WFTW Body: 

“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2).

உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனுக்குக் (கர்த்தராகிய இயேசுவுக்கு) கீழ்ப்படிகிறான்? அப்படிப்பட்ட மனுஷர் கொஞ்ச வெளிச்சம் கூட இல்லாதபடிக்கு இருட்டிலே நடப்பார்களானால், அவர்கள் கர்த்தரை நம்பி, தங்களுடைய தேவனைச் சார்ந்துகொள்ளக் கடவர்கள் (ஏசாயா 50:10 - லிவிங்(Living) மொழிபெயர்ப்பு).

பழைய உடன்படிக்கையின் கீழ், தேவன் தம்முடைய சித்தத்தை வானத்திலிருந்து ஒரு சத்தத்தின் மூலம் தம் ஊழியர்களுக்கு அடிக்கடி தெரிவித்தார். ஆனால் புதிய உடன்படிக்கையிலோ, தேவன் நம் இருதயத்தில் உள்ள பரிசுத்த ஆவியின் உள்ளார்ந்த சாட்சியின் மூலம் நம்மை வழிநடத்த விரும்புகிறார். இதுவே விசுவாசத்தின் பாதை; பழைய உடன்படிக்கையின்படியான தரிசித்து நடப்பதை விட இது மேன்மையானதாகும்.

எனவே, ஒரு விஷயத்தில் தேவனுடைய சித்தத்தை அறிய முற்படும்போது, சில சமயங்களில் நாம் குழப்பமடையலாம். நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவே தேவன் இதை அனுமதிக்கிறார். நாம் அவருடன் நெருங்கிச் சேர்ந்து, அவ்விதமாக அவரை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நம் உள்நோக்கங்களை சுளகினால் புடைப்பதுபோலப் புடைத்து அறிந்திட இத்தகைய நிச்சயமற்ற நேரங்கள் தேவனால் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே குழப்பத்தை சந்திக்கும் போது நாம் ஆச்சரியப்படவோ, சோர்வடையவோ கூடாது. அப்போஸ்தலனாகிய பவுலும் கூட அடிக்கடி கலக்கமடைந்தார், ஆனால் அவர் ஒருபோதும் விரக்தியடைந்து விட்டுவிடவில்லை (2கொரிந்தியர் 4:8). சில சமயங்களில் நாம் ஒரு முடிவெடுப்பதற்கு கடைசி நேரத்தில்தான் தேவன் தம்முடைய சித்தத்தை நமக்குக் காட்டுவார்; அதற்கு முன் நீண்ட நேரம் நம்மை காத்திருக்க வைப்பார்.

எப்படியிருந்தாலும், ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த படியை மட்டுமே அவர் நமக்குக் காட்டுவார். நாம் நாள்தோறும் அவரைச் சார்ந்து கொள்ளவேண்டும் என்றும், நாம் தரிசித்து நடவாதபடி, விசுவாசித்து நடக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறபடியால் அவர் நம்மைப் படிப்படியாகவே வழிநடத்துகிறார். அவர் ஒரு நேரத்தில் ஒரு படியை மட்டுமே நமக்குக் காண்பிக்கும்போது, நாம் அவர் மீது சாய்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்முடைய வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தத்தைக் கண்டறிய, எந்த நேரத்திலும் நாம் செய்ய வேண்டியதெல்லாம், தேவன் நமக்குக் காண்பிக்கும் அடுத்த படியை எடுப்பதுதான். அவ்வாறு நாம் செய்யும்போது, தேவனுடைய திட்டம் படிப்படியாக நமக்கு வெளிப்படுவதைக் காண்போம்.

கர்த்தருடைய வாக்குத்தத்தம், “நீங்கள் செல்லும்போது, நான் உங்கள் முன் வழியை படிப்படியாகத் திறப்பேன்” (நீதிமொழிகள் 4:12-பொழிப்புரை) என்பதாயிருக்கிறது.

ஒரு விஷயத்தில் தேவனுடைய சித்தத்தைப் பற்றி நிச்சயமில்லாமல் இருக்கும்போது, பன்னிரண்டு கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது. இந்தக் கேள்விகளுக்கு நாம் நேர்மையாகப் பதிலளிக்கும்போது, தேவனுடைய சித்தம் என்ன என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும்.

  • நான் செய்வது, எனக்குத் தெரிந்தவரை - இயேசுவின் உபதேசங்களில் அல்லது அப்போஸ்தலர்களின் உபதேசங்களில் ஏதேனும் ஒன்றை மீறியோ அல்லது புதிய ஏற்பாட்டின் ஆவிக்கு முரணாகவோ இருக்கிறதா?
  • இதை நான், ஒரு சுத்தமனசாட்சியுடன் செய்திட முடியுமா?
  • இதை நான், தேவனுடைய மகிமைக்கென்று செய்திட முடியுமா?
  • இதை நான், இயேசுவை என் கூட்டாளியாகச்சேர்த்து செய்திட முடியுமா?
  • நான் செய்யப்போவதை தேவன் ஆசீர்வதிக்கும்படி என்னால் ஜெபித்திட முடியுமா?
  • நான் செய்வது, என் ஆவிக்குரிய உத்தமத்தின் கூர்மையை ஏதேனும் ஒருவகையில் மழுங்கிடச் செய்யுமா?
  • நான் செய்வது, எனக்குத்தெரிந்தவரை - ஆவிக்குரிய வளர்ச்சியையும், பக்திவிருத்தியையும் என்னில் உண்டாக்கிட முடியுமா?
  • நான் செய்வது, இயேசு இப்பூமிக்கு திரும்பவரும் அதே பொழுதில் காணப்பட்டால், அதனிமித்தம் நான் மகிழ்ச்சியடைய முடியுமா?
  • நான் செய்வதைக் குறித்து ஞானமுள்ள, முதிர்ச்சியடந்த சகோதரர்கள் என்ன நினைப்பார்கள்?
  • நான் செய்வதை மற்றவர்கள் ஒருவேளை அறியும்போது அது என் சாட்சியைக் கெடுக்கவோ அல்லது தேவனுடைய நாமம் கனவீனப்படவோ செய்யுமா?
  • நான் செய்வது, யாராகிலும் ஒருவரை இடறிடச் செய்யுமா?
  • இதைச்செய்திட, என் ஆவியில் ஒரு விடுதலையை என்னால் உணரமுடிகிறதா?

பல சமயங்களில், தேவனுடைய சித்தத்தைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியாவிட்டாலும், ஒரு படி முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும். இதுவும் விசுவாசித்து நடக்கும் ஒழுக்கத்தின் ஒரு பகுதியாகும் - ஏனெனில் நிச்சயத்தன்மையை எதிர்பார்ப்பது சில சமயங்களில் "தரிசித்து நடப்பதற்கு" சமமாக இருக்கலாம். சில சமயங்களில் தேவன் தம்முடைய சித்தத்தின் தெளிவான உறுதியை நமக்குத் தருகிறார். ஆனால் வேறுசில சமயங்களில், அவருடைய சித்தத்தைப் பற்றிய தெளிவான அறிவு இல்லாமல் நாம் முன்னேற வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். நமக்குத் தெரிந்தவரை நாம் ஜெபத்தில் கர்த்தருக்காகக் காத்திருந்து பரிசுத்த ஆவியின் மனதைத் தெரிந்துகொண்டவுடன், நாம் காலவரையின்றி காத்திருக்காமல் முன்னேறிச் செல்ல வேண்டும்.

“நம்மை வழிநடத்துவார் என்று தேவன் மீது நம்பிக்கைவைத்து நாம் திட்டங்களை உருவாக்க வேண்டும்” (நீதிமொழிகள் 16:9 – லிவிங் மொழிபெயர்ப்பு) என்று வேதம் சொல்லுகிறது. அத்தகைய முடிவுகளைப் பின்னர் திரும்பிப் பார்க்கும்போது, நமது பார்வை மங்கலாக இருந்தபோதிலும், தேவன் நம்மை வழிதவற விடவில்லை என்பதைக் காணலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆரம்பத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், முடிவில் மிகுந்த உறுதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

மேலும், உண்மையான மனதுடன் ஆனால் நிச்சயமற்ற நிலையில், ஒரு அடி எடுத்து வைக்கும்போது, தேவனுடைய பரிபூரண சித்தத்தின் பாதையை நாம் தவறவிட்டாலும், தேவன் நம்மை சரியான பாதைக்கு கொண்டு வருவார் என்று நாம் நம்பலாம். ஏசாயா 30:21-ல் உள்ள வாக்குத்தத்தம் (லிவிங் மொழிபெயர்ப்பு), “நீங்கள் தேவனுடைய பாதைகளை விட்டு வழிதவறிச் சென்றால், 'வழி அதுவல்ல, இதுதான் வழி; இங்கே நடவுங்கள்’ என்று உங்கள் பின்னால் ஒரு சத்தம் கேட்கும்” என்பதாயிருக்கிறது.

அவருடைய சித்தத்தை நாம் தவறவிடும்போது, நம்முடைய போக்கை மாற்றும்படி சூழ்நிலைகளை தேவன் கட்டளையிடுவார். ஆனால் ஒவ்வொரு அசைவிற்கும் அற்புதமான வழிகாட்டுதலுக்காகக் காத்திருக்கும் நிரந்தர செயலற்ற நிலையில் நாம் இருக்கக்கூடாது. ஒரு கப்பல் நின்ற நிலையில் இருப்பதை விட நகரும் போது மிக விரைவாக திருப்பப்பட முடியும். நாமும் அப்படித்தான்.

அப்போஸ்தலர் 16:6-10 -ல், பவுலும் சீலாவும் ஆசியாவிற்குச் செல்ல முயன்றதாக வாசிக்கிறோம் - தேவனிடமிருந்து தெளிவான வழிகாட்டுதலின் விளைவாக அல்லாமல், அவருடைய சித்தத்தைச் செய்ய விரும்பியதால் சென்றார்கள். அவர்கள் தடை செய்யப்பட்டனர்; ஒருவேளை தேவன் கட்டளையிட்ட சூழ்நிலைகள் அதற்குக் காரணமாயிருக்கக்கூடும். அடுத்து, அவர்கள் பித்தினியாவுக்குள் நுழைய முற்பட்டபோது, மீண்டும் ஒருமுறை அவர்களது வழி தடைபட்டது. ஆனால், வழிகாட்டுதலுக்காக செயலற்ற முறையில் காத்திராமல் அவர்கள் தேவனுடைய விருப்பத்தைத் தீவிரமாக நாடினபடியால், அவர்களை இறுதியாக தாம் தேர்ந்தெடுத்த இடத்திற்கு, அதாவது மக்கெதோனியாவுக்கு, தேவன் அழைத்துச் சென்றார்.

தினசரி வாழ்க்கையின் சிறுசிறு விவரங்களில், வழிகாட்டுதலுக்காக தொடர்ந்தேச்சையாகக் கேட்டுக்கொண்டிருக்க அவசியமில்லை. அது ஆவியில் நடப்பது பற்றிய காரியமாகும். ஆண்டவருடனான சரியான உறவே சரியான செயலுக்கு நேராய் வழிநடத்தும். இதுபோன்ற சிறிய விவரங்களில், தேவனுடைய வழிகாட்டுதலை நாம் எப்போதும் நன்கு அறிந்திருக்க வேண்டியதில்லை. நாம் அதை அறியாமல் இருக்கக்கூடும். தேவனுடனான நமது அடிப்படை உறவுதான் முக்கியமான காரணியாகும். ஏனெனில், வழிகாட்டுதலானது ஓர் ஆவிக்குரிய விஷயமே தவிர அது ஓர் இயந்திர நுட்பம் அல்ல.