எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை தலைவர்
WFTW Body: 

உங்களுக்கு வரும் பெயர் பிரஸ்தாபத்தை வைத்து உங்கள் ஊழியத்தின் வெற்றியை ஒருபோதும் கணித்துவிடாதீர்கள். ஜனங்கள் மத்தியில் புகழ் பெற்றிருந்தவர்களைப் பார்த்து “உங்களுக்கு ஐயோ” என்றல்லவா இயேசு கூறினார்! இவ்வித பிரபல்யமே (Popularity) கள்ளத்தீர்க்கதரிசிகளைக் கண்டுகொள்வதற்குரிய அடையாளம் என்றும் இயேசு குறிப்பிட்டார்! (லூக்கா 6:26). ஆகவே ஒரு “பிரபல்யமான பிரசங்கியாய்" நீங்கள் இருப்பீர்களானால், நீங்களேகூட ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாய் இருந்திடக்கூடும்! இதற்கு நேர்மாறாக, “ஜனங்கள் எல்லாரும் உங்களைத் தீமையாய் பேசும்போது சந்தோஷப்பட்டு களிகூருங்கள்” என்றே தம்முடைய சீஷர்களிடம் இயேசு கூறினார். ஏனெனில், அதுவே ஓர் உண்மையான தீர்க்கதரிசியைக் கண்டுகொள்ளும் அடையாளமாயிருந்தது (லூக்கா 6:22,23).

மேற்கண்ட வசனங்களில் இயேசு கூறியவைகளை நீங்கள் மெய்யாகவே விசுவாசிக்கிறீர்களா?

இஸ்ரவேலின் சரித்திரத்திலும், சபையின் சரித்திரத்திலும் ஒவ்வொரு உண்மையான தீர்க்கதரிசியும் “ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே” கருதப்பட்டு, அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த மார்க்கத் தலைவர்களால் துரத்தி வேட்டையாடப்பட்டு, வெறுக்கப்பட்டு, பொய்யாய் குற்றம் சாட்டப்பட்டார்கள் என்பதை நாம் இங்கு நினைவுகூருவோமாக!

பழைய ஏற்பாட்டின் எலியாவாகவோ, எரேமியாவாகவோ இருக்கட்டும் அல்லது முதலாம் நூற்றாண்டு யோவான் ஸ்நானனாகவோ, பவுலாகவோ இருக்கட்டும் அல்லது இன்றைய நம்முடைய நாகரீக காலத்தில் வாழ்ந்த ஜாண் வெஸ்லியாகவோ, வாட்ச்மென் நீயாகவோ இருக்கட்டும்... ஒருவர்கூட இந்த நிந்தையின் வரிசையில் விதிவிலக்காய் இருக்கவில்லை!

ஆகவேதான் நாம் பூமியில் பெறும் பிரபல்யத்தை வைத்து நம் பிரயாசங்களின் ‘நித்திய ஜெயத்தை' அளந்து பார்த்திட ஒரு போதும் துணியாதிருக்கக்கடவோம்!

அது போலவே நம்முடைய ஊழியத்தின் வெற்றியை “நம் கூட்டங்களில் எத்தனை பேர் கரங்களை உயர்த்தி ஒப்புக்கொடுத்தார்கள் அல்லது எத்தனை பேருக்கு நாம் பிரசங்கித் தோம்" என்பது போன்ற புள்ளிவிவரத்தை வைத்தும் (statistics) அளந்து பார்த்திடத் துணியாதிருப்போமாக!

இவ்வித புள்ளிவிவரத்தின்படி பார்த்தால், இயேசுவின் ஊழியம் “ஒரு படுதோல்வி” என்றே நாம் கூறவேண்டியதாயிருக்கும்! ஏனென்றால் அவருடைய ஊழியத்தின் முடிவில், தம் பிதாவினிடத்தில் சமர்ப்பிக்க 11 புருஷர்கள் மாத்திரமே அவருக்கு இருந்தார்கள்! (யோவான் 17). ஆனால் அவருடைய ஊழியத்தின் வெற்றி, அந்த 11 சீஷர்களின் “தரத்தில்” தான் காணப்பட்டது. அவர்களே, இன்றைக்கிருக்கும் அரைகுறை இருதயமும், பண ஆசையும், ஒத்த வேஷமும், லௌகீக மயக்கமும் நிறைந்த 11 கோடி “விசுவாசிகளைக்” காட்டிலும் தேவனுக்கு அதிக மதிப்புடையவர்களாயும், மாபெரும் சாதனைகளை அவருக்கென சாதித்தவர்களாயும் விளங்கினர்!

என் முழு ஜீவியப்பிரயாசத்தினால், இந்த முதல் 11 அப்போஸ்தலர்களுக்கு ஒத்த தரமுடைய 11 நபர்களை என்னால் உருவாக்க முடியுமென்றால், அதுவே என் ஊழியத்தின் மகிமையான வெற்றியாய் இருக்குமென்று நான் கருதுகிறேன். ஆனால் உண்மை என்னவென்றால், அதுபோன்ற இரண்டு அல்லது மூன்று நபர்களை உருவாக்குவதுகூட எளிதல்ல! “இயேசுவைத் தங்கள் முழு இருதயத்தோடும் நேசிக்காமல், அவரை “விசுவாசிக்கிறோம்” எனக் கூறிக்கொண்டு உலகத்தோடு ஒத்துவாழும் ஒரு கூட்டத்தைக் கூட்டுவது எவ்வளவோ சுலபமாகும்!

கடந்த 20 நூற்றாண்டுகால கிறிஸ்தவத்தில், தேவன் துவக்கிய ஒவ்வொரு இயக்கமும் இரண்டாவது தலைமுறைக்குள் நுழையும்போது அந்த இயக்கத்திற்குள் வீழ்ச்சி துவங்கிவிடுவதையே நாம் கண்டிருக்கிறோம். அந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவரின் காலத்திலிருந்த வைராக்கியமும், அனலும் தொடர்ந்து காணப்படவில்லையே, அது ஏன்?!

அதற்கு ஒரு காரணம், இந்த இரண்டாவது தலைமுறையினர் “எண்ணிக்கையின் தொகையில்" ஈர்க்கப்பட்டதேயாகும். ஜனங்களுடைய எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், அதுவே தேவன் தங்களை ஆசீர்வதித்ததின் நிரூபணம் என இவர்கள் எண்ணத் தொடங்கி விட்டார்கள்!!

ஆனால் உண்மை யாதெனில், இன்றைய உலகில் அதிவேகமாய் எண்ணிக்கையில் வளர்ந்துவரும் குழுவினர்கள், மார்க்கக் கண்மூடியினரும் புறமத அடிப்படைவாதக் குழுவினருமேயாவர்! இது எதை நிரூபிக்கிறது? “எண்ணிக்கையின் வளர்ச்சி” தேவனுடைய ஆசீர்வாதத்திற்கு நிரூபணம் அல்ல என்பதையே நிரூபிக்கிறது!

கிறிஸ்துவின் சரீரத்தில் தேவன் நமக்குத் தந்த ஊழியத்தில் நாம் மிகுந்த கவனம் செலுத்தும்படிக்கே நம்மை அழைத்திருக்கிறார். அதே வேளையில், வித்தியாசமான ஊழியங்களைப் பெற்றிருக்கும் மற்றவர்களோடும் நாம் ஒத்துழைக்கும்படி அழைத்திருக்கிறார். இவ்வாறு, கிறிஸ்துவின் சரீரமாகிய குழுவில் (Team) ஒரு பங்காய் மாத்திரமே நாம் இருக்கிறபடியால், நம்முடைய ஊழியத்தின் பலனை குறிப்பாய் மதிப்பிட்டுக் கூறுவது முடியாததாகும்.

நாம் உறுதி செய்ய வேண்டியதெல்லாம், நாம் நிறைவேற்றும்படி தேவன் நமக்குத் தந்த பணியில் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா என்பதுதான்!