின் தரத்திற்கு ஏற்ப வாழும் வல்லமையை நாம் ஒருபோதும் கொண்டிருக்க மாட்டோம். அதனால் தான் இயேசு, “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று மத்தேயு 7:7-இல் கூறினார்.

தேவன் நாம் அவரிடத்தில் கேட்கவேண்டும் என்று ஏன் காத்திருக்கிறார்? ஏனெனில், அவர் நமக்குக் கொடுப்பதை நாம் அதிகமாய் மதிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் கேட்காமலேயே அவர் நமக்குக் கொடுக்கிற காரியங்களை நாம் பொதுவாக மதிப்பதில்லை. பாவ மன்னிப்பு என்பது எல்லாவற்றிலும் மிக முக்கியமான காரியம். அதை நீங்கள் கேட்டுத் தானே பெற்றுக்கொண்டீர்கள்? நீங்கள் கேட்காதிருந்தால் அதை அடைந்திருக்க முடியுமா? நீங்கள் கேட்காதிருந்தால் இரட்சிப்பைப் பெற்றிருக்க முடியுமா? பூமியில் கோடிக்கணக்கானோர் அதைக் கேட்காததினால் இன்னும் இரட்சிக்கப்படாமல் இருக்கிறார்கள். தங்களுக்கு அது தேவை என்பதை உணர்ந்து ஒத்துக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் தங்களைத் தாழ்த்துவதில்லை.

தேவனுடைய உன்னதமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு வேறு என்ன தேவை? முதலாவதாக, அவற்றின்மேல் நமக்கு ஒரு வாஞ்சையும் தாகமும் இருக்க வேண்டும். பிறகு, நாம் விசுவாசத்தோடு கேட்க வேண்டும். தேவனிடத்தில் கேட்பது தான் அந்த வாஞ்சையைக் குறிக்கிறது. இயேசு சில வசனங்களுக்குப் பிறகு மத்தேயு 7:11-இல் விசுவாசத்தைப் பற்றிப் பேசுகிறார். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” என்று கூறுகிறார்.

நீங்கள் கேட்காவிட்டால், பெற்றுக்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் தேடினால், அவரைக் கண்டடைவீர்கள். நீங்கள் சத்தியத்தை அறிய விரும்பினால், அதைத் தேட வேண்டும். தேவனுடைய வேதவசனத்தில் ஏராளமான புதையல்கள் இருக்கின்றன. மேல்மட்டத்தில் உள்ளவைகளை எல்லோரும் பெறலாம். ஆனால் அவற்றின் உள்ளே ஆழ்ந்த புதையல்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் கவனமாகத் தேட வேண்டும். பூமியைக் குறித்து யோசித்துப் பாருங்கள். மேற்பரப்பில் மாம்பழங்கள், தேங்காய்கள் மற்றும் பல நல்ல கனிகள், என் மதிப்புமிக்க பொருள்கள் பல இருக்கின்றன. ஆனால் தங்கம் மற்றும் வைரம் போன்ற விலையேறப்பெற்ற புதையல்களை நீங்கள் அடைய விரும்பினால், பூமியில் ஆயிரக்கணக்கான அடி ஆழத்திற்குத் தோண்ட வேண்டும். அதுபோலவே, வேதாகமத்தின் மேல்மட்டத்திலிருந்து நீங்கள் பெறும் காரியங்கள் சில உண்டு. உதாரணமாக, ‘நமது பாவங்கள் எவ்வாறு மன்னிக்கப்படமுடியும்?’ என்பது (கிறிஸ்து நமக்காக மரித்ததினால்). ஆனால், ‘ஆவியால் நிறைந்த வாழ்க்கை வாழ்வது எப்படி?,’ ‘தேவனுடைய சுபாவத்தில் பங்கு பெறுவது எப்படி?,’ ‘எல்லாப் பாவங்களையும் ஜெயிப்பது எப்படி?,’ ‘கோபம், கசப்பு, மன்னியாமல் இருத்தல், பொறாமை, மாம்ச இச்சை ஆகியவற்றிலிருந்து வெற்றி பெறுவது எப்படி?’ என்பது போன்ற வேதவசனத்தின் ஆழ்ந்த சத்தியங்களை நீங்கள் கண்டடைய விரும்பினால், நீங்கள் ஆழமாகத் தோண்ட வேண்டும். ஒரு நபர் ஆழமாகத் தோண்டாவிட்டால், அவர் உண்மையில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதை தேவன் பார்க்கிறார். “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். உங்கள் முழு இருதயத்தோடும் தேடுங்கள், அப்பொழுது நீங்கள் கண்டடைவீர்கள்.

எரேமியா 29:13-இல் நாம் காணும் வாக்குத்தத்தம் இதுவே: “நீங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினால், நான் உங்களுக்குக் காணப்படுவேன்” என்று கர்த்தர் கூறுகிறார். ஒரு நபர் தேவனையும் அவர் தரும் ஐசுவரியத்தையும் கண்டடையவில்லையென்றால், அந்த நபர் முழு இருதயத்தோடும் தேவனைத் தேடவில்லை என்று நான் எந்தத் தயக்கமும் இன்றிச் சொல்லமுடியும். அவர் அரைகுறையாகத் தேடியிருக்கிறார்; அரைகுறையாகத் தேடுபவர்களுக்கு வேதவசனத்தில் எந்த வாக்குத்தத்தமும் இல்லை. முக்கால்வாசி இருதயத்தோடு தேடுபவர்களுக்கும் வாக்குத்தத்தம் இல்லை, முழு இருதயத்தோடு தேடுபவர்களுக்குத்தான் மகத்தான வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன. நீங்கள் தேவனுக்கு 90% கொடுத்துவிட்டு, 10% கொடுத்த நபரை விட அதிகமாக ஒன்றும் பெறாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் 100% தேவனுக்குக் கொடுக்கும்போது, எல்லாவற்றையும் பெறுவீர்கள். நீங்கள் 90% கொடுத்தால், 10% கொடுத்த அதே நபரின் பிரிவில்தான் இருக்கிறீர்கள். இதைத்தான் கிறிஸ்தவர்கள் உணருவதில்லை. உங்கள் இருதயத்தில் 10%-ஐக் கொண்டு தேவனைத் தேடினால், நீங்கள் அவரைக் கண்டடைய மாட்டீர்கள். 90%-ஐக் கொண்டு தேடினாலும் அவரைக் கண்டடைய மாட்டீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் தேவனைத் தேடுங்கள், அப்பொழுது நீங்கள் அவரைக் கண்டடைவீர்கள்.

'தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்’ என்னும் இவைகளெல்லாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களாகும். தேவன் தமது வாக்குத்தத்தங்களை ஒருபோதும் முறித்துப்போடுவதில்லை. “கேட்கிற எவனும்பெற்றுக்கொள்ளுகிறான். நீங்கள் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை? தேவன் விரும்பும் விதத்தில் நீங்கள் கேட்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தேடுகிறவன் “எவனும்” கண்டடைகிறான். ஒருவேளை தேவன் விரும்பும் விதத்தில் நீங்கள் தேடாமல் இருக்கலாம். “தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.” ஒருவேளை நீங்கள் போதுமான அளவு தட்டவில்லை போலும்.

கிறிஸ்தவர்கள் தேவனிடத்தில் கேட்காததினால் மட்டுமே இழந்த காரியங்கள் கோடிக் கணக்கில் உள்ளன. யாக்கோபு 4:2-இன் இறுதியில் உள்ள இந்தச் சிறிய வசனத்தை நினைவில் கொள்ளுங்கள், “நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, தேவன் உங்களுக்குத் தர விரும்புகிற ஒன்றைப் பெறாமலிருக்கிறீர்கள்.