WFTW Body: 

நாம் ஏதோ ஒரு காரியத்திற்காக தேவனுடைய சித்தத்தை தேடிக் கொண்டிருக்கும் போது குழப்பம் அடைவதென்பது இயற்கைதான் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். இந்த வழியில்தான் தேவன் நம்மை விசுவாசத்தின்படி நடக்க பயிற்றுவிக்கிறார் - ஏனெனில், ஒரு நிச்சயச்தோடு இருப்பதென்பது தரிசித்து நடப்பதற்குச் சமமானதாக இருக்கலாம்.

பல சமயங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் கூட தேவனுடைய சித்தத்தை அறியாமல் குழப்பமடைந்திருந்தார். அவர் சொல்கிறார்: “இவையெல்லாம் ஏன் இப்படி சம்பவித்தது என்று எங்களுக்குத் தெரியாததினால் கலக்கம் அடைந்திருக்கிறோம். ஆனாலும் நாங்கள் எங்கள் நம்பிக்கையை விட்டுவிடுகிறது இல்லை” (2கொரிந்தியர் 4:8 - லிவிங் பொழிப்புரை).

தேவன் நம்மை இவ்வாறு குழப்பம் அடைவதற்கும் தவறுகள் செய்வதற்கும் ஏன் அனுமதிக்கிறார் என்பதற்கு ஒரு காரணம், “மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாக பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச்செய்தார்” (1கொரிந்தியர் 1:29). “நான் எல்லா சரியான காரியங்களையும் செய்தேன், அதனால்தான் தேவனுடைய பரிபூரண சித்தத்தை செய்து முடித்தேன்” என்று நித்தியத்தில் ஒரு மனிதனாலும் சொல்ல முடியாது. நாம் நித்தியத்தில் மேன்மை பாராட்டும் ஒரே காரியம் என்னவென்றால், நாம் எத்தனையோ தவறுகள் செய்திருந்தும், எத்தனையோ முட்டாள்தனங்களை நடப்பித்திருந்தும் கூட தேவன் தம்முடைய பரிபூரண சித்தத்தை நம்மில் செய்து முடித்தார் என்பதேயாகும். நிச்சயமாக, எனது சாட்சியும் இதுவாகவேயிருக்கிறது. இப்படியாக நாமல்ல, தேவனே சகல மகிமையையும் பெற்றுக் கொள்கிறார். பல விசுவாசிகள் தேவனுடைய இந்த இறுதி நோக்கத்தை அறியாமல் இருப்பதால் தான் தாங்கள் தோல்வியடையும் போதெல்லாம் அல்லது தேவனுடைய வழிகளையும் அவர் சித்தத்தையும் குறித்து குழப்பமடையும் வேளைகளிலெல்லாம் சோர்ந்து போகிறார்கள். தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகள் அல்ல. வானத்துக்கும் பூமிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ, அவை அவ்வளவு வித்தியாசமானவைகள் (ஏசாயா 55:8,9).

தெய்வீக ஞானத்தைக் கொண்டிருப்பது ஒரு மகத்தான காரியம். ஞானத்தின் ஒரு அம்சம் என்னவென்றால், அது நமது முன்னுரிமைகளை சரியாக வரிசைப்படுத்தும் ஒரு திறமை. அதாவது பாடம் படிப்பதற்கு, தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கு, வேலை, தூக்கம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற காரியங்களுக்கு எவ்வளவு நேரம் செலவு செய்ய வேண்டும் என்பதைப்பற்றிய ஒரு அறிவு. அநேக விசுவாசிகள் இந்த முன்னுரிமைகளை வரிசைப்படுத்துவதில்தான் தவறுகிறார்கள்; குறிப்பாக, திருமணமாகி குடும்பம் உண்டான பிறகு இவ்வாறு நேரிடுகிறது. எனவே இப்பொழுது திருமணமாகாமல் நீங்கள் இளம் வாலிபனாய் இருக்கும்போதே இந்த ஞானத்தில் கொஞ்சத்தைப் பெற்றுக்கொள்வது நல்லது. “நீ ஞானத்தில் குறை உள்ளவனாய் இருந்தால் (நம் எல்லாருக்குமே இக்குறை உண்டு), நீ இதற்காக தேவனிடத்தில் கேட்கலாம், அவர் உனக்கு சம்பூர்ணமாய் கொடுப்பார். எனவே கேள்!” என்று யாக்கோபு கூறுகிறார்.

தேவ சித்தம் அறியணுமே! என்ற எனது புத்தகத்தின் ஆறாவது அத்தியாயத்தை வாசிக்கும்படி உங்கள் எல்லாரையும் நான் ஊக்குவிக்கிறேன். தீர்மானம் எடுத்திட தயங்குவதிலிருந்து விடுதலை, கடந்தகாலத் தீர்மானங்களின் நிமித்தம் வருத்தப்படுவதிலிருந்து விடுதலை மற்றும் தவறு செய்து விடுவோமோ என்ற பயத்திலிருந்து விடுதலை போன்ற காரியங்களைக் குறித்து அதில் எழுதியிருக்கிறேன்.

எதையுமே செய்யாமல் இருக்கும் ஒரு மனிதன் தான் ஒரு போதும் தவறே செய்யாத மனிதனாய் இருக்க முடியும். தேவனுடைய பரிபூரண சித்தத்தைத் தவறே செய்யாமல் நடக்க கற்றுக் கொண்டவர்கள் இயேசு கிறிஸ்துவைத் தவிர ஒருவரும் இல்லை. “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்... அவர்கள் விழுந்தால் அது ஆபத்தானது அல்ல, ஏனெனில் தேவனே அவர்களைத் தம் கரத்தால் தாங்குகிறார்" (சங்கீதம் 37:23,24 - லிவிங் பொழிப்புரை). எனவே தவறு செய்து விடுவோமோ என்று எண்ணி பயப்படாதேயுங்கள். நீங்கள் ஆபத்தான தவறுகள் செய்வதிலிருந்து தேவன் உங்களைப் பாதுகாத்துக் கொள்வார்.