WFTW Body: 

தன்னுடைய ஒன்றுமில்லாத் தன்மையையும், உதவியற்ற நிலைமையையும் பற்றிய உணர்வுடையதாயிருக்கிற, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயமே (சங்கீதம் 51:17) தேவனுக்கேற்கும் பலிகளாகும். ஆபேலிடம் இருந்ததும் காயீனிடம் இல்லாததும் அது தான். ஆகையால் தான், “ஆபேலை அங்கிகரித்து, (அதினிமித்தம்) அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்… காயீனை அங்கிகரிக்காமல், (அதினிமித்தம்) அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை” (ஆதியாகமம் 4:4,5) என்று எழுதப்பட்டிருக்கிறது.

ஆத்துமா தேவன்பால் உதவியற்ற விதத்தில் சார்ந்துகொள்வது தான் விசுவாசம். “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்” (எபிரெயர் 11:4). ஆகையால் ஆபேலின் காணிக்கைகள் தேவன் அங்கீகரிக்கத்தக்கதாய் இருந்தன.

'ஆபேலே இரத்த காணிக்கையைக் கொடுத்தான், காயீன் இரத்த காணிக்கையைக் கொடுக்கவில்லை என்பதே காயீனுக்கும் ஆபேலுக்கும் உள்ள வித்தியாசம்' என்ற போதனையில் பெருத்த வஞ்சகம் இருக்கிறது. இப்படிப்பட்ட உபதேசங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தேவனுக்கு முன்பாக இயேசுவின் இரத்தத்தைக் காட்டுவதனால் ஒரு மனிதனை தேவன் அங்கீகரிப்பார் என்று எண்ணச் செய்கிறது. மனிதன் வாழும் வழிகளிலும் அவன் இருதயத்தின் நிலையிலும் (உடைக்கப்பட்டாலோ இல்லையோ, விசுவாசித்தாலோ இல்லையோ) எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று எண்ணும் அளவிற்கு உள்ளது. அவன் செய்வதெல்லாம் ஒரு மந்திரத்தை ஓதுவது போல இயேசுவின் இரத்தத்தைக் கெஞ்சுவது; அதன் பின் தேவனுடைய அங்கீகரிப்பை பெறுவது. இது ஒரு பொய். அநேகர் இதனால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

யார் வேண்டுமானாலும் இயேசுவின் இரத்தத்தை உரிமைகோரிக்கொள்ள முடியாது. எவராயிருந்தாலும் அவர்கள் பாவங்களை இயேசுவின் இரத்தம் கழுவும் என்று வேதவாக்கியம் குறிப்பிடவில்லை. இல்லவே இல்லை. இது ஒரு நுணுக்கமான வேதப்புரட்டாகும். "தேவன் ஒளியிலிருக்கிறதுபோல ஒளியிலே நடக்கும் அனைவரையும் இயேசுவின் இரத்தம் கழுவும்" என்றே வேதம் கூறுகிறது (1யோவான் 1:7). தேவனுடைய ஒளியில் நடக்க, ஒருவன் ஆபேலைப்போல் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே அவனுடைய காணிக்கை அங்கீகரிக்கப்படும்.

ஒரு மனிதன் இயேசுவின் இரத்தத்தை தான் நம்புவதாகக் கூறிக்கொண்டு, ஆனால் பெருமையும் இறுமாப்புமான ஆவியையும் கொண்டிருப்பானெனில், காயீனுக்குச் செய்ததைப்போல தேவன் அவனுக்கு எதிர்த்து நிற்பார் (1பேதுரு 5:5). தாழ்மையுள்ளவர்களே தேவனிடத்திலிருந்து கிருபை பெற்றுக்கொள்கிறார்கள் (யாக்கோபு 4:6).

நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான, விசுவாசம் நிறைந்த (தாழ்மையாய் தேவனை சார்ந்துகொள்கிற) இருதயத்திலிருந்து வந்தால் மட்டுமே, நமது ஆராதனை, ஜெபம் மற்றும் ஊழியங்கள் தேவனால் அங்கீகரிக்கப்படக்கூடியதாக அமையும். தேவன் சரளமான நம்முடைய பேச்சையோ அல்லது சிறப்பாய் செய்யும் ஊழியத்தையோ பார்க்கிறவரல்ல, மாறாக நம் இருதயத்தின் நோக்கத்தையே (attitude) பார்க்கிறார். இதுவே ஆதியாகமம் 4-ல் உள்ள சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.

காயீன்-ஆபேல் நாட்கள் முதல் காலச்சக்கரத்தின் முடிவு வரை, தேவனுக்கு ஏற்கும் பலிகள் எப்பொழுதுமே நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான ஆவியிலிருந்து வந்தவையாகவே இருக்கின்றன. அவர் மாறாதவராயிருக்கிறார். அவருடைய கற்பனைகளும் அப்படியே நிலைத்திருக்கின்றன.

காயீனுடைய இருதயம் பெருமையாயும் மேட்டிமையாயும் இருந்தபடியால், அவன் ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து அதன் இரத்தத்தை சிந்தியிருந்தாலும் கூட தேவன் அவனை அங்கீகரித்திருக்க மாட்டார்.

இருதயத்திருந்து வரும் தாழ்மையே இரட்சிப்புக்கான முதல் படி. பின்பு ஒளியிலே வந்து, நம்முடைய பாவங்களை எல்லாம் கழுவ இயேசுவின் இரத்தத்தைக் கேட்கலாம்.

இருதயத்தில் தாழ்மையாய் இருப்பவர்களே, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31) என்ற பவுலுடைய வெற்றி முழக்கத்தை சத்தமாய் முழங்க முடியும். ஏனெனில் தேவன் தாழ்மையானவர்கள் பக்கம் மட்டுமே இருக்கிறார். பெருமையுள்ளவர்கள் அவ்வாறு கூற முடியாது, ஏனெனில் தேவன் அவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். காயீனைப்போல் தங்களைக்குறித்து உயர்வாய் எண்ணுகிற எவரும், இயேசுவின் இரத்தத்தை தொடர்ந்து உரிமைகோரிக்கொண்டிருந்தாலும் கூட, அவனைப்போலவே முடிவடைவார்கள். “தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலாத்தியர் 6:7). எவ்விதப் பாகுபாடுமின்றி அந்தப் பிரமாணம் அனைவருக்கும் பொருந்துகிறதாயிருக்கிறது.