WFTW Body: 

“நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக” என்று உபாகமம் 6:4-5ல் நாம் வாசிக்கிறோம்.

நாம் மூன்று தேவர்களை ஆராதிக்கிறதில்லை. தேவன் ஒருவரே, அவர் மூன்று நபராக இருக்கிறார். முதலாம் கற்பனையை உபாகமம் 6:5 வேறு வழியில் விவரிக்கிறது. இயேசு மத்தேயு 22:37ல் இதனையே மேற்கோள் காட்டுகிறார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;” இதுவே முதலாம் கற்பனை.

அதனுடைய பொருள் என்னவென்றால், குடும்பத்துக்கோ, சொத்துக்கோ, வேலைக்கோ அல்லது பணத்துக்கோ நம்முடைய இருதயங்களில் எந்த இடமுமில்லை என்பதாகும் – ஏனென்றால் நம்முடைய முழு இருதயமும் தேவனுக்கே கொடுக்கப்பட்டாயிற்று. இது "உற்பத்தியாளரின் அறிவுரை (Manufacturer’s Instruction)" கையேட்டில் உள்ள முதலாம் அறிவுரையாகும். இந்த கற்பனைக்கு நீங்கள் கீழ்ப்படிவதற்கு முன்பாக மனிதன் என்கிற இயந்திரத்தை இயக்காதீர்கள்.

உங்களுடைய முழு இருதயத்தோடும் நீங்கள் கர்த்தரிடத்தில் அன்புகூரும்பொழுது என்ன நடக்கும்?

  • உங்களுடைய மனைவியை இன்னும் மேன்மையாக நீங்கள் அன்புகூருவீர்கள்!
  • உங்களுடைய அயலகத்தாரை மேன்மையாக நீங்கள் அன்புகூருவீர்கள்!
  • உங்களுடைய சத்துருக்களையும் கூட நீங்கள் அன்புகூருவீர்கள், ஏனென்றால் இனிமேல் உங்களுடைய இருதயத்தில் எந்த பகையும் இல்லை.
  • உங்களுடைய முழு இருதயத்தோடும் நீங்கள் தேவனிடத்தில் அன்புகூராததின் விளைவாகவே பொறாமையும், பகையும், கசப்பும், மற்றவர்களுக்கு விரோதமான மற்ற எல்லாப் பாவங்களும் உங்களுக்கு வருகிறது. தேவனிடத்தில் அன்புகூர வேண்டிய உங்களுடைய இருதயத்தின் ஒரு பகுதி பொறாமையினால் நிறைந்திருக்கிறது. பிரதானமாக, பாவத்துக்கு விரோதமாக எதிர்த்துப் போராடி, நாம் பாவத்தை ஜெயங்கொள்ளுகிறதில்லை, நம்முடைய முழு இருதயத்தோடும் தேவனிடத்தில் அன்புகூருவதின் மூலமாக ஜெயங்கொள்கிறோம். நம்முடைய முழு இருதயத்தோடும் நாம் தேவனிடத்தில் அன்புகூரும்பொழுது, பண ஆசை, சொத்தின்மீது ஆசை, பொல்லாத இச்சை, இவைகள் எல்லாமுமே போய்விடும்.

    நல்லவரல்லாத திரு. A அவர்களை ஒரு பெண் நேசிக்கிறாள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அவனை நேசிக்கிறதை இவள் நிறுத்துவதற்காக அவளுடைய பெற்றோர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்களால் ஜெயம் பெற முடியவில்லை. பின்னர் ஒரு நாள் இந்த பெண் திரு. B அவர்களைச் சந்திக்கிறாள், அவன் மிகவும் அழகானவனும், அதிக ஐசுவரியவானும், இனிமையுமான ஒரு நபர். திடீரென்று திரு. A அவர்கள் மீது கொண்டிருந்த அவளுடைய எல்லா நேசமும் மறைந்துபோனது. அது எப்படி நடந்தது? அதனை "ஒரு புதிய நேசத்தின் வெளித்தள்ளக்கூடிய வல்லமை" என்று அழைக்கலாம். ஒரு புதிய நேசம் முதலிலிருந்த நேசத்தை வெளியே ஓட்டிவிட்டது.

    இதனைக் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அப்பியாசப்படுத்திப் பாருங்கள். தேவன் தடை செய்கின்ற அநேக பொல்லாப்பான காரியங்களை நீங்கள் இச்சிக்கிறீர்கள். இந்தக் கெட்டப் பழக்கங்களை விட்டுவிட நீங்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கிறீர்கள், ஆனால் அந்த இச்சைகளை நீங்கள் நேசிக்கிறபடியால் அதனை விட்டுவிட முடியவில்லை. பின்னர் ஒரு நாள், இயேசுவின் மகிமையை நீங்கள் கண்டு, உங்களுடைய முழு இருதயத்தோடும் அவரிடத்தில் அன்புகூரத் தொடங்குகிறீர்கள். என்ன நடக்கிறது? இந்த புதிய அன்பு அந்த பழைய நேசத்தைத் துரத்திவிடுகிறது. இனி நாம் இந்த உலகத்தின் காரியங்களுக்கு எந்த ஆர்வமும் காட்டுகிறதில்லை. இது "ஒரு புதிய நேசத்தின் வெளித்தள்ளக்கூடிய வல்லமை". இதுவே பாவத்தின்மீது ஜெயங்கொள்வதின் இரகசியம். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூருவாயாக – ‘முழு ஆத்துமாவோடும் அன்புகூருவாயாக’ என்பதன் பொருள், ‘முழு அறிவுத் திறனோடும் அன்புகூருவாயாக’ என்பதாகும்.