WFTW Body: 

தேவன் உங்களுக்கு, வரும் நாட்களுக்கென்று ஓர் ஊழியத்தை வைத்திருக்கிறார், எனவே எப்போதும் தாழ்மையுடன் இருந்து, எந்த சூழ்நிலையிலும் உங்களை நியாயப்படுத்தாமல், உதவிக்காக தேவனிடம் தொடர்ந்தேச்சையாகக் கூக்குரலிடுவதன் மூலமும், உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து செயற்கைத்தன்மையையும் வெறுப்பதன் மூலமும், அந்த ஊழியத்துக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

நீதியை நாடிச் செல்லும் அனைவருக்கும் பரிசேயத்தனமும், ஆவிக்குரிய பெருமையும் மிக அருகாமையில் இருக்கிறது. எனவே இந்த இரட்டைத் தீமைகள் எந்த ஒரு குழுவிற்கும் சொந்தமானது அல்ல. இந்தத் தீமைகள் நம்மில் எவருக்கும் வெகு தொலைவில் இல்லை. இந்தத் தீமைகளை மற்றவர்களிடம் பார்ப்பது மிக எளிது, ஆனால் அவை நம்மில் இருப்பதைப் பார்ப்பது மிகவும் கடினம் என்பதை நான் காண்கிறேன். பக்திமார்க்கம் சார்ந்த எண்ணம் கொண்ட இளைஞர்கள் எளிதில் நோக்கிச் செல்லும் விஷயங்களில் ஒன்று பரிசேயத்தனம், அது ஆவிக்குரிய தன்மையைக் கொன்றுவிடுகிறது.

நீங்கள் போராடிக் கொண்டிருக்கும் வெவ்வேறு பகுதிகளில், பாவத்துக்கு "முழுமையாய்" மரிக்கும் மரணத்துக்குள் நுழைய நீங்கள் பிரயாசப்பட வேண்டும். மேலோட்டமான வெற்றியில் நீங்கள் மகிழ்ச்சியடையக்கூடாது. ஒவ்வொரு விருப்பமும் ஒரு வெங்காயம் போன்றது. நீங்கள் இப்போது பார்க்கக்கூடிய மேல் தோலின் கீழ் இன்னும் எத்தனையோ அடுக்கு தோல்கள் அடியில் உள்ளன. நீங்கள் பார்க்கும் இந்தத் தோலை நீங்கள் தீவிரமாகக் கையாளாத வரை, கீழே உள்ளவைகளுக்கு நீங்கள் ஒருபோதும் செல்ல முடியாது.

பரிசுத்தமாகுதலானது வாழ்நாள் முழுவதும் இயேசுவைப் போல மாறுவதற்கான ஒரு செயல்முறையாகும். உதாரணமாக, ஸ்திரீகளை அவர் பார்த்த விதமாகப் பார்ப்பது, பணத்தையும் பொருளையும் அவர் பார்த்த விதத்தில் பார்ப்பது, உங்கள் எதிரிகளை அவர் தம் எதிரிகளைப் பார்த்த விதமாகப் பார்ப்பது போன்ற செயல்கள். அந்த இலக்கை அடைய முழு வாழ்நாட்களும் தேவைப்படும். ஆனால் நீங்கள் அதற்கென்று பிரயாசப்பட வேண்டும். "பூரணராகும்படி கடந்து போவோமாக" (எபிரெயர் 6:1), "அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்" (1யோவான் 3:3), மற்றும் "பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" (பிலிப்பியர் 3:13,14) போன்ற வசனங்களின் பொருள் இது தான். நீங்கள் இந்தப் போராட்டத்தில் விட்டுக்கொடுத்தால், எதிரியின் கை மேலோங்கி விடும். மாறாக, நீங்கள் அந்தரங்கத்தில் தொடர்ச்சியாக "மாம்சத்தில் பாடுபட்டால்" (உங்கள் சுயத்தை மரணத்திற்கு உட்படுத்தினால்), 1பேதுரு 4:1,2 கூறுவது போல் பாவம் செய்வதை நிறுத்திவிடுவீர்கள்.

மற்றவர்கள் சோதிக்கப்படாத விதத்தில் நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள் என்று ஒருபோதும் கற்பனை செய்துகொள்ளாதீர்கள். அந்தப் பொய்யின்மூலம் சாத்தான் உங்களை ஏமாற்ற விடாதீர்கள், ஏனென்றால் அது உங்களை அதைரியப்படுத்தி விடும்.

1கொரிந்தியர் 10:13 சொல்லுகிறது: "நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு சோதனையும் எல்லா மனுஷருக்கும் பொதுவாக வருகிற சோதனையைப் போன்றதாகவே இருக்கிறது. ஆனால், தேவன் தம் வாக்கைக் காப்பாற்றுகிறார். சோதனையை மேற்கொள்ள உங்களுக்கு இருக்கும் பெலனுக்கு மிஞ்சிய சோதனையை அவர் உங்களுக்கு அனுமதிக்க மாட்டார். ஆனால், நீங்கள் சோதிக்கப்படுகிற அதே வேளையில், அதை மேற்கொள்ளத்தக்க பெலனை (கிருபையை) அவர் உங்களுக்குத் தந்து, அவ்விதமாக அந்த சோதனையில் நீங்கள் விழாமல் தப்பிக்கொள்ள உதவிசெய்வார். எந்த சோதனையும் எதிர்த்துநிற்கக்கூடாதது அல்ல." (நற்செய்தி(Good News) மொழிபெயர்ப்பு மற்றும் லிவிங்(Living) மொழிபெயர்ப்பு).

அடிப்படையில், தங்கள் சொந்த சித்தத்தை செய்யவே எல்லா மனுஷரும் ஒரே மாதிரியாக சோதிக்கப்படுகிறார்கள். பாவம் என்பது பல்வேறு பாகங்களைக் கொண்ட ஒரு பெரிய வட்டம். ஆனால் ஒவ்வொரு சோதனையும் அடிப்படையில் ஒன்றுதான். தேவனுடைய சித்தத்தை மறுத்து தன்னுடைய சொந்த சித்தத்தைச் செய்வதற்கான சோதனை. பொய் பேசுவதானாலும், கோபம் கொள்வதானாலும், ஒருவரை வெறுப்பதானாலும், முறுமுறுப்பதானாலும், விபச்சாரம் செய்வதானாலும் அல்லது வேறு எந்தப் பாவமானாலும், அடிப்படையில் சோதனை ஒன்று தான். இயேசுவும் தம்முடைய சொந்த சித்தத்தைச் செய்யும்படிக்கு சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் தேவனுடைய உதவியைக் கேட்டு சோதனையை எதிர்த்துநின்றபடியால் (எபிரெயர் 5:7) அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை (யோவான் 6:38). நாம் யாவரும் இப்போது அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றமுடியும்.

எனவே வெவ்வேறு பாவங்களை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி விஷயங்களாகப் பார்க்காதீர்கள். சிலர் ஒரு பகுதியிலும், மற்றவர்கள் மற்றொரு பகுதியிலும் அதிகமாக சோதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பாவம் என்பது ஒருவர் தனது சொந்த விருப்பத்தை செய்வதாகும். உங்களுக்கு உதவி செய்யும்படி தேவனிடம் கேளுங்கள் - பரிசுத்த ஆவியானவர் உங்கள் மாம்சத்தை (சுய விருப்பத்தை) மரணத்திற்கு உட்படுத்த உதவுவார் (ரோமர் 8:13 மற்றும் கலாத்தியர் 5:24 -ஐப் பார்க்கவும்).

இயேசுவின் மீதுள்ள ஊக்கமான பக்தியே நீங்கள் வெற்றி பெறவும், எல்லா நேரங்களிலும் சரியான பாதையில் பாதுகாக்கப்படவும் உதவும். எல்லா நேரங்களிலும், "பூலோகத்தில் உம்மைத் தவிர (ஒருவர் மீதும்) எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங்கீதம் 73:25) என்று நீங்கள் கூற முடியும். உங்கள் இருதயத்திலிருந்து மற்ற அன்புகளை (இச்சைகளையும்) வெளியேற்றும் ஆற்றல் இயேசுவின் மீதான அன்புக்கு உண்டு. "நான் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் (அதனால் நான் பாவம் செய்ய பயப்படுகிறேன் - யோசேப்பு சொன்னது போல)" என்றும், "அவர் எப்போதும் என் வலது பாரிசத்தில் இருக்கிறார் (பாவம் செய்யாமல் வாழ எனக்கு கிருபை அளிப்பதற்காக)" (சங்கீதம் 16:8) என்றும் நீங்கள் சொல்ல வேண்டும். அதுவே தொடர்ச்சியான வெற்றியில் வாழ்வதற்கான இரகசியமாகும்.