1யோவான் 4:2 -ல், யோவான் சொல்ல விரும்பும் முக்கியக் கருப்பொருட்களில் ஒன்றான, “மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது” என்பதை வாசிக்கிறோம். 1யோவானின் முப்பெரும் முக்கியக் கருப்பொருட்களாவன: தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிதல், ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருவது, மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை அறிக்கைபண்ணுவது ஆகியனவாகும்.
யோவான் 65 ஆண்டுகளாக சபையின் வளர்ச்சியைக் கவனித்து வந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்க. அப்படிக் கவனித்த பிறகு, நீங்கள் தேவன் விரும்புகிறபிரகாரமாக சபையைக் கட்ட வேண்டும் என்று விரும்பினால், மூன்று காரியங்களை வலியுறுத்த வேண்டும் என்று சொல்கின்றார். அந்த மூன்று காரியங்கள்: தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிதல், ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருவது, கிறிஸ்துவின் மனிதத்தன்மையை அறிக்கை செய்வது என்பனவாகும். இம்மூன்று காரியங்களும் உங்களுடைய சபையிலே வலியுறுத்திச் சொல்லப்படுகின்றனவா? இல்லையென்றால், அது கிறிஸ்துவின் சரீரமாகக் கட்டப்படாது.
1யோவான் 4:4 -ல், “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” என்று சொல்லி, யோவான் விசுவாசிகளைத் திடப்படுத்துகிறார். அதனால்தான் நாம் எந்நேரமும் வெற்றி சிறக்கிறவர்களாகவும், பிசாசைக் குறித்தோ அல்லது வேறு எவரைக் குறித்தோ பயப்படுவதற்கு எவ்விதக் காரணமும் இல்லாதவர்களுமாய் இருக்க முடியும்.
அதன் பிறகு யோவான், ஒருவரிலொருவர் அன்புகூருவதைப் பற்றிப் பேச வருகிறார். அதுதான் தேவனை அறிந்திருப்பதற்கான பிரதான அடையாளம் என்று குறிப்பிடுகிறார் (1யோவான் 4:7,8). யோவான் தன் சுவிசேஷத்திலும் கூறியுள்ளதைப் போலவே மீண்டுமாய், 1யோவான் 4:12 -லும் சொல்லுகிறார்: “தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை”. வேதத்தில் இந்த அறிக்கையானது இரண்டு தடவைகள் மாத்திரமே சொல்லப்பட்டுள்ளன. அவை யோவான் 1:18 -லும் மற்றும் இந்த இடத்திலும் சொல்லப்பட்டுள்ளன. நாம் இவ்விரு பகுதிகளையும் ஒன்றிணைக்கும் போது, ஒரு மாபெரும் சத்தியத்தைக் கற்றுக் கொள்கின்றோம். “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” என யோவான் 1:18 கூறுகின்றது. இங்கு, 1யோவான் 4:12 -ல், “இயேசு இப்பொழுது பரலோகத்திற்குச் சென்றுவிட்டார்; இந்த உலகமானது, நாம் ஒருவரிலொருவர் அன்பாய் இருக்கும்போது, தேவன் எப்படி இருக்கிறார் என்பதை விசுவாசிகளாகிய நம்மில் காண முடியும்” என்று சொல்லப்படுகின்றது. இந்த உலகமானது இன்னும் தேவனைக் காணவில்லை. தேவன் எப்படி இருக்கிறார் என்பதை ஜனங்கள் கண்டு கொள்ளும்படிக்கு, அவர் தம்முடைய சபையை இங்கு வைத்திருக்கிறார். இயேசுவானவர் இவ்வுலகில் இருந்த போது, அவரே கிறிஸ்துவின் சரீரமாய் இருந்தார். ஜனங்கள் தேவனை இயேசுவில் கண்டனர். இப்போது நாம் (சபை) கிறிஸ்துவின் சரீரமாய் இருக்கிறோம். ஜனங்கள் நம்மிலே தேவனைக் காண வேண்டும். அதினிமித்தமே நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும். நாம் தேவனுடைய ஜீவனையும், அவரது ஐக்கியத்தையும், ஒருவரோடொருவர் ஐக்கியத்தையும் நாடுகிறவர்களாய் இருக்கும் போது, தேவன் ஒளியாகவும், அன்பாகவும் இருக்கிறார் என்பதை நம்முடைய வாழ்க்கையின் மூலமாக வெளிப்படுத்தி விடுவோம்.
இயேசு இவ்வுலகில் இருந்த போது, “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9) என்று குறிப்பிட்டார். இன்று கிறிஸ்துவின் சரீரமாகிய நாம், “நீங்கள் எங்களைக் காணும்போது, இயேசு எப்படி இருப்பார் என்று ஒரு சிறிதளவு காண்கிறீர்கள்; பரலோகம் எப்படியிருக்கும் என்று ஒரு சிறிதளவு காண்கிறீர்கள். நீங்கள் என்னுடைய வீட்டில் தங்கினால், பரலோகம் எப்படி இருக்கும் என்று சிறிதளவு பார்ப்பீர்கள். நீங்கள் என்னுடன் ஐக்கியப்பட்டால், இயேசு எப்படி இருப்பார் என்றும் பரலோகம் எப்படி இருக்கும் என்றும் ஒரு சிறிதளவேனும் ருசிக்க முடியும்” என்று சொல்லத்தக்கவர்களாக இருக்க வேண்டும். அதுவே நம்முடைய சாட்சியாகவும் இருக்க வேண்டும். இது நம்முடைய சாட்சியாக இல்லாத பட்சத்தில், தேவனை நம் வாழ்வினில் தோல்வி அடையச் செய்துவிட்டோம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். நாம் பிரசங்கிக்கலாம்; சுவிசேஷ ஊழியம் செய்யலாம்; வேதத்தைப் போதிக்கலாம். ஆனால் நம்மால் தேவனுடைய ஜீவனையும், அன்பையும் வெளிப்படுத்த இயலவில்லையானால், நம்முடைய சாட்சி ஒரு தோல்விதான். ஏனெனில் நம்மைச் சுற்றியுள்ள ஜனங்கள் தேவன் எப்படிப்பட்டவர் என்பதை இன்னும் நம்மில் காணவில்லை. இதுவே இன்றைய கிறிஸ்தவத்தின் துயரமாகும்.
யோவான் தொடர்ந்து, 1யோவான் 4:17-ல், “இயேசு இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்” என்கின்றார். இது ஒரு வியத்தகு வசனமாகும். நாம் இயேசுவைப் போலவே இவ்வுலகில் இருக்கும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். இன்னுமாக, இயேசு எவ்வண்ணமாய் சாத்தான்மீது அதிகாரம் உடையவராய் இருந்தாரோ, அவ்வண்ணமே நாமும் அதிகாரம் பெற்றிருக்க முடியும் என்றும் இதற்கு அர்த்தம் கொள்ளலாம். இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த முறையில்தான் நாம் நமது எதிர்காலத்தை கண்ணியத்துடனும், தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள முடியும். “இயேசு இருக்கிற பிரகாரமாக நீங்களும் இவ்வுலகத்தில் இருக்கிறீர்கள்” என்னும் வார்த்தையை முழு இருதயங்கொண்ட ஒவ்வொரு தேவப் பிள்ளைக்கும் முன்பாக வைக்க நான் விழைகின்றேன். அந்த அதிகாரத்துடன் வாழுங்கள். ஒருபோதும் பயத்துடன் வாழ வேண்டாம். தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்வோமானால், நமக்கு எவ்வித பயமும் இருக்காது (1யோவான் 4:18). தேவன் நம்மை ஏதாவதொரு காரியத்திற்காக தண்டித்துவிடுவார் என்ற எண்ணம் வரும்போதுதான், நமக்குள்ளே பயம் வரும். ஆனால் தேவன் நம்மீது அளப்பரிய அன்பைப் பொழிகிறார் என்பதை அறிந்து கொள்ளும்போது, பயத்திற்கு இடம் இல்லாமற் போய்விடும். ஆண்டவர் நம்மிடத்தில் முந்தி அன்புகூர்ந்தபடியால், நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம் (1யோவான் 4:19). இயேசு நம்மீது அன்புகூர்ந்ததை எவ்வளவுக்கதிகமாக அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்கதிகமாக அவர்மீது நமக்கிருக்கும் அன்பானது தானாகவே வளரும். பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனை வெறுக்கிற எவனும், தான் தேவனிடத்தில் அன்புகூருவதாகச் சொல்லக்கூடாது. அத்தகைய நபர் ஒரு விசுவாசியாய் இராமல், பொய்யனாய் இருக்கிறான் (1யோவான் 4:20). இங்கே சகோதரன் எனக் குறிப்பிடப்படுவது நீங்கள் காணக் கூடியவர்களே (1யோவான் 4:20). தொலை தூர நாடுகளில், நீங்கள் ஒருபோதும் காணாத விசுவாசிகளை அன்பு கூறுகிறேன் என்பது மிகவும் எளிது. ஆனால் நீங்கள் தினந்தோறும் சந்திக்கிற சகோதர சகோதிரிகளே நீங்கள் தேவனை நேசிக்கிறவர்தானா? இல்லையா? என்று பரிசோதிக்கிறவர்களாய் இருக்கிறார்கள்.