WFTW Body: 

எபேசியர் 4-ஆம் அதிகாரத்தில், “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்” (எபேசியர் 4:26) என்ற ஒரு கட்டளை நமக்கு உண்டு. இதன் பொருள் என்னவெனில், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டிய கோபமானது பாவமற்ற கோபமாயிருக்க வேண்டும் என்பதாகும். ஆகவே, “கொலை செய்யாதிருப்பாயாக” என்ற பழைய ஏற்பாட்டுத் தரத்தை “கோபங்கொள்ளாதிருங்கள்” என்ற நிலைக்கு இயேசு உயர்த்தியபடியினால், ​​சரியான கோபம் எது, தவறான கோபம் எது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு வசனத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத போதெல்லாம், நமது ஆவிக்குரிய அகராதியைப் (spiritual dictionary) பார்க்க வேண்டும்: ‘மாம்சமாய் வெளிப்பட்ட வார்த்தை’யாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையே அந்த அகராதியாகும். இயேசு தம்மை உலகத்திற்கு ஒளி என்று அழைத்தார். “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாக இருந்தது” என்று யோவான் 1:4 அவரைப் பற்றிக் கூறுகிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையே வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வசனத்தையும் விளக்கும் ஒளியாகும். எனவே, “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்” என்று நாம் வாசிக்கிறபடியால், ​​பாவமான கோபத்தையும் பாவமற்ற கோபத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முயற்சிக்கும்போது, ​​இயேசுவின் வாழ்க்கையில் இருக்கும் ஒளியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இயேசு எப்போது கோபமடைந்தார், எப்போது கோபமடையவில்லை? இயேசு ஒரு ஜெப ஆலயத்தில் இருந்தபோது, ​​சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் குணமடைவதைத் தடுக்க முயன்ற ஜனங்களைக் கோபத்துடன் பார்த்ததாக மாற்கு 3:1-5-இல் வாசிக்கிறோம். முடமான ஒருவரைக் குணப்படுத்துவதை விட ஓய்வுநாளின் பாரம்பரியங்களைக் கடைப்பிடிப்பதில் அதிக அக்கறை கொண்டிருந்த பரிசேயர்களைக் கண்டு அவர் கோபமடைந்தார். ஜனங்களைவிட பாரம்பரியங்களில் அதிக ஆர்வமும், முடமான ஜனங்களை விடுதலையாக்குவதைவிட சில வழக்கங்களைக் கடைப்பிடிப்பதில் அதிக ஆர்வமும் கொண்டிருக்கும் மதவாதத் தலைவர்கள் மற்றும் மதவாத ஜனங்கள் மீதான இந்த வகையான கோபம் சரியானதாகும்.

இன்று பாவத்தால் தோற்கடிக்கப்பட்ட கிறிஸ்தவர்களிடையே இந்த முடம் (வாதம்) காணப்படுகிறது. மேலும், ஜனங்கள் பாவத்திலிருந்து விடுதலையடைவதை விட, தசமபாகம் சரியாக செலுத்துகிறார்களா என்பதில் அதிக நாட்டமுடைய மதவாதிகள் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்கள், சூம்பின கையை உடைய மனுஷனை குணமடைய அனுமதிக்காத, ஆனால் தசமபாகம் செலுத்துவதிலும், ஓய்வுநாளை ஆசரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டிய பரிசேயர்களைப் போலவே இருக்கிறார்கள். தங்கள் மந்தையை அவர்களுடைய வாழ்க்கையிலுள்ள பாவத்தின் வல்லமையிலிருந்து விடுவிப்பதில் நாட்டம் காட்டாமல், மாறாக அவர்கள் தங்களுக்கு தசமபாகம் செலுத்துகிறார்களா என்பதை உறுதி செய்வதில் அதிக ஆர்வம் காட்டும் இதுபோன்ற பல பிரசங்கிகளும் போதகர்களும் இன்றும் இருக்கிறார்கள். இயேசு இன்று அப்படிப்பட்டவர்களை கோபத்துடன் பார்ப்பார். ஏனெனில் ஜனங்களை தசமபாகம் செலுத்துகிறவர்களாக்கும்படி அவர் பூமிக்கு வரவில்லை; மாறாக, ஜனங்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படிக்கே வந்தார். ஜனங்கள் தசமபாகம் செலுத்துகிறவர்களாகும்படி அவர் சிலுவையில் மரிக்கவில்லை; அவர் நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கும்படிக்கே சிலுவையில் மரித்தார்.

நம்முடைய இரட்சகரின் பெயர் இயேசு; அவர் நம் பாவங்களை நீக்கி நம்மை இரட்சிப்பார் (மத்தேயு 1:21). “இந்த நபர் பாவத்தின் மீது ஜெயத்தைப் பிரசங்கிக்கிறார். ஆகவே அங்கு செல்லாதீர்கள், அவருக்குச் செவிகொடுக்காதீர்கள், ஆனால் நீங்கள் தொடர்ந்து எனக்குச் செவிகொடுங்கள். உங்கள் தசமபாகத்தை எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லித் தருவேன்” என்று ஜனங்களிடம் கூறி, அவர்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதற்குத் தடையாயிருக்கும் நபர்களின் மீது இயேசு கோபமாயிருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியப்பட்டிருந்தால், தேவனுடைய ஓர் ஊழியக்காரனாக, மற்றவர்கள் விடுதலையாக்கப்படுவதைத் தடுக்கும் அத்தகைய ஜனங்களிடம் நீங்களும் கோபப்பட வேண்டும்.

இயேசுவின் கோபத்திற்கு இன்னுமோர் உதாரணமாக, அவர் தேவாலயத்துக்குள் சென்று காசுக்காரர்களை அங்கிருந்து விரட்டியடித்தார். அவர் ஒரு சவுக்கையுண்டுபண்ணி காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, “இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்! என்றார்” என்று யோவான் 2-இல் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் மிகவும் கோபமடைந்தார். “அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது” என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள் (யோவான் 2:15-17). ‘உங்கள் பலிக்காக இந்த ஆடுகளையும் புறாக்களையும் நாங்கள் உங்களுக்கு விற்போம், ஆனால் நாங்கள் எங்களுக்கான ஆதாயத்தைப் பெற வேண்டியபடியினால் நிச்சயமாக அது வெளியே சந்தையில் உள்ள விலையைவிட சற்று அதிகமாகவே இருக்கும்’ என்று கூறி புறாக்கள் மற்றும் ஆடுகளை விற்பவர்கள் ஏழை ஜனங்களைச் சுரண்டியது போல, ஜனங்கள் மதத்தின் பெயரால் அல்லது கிறிஸ்துவின் பெயரால் பணம் சம்பாதித்து ஏழை ஜனங்களைச் சுரண்டுவதைக் காணும்போது, தேவனுடைய வீட்டின் பரிசுத்தத்தைக் குறித்த வைராக்கியம் நம்மைக் கோபமடையச் செய்ய வேண்டும்.

இயேசு எப்போது கோபப்படவில்லை? அவர் பெயல்செபூல் (பிசாசுகளின் தலைவன்) என்று அழைக்கப்பட்ட போது நடந்துகொண்டது இதற்கு ஓர் உதாரணமாகும் (மத்தேயு 12:22-24). குருடும் ஊமையுமான ஒரு மனுஷனிடமிருந்து இயேசு ஒரு பிசாசை விரட்டியபோது அவரை அப்படி அழைத்தார்கள். அதைக் கண்ட ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு, “இவர் தாவீதின் குமாரன். பாருங்கள், அவர் எவ்வளவு பிரமிக்கத்தக்க அற்புதத்தைச் செய்து இந்த மனிதனை விடுதலையாக்கி இருக்கிறார்!” என்று சொல்லத் தொடங்கினர். ஆனால் பரிசேயர்கள் பொறாமைப்பட்டு, உடனடியாக, “இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல” (மத்தேயு 12:24) என்றார்கள். அவர்கள் இயேசுவை, சாத்தான் என்று அழைத்தனர். நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்து கொண்டிருக்கும்போது யாராவது உங்களை ‘சாத்தான்’ என்று அழைத்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால் இயேசுவோ, “நான் ஒரு மனுஷகுமாரன், நான் ஒரு சாதாரண மனிதன். நீங்கள் எனக்கு எதிராகப் பேசியிருந்தால், அது உங்களுக்கு மன்னிக்கப்படும்; ஆனால் பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசாதபடி கவனமாக இருங்கள்” (மத்தேயு 12:32) என்றார்.

ஜனங்கள் அவரைப் பிசாசு என்று அழைத்தபோது அவர் கோபப்படவில்லை. “நீங்கள் எனக்கு எதிராகப் பேசினாலும் பரவாயில்லை, நான் ஒரு மனுஷகுமாரன். உங்களுக்கு மன்னிக்கப்பட்டுவிட்டது” என்று இயேசு கூறினார். சர்வவல்லமையுள்ள தேவனாய் இருக்கிற அவரை ஜனங்கள் பிசாசு என்று அழைத்த போது அவர் மனத்தாங்கல் அடையவில்லை. அவர் அவர்களை மன்னித்தார். ஒரு மெய்யான கிறிஸ்தவன் ஜனங்கள் தன்னைக் கெட்ட பெயர்களால் அழைப்பதாலோ, பிசாசு, பன்றி, நாய் அல்லது வேறு எதையாவது சொல்லி அழைப்பதாலோ ஒருபோதும் மனதாங்கல் அடையமாட்டார். அப்படிப்பட்டவைகள் ஒரு மெய்யான கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவர் கிறிஸ்துவைப் போல இருந்தால், அவர் அவர்களை மன்னிப்பார், கோபப்பட மாட்டார். தன்னை அப்படிப்பட்ட பெயர்களைச் சொல்லி அழைத்தவர்கள் மீது அவருக்கு எந்தக் கசப்பும் கோபமும் கூட இருக்காது.

மிகச் சில கிறிஸ்தவர்களே இயேசு கிறிஸ்துவைப் போல இருக்க விரும்புகிறார்கள், ஆனால் மற்ற அனைவரும், மரிக்கும்போது தாங்கள் பரலோகத்திற்குச் செல்ல வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறார்கள். ஒவ்வொரு கிறிஸ்தவரும் மரிக்கும்போது பரலோகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் அவர்களில் எத்தனை பேர் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பு இந்த பூமியிலேயே இயேசு கிறிஸ்துவைப் போல வாழ விரும்புகிறார்கள்? மிகச் சிலரே. இதுதான் பிரச்சனை. இவர்களில் பலர் உண்மையில் கிறிஸ்தவர்களே அல்ல. இவர்கள் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்ததால் பெயரளவில் கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்கள் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவாகிய ஆண்டவரின் ஆளுகைக்கு ஒப்புக் கொடுக்கவில்லை. எனவே தேவனைப் பொருத்தமட்டில், அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்து மீண்டும் வரும்போது அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் - அவர்கள் இப்பூமியில் கிறிஸ்தவர்களாகவே இல்லை என்பதைக் கண்டுகொள்வார்கள். ஏனென்றால் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்ததன் மூலம் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்க முடியாது. நீங்கள் ஒரு தனிப்பட்ட தேர்ந்தெடுப்பு ஒன்றைச் செய்ய வேண்டும்.

இதைப் புரிந்துகொள்வது நமக்கு மிகவும் முக்கியம். “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்” என்ற எபேசியர் 4:26-இன் அர்த்தம் இதுதான். ஐந்து வசனங்களுக்குப் பின்னர் எபேசியர் 4:31-ல், “சகலவிதமான கோபத்தையும்” உங்களை விட்டு நீக்குங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இரண்டு வசனங்களும் முரண்பாடாகத் தோன்றுகின்றன. அங்கு ஓரிடத்தில், “கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்” என்றும், மற்றோரிடத்தில், “சகலவிதமான கோபத்தையும் நீக்குங்கள்” என்றும் கூறுகிறது. நாம் எவ்விதமான கோபத்தை விட்டுவிட வேண்டும்? சுயநலம் சார்ந்து சுயத்தை மையமாகக் கொண்டதும் பாவம் நிறைந்ததுமான கோபத்தை நம்மைவிட்டு நீக்கவேண்டும். நாம் எவ்விதமான கோபம் கொள்ள வேண்டும்? தேவனை மையமாகக் கொண்டதற்கும், தேவனுடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வருவதற்கும் உரிய கோபத்தைக் கொண்டிருக்க வேண்டும். இன்று பூமியில் தேவனுடைய நாமம் கனம்பண்ணப்படவில்லையே என்பதற்காய் பாரப்படுகிறவர்களாய் நாம் இருக்க வேண்டும்.