WFTW Body: 

ஒவ்வொரு இடத்திலும் தமக்காக நிற்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுக்கிற ஒரு மனிதனாவது உண்டா என்று தேவன் எப்போதுமே தேடிக்கொண்டிருக்கிறார் (எசேக்கியேல் 22:30 -இல் வாசிப்பதைப் போல). ஒரு காலத்தில் அவர் ஏனோக்கைக் கண்டார். பிற்பாடு ஒரு நோவா, ஒரு ஆபிரகாம், பிறகு எலியா, யோவான் ஸ்நானகன் ஆகியோரையும் கண்டார்.

பாபிலோனில், அவர் ஒரு தானியேலைக் கண்டார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்று பிற்காலத்தில் பெயர் மாற்றப்பட்ட அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தானியேலின் நண்பர்களைப் பற்றி வேதம் தானியேல் 1:7-ல் குறிப்பிட்டாலும்கூட, “தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானித்துக் கொண்டது” தானியேல் தான் என்று தானியேல் 1:8-ல் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பின்பு தான் மற்ற மூன்று பேருக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் தைரியம் வந்தது. கர்த்தருக்காக தாங்களாகவே சொந்தமாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கமுடியாத அநேக அனனியாக்கள், மீஷாவேல்கள், அசரியாக்கள் இந்த உலகத்தின் பல பாகங்களில் உள்ள விசுவாசிகள் மத்தியில் இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் ஒரு தானியேல் எழும்பி, கர்த்தருக்கென்று நிற்கத் துணிந்துவிட்டால், இவர்களும் அப்படியே செய்ய முன்வருவார்கள். ஆகவே நீங்கள் எங்கிருந்தாலும் கர்த்தருக்கென்று ஒரு தானியேலாக இருப்பதற்குத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இதற்கொப்பாகவே, ஆனால் முற்றிலும் எதிரிடையாகவும், தீமையான ஒரு காரியத்தையும் நாம் பார்க்கிறோம். ஆரம்பத்திலே, பரலோகத்திலே தேவதூதர்களில் அநேகர் ஏதோ சில காரியங்கள் நிமித்தம் அதிருப்தி உள்ளவர்களாய் உள்ளுக்குள்ளே குமிறிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் மத்தியில் ஒரு லூசிபர் எழும்பும் வரையிலும் அவர்கள் எந்த ஒரு கலகத்தையும் ஆரம்பிக்க தைரியம் கொள்ளவில்லை. தூதர்களின் தலைவனான லூசிபர் தன்னுடைய முரட்டாட்டத்தை வெளிப்படுத்திய உடனேயே, மூன்றில் ஒருபங்கு தூதர்கள் அவனுடன் இணைந்து கொண்டார்கள் (வெளி 12:4). அந்த கோடிக்கணக்கான தூதர்கள் எல்லோரும் லூசிபரோடு சேர்த்து தேவனால் கீழே தள்ளப்பட்டார்கள். இன்று ஜனங்களைப் பிடித்து ஆட்கொள்ளுகிற பிசாசுகள் அவைகளே. "பெருமையைக் குறித்து களிகூருகிறவர்களையும், அகங்காரிகளையும் அகற்றி எல்லா இடத்திலும் சிறுமையும், எளிமையுமான ஜனங்களை மீதியாக வைப்பதை" தேவன் ஒரு நித்திய கொள்கையாகவே கொண்டிருக்கிறார் (செப்பனியா 3:11,12). இவ்வாறாகத்தான், நெடுங்காலத்திற்கு முன்னர் அவர் வானங்களை சுத்திகரித்தார். இன்றைக்கும் அவர் இதே விதமாகவே சபையையையும் சுத்திகரிக்கிறார்.

இவ்வுலகிலே ஒரே சமயத்திலே, இருவேறு இயக்கங்கள் இயங்கி வருகின்றன. தானியேல்கள், தேவனுக்கென்று நிற்கத்தக்கதான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்படி, இருவரையும் மூவரையும் கூட்டிச் சேர்த்துக்கொண்டு வருகிறார்கள். லூசிபர்கள், அசுத்தத்திற்கும், அதிகாரங்களுக்கு எதிரான கலகங்களுக்கும், தேவனுடைய கற்பனைகளுக்கு எதிரான கீழ்படியாமைக்கும் நேராக நடத்தும்படிக்கு, கோடிக்கணக்கான ஜனங்களைச் சேர்த்துகொண்டு வருகிறார்கள். ஆனால், இறுதி வெற்றியானது, தானியல்களோடு சேர்ந்திருக்கும் இருவர் மூவருக்குத் தான் என்பதில் சந்தேகமேயில்லை; ஏனெனில், ஒரேயொரு மனிதன் மட்டும் தேவனோடு இருந்தாலும், அவன்தான் எப்பொழுதுமே பெரும்பான்மையாக இருப்பான். ஒரு வட்டாரத்திலே தேவனுக்கென்று ஒரு தானியேல் கிடைக்கவில்லையானால், பிசாசானவன் தன்னுடைய வழியிலே, ஜனங்களை நடத்துவதற்கு ஏதாவது ஒரு நபரைப் பெற்றிடுவான். ஆதலால், நீங்கள் இருக்கும் இடத்திலே தேவனுக்காக, 'அவருடைய மிகச் சிறிய கற்பனைக்கும் கூட கீழ்ப்படியாமலிருந்து என்னைத் தீட்டுப்படுத்திகொள்ள கூடாது' என்று உங்களது இருதயத்தில் தீர்மானிக்கத் தொடங்குகிற, சிங்கக்கெபியிலே வீசப்பட்டாலும் தேவனுக்கென்று நிற்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுக்கிற, ஒரு தானியேலாக நீங்கள் மாறவேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

கர்த்தர் தாமே உங்களுக்குக் கிருபையையும், பெலனையும், ஞானத்தையும் தந்தருளவேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். சிறிய மாற்றம் செய்யப்பட்ட, ஒருவேளை நீங்கள் கண்டிருக்ககூடிய, ஒரு ஜெபம் இதோ: “கர்த்தாவே நான் மறுக்கவேண்டும் என்று நீர் விரும்பும் காரியங்களுக்கு மறுப்பு சொல்ல தைரியம் தாரும்; நான் செய்யவேண்டுமென்று நீர் விரும்பும் காரியங்களைச் செய்ய பெலன் தாரும்; அவ்விரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை அறியத் தேவையான ஞானத்தைத் தாரும்.