WFTW Body: 

தேவன் ஓர் புது தோண்டியைத் (பாத்திரத்தை) தேடுகிறார் என்று 2இராஜாக்கள் 2:20-லிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிறோம்.

தேவன் தம்முடைய சுவிசேஷத்தை இப்பூமியில் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனத்தையோ அல்லது புதிய உத்திகளையோ தேடிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிட உப்பினால் நிறைந்ததோர் புதிய பாத்திரத்தையே தேடிக் கொண்டிருக்கிறார். தேவன், தாமாகவே வந்து இந்த உலகத்திற்கு சுவிஷேசத்தை அறிவிக்கப்போவதில்லை. அவ்வாறு தேவன் நினைத்திருந்தால், பரத்திலிருந்து இடிமுழக்கங்கள் மூலம் இந்த உலகத்திற்கு சுவிஷேசத்தை பிரசங்கிக்கக் கூடும். ஆனால் அது அவருடைய வழி அல்ல. சாரமுள்ள உப்பை ஓர் மானிட பாத்திரத்திலேயே தேவன் நிரப்பிட விரும்புகிறார். பின்பு அதனைத் தேசத்தில் ஊற்றும்படி விரும்புகிறார்.

எலிசா, உப்பை தன் கைகளிலெடுத்து பின்னர் அதை ஊற்றியிருக்க முடியும். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. அவன் ஒரு பாத்திரத்தை எடுத்து, அதை உப்பினால் நிரப்பி, பின்னர் பாத்திரத்திலிருந்த உப்பைத் தண்ணீரில் ஊற்றினான். தேசத்திற்கும் தண்ணீருக்கும் ஒரே நேரத்தில் க்ஷேமம் உண்டாயிற்று. இந்த உலகத்தின் மாயையான எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு, முழுமையும் கிறிஸ்துவினால் நிறைந்து, எஜமானின் உபயோகத்திற்கு ஏற்ற பாத்திரமாய் நாம் மாற தேவன் அருள் புரிவாராக.

ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: பாத்திரத்தை உப்பினால் நிறைத்த பின், எலிசா அந்த உப்பைப் பாத்திரத்திலேயே இருக்க விடவில்லை - அவன் அதை ஊற்றினான்.

நாம் மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய ஊற்றப்படவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே தேவன் உங்கள் ஜீவியத்தையும், என் ஜீவியத்தையும் நிரப்புகிறார். தேவன் நம்மைப் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பி, ஏதாவதொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் கொடுக்கவேண்டுமென்று அநேக ஆண்டுகளாய் நாம் ஜெபித்துக்கொண்டிருக்கலாம். இந்த காரியங்களை நம்முடைய சுயநலத்திற்காகக்கூட ஜெபித்திருக்கக்கூடும். நாம் எவ்வளவு ஆவிக்குரியவர்கள் என்று மற்றவர்களுக்குக் காண்பிக்கும் பொருட்டு சுற்றித்திரிந்தோமெனில், தேவன் தம்முடைய பரலோக உப்பினால் ஒருபோதும் நம்மை நிரப்புவதேயில்லை.

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றினார், என்று கர்த்தராகிய இயேசுவைக்குறித்து ஏசாயா 53:12-ல் வாசிக்கிறோம். அதனாலேயே உங்களுடைய பாவங்களும் என்னுடைய பாவங்களும் இன்று மன்னிக்கப்பட முடியும். நாமும் பிறருக்காகச் செய்திடும் ஊழியத்தில் நம்மை ஊற்றுகிறவர்களாய் இருந்திட வேண்டும். அப்படி இல்லையென்றால், நம் தேசத்திற்கு ஒருபோதும் க்ஷேமம் ஏற்படாது. நாம் தண்ணீர் நிரப்பப்பட்ட தண்ணீர் தொட்டிகளாக இருப்பதைக் கர்த்தர் விரும்பவில்லை. ஜீவத்தண்ணீருள்ள நதிகள் மற்றவர்களுக்குப் பாய்ந்தோடும் வாய்க்கால்களாய் நாம் இருக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். அதுபோன்று ஊற்றப்படுவதற்குத் தயாராக இருக்கும் பாத்திரங்களையே தேவன் இன்றும் தேடிக் கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட பாத்திரங்களைத் தேடி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன. உங்களுக்குப் படிப்பறிவு இல்லையெனினும் அது ஒரு பொருட்டல்ல. 2 நாளாகமம் 7:14-ல் படிப்பறிவைக் குறித்து எதையும் நாம் வாசிக்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் கூட நீங்கள் பள்ளிக்குச் செல்லாதவர்களாயினும், அதுவும் ஒரு பொருட்டல்ல. இந்த முழு உலகத்தில் நீங்கள் மிக ஏழையாகவோ அல்லது மோசமான முட்டாளாகவோ இருந்தாலும் அதுவும் ஒரு பொருட்டல்ல. இப்படிப்பட்டவைகளுக்காகத் தேவன் தேடவேயில்லை. வேதாகம அறிவையோ அல்லது வேதகாமப்பள்ளியில் கொடுக்கும் பட்டங்களையோ அவர் தேடவில்லை. வேறு ஏதோவொன்றை அவர் தேடுகிறார்.

“என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள், தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுக்க நான் அவர்களைப் பயன்படுத்துவேன்”, என்று கூறுகிறார்.

நீங்கள் யாராக இருந்தாலும் அது பொருட்டல்ல. தேவனிடத்தில் எந்த பட்சபாதமும் இல்லை. நீங்கள் மேற்கூறிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, பிறருக்காக ஊற்றப்பட வாஞ்சையாயிருந்தால், நீங்கள் யாராயிருந்தாலும் தேவன் உங்களைப் பயன்படுத்துவார்.