இளைப்பாறுதல் பெற்றுக்கொள்வதையும் ஒரு பாரத்தைக் கொண்டிருப்பதையும் குறித்து இயேசு மத்தேயு 11:28-30-ல் பேசினார். இயேசு சொன்னதை வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், எல்லா லௌகீக பாரங்களையும் குறித்து நாம் இளைப்பாறுதலோடு இருக்கவும் அவருடைய பாரத்தை (நுகத்தை) நம்முடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளும்படியாகவும் இயேசு கூறினார். நம்முடைய எல்லா லௌகீக பாரங்களையும் நாம் அவரிடம் கொடுத்துவிடும் வரைக்கும் கர்த்தருடைய பாரங்களை நம்மால் சுமக்க முடியாது (“கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்து விடு – உன் கவலைகளையெல்லாம் அவர் வைத்துக்கொள்ளட்டும்” - சங்கீதம் 55:22; "உணவுக்காகவும் உடைக்காகவும் கவலைப்படாதீர்கள். எதையாகிலும் குறித்து கவலைப்படவேண்டும் என்றால், தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் குறித்து கவலைப்படுங்கள்" - மத்தேயு 6:31,33 விளக்கவுரை).
உங்கள் மனது உலகக் காரியங்களைக் குறித்த பதற்றங்களினாலும் கவலைகளினாலும் நிறைந்திருக்குமானால், நீங்கள் கர்த்தருக்கு பிரயோஜனமற்றவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் உலகக் காரியங்களைக் குறித்து சிந்திக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அவை ஒன்றையாகிலும் குறித்து நீங்கள் கவலை கொள்ளக்கூடாது. நித்தியத்துக்கேற்ற மதிப்புடைய காரியங்கள் மட்டுமே நம்முடைய இருதயத்தின் கரிசனையாய் இருக்க வேண்டும். இப்படித்தான் நாம் இந்த பூலோக மக்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கிறோம். நீங்கள் இந்த பூமியில் எழுதும் தேர்வுகளின் முடிவுகளுக்குக் கூட எந்தவிதமான நித்திய மதிப்பும் இல்லை. நிச்சயமாக உங்களால் முடிந்த அளவு நீங்கள் அதை சிறப்பாகச் செய்ய வேண்டும்தான், ஆனால் அதன் முடிவுகளைக் குறித்து நீங்கள் ஒருபோதும் கவலைப்படவே கூடாது.
தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதில் நீங்கள் 100% மதிப்பெண்கள் பெற முயற்சித்தால் நீங்கள் நித்தியத்தில் முதன்மையான நபராக இருப்பீர்கள். பல வருடங்களுக்கு முன்பு அதைத்தான் நானும் தெரிந்து கொண்டேன்.
உங்களுக்கு நடக்கும் எல்லாக் காரியங்களிலும் “தேவன் தமது அன்பினால் உங்களுக்கு அமைதியாகத் திட்டமிடுகிறார்” என்று செப்பனியா 3:17-இன் விளக்கவுரை கூறுகிறது. "நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்" என்றும் ஆண்டவர் நமக்கு நினைப்பூட்டுகிறார் (யோவான் 13:7).
இறுதியாக, நான் எல்லா இடங்களிலும் உள்ள மக்களை உற்சாகப்படுத்துவது போல, மனத்தாழ்மையை நீங்கள் தொடர்ந்து தேடும்படியாகவும், உங்களைக் குறித்து தாழ்மையான எண்ணங்களைக் கொண்டிருக்கவும் மீண்டுமாக ஒருமுறை உங்களை உற்சாகப்படுத்துகிறேன். அப்படியென்றால் தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பது என்று பொருளாகாது; அல்லது தேவனுடைய பிள்ளைகளாய் உங்களது மதிப்பையோ அல்லது தேவன் உங்களுக்குக் கொடுத்த வரங்களையும் திறமைகளையும் குறைவாய் எடைபோடுவதோ அல்ல. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் - எனவே தாழ்வு மனப்பான்மைக்கு இடமில்லை. ஆனால், தேவனுக்கு முன்பாக நீங்கள் ஒன்றுமில்லை என்பதை உணரும்போதுதான் தேவன் உங்கள் வாழ்க்கையில் எல்லாமாய் மாற முடியும். உங்களை அறிந்தவர்கள் உங்களிடத்தில் காணும் காரியங்களை முன்னிட்டு தேவனை மகிமைப்படுத்த வேண்டும். தேவனுடைய சித்தத்தை மாத்திரமே செய்வதற்காக உங்களுடைய விருப்பங்களை விட்டுக் கொடுப்பதும் இதில் அடங்கும். அதன் பொருள், தேவன் உங்களுக்குத் தந்தருளின யாவற்றிற்காகவும் எல்லா சமயத்திலும் அவருக்கு மகிமையைச் செலுத்தி அவர் கொடுத்த எல்லாவற்றையும் அவரது மகிமைக்கென்று மட்டுமே உபயோகிக்கும்படி தீர்மானிப்பதாகும்.
எந்தவொரு மனிதனின் குறைகள் அல்லது தவறுகள் எதுவாக இருந்தாலும் அவரைக் கேலி செய்வதோ அல்லது இழிவாகப் பார்ப்பதோ ஒருபோதும் கூடாது. தேவன் தாழ்மை உள்ளவர்களுக்கு மிகுந்த கிருபையை அளிக்கிறார் - அவர்களது ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற்றம் அபரிமிதமாக இருக்கும். நீங்களும் உங்கள் வாழ்நாள் முழுவதும் இயேசு நடந்ததைப்போல் தாழ்மையில் நடப்பீர்களாக.