நீங்கள் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான சத்தியம் ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லட்டும்: பழைய ஏற்பாட்டின் அனைத்து மேற்கோள்களையும், புதிய ஏற்பாட்டில் ஏதேனும் ஒரு சத்தியம் அதை ரத்துசெய்து தரம் உயர்த்தியுள்ளதா (override) என்று சோதித்தறிய வேண்டும். உதாரணத்திற்கு, ஏற்கனவே நமக்காக தேவ ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டதன்மூலம், ஆட்டுக்குட்டிகளைப் பலியிடுவதென்பது ரத்துசெய்யப்பட்டு தரம் உயர்த்தப்பட்டது. அதேபோல், நாம் நினைவில் கொள்ள வேண்டியது, தானியேல் ஜெபித்த காலத்தில் சாத்தானும் அவனுடைய சேனைகளும் இன்னும் கல்வாரியில் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால்தான் சாத்தானுடன் (பரலோகத்தில்) மூன்று வாரங்களுக்கு மோதல் ஏற்பட்டது (தானியேல்10:12,13). ஆனால் நாம் இப்போது சாத்தான் தோற்கடிக்கப்பட்ட சிலுவையின் இந்தப் பக்கத்தில் வாழ்கிறோம். ஆகையால் நாம் இப்போது மூன்று வாரங்கள் அவனோடு போராட வேண்டியதில்லை. நாம் கிறிஸ்துவின் ஜெயத்தில் நிற்கிறோம். இது மிகச் சிலரே போதிக்கும் ஒரு சத்தியமாயிருக்கிறது.
சாத்தான் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டான் (அழிக்கப்படவில்லை ஆனால் நிராயுதபாணியாக்கப்பட்டான்) என்பதை கொலோசெயர் 2:14,15 மற்றும் எபிரெயர் 2:14-ல் நாம் தெளிவாக வாசிக்கிறோம். எனவே இன்று, நாம் முதலில் நம்மை முழுவதுமாக தேவனுக்கு அர்ப்பணித்து (நம்மையே கொடுத்து) பின்னர் கிறிஸ்துவின் ஜெயத்தில் நின்று இயேசுவின் நாமத்தில் சாத்தானை எதிர்க்கிறோம். அப்போது சாத்தான் நம்மை விட்டு உடனே ஓடிப்போவான் (யாக்கோபு 4:7). மின்னல் வேகத்தில், அதாவது, ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் (அல்லது 3,00,000 கிலோமீட்டர்) வேகத்தில் அவன் நம்மை விட்டு ஓடிவிடுவான் - ஏனெனில் இயேசு “சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுவதைக் கண்டேன்” என்று சொன்னார் (லூக்கா 10:18). (யாக்கோபு 4:7-ஐ வைத்து வேத வினாடி வினா கேட்பதற்கு இது ஒரு நல்ல கேள்வி: "நாம் எதிர்க்கும்போது சாத்தான் எந்த வேகத்தில் நம்மை விட்டு ஓடிப்போகிறான்?)
ஆனால், எப்பொழுதெல்லாம் உங்கள் மனச்சாட்சியில் நீங்கள் குத்தப்படுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் பாவத்தை அறிக்கை செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவின் இரத்தத்தால் தொடர்ந்து சுத்திகரிக்கப்படாவிட்டால், சாத்தானின் மீது உங்களுக்கு அதிகாரம் இருக்காது. ஆகையால், உங்கள் பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு உங்கள் மனச்சாட்சியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தேவன் ஓர் அன்பான தகப்பன். நீங்கள் எப்போதும் உங்கள் பாதுகாப்பை அவரிடத்தில் காண வேண்டும். ஒரு நபர் மிகச்சிறந்த பூமிக்குரிய தகப்பனாயிருந்தாலும் அவர் தேவனுடைய ஒரு மங்கலான பிரதி மட்டுமேயாவார். எனவே தேவன் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கலாம். நீங்கள் எப்போதும் அவருடைய அன்பில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; மேலும், பதிலுக்கு நீங்கள் அவரை ஆழமாக நேசிக்க வேண்டும். அவரைப் பிரியப்படுத்தாத எதையும் நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாது. நீங்கள் விழும்போது (இப்போதும் அப்போதுமாக [வாலிபத்தில்] நீங்கள் விழக்கூடும்), உடனடியாக மனந்திரும்பி, துக்கத்தோடு அவரிடத்தில் திரும்பி வாருங்கள், இயேசுவின் இரத்தத்தின் மூலம் உங்கள் இருதயத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
பல கரிஸ்மேட்டிக் (ஆவியின் வரங்களை வலியுறுத்தும்) பிரசங்கிமார்கள், உலகப்பொருள் சார்ந்த விஷயங்களுக்காகவும், சுகப்படுத்துதலுக்காகவும், பிசாசுகளைத் துரத்துவதற்காகவும் விசுவாசத்தை முக்கியப்படுத்திப் பிரசங்கம் செய்கிறார்கள். பின்னர் ஜனங்கள் தங்கள் பணத்தைத் இவர்களுக்குத் தரும்படி வற்புறுத்துகிறார்கள். வேறு சில பிரசங்கிகள், கிறிஸ்தவர்களை தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மேல் நம்பிக்கை வைக்கச் செய்வதற்குப் பதிலாக, உளவியல் (psychological) முறைகளில் அவர்களை ஆறுதல்படுத்துவதை முக்கியப்படுத்துகிறார்கள். எனவே இந்த நாட்களில் பரவலாக உள்ள "உள்ளான சுகமாக்குதல்", "நேர்மறை சிந்தனையின் வல்லமை" மற்றும் "தலைமுறை சாபங்கள்" போன்ற தவறான போதனைகளைத் தவிர்க்க கவனமாயிருங்கள். ஆவிக்குரிய விஷயங்களில் புதிய ஏற்பாடு பயன்படுத்தும் பேச்சுப் பாங்கைக் (the language of the New Testament) கடைபிடிப்பது சிறந்தது. தேவனுடைய வார்த்தையைப் படித்துக் கற்றுக்கொள்ளுங்கள், அப்போது நீங்கள் வஞ்சிக்கப்படமாட்டீர்கள்.
சாத்தானுடைய முக்கிய ஆயுதங்களில் ஒன்று "பயம்". அவன் தொடர்ந்து அதைப் பயன்படுத்துகிறான். விசுவாசிகள் மற்றவர்களைப் பயமுறுத்த அல்லது அச்சுறுத்த முயற்சிக்கும் போது, அவர்கள் சாத்தானின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறபடியால், அவர்கள் (அறியாமல் செய்தாலும்) சாத்தானுடன் ஐக்கியம் கொள்கிறார்கள். தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடார் (2தீமோத்தேயு 1:7). பயம் எப்போதும் சாத்தானின் ஆயுதமாக இருக்கிறது. எனவே மனிதர்கள் நமக்கு எதிராக மேற்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல் உத்திகளுக்கும் நாம் பயப்படவே கூடாது. அத்தகைய மனிதர்கள் தங்களை "விசுவாசிகள்" என்று அழைத்துக்கொண்டாலும் அவர்கள் சாத்தானுடைய ஏவலாளிகளாகவே இருக்கிறார்கள். இது நம் வாழ்நாள் முழுவதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடமாகும்.