எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   வாலிபர் Struggling
WFTW Body: 

“அவர் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, பூரணரானார்” (எபிரெயர் 5:7-9) என்று இயேசுவைக் குறித்து தேவனுடைய வார்த்தை கூறுகிறது. "கற்றுக்கொள்ளுதல்" என்கிற வார்த்தை படிப்பினை தொடர்புடைய ஒரு வார்த்தை. எனவே இந்த வசனம் சொல்கிறது என்னவென்றால், ‘இயேசு ஒரு மனிதனாகக் கீழ்ப்படிதலில் ஒரு படிப்பினைப் பெற்றார்’ என்பதாகும். ஒவ்வொரு சூழ்நிலையிலும், அவர் தம்முடைய பிதாவுக்குக் கீழ்ப்படிந்ததினால், ஒரு மனிதனாக தமது படிப்பினை முடித்தார். இவ்வாறு அவர் நமக்கு முன்னோடினவராகினார். இதனால் நாமும்கூட அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சோதனையை மேற்கொண்டு, தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும் (எபிரெயர் 6:20). கர்த்தர் சோதனைகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தைக் குறித்துப் பரிதபிக்கக்கூடியவர். ஏனென்றால் அவரும் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார் (எபிரெயர் 2:18; 4:15; 12:2-4). ஒரு மனிதனாக இயேசு கொண்டிருந்த தூய்மை, ஏதோ ஒரு தட்டில் அவர் (சுலபமாக) கிடைத்த ஒன்றல்ல, போராட்டத்தின் மூலமாகப் பெற்ற ஒன்றாகும். ஆனால், அந்த போராட்டங்கள் முடிவிறாத ஒன்றல்ல. ஒவ்வொரு சோதனையும் ஒன்றன்பின் ஒன்றாக ஜெயங்கொள்ளப்பட்டது. இவ்வாறாக, நாம் சோதிக்கப்படும் ஒவ்வொரு சோதனையையும் அவருடைய ஜீவியக் காலத்தில் அவர் சந்தித்து, அதனை மேற்கொண்டார்.

நாம் அனைவரும் அநேக ஆண்டுகளாகப் பாவத்திலே வாழ்ந்தோம். நம்முடைய பாவம் நிறைந்த மாம்சத்தை விஷப் பாம்புகள் நிறைந்த ஒரு பெட்டியுடன் ஒப்பிடலாம். நம் மூலமாகத் தான் அந்தப் பாம்புகள் நன்றாகப் போஷிக்கப்பட்டுள்ளன!! அசுத்தம், கோபம், துர்க்குணம், சண்டை, கசப்பு, பண ஆசை, சுயநலம், பெருமை போன்றவைகளே இந்த பாம்புகளின் பெயர்கள். இந்த பெட்டியின் மேல் பகுதியில் ஒரு திறப்பு உள்ளது. நாம் சோதிக்கப்படுகிற போதெல்லாம் இந்த பாம்புகள் தலையை வெளியே தூக்குகின்றன. மனந்திரும்பாத நாட்களில் இந்த பாம்புகளுக்கு நாம் ஏராளமாக உணவளித்துள்ளோம். இதன் விளைவாக, அவைகள் நன்கு போஷிக்கப்பட்டு, ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் உள்ளன. சில பாம்புகள் மற்றவைகளை விட அதிகமாகப் போஷிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த இச்சைகள் மற்றவைகளை விட நம்மீது அதிக இறுக்கமான பிடியைக் கொண்டுள்ளன. இப்பொழுது கிறிஸ்துவுடனேகூட பாவத்திற்கு மரித்த நமக்குள்ளே இந்த பாம்புகள் இன்னமும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கிறது. அவைகள் அவ்வாறு இருந்தாலும் இந்த பாம்புகள் மீதான நம்முடைய மனப்பான்மை மாறிவிட்டது! நாம் இப்பொழுது திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலாத்தியர் 5:24). பழைய நாட்களைப் போலல்லாமல், இப்போது, ஒரு பாம்பு அந்தப் பெட்டியின் திறப்பிலிருந்து தலையை வெளியே தூக்கும்போது (நாம் சோதிக்கப்படும்போது), நாம் அதை ஒரு கோலால் தலையில் அடிக்கிறோம். அது மீண்டும் அந்தப் பெட்டிக்குள் செல்கிறது. நாம் மறுபடியும் சோதிக்கப்படும்போது, அந்தப் பாம்பு மீண்டும் தலையை வெளியே தூக்குகிறது, நாம் அதை மீண்டும் அடிக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக அது பலவீனமடைந்துகொண்டே இருக்கிறது. அந்தப் பாம்பைப் போஷிப்பதற்குப் பதிலாக அதனை அடித்து ஒவ்வொரு சோதனையிலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், சோதனையின் இழுப்பு பலவீனமடைகிறதை நாம் விரைவில் காண்போம். மாம்சத்தை ஒரு கணத்தில் ‘சுட்டுவிடவோ’ அல்லது ‘தூக்கிலிடவோ’ முடியாது. அதனைச் சிலுவையில் அறையத் தான் முடியும். சிலுவையில் அறையப்படுவது ஒரு மெதுவான மரணம் தான், ஆனால், அது ஒரு நிச்சயமான மரணமாகும். ஆகவே தான், நாம் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுகிறோம் (யாக்கோபு 1:2) - ஏனென்றால் அது அந்தப் பாம்புகளை அடிக்கவும் அதனைப் பலவீனப்படுத்தவும் நமக்கு வாய்ப்பளிக்கிறது. சோதனை இல்லையென்றால் இது சாத்தியமில்லை.

அசுத்த சிந்தனைகளைக் குறித்த விஷயத்தைக் கவனியுங்கள். இந்த பகுதியில் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், சில காலத்துக்குள்ளாகவே அந்த அசுத்த சிந்தனைகளுக்கு மரணம் வருகிறதைக் காண்போம். நம்முடைய மனந்திரும்பாத நாட்களில் இந்த பாம்பை அநேக ஆண்டுகள் போஷித்திருந்தால், இந்த அசுத்த சிந்தனைகளுக்கு மரணம் வருவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் மரணம் கண்டிப்பாக வரும். இதனால் விளையும் பலன் என்னவென்றால், நம்முடைய கனவுகளும்கூட தூய்மையாகிவிடும். அசுத்தமான கனவுகள் மேலும் மேலும் அரிதானதாக மாறிவிடும். இதற்கு மாறாக, அசுத்தமான கனவுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், நம்முடைய சிந்தனை வாழ்க்கையில் மறுபடியும் நாம் உண்மையற்றவர்களாக மாறுகிறோம் என்பதை அது குறிக்கிறது. இது ஒரு நல்ல பரீட்சை. இதன் மூலமாக சிந்தனை-வாழ்க்கையில் நம்முடைய உண்மையை அளவிட முடியும். அசுத்தமான கனவுகள் நம்முடைய ‘மனம் அறியாத’ (unconscious) பாவங்கள். எனவே அவற்றைக் குறித்து நாம் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை (ரோமர் 7:25; 8:1). நாம் ஒளியிலே நடந்தால், இயேசுகிறிஸ்துவின் இரத்தம் தானாகவே அத்தகைய எல்லா பாவங்களிலிருந்தும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் என்று யோவான் 1:7 சொல்கிறது. முழுமையான உண்மை முற்றிலுமான ஜெயத்தைக் கொடுக்கும். ஆனால், பாலியல் பகுதியில் முழுமையான உண்மை என்பது, உதாரணமாக, (எதிர் பாலரின்) ஒரு அழகிய முகத்தை ரசித்தலும் கூடாது. எந்தவொரு பாலியல் சிந்தனைகளும் இணைக்கப்படாமல் இருந்தாலும் அத்தகைய ரசனை இருக்கக் கூடாது. இத்தகைய உண்மைக்குத்தான் நீதிமொழிகள் 6:25 (“உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே”) நம்மை அழைக்கிறது. இந்த பகுதியில் வெகு சிலரே உண்மையுள்ளவர்களாக இருப்பதால் வெகு சிலரே தங்களின் கனவுகளில் தூய்மையை அடைகிறார்கள்.

விழித்திருக்கும் சமயங்களில் தொடர்ச்சியாய் நாம் ‘மனம் அறிந்து’ (consciously) என்ன நினைக்கிறோம் என்பதை வைத்து நம்முடைய ‘ஆழ் மனதின்’ (subconscious) பகுதி பெரிதும் பாதிக்கப்படுகிறது – அது நம்முடைய மனதிற்கு வரும் சோதனைகளால் அல்ல, அந்த சோதனைகளுக்கு நாம் செய்யும் ‘எதிர் வினைகளால்’ (reactions) பாதிக்கப்படுகிறது. நம்முடைய எண்ணங்களிலும் மனப்பான்மைகளிலும் கூட நாம் பாவத்தை வெறுக்கிறோம் என்கிற செய்தியையும், தேவனுடைய முகத்திற்கு முன்பாக நாம் வாழ்கிறோம் என்கிற செய்தியையும் நம்முடைய ‘ஆழ் மனதின்’ பகுதியில் பெற்றால், அது தூய்மைக்கான நம்முடைய வாஞ்சைக்கு இணக்கமாக அமைந்துவிடும் (சங்கீதம் 51:6 காண்க). எனவே முக்கியமான கேள்வி, "என்னுடைய தூய்மையைப் பற்றி சக விசுவாசிகள் என்ன நினைக்கிறார்கள்?" என்பதல்ல, மாறாக "என்னுடைய ஆழ் மனதின் பகுதிக்கு என்ன செய்தி கிடைக்கிறது?" என்பதாகும். உங்கள் கனவுகள் பொதுவாக உங்களுக்குப் பதிலைக் கொடுக்கும். முழுமையான தூய்மையை நாடாதவர்களுக்கு இங்கு நாம் என்ன சொல்கிறோம் என்பதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. அசுத்தமான கனவுகள் தங்களுடைய ‘மனம் அறிந்த’ சிந்தனை-வாழ்க்கையின் உண்மையற்ற தன்மையையே குறிக்கின்றன என்பதை அசுத்தமான கனவுகளை லேசாக எடுத்துக்கொள்பவர்கள் உணருகிறதில்லை. அத்தகைய விசுவாசிகள் நாம் சொல்கிறதைச் மிகமிஞ்சியதாகவும், யதார்த்தமற்றதாகவும் கருதுவார்கள். ஏனெனில் ஆவிக்குரிய காரியங்கள் ஜென்ம சுபாவமான மனுஷனுடைய மனதிற்குப் பைத்தியமாகத் தோன்றும்.

இருப்பினும் நற்செய்தி என்னவென்றால், உங்களுடைய சிந்தனை-வாழ்க்கை எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும், இயேசு நடந்து சென்ற வழியில் நடந்து செல்ல நாடுகிறதில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், சிந்தனை-வாழ்க்கை முற்றிலும் தூய்மையானதாக மாறிவிடும். இது உங்கள் கனவுகளையும் தூய்மைப்படுத்திவிடும் – இதற்கு சில காலம் ஆனாலும் கனவுகளைத் தூய்மைப்படுத்திவிடும்; இதெல்லாம் மனந்திரும்பாத நாட்களில் நீங்கள் எவ்வளவாய் மாம்சத்தைப் போஷித்தீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. ஆனாலும், தீவிரமாக உண்மையாயிருப்பதின் மூலமாக வலிமையான பாம்பையும் மரணத்திற்குள்ளாக்க முடியும்.

யாரெல்லாம் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறார்களோ அவர்களை மட்டுமே தம்மிடம் வரும்படி இயேசு அழைத்தார். உங்களுடைய சொந்த வீழ்ச்சியடைந்த வாழ்க்கையைக் குறித்து நீங்கள் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களாய் இருந்தால்தான், வெற்றி வாழ்க்கைக்காக அவரிடம் வர நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். மற்றவர்கள் தங்களிடத்தில் நடந்து கொள்ளும் விதத்தினால், மற்றவர்களைக் குறித்து வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களால் உலகம் நிறைந்துள்ளது. சில கிறிஸ்தவர்கள் அவர்களுடைய ஸ்தாபனங்களில் தாங்கள் காண்கிற ஒத்த வேஷத்தைக் குறித்தும், உலகத் தன்மையைக் குறித்தும் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறார்கள். ஆனால் இவைகள் வெற்றி வாழ்க்கைக்கான தகுதிகள் அல்ல. யாரெல்லாம் தங்களைக் குறித்து வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களாய் இருக்கிறார்களோ அவர்களை மாத்திரமே தம்மிடம் வரும்படி இயேசு அழைக்கிறார். யாரெல்லாம் வெற்றி வாழ்க்கைக்காகத் தாகமாக இருக்கிறார்களோ அவர்கள் மாத்திரமே கர்த்தரிடம் வர முடியும் (மத்தேயு 11:28; யோவான் 7:37). தங்களுடைய சிந்தனை-வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் தவறி விழும்போது யாரெல்லாம் கதறி அழுகிறார்களோ, தங்களுடைய அந்தரங்க பாவங்களுக்காக யாரெல்லாம் துயரப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய சத்தியத்தை மிகவும் விரைவாகப் புரிந்துகொள்வார்கள்; ஆனால் மற்றவர்கள் இந்த உபதேசத்தை மார்க்கபேதம் என்று கருதுவார்கள் – ஏனென்றால் ஆவிக்குரிய சத்தியங்கள் ஜென்மசுபாவமான மனுஷனால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. மாறாக, தங்களுடைய அந்தரங்க பாவங்களைக் குறித்து துயரப்படுகிறவர்களுக்குத் தேவன் ஆவிக்குரிய சத்தியங்களை இருதயத்தில் வெளிப்பாடாகத் தருகிறார். கர்த்தருடைய இரகசியம் (ஒரு தேவ பக்தியுள்ள வாழ்க்கையின் இரகசியமும் உட்பட) அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது (சங்கீதம் 25:14). அது யாரெல்லாம் தங்களுடைய சொந்த வீழ்ச்சியடைந்த வாழ்க்கையைக் குறித்து வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறார்களோ அவர்களுக்கு இயேசு வாக்குப்பண்ணின இளைப்பாறுதல், பாவத்தின்மீது முற்றிலும் ஜெயங்கொள்கிற இளைப்பாறுதலாகும்.