“இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” என இயேசு மத்தேயு 11:25-ல் கூறினார். புது உடன்படிக்கையின் மிகப் பெரும் சத்தியங்களெல்லாம் தேவனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. வேதத்தைப் படிப்பதனால் அவற்றையெல்லாம் உங்களால் கண்டுபிடித்துவிட முடியாது. நீங்கள் இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு வேதவியாக்கியான புத்தகத்தையும் வாசித்துவிட முடியும். ஆனாலும் அவற்றைக் கண்டுபிடித்து விட முடியாது. ஏனெனில் அவை யாவும் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு வெளிப்பாடு தேவை. பாலகரைப் போல சுத்த இருதயமுடையவர்களுக்கே தேவன் அந்த வெளிப்பாட்டைத் தருகிறார். அவர்கள் புத்திசாலியான தலையை உடையவர்களா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. தேவனுடைய ராஜ்யத்தைப் பொறுத்த வரை, நம்முடைய அறிவுத் திறனானது எந்த எவ்வித பயனையும் நமக்கு அளிக்காது. ஒரு சுத்தமுள்ள இருதயத்தால்தான் தேவனுடைய வெளிப்பாடுகளைப் பெற்றிட முடியும். சிறுபிள்ளைகள் கற்பிக்கப்படத்தக்கவர்களாய் உள்ளனர். ஒரு சிறு பிள்ளை அறியாமையில் இருப்பதும், தன்னுடைய அறியாமையை மகிழ்வுடன் ஒப்புக் கொள்வதும் ஒரு சகஜமான விஷயமாகும். ஒரு சிறு பிள்ளையானவன், தன்னுடைய தகப்பனிடம், “அப்பா, சாலையின் நடுவில் எதற்காக மஞ்சள் நிறக் கோடு வரைந்திருக்கிறார்கள்?” என்கிற விஷயத்தைக்கூட அப்பாவித்தனமாகக் கேட்பான். போக்குவரத்து வசதிக்காக சாலையை அவ்வாறு இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள் என்பது பெரியவர்களான நமக்குத் தெரியும். ஆனால் சிறு பிள்ளைகளுக்கு இதைப் போன்ற சிறுசிறு விஷயங்கள்கூட தெரிந்திருப்பதில்லை. வெகுசில விசுவாசிகள் மாத்திரமே, இதைப் போல, பரிசுத்த ஆவியானவரிடம் வந்து, “கர்த்தாவே, நீர்தான் இப்புத்தகத்தை எழுதினீர். இதன் அர்த்தம் என்ன? ஆவிக்குரிய காரியங்களில் நான் ஒரு மதியீனன். தயவுசெய்து எனக்கு இதை விளக்கிக் காண்பியும்” என்று கேட்கின்றனர். பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதையும், வேத புத்தகத்தை எழுதின பரிசுத்த ஆவியானவர்தாமே, அதிலுள்ளவற்றை நமக்கு வியாக்கியானப்படுத்திக் கூறுவதையும் புதிய உடன்படிக்கையிலே நாம் சிலாக்கியமாகப் பெற்றுள்ளோம்.
கிறிஸ்து சபையிலே போதகர்களை நியமித்திருக்கிறார். அந்தப் போதகர்கள் போதிக்கும் வார்த்தைகளை கேட்பதோடு மாத்திரம் நீங்கள் நிறுத்திக் கொண்டால், உங்களால் ஒருபோதும் தேவனை அறிந்து கொள்ள முடியாது. அவர்கள் போதிப்பதெல்லாம் உண்மையாய் இருந்த போதிலும், நீங்கள் அவற்றையெல்லாம் வேறொருவர் வாயிலாகத்தான் பெற்றுக் கொள்கிறீர்கள். அந்த இரண்டாந்தரமான விஷயத்தை நீங்கள் ஆண்டவரிடம் கொண்டு சென்று, “ஆண்டவரே, இதை முதல்தரமான அறிவாக எனக்கு மாற்றித் தாரும். இதை என்னுடைய சொந்த அனுபவமாக மாற்றித் தாரும்” என்று கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சத்தியங்களெல்லாம் என்றென்றும் உங்களுடையதாகவே மாறிவிடும். நீங்கள் அப்படிச் செய்யாவிடில், நீங்கள் பெற்ற சத்தியமெல்லாம் பரத்திலிருந்து வந்தவையாக இருந்தாலும், வானத்திலிருந்து வந்த மன்னா 24 மணி நேரத்தில் பூச்சி பிடித்து, நாற்றமெடுத்தது போல, அவை மட்கிப் போய்விடும். ஆனால் மகாப் பரிசுத்த ஸ்தலமான தேவப் பிரசன்னத்தில் வைக்கப்பட்ட மன்னாவோ கெட்டுப் போகாமல் என்னென்றும் புத்தம் புதிதாகவே இருந்தது.
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்று இயேசு சொன்னார். இதுவே பழைய உடன்படிக்கையில் சொல்லப்பட்ட ஓய்வு நாளின் நிறைவேறுதலாகும். புது உடன்படிக்கை ஓய்வு நாள் என்பது சரீரப்பிரகாரமான ஓய்வு நாளன்று. அது இயேசு நமக்கு அருளும் உள்ளான இளைப்பாறுதலாகும். யாரெல்லாம், அவரிடத்தில் வந்து, தாங்கள் வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பதை ஒப்புக் கொள்ளுகிறார்களோ, அவர்களுக்குத்தான் அவர் முதலாவதாக இந்த இளைப்பாறுதலைக் கொடுக்கிறார். “சகரியா பூனன் சகோதரரே, நான் உங்களது சபையில் சேர்ந்து கொள்ள வர விரும்புகிறேன்” என்று சொன்னவர்கள் என்னிடத்தில் இருக்கிறார்கள். ஏன் எங்களது சபையில் சேர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள் என அவர்களிடம் கேட்டால், அவர்கள், “நான் இப்பொழுது இருக்கிற சபையில் சலிப்படைந்து,நொந்து போயிருக்கிறேன்” என்று பதிலளிக்கின்றனர். பிறகு நான் அவர்களைப் பார்த்து, “நீங்கள் இப்பொழுது இருக்கிற சபையிலே சலித்து, நொந்து போயிருப்பீர்களானால், கூடிய விரைவிலேயே, எங்கள்மீதும், சலிப்படைந்து, நொந்து போய் விடுவீர்கள். ஆதலால் எங்களோடு சேர வேண்டாம். நாங்களெல்லாரும் எங்கள்மீது சலிப்படைந்து, களைத்துப் போனவர்கள். மற்றவர்கள்மீது சலிப்படைந்து, களைத்துப் போனவர்களல்ல. நீங்கள் உங்களைக் குறித்துக் களைப்படைந்து போயிருந்தால், எங்களோடு சேர்ந்து கொள்ளும்படி உங்களை வரவேற்கிறோம். நாம் அற்புதமான ஐக்கியத்தை இங்கே அனுபவிக்கலாம்” என்று சொன்னேன்.
அநேக பாஸ்டர்கள் தங்களுடைய சபையானது எண்ணிக்கையிலே தொடர்ந்து பெருகிக் கொண்டே இருக்க வேண்டுமென்று நாடுகிறார்கள். ஆனால் தங்களுடைய தோற்கடிக்கப்பட்ட வாழ்க்கையினிமித்தம் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களை மாத்திரமே, தம்மிடத்தில் வாருங்கள் என்று இயேசு அழைக்கிறார். நீங்கள் மனச்சோர்வுற்றதாயும், இருண்டுபோனதாயும் உள்ள உங்களுடைய வாழ்க்கையைக் குறித்தும், தோற்கடிக்கப்பட்ட உங்களுடைய குடும்ப வாழ்க்கையைக் குறித்தும் சலிப்படைந்து, களைத்துப் போனவரா? நீங்கள் உங்களுடைய ஊழியத்தில், அபிஷேகமும், புத்துணர்வும் குறைந்து போயிருப்பதைக் கண்டு துவண்டு போனவரா? அப்படியானால், “என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று ஆண்டவர் உங்களை அழைக்கின்றார். நீங்கள் என்றைக்கும் மனகலக்கத்தோடும் போராட்டத்தோடும் இருப்பது ஒருபோதும் தேவ சித்தமல்ல. நாம் ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வாரத்தின் 7 நாட்களும், ஓராண்டின் 52 வாரங்களும், நம்மை சுற்றிலும் என்ன நடந்தாலும் இளைப்பாறுதலில் இருப்பதைத்தான் அவர் விரும்புகிறார். ஆனால் முதலாவதாக தோற்கடிக்கப்பட்ட வாழ்க்கையை ஒத்துக் கொண்டு, ஆண்டவரிடத்தில் வந்து, “ஆண்டவரே, எப்படிப்பட்டதான கிரயமானலும், நீர் எனக்கு இந்த ஓய்வு நாள் இளைப்பாறுதலைத் தந்தருளும்” என்று கேட்பவர்களால் மாத்திரமே, இத்தகைய வாழ்க்கையை வாழ முடியும்.
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்” (மத் 11:29) என்று இயேசு சொன்னார். ஒரு சீஷனானவன் கற்றுக் கொள்கிறவனாய் இருக்கிறான். அவன் ஒரு சிறு பிள்ளையைப் போல இயேசுவிடம் கற்றுக் கொள்ள வருகின்றான். நாம் இயேசுவிடமிருந்து முதலாவதாக எதைக் கற்றுக் கொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார்? அநேகர் எப்படி பிரசங்கிப்பது, எப்படி வியாதியஸ்தரைச் சுகப்படுத்துவது, எப்படி தீர்க்கதரிசனம் சொல்லுவது முதலியவற்றைக் கற்றுக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் ஆண்டவரோ நாம் முதலாவதாக சாந்தத்தையும், மனத்தாழ்மையையும் அவரிடத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார். உள்ளபடியே, நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்களாக இவ்விரண்டை மாத்திரமே அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இவ்விரு நற்பண்புகளையும் கற்றுக் கொள்ளுகிற அர்வமுள்ள கிறிஸ்தவர்கள் அநேகா் இல்லை. ஆகவேதான் அவர்களால் இந்த ஓய்வுநாள் இளைப்பாறுதலையும் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது.
தேவபக்தியுள்ள ஒருவன், அபிஷேகிக்கப்பட்டவனாய், வல்லமையான ஊழியத்தைப் பெற்றிருப்பதைப் பார்க்கும்போது, நீங்களும் அவரைப் போன்ற ஊழியத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கக்கூடும். ஆனால் இந்தவிதத்தில் அவரைப் பின் தொடர்ந்து போவது தவறானதாகும். அவருடைய தேவ பக்தியுள்ள வாழ்க்கையில் சிறப்பாக பின் தொடர வேண்டியதே நீங்கள் முதலாவது செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஆண்டவர் நம்மை அவரது சபையிலே மீன்பிடிக்கிறவர்களாகவும், போதகர்களாகவும் அழைத்திருக்கக்கூடும். ஆனால் நாம் “இளைப்பாறுதலில்” இருப்பதைத்தான் அவர் முதலாவதாக விரும்புகிறார். நம்முடைய சொந்த இருதயங்களிலே நாம் இளைப்பாறுதலற்று இருப்போமானால், நமக்கு நாமே பல பிரச்சனைகள் உடையவர்களாகவும், மற்றவர்களுக்கும் பிரச்சனை உண்டுபண்ணுகிறவர்களாகவும் இருப்போம்.