WFTW Body: 

தேவனால் ஏற்றுகொள்ளப்டுவதற்கு நீங்கள் எவ்விதத்திலும் நல்லவரல்ல என்று தொடர்ச்சியாக நீங்கள் உணருவீர்கள் என்றால், வாழ்க்கை உங்களுக்கு நிர்பந்தமாய் மாறிவிடும். நீங்கள் ஒருபோதும் அவ்வாறு புலம்பக்கூடாது, மாறாக நீங்கள் இருக்கும் விதமாகவே தேவன் உங்களை கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொண்டதால் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

தேவன் உங்களை வழிநடத்திச்சென்ற அனைத்தையும் குறித்து நினைக்கும் ஒவ்வொரு நேரமும், ஆண்டவருக்கு நன்றியையும் துதியையும் செலுத்துங்கள். குறைசொல்லுகிறதும் முறுமுறுக்கிறதுமான எல்லா எண்ணங்களையும் அசுத்தமான பாலிய சிந்தனைகளுக்கு ஒப்பாகக் கருதி அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

உங்களுடைய சரீரத்தின் ‘வெளியேற்றும் அமைப்பு’ சரியாக இயங்கினால், புறம்பேயிருந்து போகிறதொன்றும் உங்களை ஒருபோதும் தீட்டுப்படுத்தமாட்டாது (மாற்கு 7:18-23). வெளிப்புறமான அநேக காரியங்களுக்கு நீங்கள் குருடாகவும், செவிடாகவும் இருக்கக்கூடிய சுபாவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் (ஏசாயா 42:19,20). நீங்கள் பார்க்கிறதும் கேட்கிறதுமான எல்லாவற்றையும் முதலாவதாக உங்களுடைய மனதிலே பிரித்துப்பார்க்கப்படவேண்டும். அப்படிப்பட்ட அநேக காரியங்கள் உங்கள் மனதை விட்டு உடனடியாக வெளியேற்றப்படவேண்டும் - உதாரணமாக, மற்றவர்கள் உங்களுக்குச் செய்த தீமைகள், எதிர்காலத்தைக் குறித்த கவலையான எண்ணங்கள் போன்றவைகள். அப்பொழுது மாத்திரமே, நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் இளைப்பாறுதலில் நிலைத்திருந்து ஆண்டவரைத் துதிக்கமுடியும்.

துதியின் ஆவியையும் ஆனந்தத்தையும் கொடுக்கவே இயேசு வந்திருக்கிறார் (ஏசாயா 61:1-3). அவர்தாமே கல்வாரிக்குப் போகும்முன்பு, ஸ்தோத்திரப்பாட்டை பாடினார் (மத்தேயு 26:30). அவர் இப்பொழுது சபையிலே பாடகர்-தலைவராக இருக்கிறார் (எபிரேயர் 2:12).

நாம் தேவனைத் துதிக்கும்போது, நம்முடைய இருதயங்களில் அவருக்குச் சிங்காசனத்தை உருவாக்குகிறோம் (சங்கீதம் 22:3). அவருடைய துதியைப் பாடுவதே நம்முடைய விசுவாசத்தின் சான்றாக இருக்கிறது (சங்கீதம் 106:12).

இப்படிச் செய்வதினால், தேவன் அண்டசராசரத்தின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்றும், உங்கள் வாழ்க்கையில் நடக்கிற அனைத்துமே அவருடைய வெளிப்படையான அனுமதியுடன்தான் நடக்கிறது என்றும் விசுவாசிக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கிறீர்கள். (“எனக்கு நடக்கிற காரியத்தின் ஒவ்வொரு விவரத்தையும் அவர் அறிந்திருக்கிறார்” - யோபு 23:10 Living வேதாகம மொழிபெயர்ப்பு).

வேதாகமத்தில் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய மிக முழுமையான அறிக்கையை நேபுகாத்நேச்சார் தேவனால் சிட்சிக்கப்பட்ட பிறகு கூறினான். “தேவன் பூமியின் ஜனத்தை ஒன்றுமில்லாததைப்போலப் பார்க்கிறார். பரலோகத்தில் இருக்கும் தூதர்களும், பூமியின் ஜனங்கள் எல்லோரும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். ஒருவரும் அவருடைய சித்தத்தை எதிர்க்கவோ அல்லது அவர் என்ன செய்கிறார் என்று கேள்விகேட்கவோ முடியாது” (தானியேல் 4:35 - Good News வேதாகம மொழிபெயர்ப்பு) என்று சொன்னான். அப்பொழுதுதான் நேபுகாத்நேச்சாருக்கு “புத்தி திரும்பிவந்தது” (தானியேல் 4:36). அதைத்தான் புத்தியுள்ள ஒவ்வொரு விசுவாசியும் நம்புவான். அப்படிப்பட்ட விசுவாசத்தைத்தான் நாம் கொண்டிருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அப்படிப்பட்ட விசுவாசிகள் எல்லா நேரங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனைத் துதிப்பார்கள்.

தேவாலயத்தில் பிள்ளைகள் ஆர்ப்பரித்துத் துதிக்கும் சத்தத்தைக்குறித்து வேதபாரகரும் அதிகாரிகளும் குறைசொன்னபோது, இயேசு அவர்களை நோக்கி, “துதியானது உண்மையில் பாலகர்களால்தான் பரிபூரணமாகச் செலுத்தப்படுகிறது” என்று கூறினார். (மத்தேயு 21:16, இது சங்கீதம் 8:2ஐ மேற்கோள்காட்டுகிறது - “சிறுபிள்ளைகள் உம்மை பூரணமாகத் துதிக்க நீர் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தீர்” - Living வேதாகம மொழிபெயர்ப்பு). தேவன் ஏற்கும் (அங்கீகரிக்கும்) துதி நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் இல்லை, மாறாக மனத்தாழ்மயிலும் இருதயத்தின் சுத்தத்திலும் தான் இருக்கிறது (இவைகள்தான் எல்லா குழந்தைகளிடத்திலும் இருக்கிறது) என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.

மேலும் குழந்தைகள் ஒருபோதும் முறுமுறுப்பதுமில்லை குறைசொல்லுவதுமில்லை - இது நம்முடைய துதியை தேவன் ஏற்கச்செய்யக்கூடிய மற்றுமொரு காரியம். நம்முடைய வாழ்க்கையில், காலையிலும் மதியத்திலும் இரவிலும் வாரத்தின் ஏழு நாட்களும் வருடத்தின் ஒவ்வொரு வாரமும் எல்லா வருடமும், முறுமுறுப்பு குறைசொல்லுதல் என்கிற சிறு வாசனையும் இல்லாமல் இருந்தால், நம்முடைய துதியானது இனி ஞாயிற்றுக்கிழமை காலைகளில் செய்யப்படும் ஒரு சடங்காக இல்லாமல், நம்முடைய அனுதின வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும். ராகம் இல்லாமல் பாடினாலும்கூட இப்படிப்பட்ட துதியில்தான் தேவன் மகிழ்ச்சியடைகிறார்.