பறவைக்கு இரண்டு இறக்கைகள் இருப்பதைப் போலவே, சத்தியத்திற்கும், "எழுதப்பட்டுள்ளதே" என்றும் "இப்படியும் எழுதப்பட்டுள்ளதே" என்றும் இரு பகுதிகள் உண்டு என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு ஒரு இறக்கை மட்டுமே இருக்குமானால், நீங்கள் தொடர்ந்து ஒரே இடத்திலேதான் சுற்றி, சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருப்பீர்கள்; அநேகமாக வழிவிலகிப் போனாலும், போய்விடுவீர்கள். ஆனால் நீங்கள் இரு இறக்கைகளைப் பெற்றிருந்தால், உங்களால் முன்னோக்கி நகர முடியும். கிறிஸ்து ஏன் சிலுவையில் மரித்தார்? இதற்கான பொதுவான பதில்: "கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்" என்று எழுதப்பட்டுள்ளது (1 கொரி 15:3) என்பதாகும். ஆனால் இது சத்தியத்தின் ஒரு பகுதிதான். முழுமையான சத்தியத்தைப் பெறுவதற்கு, நாம் இன்னொரு வேத வார்த்தையைப் பார்க்க வேண்டும். "பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்" (2 கொரி 5:15) என்றும் எழுதப்பட்டுள்ளது. இவ்விரு சத்தியங்களையும் ஒன்றாய் இணைக்கும் போதுதான், நமக்கு சத்தியத்தின் இரு இறக்கைகளும் கிடைக்கின்றன.
தேவனையும், வேதத்தையும் நாம் தெளிவுற அறிய ஆரம்பிக்கும்போதுதான், வெறுமனே கொலை, விபசாரம், களவு ஆகியன மட்டுமே பாவம் இல்லை என்பதும், தனக்காகவே வாழ்வதும் பாவந்தான் என்பதை நாம் உணர ஆரம்பிப்போம். நாம் நமக்காகவே வாழ்ந்து கொண்டு, எல்லா தீய பழக்கங்களையும் விட்டிருந்தாலும், இன்னும் பாவத்திலேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை நீங்கள் சூதாட்டத்தையும், புகைப்பதையும், குடிப்பதையும் விட்டுவிட்டிருக்கலாம். ஆனாலும் பாவத்தின் ஆணி வேரான தனக்காகவே வாழ்வது என்பதிலிருந்து இன்னும் மனந்திரும்பாதவராய் இருக்கக்கூடும். ஆனால் இன்றுள்ள அநேகப் பிரசங்கிமார்கள், நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள் என்று உங்களது காதைக் குளிரப்பண்ணும்படியாகச் சொல்லுவார்கள். அவர்களைப் பொறுத்த வரை, நீங்கள் அவர்களுடைய கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு, உங்களுடைய பங்கை காணிக்கைப் பையிலே போட்டாலே போதும். அதுவே அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான்.
சாத்தான் விசுவாசிகளுக்கு விரித்துள்ள வஞ்சனை வலைகளிலெல்லாம் மிகவும் கொடிதான வலை யாதெனில், ஒரு விசுவாசி தனக்காகவே தொடர்ந்து வாழ்ந்து கொண்டு, தான் இரட்சிக்கப்பட்டு விட்டதாகவும், தன்னுடைய வாழ்க்கை முடிந்தவுடன் தான் பரலோகத்திற்கும் சென்று விடலாம் என்றும் நம்ப வைப்பதுதான். பிசாசானவன் ஒரு மனிதனை தீய பழக்கங்களால் அடிமைப்படுத்த முடியாவிட்டால், தீமையற்றதாய் தோற்றமளிக்கும் காரியத்தைக் கொண்டு அவனை அடிமைப்படுத்தி விடுவான். அதன் பின்பு அவனால் தேவனுக்கோ, வேதம் வாசிப்பதற்கோ, ஐக்கியப்படுவதற்கோ நேரத்தை ஒதுக்க முடியாமல் ஆகிவிடும். ஒரு நல்ல சுத்தமான TV நிகழ்ச்சிகூட ஒரு மனிதனை அடிமைப்படுத்திவிட முடியும். தங்களுடைய சொந்த பொழுதுபோக்கு, சொந்த இலாபம் போன்ற தங்களுக்கானவற்றையே தேடுகிற விசுவாசிகளைத்தான் பிசாசானவன் தேடுகிறான். ஒரு மனிதனை தேவனிடமிருந்து பிரிப்பதற்கு சாத்தானிடம் ஆயிரத்தெட்டு காரியங்கள் இருக்கின்றன. ஆகவேதான் குடி, சூதாட்டம், விபசாரம், கொலை ஆகியன மட்டுமே பாவமல்ல என்று நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது. "தனக்காகவே வாழ்வதுதான் பாவம்" என்பதை நாம் காண வேண்டும். பாவம் என்பது நமக்காகவே வாழ்வதும், நம்முடைய சுய சித்தம் செய்வதுமேயாகும். அந்த வேரிலிருந்துதான் பல்வகையான கனிகள் வளருகின்றன. இயேசு இவ்வையகத்திற்கு வந்த போது, அவர் கோடரியை வேரின் அருகே வைத்தார் என்று யோவான்ஸ்நானன் சொன்னான். நமக்காகவே வாழ்வதும், நம்முடைய சுய சித்தத்தையே செய்வதுமான வேரின் மீது கோடரியை வைக்கவே இயேசு வந்தார்.
மனந்திரும்புதல் என்றால் ஓர் "U" திருப்பம் திரும்புவதைப் போன்றதாகும். அதாவது அது முதற்கொண்டு, நமக்காக வாழ்வதற்கு முதுகைத் திருப்பி, தேவனுக்காக மாத்திரமே வாழ்வது என்னும் தீர்மானத்தை எடுப்பதாகும். நாம் முழுநேர கிறிஸ்தவ ஊழியர்களாய் மாறுவது என்பது இதன் அர்த்தமல்ல. விசுவாசிகளில் ஆயிரத்தில் ஒருவரையே தேவன் முழு நேர ஊழியனாய் இருக்க அழைக்கிறார். அவரது மற்ற பிள்ளைகளெல்லாம், தங்களுடைய சம்பாத்தியத்திற்காய் ஒரு உலக வேலையைச் செய்யவும், அதே சமயம் தங்களுக்காக வாழாமல், தேவ நாம மகிமைக்காகவே வாழ வேண்டுமென்றும் அவர் விரும்புகிறார்.
மனந்திரும்புதல் என்றால், "விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு திரும்புதல்" என்று 1 தெச 1:9-ல் விவரிக்கப்பட்டுள்ளது. விசுவாசிகள் என்று அழைக்கப்படுகிறவர்களில் அநேகர் இன்னும் தங்களுடைய விக்கிரகங்களைவிட்டு தேவனிடம் திரும்பவில்லை. இந்தியாவில் அநேக அஞ்ஞானிகள் கிறிஸ்துவை தங்களது கடவுளாய் ஏற்றுக் கொள்ளுவதில் பேருவகை அடைகின்றனர். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே கும்பிடும் பல சாமிகளில் ஒரு சாமியாகவே இவரையும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். கிறிஸ்துவை தனது தேவனாக ஏற்றுக் கொள்ள விரும்புகின்ற ஒருவர், மற்றெல்லா கடவுள்களையும், விக்கிரகங்களையும் விட்டுவிட வேண்டும்.
"ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரி 5:17).
இதன் அர்த்தம் என்னவெனில், பழைய மனப்பான்மைகளும், பழைய வாழ்க்கை முறைகளும் போய்விட்டன என்பதாகும். அவன் இனிமேலும் தனக்காக வாழ்வதில்லை. அவன் கிறிஸ்துவைப் போலாகுதல் என்னும் இலக்கை இன்னும் எட்டவில்லை. அவன் இவை எல்லாவற்றையும் விட்டுத் திரும்பி, தேவ நாம மகிமைக்காக வாழ நாடுகிறான். இதுவே, இது மட்டுமே, உண்மையான மனந்திரும்புதலாகும்.
நித்திய காலமாய் தேவன் திட்டம் பண்ணின சபையை, நம்மைக் கொண்டு அவர் கட்ட வேண்டுமானால், நாம் நமக்காக வாழ்வதிலிருந்து முழுவதுமாய் மனந்திரும்ப வேண்டும். தங்களுக்காக வாழ்வதை நிறுத்திவிட்டு, அவருக்காக யாவற்றையும் பலிபீடத்தின் மேல் வைக்க விருப்பம் கொண்டவர்களைக் கொண்டுதான் அவர் அதைக் கட்டுகின்றார்.
ஆபிரகாம் தேவனுக்குத் தன்னுடைய புதல்வனாகிய ஈசாக்கைப் பலியாகப் படைத்த மோரியா என்னும் இடத்தில்தான், பழைய ஏற்பாட்டு ஆலயம் கட்டப்பட்டது (2 நாளா 3:1). அந்தச் சமயத்திலே ஆபிரகாமின் இருதயத்திற்குப் பாசமிகு மகனாக ஈசாக்கு விளங்கினான். ஆபிரகாமின் வாழ்க்கையிலே ஈசாக்கு ஒரு விக்கிரகமாக உருவெடுத்து விட்டானா என்று தேவன் ஆபிரகாமைச் சோதித்தார். ஆபிரகாம் தேவனைச் சேவிக்க வேண்டுமானால், அவன் எல்லாவித விக்கிரக ஆராதனைகளையும் விட்டு விலக வேண்டுமென தேவன் அவனுக்குச் சொன்னார். ஆகவே அவன் தனது குமாரனை பலிபீடத்தின் மீது வைத்து அவனை விட்டுவிட வேண்டும். தேவன் ஈசாக்கை எடுத்துவிடவில்லை. ஆபிரகாம் தனது மகனாகிய ஈசாக்கின் மேல் வைத்திருந்த பிணைப்பைத் துண்டிக்க மட்டுமே தேவன் விரும்பினார். ஏனெனில் அந்தப் பாசப் பிணைப்பானது ஆபிரகாம் தேவனோடு நடப்பதற்கு இடையூறாக இருந்திடக் கூடாது என்பதற்காக அவர் அதைச் செய்தார். இதையேதான் தேவன் நமக்கும் செய்ய வேண்டும். நாம் நம்மிடத்தில் விலையேறப் பெற்றதாக வைத்திருப்பதைத்தான் அவருக்கு அளிக்க வேண்டும்.
ஐஸ்வரிய வாலிபனுடைய விஷயத்திலே அவனுக்கு அருமையாக இருந்தது பணமாகும். தேவன் ஆபிரகாமிடத்திலே ஈசாக்கைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டது போலவே, அந்த ஐஸ்வரியவானாகிய வாலிபனிடத்திலே பணத்தைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டார். ஒருவேளை அந்த ஐஸ்வரியவான், "இதோ, ஆண்டவரே, எல்லாவற்றையும் தருகிறேன்" என்று சொல்லியிருந்தால், தேவன் ஆபிரகாமிடத்திலே ஈசாக்கை வைத்துக் கொள்ளும்படி சொன்னதைப் போலவே, அவனையும் அவனுடைய பணத்தை வைத்துக் கொள்ளும்படி சொல்லியிருந்திருப்பார். ஆனால் முதலாவதாக அவன் அதை விட்டுவிட வேண்டியிருந்தது. எனவே, "கர்த்தாவே, என்னுடைய வாழ்க்கையில் காணப்படும் எல்லா ஈசாக்குகளையும் பலிபீடத்திலே கிடத்தி, உம்மிடத்தில் கொடுக்கிறேன். உமக்கும் எனக்கும் இடையில் இடையூறாய் இனிமேலும் எந்த விக்கிரகமும் இருக்க நான் விரும்பவில்லை. நான் எனக்காக வாழ விரும்பவில்லை. உண்மையிலேயே நான் உமக்காக மாத்திரமே வாழ விரும்புகிறேன். நான் தேவ நாம மகிமைக்காகவே வாழ விரும்புகிறேன். நான் என்னுடைய வாழ்க்கையை வீணடிக்க விரும்பவில்லை" என்று நாம் யாவரும் சொல்லத்தக்கதான கிருபையை தேவன் நமக்குத் தருவாராக.
உலகிலேயே மிகச் சிறந்த செய்தி இதுதான்: நம்முடைய இலட்சியங்களுக்கும், ஆசைகளுக்கும் நாம் இனிமேலும் அடிமையாக வாழ்ந்து நம்முடைய வாழ்க்கையை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை; நாம் தேவநாம மகிமைக்காய், விடுதலையாய் ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழ முடியும். நமக்காக வாழ்வதென்பது சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு கட்டுண்ட வாழ்க்கையாகும். ஆனால் தேவ நாமத்திற்காக வாழ்வதென்பது, ஒரு கழுகைப் போல வானிலே சிறகடித்துப் பறப்பதற்கு ஒப்பாகும். சுவிசேஷத்தின் நற்செய்தி என்னவெனில், உங்களைக் கட்டியிருக்கும் எல்லாச் சங்கிலிகளையும் இயேசுவால் உடைத்தெறிய முடியும். இன்றைக்கே அதை அவரால் செய்ய முடியும்.
நீங்கள் உங்களுடைய கடந்த காலத்திலே பிரயோஜனமில்லாதவற்றைப் பின் தொடர்ந்து உங்களுடைய வாழ்க்கையை வீணடித்திருந்தால், அதைக் குறித்து இப்போது எதுவும் செய்ய இயலாது. ஆனால் நீங்கள் இன்றே மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து, அதைப் பின் தொடர முடியும்.
ஆனால் நமக்கு முன்பாக இன்னும் நாட்கள் உள்ளபடியால், நாம் ஆண்டவரிடத்திலே, "கடந்த காலத்தில் கழிந்து போன என்னுடைய ஆண்டுகளைக் குறித்து நான் எதுவும் செய்ய முடியாது. ஆனால் எஞ்சியுள்ள நாட்களை உமக்காகவே வாழ விரும்புகிறேன். நான் என்னுடைய வாழ்க்கையில் எங்காவது எந்த விக்கிரகத்தையாவது வணங்குகிறேனா என்று எனக்குக் காண்பித்தருளும். நான் எனது வாழ்க்கையில் எல்லா விக்கிரகாரதனையையும் விட்டுத் திரும்பி, உம் ஒருவரையே ஆராதித்து, உமக்காக மட்டுமே வாழ விரும்புகிறேன். ஆண்டவராகிய இயேசுவே, நான் என்னை அறியாமலேயே எனக்காக வாழும் விக்கிரகத்தை விட்டு மனந்திரும்புகிறேன்" என்று சொல்லலாம். தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக.