எண்ணாகமம் 13-ஆம் அதிகாரத்தில், தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருந்த தேசமான கானானின் எல்லையாகிய காதேஸ்-பர்னேயாவுக்கு இஸ்ரவேலர்கள் வந்ததைப் பார்க்கிறோம். அவர்கள் எகிப்தை விட்டுவந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன (உபாகமம் 2:14). அவர்களை அந்தத் தேசத்திற்குள் சென்று அதைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி கர்த்தர் சொன்னார். தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி பன்னிரெண்டு வேவுக்காரரை இஸ்ரவேலர்கள் அனுப்பினார்கள். அந்தப் பன்னிரெண்டு பேரும் திரும்பி வந்து, அந்தத் தேசம் உண்மையில் ஓர் அற்புதமான தேசம் என்றார்கள். ஆனால் அவர்களில் பத்துப் பேரோ, "அங்கே பெரிய இராட்சதர்கள் இருக்கிறார்கள்; நாம் அவர்களை மேற்கொள்ளமுடியாது" என்றார்கள். ஆனால் அவர்களில் காலேப், யோசுவா ஆகிய இருவரும், "அந்தப் பெரிய இராட்சதர்களை மேற்கொள்ள கர்த்தர் நமக்கு உதவி செய்வார்" என்று மறுமொழி சொன்னார்கள். ஆனால் 6,00,000 இஸ்ரவேலர்களோ பெரும்பான்மையினருக்கு செவி சாய்த்தார்கள்.
இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? முதலாவதாக, பெரும்பான்மையினரை பின்பற்றுவது அபாயகரமானது. ஏனெனில் பெரும்பான்மையினர் எப்போதுமே தவறாகத்தான் இருப்பார்கள். "ஜீவனுக்குப் போகிற வழி நெருக்கமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்" என இயேசு கூறினார். பெரும்பான்மையினர் இன்னும் கேட்டுக்குப் போகிற விசாலமான வழியிலேதான் போய்க்கொண்டு இருக்கிறார்கள். எனவே, நீங்கள் பெரும்பான்மையினரைப் பின்பற்றினால், நிச்சயமாக நீங்களும் அவர்களுடன் சேர்ந்து கேட்டுக்குப் போகிற விசாலமான வழியிலேதான் இருப்பீர்கள். ஒரு சபையானது பெரிதாக இருந்தால்தான், அது ஆவிக்குரிய சபையாக இருக்கும் என ஒருபோதும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இயேசுவினுடைய சபையில் 11 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர்.
பத்துத் தலைவர்கள் ஒரு காரியத்தையும், மற்ற இரண்டு பேர் அதற்கு முற்றிலும் எதிரான ஒரு காரியத்தையும் சொல்லும்போது, யாருடைய பக்கத்தில் நீங்கள் நிற்பீர்கள்? கர்த்தர் யோசுவா, காலேபு ஆகிய இருவரின் பக்கமாகத்தான் இருந்தார். அவிசுவாசமும் சாத்தானும் மற்ற பத்துப் பேரோடு இருந்தார்கள். ஆனால் இஸ்ரவேலர்கள் புத்தியீனமாய் பெரும்பான்மையைப் பின்பற்றினார்கள். அதனால் அடுத்த 38 ஆண்டுகள், அவர்கள் வனாந்திரத்தைச் சுற்றிவர வேண்டியதாயிற்று. கர்த்தர் யாருடைய பட்சத்தில் இருக்கிறார் என்ற பகுத்தறிதல் இல்லாதிருந்தது. திரளான ஜனங்களை எதிர்த்து தேவனோடு நிற்கிற ஒரு நபர்தான் பெரும்பான்மையாக இருக்கும். எனவே, நான் எப்போழுதும் தேவனோடு நிற்கவே விரும்புகிறேன். யாத்திராகமம் 32 -ஆம் அதிகாரத்தில், இஸ்ரவேலர்கள் எல்லோரும் பொன் கன்றுக்குட்டியைத் தொழுது கொண்டிருக்கையில், தேவனோ மோசே என்னும் ஒரேயொரு மனிதனின் பட்சத்தில் இருந்ததைப் பார்க்கிறோம். பன்னிரெண்டு கோத்திரங்களில், லேவி கோத்திரத்தால் மாத்திரமே அதை அன்று பார்க்க முடிந்தது. ஆனால் இப்போதோ, தேவன் யோசுவாவோடும் காலேபோடும் இருக்கிறார் என்பதை லேவி கோத்திரத்தால் கூட கண்டறிய முடியவில்லை.
இவையெல்லாம் நமக்கு ஒரு பாடமாக இன்று இருக்கிறது. பொதுவாக, கிறிஸ்தவமானது ஒத்தவேஷத்தாலும், லௌகீகத்தாலும் நிரம்பி இருக்கிறது. தேவனுடைய வார்த்தையின் சத்தியத்துடன் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத ஒரு சிலரை தேவன் இங்குமங்குமாக எழுப்புகிறார். நீங்கள் பகுத்தறியக் கூடியவராய் இருந்தால், அந்த ஒரு சிலரோடுதான் தேவன் இருக்கிறார் என்பதை உணர்ந்து, பெருபான்மையினரை எதிர்த்து நிற்பீர்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பீர்கள்.
ஒரு மனிதனோடு தேவன் நிற்கிறார் என்பதை நீங்கள் எப்படி கண்டுபிடிப்பீர்கள்? அவன் விசுவாசத்தின் மொழியைப் பேசுவான். யோசுவாவும் காலேபும், "நம்மால் ஜெயங்கொள்ள முடியும்" என்னும் விசுவாச மொழியைப் பேசினார்கள். " இராட்சதர்களாகிய கோபம், பாலிய இச்சை, பொறாமை, முறுமுறுப்பு, பண ஆசை ஆகியவற்றை நம்மால் ஜெயங்கொள்ள முடியும். நாம் சாத்தானை மேற்கொள்ள முடியும். தேவன் சாத்தானை நமது பாதங்களின் கீழ் நசுக்குவார்" - என்பதுதான் தேவன் தன்பக்கத்தில் நிற்கிற மனிதனின் மொழியாக இருக்கும். ஆனால் தேவனோடு இல்லாத மனிதனோ, "நாம் வேதத்தை எழுத்தின்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. எப்படியாயினும், நாம் வெறும் மனிதர்கள் தானே. நம்முடைய வாழ்க்கையின் முடிவு பரியந்தம் தோற்கடிக்கப்பட்டவர்களாகத்தான் இருப்போம். நீங்கள் மனிதனுடைய மனோதத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும்" என்று சொல்லுவான். வெகு நேர்மையாய்ச் சொல்லப் போனால், "மனிதனுடைய மனோதத்துவத்தை" நான் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. நான் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். அநேகக் கிறிஸ்தவர்கள் இஸ்ரவேலர்களைப் போலவே வழிவிலகிப் போவதற்கான மிகச் சரியான காரணம், அவர்களுடைய தர்க்க அறிவுதான். தேவன் இந்தச் சத்தியங்களையெல்லாம், ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். நீங்கள் உங்களுடைய மனுஷீக அறிவையும் புத்திக்கூர்மையையும் பயன்படுத்தி வேதத்தைப் படிப்பீர்களானால், நீங்கள் வழிவிலகி போவீர்கள் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும். உங்களுக்குத் தேவையாய் இருப்பதெல்லாம் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு தான். எனவேதான், இயேசுவானவர் கமாலியேலைப் போன்ற பேராசிரியர்களையும், அவனது மாணவர்களையும் தம்முடைய சீஷர்களாக இருக்கும்படி தேர்ந்தெடுக்காமல், மீன் பிடிப்பவர்களையேத் தேர்ந்தெடுத்தார். பிறகு, கமாலியேலின் மாணவர்களில் ஒருவனாகிய பவுலைப் பிரித்தெடுத்தார். ஆனால், பவுல் வெளிப்பாட்டைப் பெறுவதற்கு முன்பாக, அவனுடைய பெருமை முழுவதையும் கீழே கொண்டுவருவதற்காக, கர்த்தர் அவனை மூன்று வருடங்களாக வனாந்தரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
தேவன் தம்முடைய வல்லமையைச் சந்தேகித்த இஸ்ரவேலர்கள் மீது கடுங்கோபங்கொண்டு: "நிச்சயமாகவே என்னுடைய எல்லா அடையாளங்களையும் கண்ட இந்த எல்லா ஜனங்களும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க மாட்டார்கள். என்னைப் பத்து முறை பரீட்சை பார்த்த இந்த எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள்" என்று சொன்னார் (எண்ணாகமம் 14:22). "பத்து முறை" என்பது மிகைப்படுத்தல் அல்ல. அவர்கள் உண்மையிலேயே பத்து முறை முரட்டாட்டம் பண்ணினார்கள்.
அவர்களுடைய பத்து முரட்டாட்டங்களின் பட்டியல் இதோ:
1. அவர்களை எகிப்தியர்கள் சிவந்த சமுத்திரத்தண்டை துரத்திய போது (யாத்திராகமம் 14:11).
2. மாராவிலே தண்ணீர் கசப்பாக இருந்தபோது (யாத்திராகமம் 15:24).
3. அவர்களுக்கு சீன் வனாந்தரத்திலே, அப்பம் இல்லாதிருந்தபோது (யாத்திராகமம் 16:2,3).
4. அவர்கள் மன்னாவை விடியற்கால மட்டும் வைத்திருந்தபோது (யாத்திராகமம் 16:20).
5. அவர்கள் ஒய்வு நாளில் அப்பத்தைத் தேடி வெளியே சென்றிருந்த போது (யாத்திராகமம் 16:27,28)
6. ரெவிதீமிலே குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தபோது (யாத்திராகமம் 17:3)
7. அவர்கள் பொன் கன்றுக்குட்டியைத் தொழுது கொண்டபோது (யாத்திராகமம் 32)
8. அவர்கள் தபேராவிலே முறுமுறுத்த போது (எண்ணாகமம் 11:1)
9. அவர்கள் இறைச்சியைக் கேட்ட போது (எண்ணாகமம் 11:4,33)
10. அவர்கள் கானானுக்குள் போக மறுத்த போது (எண்ணாகமம் 13)
கர்த்தர் அவர்களுக்கு ஒன்பது தருணங்களைத் தந்தார். அவர்கள், அந்த ஒன்பதாவது தருணம்தான் தங்களுடைய கடைசித் தருணம் என்பதை உணராதவர்களாய் - இன்றைக்கு அநேக விசுவாசிகள் இருப்பதைப் போலவே - அவருடைய மன்னிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள். தேவனுடைய பொறுமையானது முடிவுக்கு வந்தது. அவர்கள் பத்தாவது தடவை முரட்டாட்டம் பண்ணின போது, தண்டிக்கப்பட்டார்கள். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து திரும்பிப்போக வாய்ப்பே கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுடைய தண்டனையைக் குறித்து கேட்ட போது, அதற்காக மனந்திரும்பி, தங்களுக்கு இன்னொரு தருணம் தரும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ஏற்கனவே காலம் கடந்துவிட்டது (எண்ணாகமம் 14:39-45). ஜெய ஜீவியத்திற்குள் பிரவேசிப்பதற்கானத் தருணங்களும் என்றென்றைக்கும் கிடைக்கக்கூடியது அல்ல என்பதை அநேக விசுவாசிகள் ஒரு நாளில் கண்டு கொள்வார்கள்.