பவுல், 2கொரிந்தியர் 11:22-23-ல், தனது சிறைவாசங்கள், கசையாலும் தடிகளாலும் பெற்ற அடிகள், தூக்கமில்லாத இரவுகள், பசி, தாகம், மோசமான சீதோஷண நிலைகளில் சிக்கியது, கொள்ளையர்களால் வந்த ஆபத்துக்கள், என்று கர்த்தருக்காகச் செய்த ஊழியத்தில் தான் அனுபவித்த பல்வேறு சோதனைகளைப் பற்றிப் பேசுகிறார். அவர் தன்னைக் குளிரிலிருந்து பாதுகாக்கப் போதுமான கம்பளி ஆடை, அல்லது சாப்பிட போதுமான உணவு கூட இல்லாத நேரங்கள் இருந்தன; மேலும் அவருக்கு அந்த நேரத்தில் கம்பளி ஆடைகளோ உணவோ வாங்க பணமும் இல்லை. பாடநுபவித்துக் கொண்டிருந்த மற்ற கிறிஸ்தவர்களுக்கு பவுலை ஒரு சிறிய முன்னோடியாக மாற்றும்படிக்கு தேவன் அவரை இவை அனைத்தின் வழியாகக் கொண்டு சென்றார். அந்தச் சோதனைகள் ஒவ்வொன்றிலும், பவுல் தன்னைத் தானே தாழ்த்தினார்.
அவர் கூறுகிறார், "ஒருமுறை நான் தமஸ்குவில் பிடிபடப் போகிறேன் என்ற சூழ்நிலை வந்தபோது, பிடியிலிருந்து தப்புவிக்க விசுவாசிகள் என்னை ஒரு ஜன்னல் வழியாக ஒரு கூடையில் இறக்கிவிட்டார்கள்" (2கொரிந்தியர் 11:32,33). நீங்கள் ஒரு அப்போஸ்தலனாக இருந்து, அது போன்ற அவமானகரமான ஒரு சம்பவம் உங்களுக்கு நடந்திருந்தால், அதைப் பற்றி யாரும் கேள்விப்பட நீங்கள் விரும்பமாட்டீர்கள். ஆனால் பவுலோ, கொரிந்திய கிறிஸ்தவர்கள் தான் ஒரு பெரிய மனிதன் என்றும், தன்னைக் காப்பாற்ற தேவன் சில தேவதூதர்களை அனுப்புவார் என்றும் கற்பனை செய்வதை விரும்பவில்லை. அவர் ஒரு சாதாரண மனிதனாக இருந்தார், மற்றவர்களும் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். "யாரும் என்னைப் பற்றி அதிக உயர்வாக நினைப்பதை நான் விரும்பவில்லை" என்று அவர் கூறினார் (2கொரிந்தியர் 12:6- லிவிங் மொழிபெயர்ப்பு). இன்றுள்ள பெரும்பாலான தேவ ஊழியர்களிடமிருந்து பவுல் எவ்வளவு வித்தியாசமாக இருந்தார்! அவர்கள் உண்மையில் தாங்கள் இருப்பதை விட மற்றவர்களுக்கு தங்களைப் பற்றி ஓர் உயர்ந்த அபிப்பிராயத்தை கொடுக்கவே முயற்சி செய்கிறார்கள்.
2கொரிந்தியர் 12:1-ல் பவுல் கர்த்தரால் மூன்றாம் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவத்தைப் பற்றிப் பேசுகிறார். 14 ஆண்டுகளாக அவர் யாரிடமும் அதைக் குறிப்பிடவில்லை. என்ன ஒரு மனிதன் பாருங்கள்! 14 ஆண்டுகளாக இந்த அனுபவத்தைப் பற்றி அவர் அமைதியாக இருந்தார் - அவர் அதைப் பற்றிப் பேசியபோது கூட, எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. பெரும்பாலான விசுவாசிகள் அடுத்த சபைக் கூட்டத்திலேயே அத்தகைய தரிசனத்தைப் பற்றிப் பேசியிருப்பார்கள் - மேலும் அதைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் கொடுத்திருப்பார்கள்! இதனால்தான் பவுலின் அனுபவம் உண்மையானது என்று நான் நம்புகிறேன். இந்த நாட்களில் சில விசுவாசிகள் பெருமிதம் கொள்ளும் பரலோக தரிசனங்கள் எல்லாம் அவர்களுடைய வளமான கற்பனையின் உருவாக்கங்கள் மட்டுமேயாகும் - அவர்கள் மற்றவர்களிடமிருந்து கனத்தைப் பெறுவதற்காகப் பேசியவை அவை! நான் ஏன் அப்படிச் சொல்கிறேன்? ஏனென்றால் உண்மையான தரிசனங்களைப் பெற்றவர்கள் அந்த தரிசனங்கள் (பவுல் சொன்னது போல்) “விவரிக்க அல்லது வார்த்தைகளில் சொல்ல ஒரு மனிதனுடைய சக்திக்கு அப்பாற்பட்ட வியப்புக்குரியவை" என்றும் "அவற்றை மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" (2கொரிந்தியர் 12:4) என்றும் அறிவார்கள்.
பிறகு, பவுல் தான் தொடர்ந்து ஜெபித்த பிறகும் தேவன் நீக்காத ஒரு கடுமையான சோதனையைப் பற்றிப் பேசினார். பவுல் அதை "மாம்சத்தில் ஒரு முள்" மற்றும் "சாத்தானின் தூதன்" என்று அழைத்தார் - ஆகிலும் அது "தேவனால் கொடுக்கப்பட்டது" (2கொரிந்தியர் 12:7). பவுலுக்கு தேவன் கொடுத்த வரம் ஒரு முள்!! பவுல் பெருமை அடையும் ஆபத்தில் இருந்ததைக் கண்டதால் தேவன் அதை பவுலுக்குக் கொடுத்தார். பெருமையுள்ள மனிதர்கள் அனைவரையும் தேவன் எதிர்க்கிறார், ஆனால் அவர் பவுலை எதிர்க்க விரும்பவில்லை. அவருக்குக் கிருபை அளிக்க விரும்பினார். ஆனால் பவுல் மனத்தாழ்மையுடன் இருந்தால் மட்டுமே அவருக்கு தேவன் கிருபை அளிக்க முடியும் (1பேதுரு 5:5). ஆகவே, சாத்தானின் தூதன் பவுலைத் துன்புறுத்த தேவன் அனுமதித்தார், இதனால் அவரைத் தொடர்ந்து தேவனை சார்ந்து தாழ்மையுடன் இருக்க வைத்தார். ஆகவே, சில சமயங்களில், ஒரு நல்ல முடிவு உண்டாகும் நோக்குடன் சாத்தானின் தூதன் கூட நம்மைத் துன்புறுத்துவதைக் தேவன் அனுமதிக்கலாம் என்பதை நாம் இங்கு காண்கிறோம். உதாரணமாக, நோய் சாத்தானின் ஒரு தூதன். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால் இயேசு சொன்னார், “ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் (மாத்திரமே) கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு 7:11). பூரணமாய் நல்லவராயிருக்கும் தேவனுடன் ஒப்பிடும்போது நாம் அனைவரும் பொல்லாத தகப்பன்மார்களே. மேலும் நம்மில் எவரும் நம் பிள்ளைகளுக்கு நோயைக் கொடுக்க மாட்டோம். அப்படியானால், ஒரு அன்பான, பரலோகத் தகப்பன் தம் பிள்ளைகளில் எவருக்கும் எப்படி நோயைக் கொடுக்க முடியும்? உலகில் உள்ள பெரும்பாலான நோய்கள் பூமி ஒரு சாபத்தின்கீழ் இருப்பதால் வருகின்றன (ஆதியாகமம் 3:17). வேறு சில வியாதிகள் சாத்தானால் உண்டாகின்றன (யோபு 2:7).
ஆரோக்கியமாக நாம் இருக்க வேண்டும் என்பதே நம்மைக்குறித்த தேவனுடைய பரிபூரண சித்தம் என்றாலும், சில சமயங்களில் நாம் நோய்வாய்ப்படும்படி அவர் ஒரு நோக்கத்தோடு அனுமதிக்கலாம். முள்ளிலிருந்து விடுவிப்பதற்காக பவுல் ஜெபித்தபோது, தேவன் அவரை விடுவிக்கவில்லை, மாறாக முள் இருந்தாலும் அவர் ஒரு ஜெயங்கொள்பவராக இருக்க அவருக்கு கிருபை அளித்தார். அதே கிருபையுடன் நாமும் ஜெயங்கொள்பவர்களாக இருக்க முடியும். 2கொரிந்தியர் 13:4,5-ல் நாம் வாசிக்கிறோம், “பலவீனத்தால் இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படியே நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும் தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்”.
ஒரு மெய்யான சீஷன் தன்னில் தானே பலவீனமாக இருந்து, தேவ வல்லமையால் வாழ்பவனாயிருக்கிறான். பவுல் தனது (2கொரிந்தியர்) நிருபத்தை இப்படித்தான் முடிக்கிறார்.