WFTW Body: 

ஆதியாகமம் 13:7-இல் ஆபிரகாமின் வேலையாட்களுக்கும் லோத்தின் வேலையாட்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாயிற்று என்று வாசிக்கிறோம். ஆபிரகாமும் லோத்தும் எகிப்துக்குச் சென்று வந்ததன் மூலம் மிகுதியான ஆஸ்தியைப் பெற்றார்கள்; இப்போது அந்த ஆஸ்தி பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆஸ்தி எப்போதும் பிரச்சனைகளை உண்டாக்கும். லோத்துவும் அவனுடைய மனைவியும் எகிப்தில் அவர்கள் பார்த்த காரியங்களின் மூலம் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் அதிக பணம் சம்பாதிக்க விரும்பினார்கள். ஆனால் ஆபிரகாம் யாருடனும் சண்டையிடாத மனிதன். ஆனால் அவனுடைய வேலைக்காரர்கள் சண்டையிட்டார்கள்.

ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.” அந்தக் கடைசி வாக்கியம் ஏன் அங்கே சேர்க்கப்பட்டுள்ளது? ஏனென்றால், அந்தப் புறஜாதியினர் இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன்றைய கிறிஸ்தவத்தின் நிலைமைக்கும் இது மிகவும் பொருத்தமாயிருக்கிறது. புறஜாதிகள் தேசத்தில் வசிக்கிறார்கள், அவர்கள் என்ன பார்க்கிறார்கள்? கிறிஸ்தவக் குழுக்கள் ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன. இவை அனைத்திற்கும் மத்தியில், லோத்தை (பணத்தை விரும்பும் உலக நபர்) அழைத்து, “உனக்கும் எனக்கும் இடையே எந்த வாக்குவாதமும் வேண்டாம், நாம் சகோதரர்கள்” (ஆதியாகமம் 13:8) என்று கூறின ஆபிரகாமைப் போன்ற ஒரு தேவ மனிதனை நாம் இன்று காணக் கூடுமோ? அவர்கள் இருவரும் சகோதரர்கள் அல்ல. ஆபிரகாம் லோத்துவின் சித்தப்பா; லோத்து அவருடைய அண்ணன்-மகன். 35 வயதே நிரம்பிய அண்ணன்-மகனுக்கு இந்த 75 வயதான மனிதன் காட்டும் கனிவைப் பாருங்கள். “நாம் சகோதரர்!” தேவ மனிதனாகிய ஒருவன் ஒரு தாழ்மையான மனிதனாயிருப்பான். அவனுக்கு 75 வயதாயிருந்த போதிலும் அவன் இளைஞனான தனது அண்ணன்-மகனைப் பார்த்து, “நாம் சகோதரர்கள். நீ எனக்குச் சமமானவன். நான் உனக்கு முதல் முன்னுரிமை தருகிறேன். நீ விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்” என்று கூற முடிந்தது. எருசலேம் அத்தகைய மனிதர்களாலேயே கட்டப்படுகிறது. கிறிஸ்தவத்திற்கு இத்தகைய தலைவர்கள் இன்று தேவை - ஆனால் அவர்கள் எளிதில் கிடைப்பதில்லை.

இன்றோ, “எனக்கு 75 வயதாகிறது, நான் உன்னுடைய சித்தப்பா. தேவன் அழைத்தது என்னைத்தான், உன்னை அல்ல. நீ என்னுடன் சேர்ந்துகொண்டு வந்தாய்” என்று கூறி தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தக்கூடிய பல தலைவர்கள் நம்மிடத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆபிரகாம் லோத்தினிடத்தில் அப்படிப் பேசவில்லை. “நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன். முதலில் உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்” என்றே ஆபிரகாம் கூறினான். லோத்து, பேராசை பிடித்த ஒரு மனிதனாக இருந்தபடியினால், பாபிலோனின் ஆவியுடன், முதலில் பற்றிக்கொண்டான். அவன் சோதோமின் அழகிய வயல்களைப் பார்த்து, அங்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும், அங்கு வாழ்ந்த செல்வந்தர்களையும் கண்டு, “நான் அங்கு சென்று அங்கே தேவனையும் சேவிப்பேன்” என்றான்.

அநேக கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் பணக்கார நாடுகளுக்குச் சென்று அங்கு வசிக்க விரும்புகிறார்கள். ஆனால் எப்போதும், அவர்கள் ஆவிக்குரியதை இழக்கிறார்கள். ஆபிரகாம் இந்த முடிவை எடுத்தபோது, அவனும் லோத்தும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க கர்த்தர் (பாபேலில் இருந்ததைப் போல) இறங்கி வந்தார். ஆபிரகாம் நடந்துகொண்ட தெய்வீக வழியை கர்த்தர் கண்டார். லோத்து அவனை விட்டுப் பிரிந்துச்சென்ற உடனேயே, கர்த்தர் ஆபிரகாமிடம் மிக முக்கியமான ஒன்றைக் கூறினார் (ஆதியாகமம் 13:14).

தேவன் ஆபிரகாமை முதலில் அவனது தகப்பனிடமிருந்து (மரணத்தால்) பிரித்தார், பின்னர் அவர் அவனை மற்றொரு உறவினனிடமிருந்து பிரித்தார் (லோத்தின் பேராசை ஆபிரகாமுக்குத் தடையாக இருந்திருக்கும்). பிறகு, “இப்போது நீ தனியாக இருக்கிறாய், இப்போது நீ எங்கு செல்ல நான் விரும்புகிறேனோ அங்கே நீ செல்லவும், நீ எப்படியாய் இருக்க நான் விரும்புகிறேனோ அப்படியே இருக்கவும் செய்ய என்னால் முடியும். என்ன நடந்தது என்பதை நான் நன்றாகப் பார்த்தேன்” என்று கூறினார். மனிதர்களிடையே நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தேவன் பார்க்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் நமது மனப்பான்மைகளைக் கவனிக்கிறார். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதால் உங்கள் உரிமையை விட்டுக் கொடுத்து விட்டீர்களா? "நான் அதை கவனித்தேன்" என்று தேவன் உங்களிடம் கூறுகிறார்.

பின்பு தேவன் ஆபிரகாமிடம், “இங்கே நின்று உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுப்பேன். அதை நான் வாக்குக்கொடுக்கிறேன். அது லோத்தின் சந்ததியினருக்குச் சொந்தமானதாக இருக்காது” என்று கூறினார். 4000 ஆண்டுகளுக்கு முன்பு தேவன் ஆபிரகாமிடம் அதை கூறினார். 4000 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அந்த நிலத்தைப் பாருங்கள், அங்கு யார் வாழ்கிறார்கள் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஆபிரகாமின் சந்ததியினரே வாழ்கிறார்கள், லோத்தின் சந்ததியினர் அல்ல. தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்து நிறைவேற்றுபவராயிருக்கிறார். ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து செல்லலாம், ஆனால் தேவன் ஆபிரகாமிடம், "நான் இந்த தேசத்தை உன் சந்ததிக்கு என்றென்றும் கொடுப்பேன்" (ஆதியாகமம் 13:15) என்று சொன்னால், அது அப்படியே ஆகும்.

பிறகு 14-ஆம் அதிகாரத்தில் லோத்து எப்படி பிரச்சனையில் சிக்கினான் என்பதைப் பார்க்கிறோம். நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு வெளியில் செல்லும்போதெல்லாம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறீர்கள். அவன் எதிரிகளால் பிடிக்கப்பட்டான். ஆபிரகாம் அவ்வேளையில், “அவனுக்கு சரியாகத்தான் நடந்திருக்கிறது. அவன் என்னிடமிருந்து ஒன்றைப் பறித்துக்கொண்டான்” என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ஆபிரகாம் அப்படி நடந்து கொள்ளவில்லை. அங்கே ஆபிரகாம் மற்றோருமுறை சோதிக்கப்பட்டதை நீங்கள் பார்க்கிறீர்கள்: தன்னை ஏமாற்றிய இந்த மனிதன் பிரச்சனையில் சிக்கியிருப்பதைக் கேட்ட ஆபிரகாமின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? உங்களை ஏமாற்றிய யாரோ ஒருவர் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும்போது ​​​​நீங்கள் தேவ மனிதனா, இல்லையா, என்பதை மிக விரைவாகக் கண்டுபிடிப்பீர்கள்.

ஆபிரகாமின் பிரதிகிரியை என்னவென்றால், “நான் போய் லோத்துக்கு உதவுகிறேன். லோத்து என்னை ஏமாற்றியது உண்மைதான். ஆனால் அவன் என்னை என்ன ஏமாற்றினான்? பூமிக்குரிய ஐசுவரியத்தின் சில குப்பைகள் தானே. அது ஒன்றுமில்லை. எனக்கு பரலோக ஐசுவரியங்கள் கிடைத்திருக்கின்றன. லோத்துக்காக நான் வருந்துகிறேன், ஏனென்றால் அவன் பூமிக்குரிய விஷயங்களைப் பின்தொடர்ந்தான், இப்போது அவன் சிக்கலில் மாட்டியிருக்கிறான். நான் போய் அவனுக்கு உதவி செய்யட்டும்” என்றான். ஆபிரகாம் போய் லோத்தை விடுவித்தான். இதுவே ஒரு தேவ மனிதனின் மனப்பான்மை. அப்படிப்பட்டவர்கள் மாத்திரமே எருசலேமைக் கட்ட முடியும்.