WFTW Body: 

ஆதியாகமம் 22-ஆம் அதிகாரம், 12-ஆம் வசனத்திலே, “நீ எனக்குப் பயப்படுகிறவன் என்று இப்போது அறிந்திருக்கிறேன்”

அது ஆபிரகாமின் அர்ப்பணிப்பையும், அத்துடன் ஈசாக்கின் அர்ப்பணிப்பையும் காண்பிக்கின்றது. 25 வயது வாலிபனாய் இருந்த ஈசாக்கு, 125 வயது வயோதிபனாய் இருந்த ஆபிரகாமைவிட பலசாலியாக இருந்தான். ஈசாக்குத் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்திராத பட்சத்தில், ஆபிரகாமால் ஈசாக்கைப் பலிபீடத்தின் மேல் கட்டியிருந்திருக்க முடியாது. தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை எப்படியாய்க் தன் மகனுக்கு ஆபிரகாம் கற்றுக் கொடுத்திருந்திருப்பார் என்பதை இது காட்டுகிறது. ஒரு மனுஷனால் தன்னுடைய பிள்ளைகளிடத்தில், “இப்பொழுது நான் உன்னை தேவனுக்குப் பலியிடப் போகிறேன். நீ இங்கே வந்து படு” என்று சொல்ல, அவர்களும் அவ்வண்ணமே வந்து படுத்துக் கொண்டு, “சரி, அப்பா, நீங்கள் மேற்கொண்டு செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று கீழ்ப்படியுமளவுக்குத் தன்னுடைய பிள்ளைகளை வளர்க்கக் கூடுமானால், அவன் பாக்கியவானாய் இருப்பான். அத்தகைய தகப்பன் உண்மையிலேயே ஒரு பக்தியுள்ள மனிதன்தான் என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல இயலும்.

இச்செயலை தேவனைத் “தொழுதுகொள்ளுதல்” என ஆபிரகாம் அழைத்தார் (ஆதி 22:5). இங்குதான் “தொழுதுகொள்ளுதல்” என்னும் வார்த்தையானது, வேதவாக்கியங்களில் முதன் முறையாக இடம் பெறுகின்றது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுதல் என்பதும் இதுதான். இன்றும் பிதாவானவர் தம்மை உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்களைத் தேடுகிறார்.

ஆபிரகாம் தம்மீது வைத்துள்ள பக்தியைக் கண்ட தேவன், “நீ எனக்குப் பயப்படுகிறவன் என்று இப்போது அறிந்திருக்கிறேன்”

கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் (ஆதி 22:14) என்னும் பொருள்படும்படியாக, ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே” என்று பெயர் சூட்டினார். நம்முடைய வாழ்க்கையில், எந்த நேரத்தில் பிரச்சனை வந்தாலும், நாம் நினைவுகூரத்தக்கதான வார்த்தையாக இது உள்ளது. ஏனெனில், “தேவன் நம்முடைய தேவைகளை நிறைவாக்குவார்” (பிலி 4:19) என்ற வாக்குத்தத்தம் நமக்கு உண்டு.

2000 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாளிலே, தம்முடைய குமாரனை பலியிடப் போகும் தேவனுடைய இருதயத்தை, ஆபிரகாம் இந்த மோரியா மலையின் மீது மங்கலாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். “ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான்” (யோவான் 8:56) என்று இயேசு இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். தேவன் ஆபிரகாமின் இந்த மனோபாவத்தைக் கண்டு மிகவும் பூரித்துப் போனார். அதனால் 1000 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த இடத்தில்தான் தேவாலயம் கட்டப்பட வேண்டுமென கட்டளையிட்டார் (2நாளா 3:1). ஆம், இன்றும்கூட, யாரெல்லாம் ஆபிரகாமைப் போலவே தேவனுக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிகிறார்களோ, அவர்களைக் கொண்டுதான் தேவனுடைய வீடு கட்டப்படுகிறது.