WFTW Body: 

தேவனை அறிந்து கொள்வதைக் காட்டிலும் வேதாகமத்தை அறிந்து கொள்வது மிகவும் இலகுவேயாகும். ஏனென்றால், வேதாகமத்தை அறிந்து கொள்ள எந்தக் கிரயமும் நீங்கள் செலுத்த வேண்டியதேயில்லை, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதை உட்கார்ந்து படிக்கவேண்டும், அவ்வளவுதான்!

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் வேசித்தனம் செய்து கொண்டும், உங்கள் சிந்தை வாழ்க்கையில் அசுத்தமாய் இருந்து கொண்டும்... இன்னமும் தொடர்ந்து வேதத்தை நன்கு அறிந்தவர்களாய் இருந்திட முடியும்! ஓர் புகழ் பெற்ற பிரசங்கியாய் இருக்கும் அதே வேளையில், நீங்கள் பணத்தை இச்சிப்பவர்களாயும் இருந்திட முடியும்! ஆனால்.... உங்கள் வாழ்க்கையில் வேசித்தனம் செய்துகொண்டே “தேவனையும் தொடர்ந்து அறிந்திருப்பது” ஒருக்காலும் முடியாது! நீங்கள் பண ஆசை கொண்டவர்களாய் வாழ்ந்து கொண்டே “தேவனையும் தொடர்ந்து அறிந்திருப்பது” ஒருக்காலும் முடியாது… முடியவே முடியாது! ஆகவேதான், இன்றைய பெரும்பாலான பிரசங்கிமார்கள் தேவனை அறிவதைக் காட்டிலும், இலகுவான பாதையாகிய வேதாகமத்தை அறிவதையே தங்களுக்கென தெரிந்து கொள்கிறார்கள்!

சகோதரர்களாகிய உங்கள் யாவரையும் பார்த்து நான் மிகுந்த பரிவுடன் கேட்கிறேன்: நீங்கள் வேதாகமத்தை மாத்திரம் அறிந்திருப்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்களா? அல்லது, ஆண்டவரை அறியவேண்டும் என்ற தீராத பசி உங்கள் இருதயங்களில் இருக்கிறதா? "தான் ஆண்டவரை அறிந்து கொள்ள வேண்டியவிதமாய் அறிந்து கொள்வதே” தன்னுடைய தீராத வாஞ்சையென பிலிப்பியர் 3:8-10 வசனங்களில் பவுல் கூறினார். இவ்வாறு கர்த்தரை அறிந்து கொள்வதை ஒப்பிடும் போது, மற்ற அனைத்தையும் “குப்பையாகவே” அவர் கருதினார். “இந்த ஒரு விலையேறப்பெற்ற முத்தை வாங்குவதற்கு பவுல் தனது எல்லா முத்துக்களையும் விற்றுப்போட்டார்! பவுலுடைய ஊழிய ரகசியம், கமாலியேலின் வேதாகமக் கல்லூரியில் எத்தனை வருடங்கள் வேதத்தை கற்றார் என்பதாயிராமல், அவர் தனிப்பட்டவிதத்தில் ஆண்டவரைத் அறிந்துகொண்ட ஜீவியத்திலேயே அடங்கியிருக்கிறது!

உங்கள் தனிப்பட்ட ஜீவியத்தில் “தேவனையும், இயேசுகிறிஸ்துவையும் அறிந்துகொள்வதே” நித்தியஜீவன்!(யோவான் 17:3).

பரலோகத்தில் “நித்திய காலமாய்” வாழ்வதே நித்திய ஜீவன் என நாம் விளங்கியிருக்கக்கூடும். ஆனால் இயேசுவோ அவ்வித விளக்கத்தை ஒருபோதும் தரவேயில்லை. பரலோகத்திற்கு போவதோ அல்லது நரகத்திற்கு தப்புவதோ ‘நித்தியஜீவனுக்கு' அடுத்த காரியத்திற்கு யாதொரு சம்பந்தமுமில்லை! ஆம், “ஆண்டவரை சொந்தமாய் அறிந்து கொள்வதே” நித்திய ஜீவனாகும். தேவனை நெருங்கி, அவரை தனிப்பட்ட விதத்தில் சொந்தமாய் அறிந்துகொள்வது ஒன்றே என் வாழ்க்கையில் நான் கொண்டதாகமும், இருதயத்தின் பாரமுமாய் இருக்கிறது! எந்த அளவிற்கு நான் தேவனை என் சொந்தமாய் அறிந்திருக்கிறேனோ, அந்த அளவிற்குத் தான் என் ஊழியத்தில் பரத்தின் அதிகாரத்தைப் பெற்றிருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எனவேதான், நான் ஊழியம் செய்யும் எங்களுடைய எல்லா சபைகளிலும், ஜனங்கள் “தேவனை அறிந்து கொள்ளும்படி நடத்துவதற்கே” நான் பாடுபட்டிருக்கிறேன்.

சரித்திரத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு, இக்காலத்தில்தான்வேத அறிவு ஏராளமாய் பெருகியிருக்கிறது! அன்று பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு சுமார் 1500 வருடங்களாகியும்கூட அச்சடிக்கப்பட்ட வேத புத்தகங்கள் உலகில் எங்கும் இல்லாமல்தான் இருந்தது. இந்த கடைசி இரண்டு நூற்றாண்டுகளில்தான், வேதப்புத்தகம் தாராளமாய் நமக்குக் கிடைக்கிறது. இன்றோ, பல்வேறு மொழிபெயர்ப்புகளும், ஒத்தவாக்கியங்களும், வேதபாட விளக்கங்களும் ஏராளமாய் வந்து விட்டன.

இவ்வித வேத அறிவின் பெருக்கம், “பரிசுத்தமிக்க கிறிஸ்தவர்களை” ஏராளமாய் உருவாக்கிவிட்டதென நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லவேயில்லை! வேத அறிவு பரிசுத்தத்தை உருவாக்க முடியுமென்றால், சரித்திரத்தில் இன்று வாழும் நாம்தான் அதிக தேவ பக்தியான ஜனங்களை கொண்டிருக்க வேண்டும்! ஆனால் காரியம் அவ்வாறு இல்லையே!? வேத அறிவுதான் பரிசுத்தத்தை உருவாக்க முடியுமென்றால், நம் யாரைக் காட்டிலும் அதிகமாய் வேதாகமத்தை அறிந்திருக்கும் “சாத்தான்" பரிசுத்தமானவனாய் மாறியிருப்பான்!

இன்று ஏராளமான வேத கலாச்சாலைகள், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேதாகமத்தை போதிக்கின்றனவே! ஆனால், “உலகத்தின் சீரிய தெய்வபக்தியானவர்கள்” இந்த வேதகலாச்சாலையிலா இருக்கிறார்கள்? இல்லை! இன்னும் சொல்லவேண்டுமென்றால், இன்றுள்ள வேதகலாச்சாலை பட்டதாரிகள் அஞ்ஞானிகளை விட மோசமாய்தான் இருக்கிறார்கள்!

சில வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் உள்ள ஓர் உயர்ந்த சுவிசேஷ வேத கலாச்சாலையில் முதல் மதிப்பெண் பெற்று பட்டம் வாங்கிய மாணவனை நான் சந்தித்தேன். அந்த மாணவன், தான் வேத கலாச்சாலையில் சேரும்போது இருந்த ஆவிக்குரிய நிலையைவிட, வேத கலாச்சாலையின் மூன்று ஆண்டு படிப்பிற்குப் பிறகு உள்ள தன் ஆவிக்குரிய நிலை மோசமாய் மாறிவிட்டது என வருத்தத்துடன் கூறினார்! அப்படியானால், இந்த வேதாகமக் கல்லூரி இந்த மாணவனுக்கு என்னத்தைப் போதித்தது? ஆம், வேதாகமத்தைப் பற்றியும் கிறிஸ்தவத்தைப் பற்றியுமான போதகங்களையே போதித்திருக்கிறது. இதுபோன்ற வேதாகாமக் கல்லூரிகளில் நிச்சயமாய் சாத்தான் முதல் மார்க் வாங்குவான் என்பதில் சந்தேகமேயில்லை!

ஒருவன் கோபத்தையும், கசப்பையும், இச்சையான சிந்தைகளையும், பண ஆசையையும் ஜெயம் பெறாமல், “வியாக்கியான அகராதியையும்”, “எதிர்மறை வல்லுனர்கள் கூறியிருப்பவை என்ன?" என்பதையும், ஒரு வசனத்தின் “மூல கிரேக்க பதத்தில் உள்ள அர்த்தம்” என்ன? என்பதையும் அறிந்து கொள்வதில் என்ன பிரயோஜனம்? இவன் பெற்ற வேத கலாசாலைச் சான்றுகளை வைத்து, ஒரு சபையில் ஒரு பாஸ்டராய் வேண்டுமானால் நியமனம் பெறலாம்! ஆனால், தன்னுடைய சபையில் உள்ள ஜனங்களுக்கு இவர் என்னத்தைப் போதிப்பார்? இன்று ஜனங்களுக்கு “ஒழுக்க நெறியில்” ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறதேயல்லாமல் “வேத சாஸ்திரத்தில்” இவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? இந்த மக்களுக்கு இவர்கள் என்ன உதவியைச் செய்திட முடியும்? பாருங்கள், இப்படித்தான் இன்று தேவனுடைய பணி நம் இந்தியாவில் சீரழிந்து கொண்டிருக்கிறது!

நீங்கள் முதலாவது தேவனை அறிந்திருந்தால் மாத்திரமே, உங்கள் மந்தையும் தேவனை அறிந்து கொள்ளும்படி நீங்கள் நடத்திட முடியும்! உங்கள் சொந்த வாழ்க்கையில் பாவத்தை ஜெயித்திருந்தால், உங்கள் மந்தையும் பாவத்தை ஜெயித்து வாழ நீங்கள் நடத்திட முடியும்! அவ்வாறு இருந்தால் மாத்திரமே, அவர்களும் ஆயத்தப்படுத்தப்பட்டு “வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்றவர்களாய்” கர்த்தருக்கு ஊழியம் செய்ய புறப்பட்டுச் சென்றிடவும் முடியும்!

ஒருவன் வேத அறிவையும் அல்லது வேத-கலைப் பட்டங்களையும் பெற்றதினிமித்தம் சாத்தான் அதிர்ச்சி அடைந்துவிட்டான் என எண்ணுகிறீர்களா? ஒருக்காலும் இல்லை! தேவனை அறிந்து... பரிசுத்தமும், தாழ்மையும் கொண்ட புருஷர்களுக்கும், ஸ்திரீகளுக்குமே சாத்தான் அஞ்சி நடுங்குகிறான்! அதிர்ச்சியும் அடைகிறான்!