எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   தலைவர் சீஷர்கள்
WFTW Body: 

பவுல் இப்பூமியைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பாக, அடுத்த தலைமுறையில் இருக்கப் போகும் தேவ ஜனங்களுக்காகத் தலைவர்களையும், நல்ல மேய்ப்பர்களையும் உருவாக்க வேண்டுமென்பதைத் தனது பாரமாகக் கொண்டிருந்தார். அவர் அவர்களுக்குத் தனது சொந்த வாழ்க்கையையே சுட்டிக் காட்டினார். பவுல் எப்பொழுதும் தனது சொந்த வாழ்க்கையையே ஒரு முன்மாதிரியாகச் சுட்டிக் காண்பித்தார். அவர் எபேசு சபை மூப்பர்களிடம் பேசிய போது, “என்னுடைய பிரசங்கங்களை நினைவுகூருங்கள்” என்று சொல்லாமல், ”நான் உங்கள் மத்தியில் வாழ்ந்த விதத்தை நினைத்துப் பாருங்கள்” (அப் 20:19, 33-35) என்றே சொன்னார். மேலும் அவர் தீமோத்தேயுவிடமும், “என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்து வரும் என் தேவனை நான் ஸ்தோத்தரிக்கிறேன்” (2தீமோ 1:3) என்று கூறுகின்றார். பவுல் ஒரு பூரணமான நபரல்ல. ஆனால் அவர் தான் அறிந்த வரைக்கும், தனது மனச்சாட்சி போதித்தபடி, எல்லாவற்றிலும் தேவனுக்கு முன்பாக உத்தமத்துடன் வாழ்ந்து வந்தார்.

பின்பு பவுல் தீமோத்தேயுவிடம் பிரியத்திற்குரிய வார்த்தைகளைப் பேசுகிறார். ஏனெனில் அவருடைய உடன் ஊழியனாய் இருந்த தீமோத்தேயு மாத்திரந்தான் பவுலின் இருதயத்திற்கு மிக்க மகிழ்ச்சியைக் கொண்டுவந்தார். அநேக சபைகளிலிருந்த பல விசுவாசிகள் தீவிரமில்லாத சீஷர்களாக இருந்ததைக் கண்டு பவுல் மிகவும் ஏமாற்றமடைந்தார். அவரது உடன் வேலையாட்களில் பலரும் முழுக்கமுழுக்கத் தேவனுக்காக வாழாததைக் கண்டும் அவர் பெரிதும் ஏமாற்றமுற்றார். இன்றுள்ள எந்த மெய்யான தேவ ஊழியனும் இதே ஏமாற்றத்தை எதிர்கொள்வார். பவுல் அவர் ஸ்தாபித்த சபைகளிலேயே ஏமாற்றத்தைச் சந்தித்தாரென்றால், நாம் அதைவிட மேலான ஒன்றைச் செய்துவிட முடியும் என எண்ணுகிறீர்களா? நான் சபைகளை ஸ்தாபித்திருக்கிறேன். அவற்றில், சிலவற்றில், ஏராளமான காரியங்களைக் கண்டு நான் ஏமாற்றமடைந்துள்ளேன். எனக்கு உடன் வேலையாட்கள் உண்டு. அவர்களில் சிலரிடம் சில காரியங்களைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ளேன். இவைகளின் மத்தியில் இங்குமங்குமாக ஒன்றிலும் தனக்கானதைத் தேடாத தீமோத்தேயுவைப் போல ஒரு சிலரை நம்மால் காண முடிகின்றது. அத்தகைய ஜனங்கள் தேவனுடைய ஊழியனின் இருதயத்திற்கு மிகுந்த களிப்பைக் கொண்டு வருகின்றனர்.

இந்த ஊழியத்தை இன்னொரு தலைமுறைக்குக் கொண்டு செல்லக் கூடிய தன்னைப் போன்றவர்கள் ஒரு சிலர் இருப்பதைக் கண்டு பவுல் பூரிப்படைந்தார். தன்னுடைய ஆவியுடனும், கர்த்தருக்குத் தன்னைப் போன்ற அர்ப்பணிப்புணர்வுடனும், தனது ஊழியத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் தனக்கு இருக்கிறார்கள் என்பதைத் தன்னுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தை நிறைவு செய்யும் தருவாயில் காணுவதுதான், ஒரு மெய்யான தேவனுடைய ஊழியனின் இருதயக் களிப்பாக இருக்க முடியும். தீமோத்தேயு அப்படிப்பட்ட ஒருவனாய் இருந்தார். அதனால்தான், பவுல், “என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம் பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாய் இருக்கிறேன்” (2தீமோ 1:3) என்கின்றார். அதுதான் அவர் தீமோத்தேயுவைக் கடைசியாய்க் கண்ட தருணமாய் இருந்திருக்க வேண்டும். இனிமேல் தான் தீமோத்தேயுவைக் காண முடியாது என பவுல் எண்ணியிருக்கக் கூடும்.

தீமோத்தேயுவின் பாட்டியாகிய லோவிசாள்தான் அவர்களது குடும்பத்தில் முதன்முதலில் விசுவாசத்திற்குள் வந்த நபராவார் (2தீமோ 1:5). அவருடைய பாட்டியாகிய லோவிசாள் அந்த விசுவாசத்தை அவருடைய தாயாகிய ஐனிக்கேயாளுக்குக் கடத்தினாள். பின்னர் அவள் அதை தீமோத்தேயுவிற்குக் கடத்திவிட்டார். அந்தப் பாட்டி தனது மகளுக்கு விசுவாசத்தைக் கொடுத்தாள்; வேத அறிவை அல்ல. அந்தத் தாய் அந்த விசுவாசத்தைத் தனது மகனான தீமோத்தேயுவுக்குக் கொடுத்தாள். அப்படியானால், தீமோத்தேயு வளருகிற போது, தனது தாய் பல்வகையான சோதனைகளைக் கடந்து போன வேளையிலே, தேவன் மேல் நம்பிக்கையாய் இருந்ததைப் பார்த்திருந்திருப்பார் என அர்த்தமாகின்றது. உங்களுடைய சோதனை நேரங்களிலே நீங்கள் தேவனையே சார்ந்து நிற்பதை உங்கள் பிள்ளைகள் பார்க்கின்றார்களா? இப்படித்தான் நீங்கள் உங்கள் விசுவாசத்தை உங்களது பிள்ளைகளுக்குக் கடத்த முடியும். இதனிமித்தமாகத்தான் தேவன் உங்களுடைய பாதையில் இத்தகைய கடுமையான சோதனைகளை அனுமதிக்கிறார். உங்களுடைய பிள்ளைகள் அவர்களுடைய சிறு வயது முதலே இந்த ஒரு காரியத்தை அறிந்திருக்க வேண்டும்: “என்னுடைய அம்மா தன்னுடைய கடினமான சூழ்நிலைகளிளெல்லாம் தேவனை நம்பி அவரிடத்தில் ஜெபிப்பார். நான் சுகவீனமாய் இருந்த போது என்னுடைய அப்பா என் தலையின்மேல் கைகளை வைத்து இயேசுவின் நாமத்தில் எனக்காக ஜெபித்தார்.” ஒரு நாளிலே அந்தச் சிறு பிள்ளை, வளர்ந்து, வீட்டை விட்டு வெளியேறும்போது, தன்னுடைய அப்பா, அம்மா செய்ததைப் போலவே, தன்னுடைய கடினமான சூழ்நிலையில் அவனும்/அவளும் ஜெபிப்பான்/ள். அவர்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பார்கள். இப்படித்தான் நாம் நம்முடைய விசுவாசத்தை நம்முடைய பிள்ளைகளுக்குக் கடத்த முடியும். வேதத்திலுள்ள கதைகளை நாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அது மிக அவசியமானதாகும். அதன் மூலமாக அவர்களுக்கு வேத அறிவு உண்டாகும். ஆனால் அத்துடன் நாம் நம்முடைய விசுவாசத்தையும் அவர்களுக்குக் கடத்த வேண்டும். அச்சிறு பையன் ஒரு காலத்தில் இயேசு கிறிஸ்துவின் வல்லமையான அப்போஸ்தலனாகப் போகிறான் என்பதை ஐனிக்கேயாள் ஒரு சிறிதேனும் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை தீமோத்தேயு 20 வயதாக இருந்த போது பவுல் அவனை தன்னுடைய உடன் ஊழியனாக சேர்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்தத் தாய் தன்னுடைய வீட்டிலே சபைக்கென்று என்னே மகத்துவமான பணியைச் செய்துவிட்டாள்! நீங்களும் உங்களுடைய பிள்ளைகளை, அவர்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே கர்த்தரை நம்புகிறவர்களாக வளர்க்க முடியும்.

தீமோத்தேயுவின் தகப்பன் ஒரு கிரேக்கன் (அப் 16:3). ஐனிக்கேயாள் தேவனுக்குப் பயந்த ஒரு யூதத் தாயிற்கு மகளாயிருந்தாள். ஐனிக்கேயாள் நியாயப்பிரமானத்திற்கு கீழ்ப்படியாமல் தேவனைவிட்டு விலகி, ஒரு புறஜாதியானை மணந்து கொண்டாள். பிறகு அதற்காக மனந்திரும்பி இருந்திருக்க வேண்டும். ஒருவேளை அவளுடைய கணவன் ஒரு பெரும் பணக்கார தொழிலதிபராயிருந்திருக்கக் கூடும். அதனால் அவனுக்கு தேவனைப் பற்றிய சிந்தையோ அல்லது மகனை தேவபக்தியில் வளர்க்க வேண்டும் என்ற விருப்பமோ இருக்கவில்லை. எனவே ஐனேக்கியாள் தனியாளாய் தீமோத்தேயுவை வளர்க்க வேண்டியதாக இருந்தது. இருப்பினும், தனது மகன் முதலாம் நூற்றாண்டின் மிக அருமையான அப்போஸ்தலரில் ஒருவனாக மாறும் அளவுக்கு, அவனை தேவபக்தியில் வளர்த்தாள். மனந்திரும்பாத புருஷர்களை உடைய தாய்மார்களுக்கு ஐனேக்கியாள் எவ்வளவு அற்புதமான முன்மாதிரியாகத் திகழ்கின்றாள்! உங்களுடைய நான்கு வயது மகன் ஒரு நாளில் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் மாறப் போகிறான் என்பது தேவத்திட்டமாய் இருக்கக்கூடும் என்பதை யார் அறிவார்! காரியம் அப்படியாய் இருக்குமானால், அன்பான தாயே, அந்தச் சிறு இருதயத்திலே விசுவாசத்தை புகுத்த வேண்டிய மிகப் பெரும் பொறுப்பை நீங்கள் சுமந்து நிற்கிறீர்களே. உங்களுடைய குடும்பத்தில், சபையிலுள்ளோருக்கு எதிராக நீங்கள் புறங்கூறுவதையோ அல்லது குற்றஞ்சாட்டுவதையோ அல்லது முறுமுறுப்பதையோ அச்சிறுவனின் செவிகள் ஒருபோதும் கேட்காதிருப்பதாக. அது அவனை அழித்துவிடும்.

என்னுடைய குடும்பத்தில் நான் மற்ற விசுவாசிகளைப் பற்றித் தீமையாய்ப் பேசுவதை என்னுடைய பிள்ளைகள் கேட்கக் கூடாது என்பதிலே நான் மிகவும் கருத்தாயிருந்தேன். ஏனெனில் அந்த நோய் அவர்களைத் தொற்றிக் கொள்ளாதபடிக்கு அப்படி கவனமாக இருந்தேன். என்னுடைய பிள்ளைகளுக்கு காச நோய், தொழுநோய் போன்ற நோய்கள் வருவதை நான் எப்படி விரும்பவில்லையோ, அதைப் போலவே அவர்களுக்கு மற்ற விசுவாசிகள்மீது எதிர்மறையான மனோபாவம் தொற்றிக் கொள்வதையும் நான் விரும்பவில்லை. நம்முடைய பிள்ளைகள் நம்மைக் கடினமான சூழ்நிலைகளில் இருப்பதைக் காணும் போது, நாம் அவர்களுக்குள் விசுவாசத்தைப் புகுத்தியிருந்தால், அவர்களுக்கு வரங்களிலேயே மிக முக்கியமான வரத்தை நாம் கொடுத்துவிட்டதாகத்தான் அர்த்தம்.

நாம் அறிந்திருக்கிறபடி, பெரும்பாலான சமயங்களில், விசுவாசக் குடும்பங்களில் வளரும் இரண்டாம் தலைமுறைக் கிறிஸ்தவர்களைக் காட்டிலும், முதல் தலைமுறைக் கிறிஸ்தவர்கள்தான் விசுவாசத்திலும், கர்த்தர் மீதுள்ள பக்தியிலும் வலிமையாக இருக்கின்றனர். ஆனால் தீமோத்தேயு அதற்கு விதிவிலக்காயிருந்தார். மூன்றாம் தலைமுறையில் வந்த வராயிருந்தும் கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவராய் விளங்கினார் இந்த திமோத்தேயு! ஆதலால் இந்த திமோத்தேயுவின் மூலமாய் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை விசுவாசிகள் கூட தங்களுடைய பெற்றோர்களைக் காட்டிலும் தேவனுக்கு அதிக பத்தியுள்ள விசுவாசிகளாய் வாழ முடியும் என்பதை அறிவோமாக!