WFTW Body: 

எங்களுடைய ஆயுசுநாட்கள் சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் கடந்து போகிறோம். நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங்கீதம் 90:4,10,12).

நாம் நம்முடைய நாட்காட்டியில் இன்னொரு ஆண்டை நிறைவு செய்து கொண்டிருக்கிறோம். இந்தச் சங்கீதத்தின் வாயிலாக, நம்முடைய பூமியின் வாழ்நாட்கள் எவ்வளவு குறுகியவை என்றும், வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதும் எவ்வளவு முக்கியமானது என்றும் ஞாபகப்படுத்திக் கொள்ளுவது நமக்கு சாலச் சிறந்ததாக இருக்கும்.

உங்களுக்கு முன்பாக இருக்கும் நீங்கள் பயணிக்க வேண்டிய சாலையை ஏறெடுத்துப் பார்க்கும் போது, நீங்கள் கைக்கொள்ளத்தக்க நான்கு எளிய விதிகள் இதோ:

1. சிவப்பு விளக்கு எரியும் போது நில்லுங்கள்:

நமக்கு முன்பாக எப்பொழுதும் பச்சை விளக்கு மாத்திரமே எரிவது போல எண்ணிக் கொண்டு, நாம் நம் வாழ்க்கையை அவசரகதியில் நடத்தவே நாடுகிறோம். அப்படியில்லாதபடிக்கு, முடிவெடுக்கவேண்டிய குறுக்குச்சாலைக்கு நாம் வரும்பொழுதெல்லாம், நம் அவசர ஓட்டத்தை நிறுத்தி, அங்கே தேவனுக்கு நம் வழியை ஒப்புவிப்போமாக. நாம் எந்த வழியிலே தொடரவேண்டுமென அவரிடம் கேட்டால், அவர் நமக்கு வழியைக் காண்பிப்பார் (ஏசாயா 30:21). நமக்கு முன்பாகப் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதிமொழிகள் 3:6). ஆனால் அதே சமயம், தேவன் நமக்குப் பச்சை விளக்கைக் காட்டும்வரை நாம் காத்திராமல் தொடர்ந்து சென்றால், விபத்தைச் சந்திப்போம்.

2. பச்சை விளக்கு எரியும் போது நிற்க வேண்டாம்:

நம்மை நாமே வெறுத்து, நம் சிலுவையை எடுத்துக் கொண்டு, இயேசுவைப் பின்பற்ற நமக்குக் கிட்டும் தருணங்களெல்லாம், நமக்கு முன்பாகப் பச்சை விளக்கு எரிவதாகத்தான் அர்த்தம். அப்பொழுதெல்லாம் நாம் நிற்காமல், தொடந்து செல்ல வேண்டும். மற்றவர்களுடன் நமது உறவுப்பாலத்தைச் சரிசெய்து, புதுப்பித்துக் கொள்ளும்படி நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களெல்லாம் பச்சை விளக்காகும். அப்பொழுதெல்லாம், நாம் காத்திராமல், கடந்து சென்றுவிட வேண்டும் (ரோமர் 12:18). நாம் “ஒப்புரவாகுகிறவர்களாக” மாறியிருப்போமென்றால், நாம் உண்மையாகவே, கிறிஸ்துவுக்குள் புதிதாக மாறிவிட்டோம் என்பதற்கு அது ஒரு சான்றாகும் (2கொரிந்தியர் 5:17–20). யாரிடத்திலாவது மன்னிப்புக் கேட்கவோ, காரியங்களைச் சரி செய்யவோ ஒரு தருணம் கிடைக்கும் போது, நாம் நம்முடைய பெருமையினிமித்தமோ, நம்மை நாமே தற்காத்துக் கொள்ளுவதினிமித்தமோ, பிறர்மீது பழியைப் போடுவதினிமித்தமோ தாமதிப்போமானால், பச்சை விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது முன்னால் நகர மறுப்பதற்குச் சமமாகத்தான் இருக்கும். நாம் போக்குவரத்து முழுவதையும் தடை செய்கிறவர்களாகவும், முடிவிலே, விபத்தில் சிக்குபவர்களாகவும் இருப்போம். ஆகவே, நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாயிருந்து, பச்சை விளக்கு எரியும்போது, துரிதமாய் கடந்துசெல்கிறவர்களாய் இருப்போமாக (மத்தேயு 5:3).

3. சாலையை விட்டு விலகி ஓட்ட வேண்டாம்:

தேவனோடு நாம் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கையில், பிசாசானவன் நம்மைச் சாலையை விட்டு விலகி ஓட்டச் செய்யும்படி தொடர்ச்சியான முயற்சி எடுப்பான். சாலையின் இரு மருங்கிலும் நிறைய பூக்களும், மரங்களும் (மனுஷரின் அபிப்பிராயங்கள்), நமது கவனத்தைத் திசை திருப்பக் கூடியனவாக இருக்கும். பிறரைப் பிரியப்படுத்தும் விருப்பமோ, அல்லது பிறர் நம்மைக் குறித்து என்ன எண்ணுவார்கள் என்னும் பயமோ நம்மை திசைதிருப்ப அனுமதித்தால் (கலாத்தியர் 1:10), நாம் நெடுஞ்சாலையை விட்டுத் தடுமாறி, எங்காவது சென்று மோதிவிடுவோம். “பிறருடைய மனதைக் கவர்ந்திழுப்பது அல்லது அவர்களை ஆசீர்வதிப்பது, ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உனக்கு உள்ளது. நீ அவர்களை ஆசீர்வதிப்பதையே எப்பொழுதும் தெரிந்து கொள்” என்று என்னுடைய தகப்பனார் அடிக்கடி என்னிடம் கூறுவார். பிறரைக் கவர்ந்திழுப்பதற்கு உங்களுடைய திறமைகளே உங்களுக்குப் போதும். நீங்களும் உங்கள் திறமைகளும் பெருகப்பெருக, நீங்கள் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் அதிகமாயிருக்கும். ஆனால், நீங்கள் உண்மையிலேயே பிறருக்கு உதவிட நினைத்தால், உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமைதான் தேவைப்படும். நீங்கள் எவ்வளவாய் சிறுகுகிறீர்களோ, அவ்வளவுக்கதிகமாக அது நலம் பயக்கும் (யோவான் 3:30)!

4. உங்களுடைய ஓடுதளவரிசையில் (lane) நிலைத்திருங்கள்:

துரதிருஷ்டவசமாக, நிறைய பேருக்கு, சாலையில் வரையப்பட்டுள்ள ஓடுதளவரிசையைவிட்டு வெளிவராமல் பயணிக்க முடிவதில்லை. அதனால் பல விபத்துக்களைச் சந்திக்கிறார்கள். இதைப் போலவே, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும், நம்முடைய பாதுகாப்புக்காக, தேவன் ஓடுதளவரிசைக் கோடுகளை வரைந்து வைத்திருக்கிறார். நம்முடைய கோட்டுக்குள்ளாகவே தரித்திருத்தல் என்றால், நாம் பிறருடைய அலுவல்களில் தலையிடாதவர்களாய் (2தெசலோனிக்கேயர் 3:11; 1பேதுரு 4:15), நம்முடைய சொந்த அலுவல்களில் மாத்திரமே எப்பொழுதும் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பது (1தெசலோனிக்கேயர் 4:11,12) என்று அர்த்தமாகும். நாம் நமக்குத் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதென்பது, நம்முடைய கோட்டை விட்டுவிட்டு, இன்னொருவரின் கோட்டுக்குள் நுழைவதற்குச் சமமாகும். இது முடிவிலே நம்முடைய வாழ்க்கையைச் சேதப்படுத்துவதோடல்லாமல், நம்மைச் சுற்றி இருக்கும் மற்றவர்களின் வாழ்க்கையையும் சேதப்படுத்திவிடும்.

கடைசியாக: நாம் இந்தப் பயணத்தில் ஆமை வேகத்தில் மந்தமாய் நம் ஓட்டத்தைச் செலுத்தாதவர்களாய் இருப்போமாக. மாறாக, நாம் பந்தயப்பொருளைப் பெற்றுக்கொள்ளத் தக்கதாக, முழு வீச்சில் வேகமாக நம் ஓட்டத்தைச் செலுத்துவோமாக (1கொரிந்தியர் 9:24)!

இப்புத்தாண்டின் ஒவ்வொரு நாளும் தேவனுடைய மகத்தான ஆசீர்வாதம் நிறைந்ததாய் அமைய உங்கள் யாவரையும் நாங்கள் வாழ்த்துகிறோம்!