WFTW Body: 

நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம் என வேதம் நமக்குச் சொல்லுகின்றது (ரோமர் 5:9). தேவன் நம்மைச் சுத்திகரிக்கையில், நம்மை நீதிமான்களாகவும் மாற்றுகிறார். “நீதிமானாக்கப்படுதல்” என்ற வார்த்தைக்கு, “என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை எந்தப் பாவமும் செய்திருக்கவில்லை என்பதைப் போலவும், நான் இப்போது ஒரு பூரண நீதிமானாய் இருக்கிறேன் என்பதைப் போலவும்” இருப்பது என்று அர்த்தமாகும். எவ்வளவு அற்புதம்! நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் ஒரு கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் பல வார்த்தைகளுக்கு ஒப்பாகச் சொல்லலாம். இப்போது அந்தக் கரும்பலகையானது ஒரு ஈரத்துணியினால் நன்கு துடைத்துச் சுத்தம் செய்யப்பட்டுவிட்டது. அதன் பின்பு நீங்கள் அக்கரும்பலகையைப் பார்த்தால் அதில் என்ன பார்ப்பீர்கள்? ஒன்றுமில்லை. ஒருபோதும் எதுவுமே எழுதப்படாததைப் போல அது உள்ளது. இயேசுவின் இரத்தமும் நம்மை இவ்விதமாகத்தான் சுத்திகரிக்கின்றது – முற்றிலும் முழுவதுமாக.

நாம் நமது பாவங்களை மெய்யாகவே தேவனிடத்தில் அறிக்கை செய்திருப்போமானால், ஒரு முறை அறிக்கை செய்வதே போதுமானதாகும். தேவன் உடனடியாக அவற்றை நீக்கிவிடுகிறார். “நான் அவர்களுடைய பாவங்களை இனி நினையாமலிருப்பேன்” (எபி 8:12) என்பதே அவருடைய வாக்குத்தத்தமாக இருக்கின்றது. உண்மையாகவே நாம் மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் நாம் திரும்ப திரும்ப நம்முடைய பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் நாம் அறியும் போது என்ன ஓர் இளைப்பாறுதல் நம்முடைய இருதயங்களில் குடிகொள்கின்றது. “என்னுடைய பாவங்களை மன்னியும்” என்று நாம் ஜெபிக்கும்போது, அது ஒரு குறிப்பிட்ட விதமாக இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்துச் சொல்லுகிறேன். அநேகர், “கர்த்தாவே, நான் பல பாவங்களைச் செய்திருக்கக் கூடும்” எனப் பொதுவாக ஜெபிக்கின்றனர். அப்படியென்றால் அவர்களுக்கு அதைப் பற்றி உறுதிப்பட ஒன்றும் தெரியவில்லை என்பதாகத்தான் அர்த்தம். அதுபோல அறிக்கை செய்வதில் ஒரு பயனுமில்லை. ஏனெனில் உங்களுடைய அறிக்கையானது, ஒரு வேளை நீங்கள் எந்தப் பாவமுமே செய்யாமலேயே அப்படிச் சொல்வதைப் போல உள்ளது. “கர்த்தாவே, இதுதான் என்னுடைய பாவம். நான் அந்த நபருக்கு விரோதமாக ஒரு வன்மத்தை வைத்திருக்கிறேன். நான் அந்த நபரை மன்னிக்கவில்லை. நான் அந்த நபர்மீது பொறாமை கொண்டுள்ளேன். அதைச் செய்ததில், என்னுடைய நோக்கமானது முற்றிலும் சுயநலமாய் இருந்தது. நான் என்னுடைய சுய மகிமைக்காய் அதைச் செய்துவிட்டேன்,” என்று குறிப்பிட்டு அறிக்கை செய்வது சாலச் சிறந்ததாகும். நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். நாம் நமக்குத் தெரிந்த எல்லாப் பாவங்களையும் அறிக்கை செய்துவிட்ட பின்னரும், தாவீதைப் போல, “மறைந்துகிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்” (சங் 19:12) என்று ஜெபிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம். நாமெல்லாருமே நம்மை அறியாமலேயே பல பாவங்களைச் செய்துவிடுகிறோம்.

கர்த்தருடைய ஜெபத்தில் ஏறெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில், பாவ மன்னிப்புக்கான விண்ணப்பமே மிக முக்கியமானதாக உள்ளது. ஏனென்றால் இந்த விண்ணப்பத்தைத்தான் இயேசு அவருடைய ஜெபத்தின் இறுதியிலும் மீண்டுமாய் ஏறெடுத்தார். நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த ஜெபத்திலுள்ள ஆறு விண்ணப்பங்களில், இயேசு ஒன்றை மாத்திரமே இறுதியிலும் வலியுறுத்துகின்றார். “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” (மத் 6:14,15) என்று அவர் சொன்னார். அநேகக் கிறிஸ்தவர்கள் இந்த விண்ணப்பத்தை மிக சீரியஸாக எடுக்காத காரணத்தினால்தான், அவர்களால் தேவனோடு முழுமையான, விடுதலையான ஐக்கியம் கொள்ள முடிவதில்லை.

ஒரு ராஜா தன்னுடைய ஊழியக்காரரிடத்தில் கணக்குக் கேட்டதாகவும், அப்போது ஊழியக்காரரில் ஒருவன் ராஜாவிற்கு 40 மில்லியன் ரூபாய் கடன்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் இயேசு ஓர் உவமையை ஒரு முறை சொன்னார். அந்த வேலைக்காரன், “திரும்பச் செலுத்துவதற்கு என்னிடம் பணமில்லை; என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கெஞ்சியபோது, ராஜா அவனை முழுமையாக மன்னித்துவிட்டான். அந்த மனிதன் சென்று, தன்னிடத்தில் 40 ரூபாய் கடன்பட்ட வேறொரு வேலைக்காரனைக் கண்டு, அவனுடைய தொண்டையை நெருக்கி, அவனைச் சிறையிலடைத்தான். ராஜா இதைக் கேள்விப்பட்ட போது, இரக்கமற்ற ஊழியக்காரனை அழைத்து, “நான் உனக்கு உன்னுடைய 40 மில்லியன் ரூபாய் கடனை இலவசமாய் மன்னித்தேன். ஆனால் அந்த மனிதனின் 40 ரூபாய் கடனை உன்னால் மன்னிக்க முடியாதா?” என்று கேட்டான். பின்பு அவனை உபாதிக்கிறவர்களிடத்திலே ஒப்புவித்தான். அதன்பின்பு இயேசு, “நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமப் பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்” என்றார் (மத் 18:35). நாம் மற்றவர்கள் மீது இரக்கமாய் இருக்கக் கற்றுக் கொள்ளும்வரைக்கும், நம்மை அலைகழிக்கும்படி அனுமதிக்கப்பட்ட அசுத்த ஆவிகள்தான் அந்த உபாதிக்கிறவர்களாவர். தேவன் நம்மை எவ்வளவாய் மன்னித்திருக்கிறார் என்றும், நாமும் நம்மைக் காயப்படுத்தினவர்களை மன்னிக்காவிட்டால் அது எவ்வளவு பொல்லாப்பானதாகவும், இரக்கமற்றதாகவும் இருக்கும் என்றும் நமக்கு விளக்கிக்காட்டுவதற்காகவே இயேசு இந்த உவமையைச் சொன்னார்.

உங்களுக்கு யாரேனும் ஏதேனும் தீங்கிழைத்து விட்டார்களா? ஒருவேளை யாரேனும் உங்களைப் பற்றித் தீமையான கதைகளைப் பரப்பியிருக்கலாம். ஒருவேளை உங்கள் பக்கத்து வீட்டுக்காரரோ அல்லது உங்கள் மனைவியோ அல்லது உங்கள் தகப்பனோ அல்லது உங்கள் மாமியாரோ உங்களுக்கு ஏதேனும் தீமை செய்திருக்க முடியும். உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் ஏதேனும் ஒரு வழியில் நாசப்படுத்தியிருக்கக் கூடும். உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செய்த ஏதோ ஒரு தவறு இன்று வரையிலும் உங்களுக்குச் சொல்லொண்ணா துயரத்தைத் தந்து கொண்டிருக்கக்கூடும். ஆனால் நீங்கள் தேவனுக்குக் கடன்பட்டிருக்கிற விதத்தையும், தேவன் உங்களுக்கு மன்னித்திருக்கிற விதத்துடன் இந்தப் பாவங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒப்பிட்டுப் பார்த்தாலும், அது மிகச் சிறிதுதான் என்று ஆண்டவர் சொல்லுகின்றார். ஆதலால் நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் மனப்பூர்வமாய் மன்னிக்க முடியாமலிருப்பதற்கு உங்களுக்கு ஒரு காரணமும் இருக்கவே முடியாது. மத்தேயு 18:35 –ன் முக்கியமான பகுதி “மனப்பூர்வமாய்” என்பதாகும். உங்கள் சகமனிதனை உங்களால் மனப்பூர்வமாய் மன்னிக்க முடியவில்லையானால், நீங்கள் தேவனிடத்தில் வந்து, “எங்கள் தப்பிதங்களை எங்களுக்கு மன்னியும்” என்று சொல்லி உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஏனென்றால் தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்க மாட்டார். இந்த முழு உலகத்திலும் உங்களால் மன்னிக்க முடியாத ஒரு ஆத்துமாவேனும் இருக்குமானால், நீங்கள் மன்னிக்கப்பட முடியாது. நீங்கள் நித்தியமாய் இழக்கப்பட்டுப் போவீர்கள். ஏனென்றால் மன்னிக்கப்படாத எந்த ஆத்துமாவும் தேவனுடைய பிரசன்னத்துக்குள் பிரவேசிக்க இயலாது. இது நாம் உணர்ந்திருப்பதைக் காட்டிலும் மிக சீரியஸான விஷயமாகும்.

“நாங்கள் மற்றவர்களை மன்னிப்பது போல எங்களை மன்னியும்” என்பதுதான் ஜெபமாகும். நாம் மற்றவர்களை எவ்விதமாய் மன்னித்திருக்கிறோம் என்பதை அவர் மிகத் துல்லியமாகப் பார்க்கிறார். நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கிற அளவிற்குத்தான் தேவன் நமக்கும் கொடுப்பார் என்று இயேசு நமக்குப் போதித்தார். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” என்று அவர் சொன்னார் (லூக் 6:38). அதின் அர்த்தம், நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு ஒரு சிறிய தேக்கரண்டியைப் பயன்படுத்தினால், உங்கள் ஜெபங்களுக்குப் பதில் தருவதற்குத் தேவனும் அதே தேக்கரண்டியைத்தான் பயன்படுத்துவார். ஆகவே பெரிதும், மகத்துவமான காரியங்களுக்காக நாம் தேவனிடத்தில் ஜெபிக்கும் போது தேவனும் சிறிய தேக்கரண்டியில் சிறிதளவே நமக்கு கொடுப்பார். மற்றவர்களுக்கு வழக்கமாக நாம் அதே அளவில் கொடுத்ததே அதற்கு காரணம். மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு நீங்கள் பெரிய கரண்டியைப் பயன்படுத்தினால், தேவனும் உங்களுக்குக் கொடுப்பதற்கு அதே பெரிய கரண்டியைப் பயன்படுத்துவார். தேவன் நம்முடன் இடைபடும் விஷயங்களில் இது ஒரு மாறாக் கோட்பாடாக விளங்குகின்றது.

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத் 5:7). நீங்கள் அதிகமாய் மற்றவர்கள்மீது இரக்கமாக இருந்தால், நியாயத்தீர்ப்பு நாளிலே தேவனும் உங்கள்மீது அதிக இரக்கம் உள்ளவராக இருப்பார். ஆனால் இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும் (யாக் 2:13). ஆகவே நீங்கள் பிறரை மன்னிக்கின்ற விஷயத்தில் கஞ்சத்தனத்தையும், கருமித்தனத்தையும் பின்பற்றினால், உங்களை மன்னிக்கின்ற விஷயத்தில் தேவனும் அதே விதமாகத்தான் நடந்து கொள்ளுவார். உங்களுக்குத் தீமை செய்தவர்களிடத்தில் நீங்கள் இன்முகத்துடன், ஒரு மன்னிக்கும் பார்வையைப் படரவிட்டால், தேவனும் உங்கள்மீது இன்முகத்துடன்கூடிய மன்னிப்புப் பார்வையைப் படரவிடுவார். நீங்கள் பிறரை நடத்துகிற விதமாகவே, தேவனும் உங்களை நடத்துவார்.

நீங்கள் பலிபீடத்தினருகே உங்கள் காணிக்கையைச் செலுத்த வந்து, நீங்கள் ஜெபிக்கும்படி தேவனிடத்தில் வரும்போது, அங்கே நீங்கள் உங்கள் சகோதரனைக் காயப்படுத்தினதை நினைவுகூர்ந்தால், “முன்பு போய் உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” என்று இயேசு சொன்னார் (மத் 5:22-24). இல்லையேல் தேவன் உங்கள் பணத்தையோ, ஜெபத்தையோ ஏற்றுக் கொள்ள மாட்டார். பழைய உடன்படிக்கையின் தரமானது: “உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமை கொள்ளாமல் இருப்பாயாக” (லேவி 19:18) என்பதாகத்தான் இருந்தது. அதைக் கைக்கொள்வது எளிது. ஆனால் புதிய உடன்படிக்கையின் தரமோ அதிகம். “உன்மீது உன் சகோதரனுக்குப் பகை இருக்குமானால், நீ போய் அதைச் சரிசெய்” என இயேசு சொன்னார். நம் பட்சத்தில் எந்தத் தவறும் இல்லாதிருந்தாலும், நம்மீது குறை உள்ள சகோதரர்கள் எப்பொழுதுமே இருந்து கொண்டேதான் இருப்பார்கள். இயேசுவும் அப்போஸ்தலர்களும் சத்தியத்திற்காக நின்றபடியால், அவருக்கு சத்துருக்கள் இருந்தனர். ஆனால் நாம் முரட்டுத்தனமாகப் பேசியதற்காக நம் மேல் பகை கொண்டுள்ள சகோதரனைப் பற்றித்தான் இயேசு இங்கு குறிப்பிடுகிறார் (மத் 5:22). அது நாம் செய்த பாவச் செயலினால் உண்டான ஒரு பகையாகும். இத்தகைய விஷயங்களில், நாம் முதலில் அந்தச் சகோதரனிடம் சென்று, அவரிடத்தில் நம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்புக் கோர வேண்டும். அதன் பின்புதான் நாம் காணிக்கையைச் செலுத்த வேண்டும்.

நீங்கள் தேவனிடத்திற்குச் சென்று, “கர்த்தாவே, என்னுடைய வாழ்க்கையில் புது உடனடிக்கையின் வல்லமை வேண்டும்” எனக் கேட்டால், அதற்குக் கர்த்தர், “நான் உனக்குப் புது உடன்படிக்கையின் வல்லமையைத் தந்தால், அத்துடன் புது உடன்படிக்கையின் கடமைகளும் சேர்ந்தே வரும்” என்று சொல்லுவார். அநேகக் கிறிஸ்தவர்கள் பழைய உடன்படிக்கைத் தரத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பதால், அவர்களால் புது உடனடிக்கையின் வல்லமையை அனுபவிக்க முடிவதில்லை. அவர்கள் எவரிடத்திலும் சென்று மன்னிப்புக் கேட்பதற்கு விருப்பமில்லாதவர்களாக இருப்பதால், அவர்கள் வல்லமையற்றவர்களாகவே இருந்து விடுகின்றனர். நாம் மாம்சத்தை உடையவர்களாகவும், மாம்சத்தை உடையவர்கள் மத்தியில் வாசம் செய்கிறவர்களாகவும் இருக்கிறோம். எனவே நாம் அறிந்தோ அறியாமலோ, தொடர்ச்சியாக ஒருவரையொருவர் காயப்படுத்துவதற்கான பொறுப்பு உடையவர்களாக இருக்கிறோம். நாம் ஒருவராலும் காயப்படுத்தப்படாத இடம் என்று ஒன்று இருக்குமானால், அது பரலோகம்தான். ஆகவே நம் இந்த பூமியில் வாழும் காலமெல்லாம் ஒருவரையொருவர் மன்னித்து வாழ்பவர்களாக இருக்க வேண்டும். தவறு செய்வது மனிதனின் இயல்பு, அதை மன்னிப்பது இறைவனின் மாண்பு.

நரகத்தின் அம்சங்களில் ஒன்று யாதெனில், அங்கு இரக்கத்திற்கு இடமில்லை என்பதுதான். நீங்கள் பிறரிடத்தில் காட்ட வேண்டிய இரக்கத்தில் எந்த அளவிற்குக் குன்றிப் போய் இருக்கிறீர்களோ, அந்த குறுகிய அளவு உங்கள் இருதயத்தினுள் நரகம் இடம் பெற்றுள்ளது என்பதாகத்தான் அர்த்தம். உங்களால் யாரையேனும் மன்னிக்க இயலாவிடில், உங்களுக்குள் சிறிதளவு நரகம் புகுந்து விட்டது என்று சொல்லலாம். உங்களது மதம் சார்ந்த கிரியைகளைக் கண்டு, நீங்கள் ஒரு பக்திமான் என மற்றவர்களால் கருதப்படலாம். ஆனால் நீங்கள் உங்களுக்குள்ளே எப்போதுமே சிறிதளவு நரகத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ஆகவே இந்த நிலையில் நீங்கள் பரலோகத்திற்குச் செல்ல முடியாது. ஏனென்றால் உங்களால் பரலோகத்தினுள் நரகத்தை எடுத்துச் செல்ல இயலாது. இப்பூமியை விட்டுக் கிளம்பும் முன், நீங்கள் அதை விட்டுவிட வேண்டும். அதனால்தான், “நங்கள் பிறருடைய தப்பிதங்களை மன்னித்திருப்பதைப் போலவே எங்களை மன்னித்தருளும்” என்று ஆண்டவர் நமக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். நாம் மற்றவர்களை மன்னியாதிருக்கும்போது, அது நம்முடைய சரீரங்களையும் பாதிக்கக்கூடும். தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியாமலிருப்பது, அடிக்கடி சரீர பாடுகளைக் கொண்டு வருகின்றது.

நீங்கள் உங்கள் இருதயத்தில் யார் மீதேனும் பகை கொண்டிருந்து, யார் மீதேனும் பொறாமை கொண்டிருந்து, தேவனுடைய அன்பின் பிரமாணத்தை மீறினால், முடிவில் அது உங்கள் சரீரத்தைப் பாதிக்கத் தொடங்கும். கீல்வாதம் (arthritis), ஒற்றைத் தலைவலி (migraine), வாதம் (rheumatism), ஆஸ்துமா (asthma) முதலிய நோய்களால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற கிறிஸ்தவர்கள் உண்டு. அவர்கள் யார்மீதோ பகை வைத்துள்ளதால், அவர்கள் இவ்வியாதிகளிலிருந்து குணமாக்கப்பட முடிவதில்லை. அவர்கள் எத்தனை மாத்திரைகளை விழுங்கினாலும், மன்னிக்கப் பழகுகிற வரையிலும் அவர்களால் குணமடைய முடியாது. இந்த நோய்களெல்லாம் இரசாயனக்குறைவு சம்பந்தப்பட்டவைகளல்ல. அவை சரீரத்தில் இருப்பவையல்ல. அவை ஆத்துமாவில் உள்ளவையாகும்.

நீங்கள் உங்கள் சகோதரனையோ, சகோதரியையோ மன்னிக்காவிட்டால், தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்க மாட்டார். “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவி கொடார்” (சங் 66:18) என வேதம் கூறுகின்றது. அவர் பதில் தர மாட்டார் என்பது மாத்திரமல்ல, அதைக் கேட்கவே மாட்டார். நம்மைநாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். நொறுங்குதலும், அறிக்கையிடுதலும் மெய்யான மன்னிப்பைத் தொடர்ந்து வருவனவாகும். அது மாம்சத்தின் நிர்ப்பந்தமான நிலையின் அடையாளத்தைக் கண்டிருக்கும். அது சீர்பொருந்துவதற்கான விருப்பத்தையும், தேவைப்பட்டால் யாரிடத்திலும் மன்னிப்புக் கேட்பதாகவும் இருக்கும். தேவனோடுள்ள நம்முடைய உறவு சரியாய் இருந்தால், அதுவே போதுமென்றிருக்கும்.

கடைசியாக, விண்ணப்பம் என்பது “எங்களுக்கு மன்னியும்” என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நாம் நம்முடைய சகோதரர்களும் மன்னிக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம். சில சமயங்களில், யாரோ ஒரு சகோதரர் நம்மைத் தவறாக நடத்திவிட்டார் என்பதற்காக அவர் தேவனால் நியாயந்தீர்க்கப்படுவார் என்ற இரகசியமான நம்பிக்கை நமக்கு இருக்க முடியும். அத்தகைய மனப்பான்மை பேய்த்தனமானதாகும். ஏனென்றால் பிசாசு மாத்திரமே ஜனங்கள் தேவனால் தண்டிக்கப்பட வேண்டுமென விரும்புவான். “நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று இயேசு சொன்னார் (யோவான் 13:14). அப்படியென்றால், நீங்கள் உங்கள் சகோதரனின் கால்களில் அழுக்குப் படிந்திருப்பதைக் (ஆவிக்குரிய ரீதியில்) காண நேர்ந்தால், அவர் கழுவப்பட வேண்டும் என மிகுந்த ஏக்கம் கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.

‘எங்களுக்கு மன்னியும்’ என்றால், “பிதாவே நீர் என்னுடைய பாவங்களைக் கழுவினால் மட்டும் போதாது. என்னைச் சுற்றிலும் மற்ற சகோதர சகோதரிகளும் உண்டு. நீர் அவர்களுக்கும் அவர்கள் பாவங்களை மன்னிக்க வேண்டும்” என்றே விரும்புகிறேன் என்பதாகும். ஆமென்