WFTW Body: 

"நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்..." (மத்தேயு 6:5). எப்படி ஜெபிக்க வேண்டும் என்று நமக்குக் கற்பிப்பதற்கு முன்பு, இயேசு ஜெபத்தைப் பற்றி ஒரு எச்சரிக்கையாகப் பல காரியங்களை நமக்குக் கூறுகிறார்.

முதலாவதாக, மாயக்காரர்கள் தாங்கள் ஜெபிப்பதை மற்றவர்கள் காண வேண்டுமென்று விரும்புகிறார்கள். “அவர்கள் மனுஷரால் காணப்பட வேண்டும் என்பதற்காக, ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ணுகிறார்கள். அவர்கள் தங்கள் பலனை முழுமையாக அடைந்து தீர்ந்துவிட்டார்கள்.” இங்குள்ள நியமம் என்னவெனில், நீங்கள் பொது இடங்களில் ஜெபிக்கும்போது, ​​மற்றவர்கள் உங்கள் ஜெபத்தைப் பாராட்ட வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக இருந்தால், அது மனிதர்களிடமிருந்து கனத்தைத் தேடுவதாகும். பொது இடங்களில் ஜெபிக்கத் தொடங்கும் ஏறக்குறைய எல்லாரும், தாங்கள் ஜெபிக்கும்போது மனிதர்களிடமிருந்து கனத்தைத் தேடுகிறோம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள், நீங்கள் தனிமையில் ஜெபிக்கும் அதே விதத்திலே பொதுவிலும் ஜெபிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் படுக்கையருகே தனியாக முழங்காலிட்டு ஜெபிக்கும்போது, ​​எப்படி ஜெபிக்கிறீர்கள்? நீங்கள் தேவனிடம் என்ன சொல்கிறீர்கள்? பொதுவில் ஜெபிக்கும்போதும் நீங்கள் சொல்வது அதுதானா? அல்லது உங்கள் வார்த்தைகளை அலங்காரமாக மாற்றி, உங்கள் குரலில் ஒருவித நடுக்கத்தைக் கொண்டுவந்து, தாங்கள் மிகவும் உண்மையுள்ளவர் அல்லது மிகவும் உணர்வோடு ஜெபிக்கிறவர் என்று மக்களை நம்ப வைப்பதற்காக, பொதுவில் ஜெபிக்கும்போது அநேகர் செய்வது போல, ஒரு நடிகரைப் போல நடந்துகொள்கிறீர்களா?

இவை அனைத்தும் மாய்மாலமே. தேவன் இதை வெறுக்கிறார். பொதுவில் ஜெபிக்கும் இந்த வகையான ஜெபம் தேவனுக்கு முன்பாக அருவருப்பானது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். தேவன் இதை அருவருக்கிறார், அப்படிப்பட்ட ஜெபத்தை தேவன் கவனிக்கக்கூட மாட்டார். சபைகளில் பொதுவில் செய்யப்படும் பெரும்பாலான ஜெபங்களும் இந்தக் வகையில்தான் அடங்குகின்றன; அங்கே ஜனங்கள் மற்றவர்களுக்கு முன்பாகத் தாங்கள் எவ்வளவு நன்றாக ஜெபிக்க முடியும் என்பதைக் காண்பிப்பதற்காக ஜெபிக்கிறார்கள். இது இயேசுவின் போதனைக்கு முற்றிலும் எதிரானது. இயேசு கற்பித்த அனைத்தும் அவர்களுக்குக் போதிக்கப்படாததாலேயே ஜனங்கள் இதைச் செய்கிறார்கள்.

இதிலிருந்து நாம் நம்மை எப்படிச் சுத்திகரித்துக்கொள்வது? நாம் ஒவ்வொரு முறை ஜெபிக்கும்போதும் நம்மையே நியாயந்தீர்க்க வேண்டும். ஒரு கிறிஸ்தவனாக நான் பொதுவில் முதன்முதலில் ஜெபித்ததை நினைவுகூருகிறேன். நான் ஜெபித்தபோது ஜனங்களிடமிருந்து கனத்தைத் தேடினேன் என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் வீட்டிற்குச் சென்று என்னை நியாயந்தீர்த்தபோது, ​​“ஆண்டவரே, நான் ஜெபிக்க வேண்டிய விதம் இதுவல்ல” என்று சொன்னேன். அடுத்த முறை நான் எழுந்து பொதுவில் ஜெபித்தபோது, ​​அப்போதும் நான் கனத்தைத் தேடிக்கொண்டிருந்தேன், அதனால் நான் வீட்டிற்குச் சென்று மீண்டும் என்னை நியாயந்தீர்த்தேன். பொது இடங்களில் ஜெபிக்கும்போது மனிதர்களிடமிருந்து கனத்தைத் தேடும் இந்த ஆசையிலிருந்து என்னைச் சுத்திகரித்துக்கொள்ள எனக்குப் பல ஆண்டுகள் ஆனது. ஆனால் இறுதியாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வவல்ல தேவனாகிய என் பரம தகப்பனிடம் மட்டுமே ஜெபிக்க நான் கற்றுக்கொண்டேன். நீங்கள் அந்த நிலையை அடைந்துவிட்டீர்களா? அப்படியில்லையெனில், மனுஷர்களின் கனத்தைத் தேடுவதிலிருந்து விடுபடும்படியாக, உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படும்படி நான் உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு”, என்று இயேசு கூறினார். இதை நாம் பொது இடங்களில் எப்படிச் செய்வது? மூடக்கூடிய ஒரு கதவு நம் மனதிற்குள் இருந்தால், நாம் பொது இடத்திலும் “கதவைப் பூட்டி” ஜெபிக்கலாம். என் மனதில் ஒரு கதவு இருக்கிறது. ஆகவே, நான் 100 பேருக்கு மத்தியில் நின்றுகொண்டிருக்கும்போது கூட, நான் அந்தக் கதவை மூடிவிட்டு, “நான் இப்போது சர்வவல்லமையுள்ள தேவனாகிய என் பிதாவுக்கு முன்பாகத் தனியாக நிற்கிறேன்” என்று சொல்ல முடியும். என்னைச் சுற்றிலும் ஜனங்கள் இருக்கலாம், ஆனால் அவர்களைப் பற்றி நான் சிந்திக்க தேவையில்லை. நாம் ஜெபிக்கும்போது கண்களை மூடிக்கொள்வதற்கு அதுவும் ஒரு காரணமாகும். ஜெபிக்கும்போது கண்களை மூட வேண்டும் என்று எந்தக் கற்பனையும் இல்லை. நீங்கள் கண்களைத் திறந்துகூட ஜெபிக்கலாம், ஏனெனில் இயேசுவும் கூட சில சமயங்களில் அப்படிச் செய்திருக்கிறார்.

நம்மைச் சுற்றியிருப்பவைகளின் மூலம் நம் கவனம் சிதறாமல் இருப்பதற்காகவும், நம்மைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்து கனத்தைத் தேடாமல் இருப்பதற்காகவுமே நாம் கண்களை மூடுகிறோம். ஒரு விதத்தில், நாம் கண்களை மூடும்போது ஜனங்களை நாம் இருக்கும் இடத்தை விட்டு வெளியே நிறுத்திவிடுகிறோம். நாம் நம்முடைய மனக்கதவையும் மூடி, “பிதாவே, நான் இப்போது கதவுகளை மூடிவிட்டேன், உம்மிடம் ஜெபிக்கிறேன்” என்று சொல்ல வேண்டும். இதுவே ஜெபிப்பதற்கான வழி, இதை நாம் பொது இடத்திலும் செய்யலாம். நாம் அந்தரங்கத்தில் நம் பிதாவிடம் ஜெபிக்கிறோம், அந்தரங்கத்தில் பார்க்கிற நம் பிதா நமக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார். ஜனங்களுடைய கனத்தைத் தேடாதவர்களாய், நீங்கள் உங்கள் பிதாவாகிய தேவனிடம் ஜெபிப்பீர்களானால், அந்த ஜெபத்திற்குப் பிதா பதிலளிப்பார் என்பதில் நீங்கள் முற்றிலும் நிச்சயம் உடையவர்களாக இருக்கலாம்.

மத்தேயு 6:7-ல், எப்படி ஜெபிக்கக் கூடாது என்பது குறித்து இயேசு நமக்கு மேலும் ஆலோசனை கூறுகிறார்: “அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.” அஞ்ஞானிகள் செய்யும் தவறுகளில் ஒன்று, வீண் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது. சில மதங்களில் ஏதேனும் சில சுலோகங்களை மீண்டும் மீண்டும் கோஷமிடும் பழக்கம் உண்டு. அவர்கள் சில மதம் சார்ந்த சுலோகங்களை திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள், அது அர்த்தமற்றதாகிவிடுகிறது.

சில ஆவிக்குரிய வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அவைகளைத் திரும்பத் திரும்பச் சொல்ல முடியும். நாமும் கூட, “அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா” என்று சொல்ல முடியும். அது சற்று காலத்திற்குப் பிறகு முற்றிலும் அர்த்தமற்றதாகிவிடுகிறது. அது ஒரு சடங்காச்சாரமாக மாறிவிடுகிறது. “கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” போன்ற சொற்றொடர்களுக்கும் இது பொருந்தும். இயேசு, “வீண் வார்த்தைகளினால் அலப்பாதேயுங்கள்” என்றார். நீங்கள் புதிய ஏற்பாட்டைப் படித்தால், அல்லேலூயா என்ற வார்த்தை வெளிப்படுத்தின விசேஷம் 19-ஆம் அதிகாரத்தில் மட்டுமே வருகிறது என்பதைக் காண்பீர்கள். அந்த அதிகாரத்தில் மீண்டும் ஒருமுறை வரும்போது, “இதினிமித்தம் அல்லேலூயா” என்று சொல்லப்பட்டிருக்கிறது, பிறகு மீண்டும் மற்றொரு முறை, “இதினிமித்தம் அல்லேலூயா” என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் கர்த்தரைப் துதிப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும், எனவே நாம் அர்த்தமில்லாமல் “அல்லேலூயா” என்று சொல்லக்கூடாது. நாம் எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும், ஆனால் அது, மீண்டும் மீண்டும் சொல்லும் அர்த்தமற்ற சொல்லாக இருந்தால், அது மிகவும் மதியீனமானதாக இருக்கும், மேலும் அது தேவனுக்கு முன்பாக எந்தப் பயனுமற்றதாகிவிடும். அது கர்த்தருடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துவதாகவும் கூட இருக்கலாம், ஏனென்றால் அல்லேலூயா என்ற வார்த்தையின் கடைசிப் பகுதியான 'யா' என்பது யெகோவா என்பதன் சுருக்கமாகும். யூத மக்கள் கர்த்தருடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, அந்தப் பெயரை உச்சரிக்கவே மிகவும் பயந்தார்கள். அநேக கிறிஸ்தவர்கள் அர்த்தமில்லாமல் “அல்லேலூயா” என்று சொல்லும்போது, ​​கர்த்தருடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறார்கள் என்று நான் நம்புகிறேன். நான் கர்த்தரைத் துதிக்கும்போது அடிக்கடி அந்த வார்த்தையைச் சொல்கிறேன், ஆனால் ஒவ்வொரு முறையும் அதை அர்த்தத்துடன் சொல்லவே நான் முயல்கிறேன். அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு நான் எதிரானவன் அல்ல, தேவனும் எதிரானவர் அல்ல, ஆனால் அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்; மீண்டும் மீண்டும் சொல்லும் அர்த்தமற்ற செயலாக இருக்கக்கூடாது.

இதுபோன்ற ஒரு எளிய கற்பனையைக் கூட கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஜாக்கிரதையாக எடுத்துக்கொள்வதில்லை என்பதைப் பார்க்கிறீர்களா? கிறிஸ்தவர் அல்லாதவர்கள்தான் ஒரு மந்திரத்தைப் போல அர்த்தமில்லாமல் எதையாவது மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் என்று இயேசு சொன்னார், அது நம் வாழ்வில் உண்மையாக இருக்கக்கூடாது. நாம் தேவனைப் பயபக்தியுடன் அணுகி, நாம் சொல்வதை உணர்ந்து சொல்ல வேண்டும். ஒரு ராஜாவுக்கோ, அல்லது ஜனாதிபதி, அல்லது இந்தியப் பிரதமருக்கு முன்பாகச் சென்று, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கூடத் தெரியாமல், எதையாவது மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. எனவே, நாம் தேவனிடம் இன்னும் அதிக பயபக்தியுடன் இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்லும் அர்த்தமற்ற செயலைத் தவிர்க்க வேண்டும்.

இயேசு மேலும், “அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று எண்ணாதீர்கள்” என்றும் கூறுகிறார். ஜெபத்தில் அநேகர் செய்யும் மற்றொரு தவறு இதுதான். அவர்கள் நீண்ட நேரம் ஜெபித்தால், தேவன் நிச்சயமாகத் தங்கள் ஜெபங்களைக் கேட்பார் என்று எண்ணுகிறார்கள். உதாரணமாக, “நான் 3 மணி நேரம் ஜெபித்தேன், அதனால் நிச்சயமாக தேவன் என் ஜெபத்தைக் கேட்பார்” என்று எண்ணுகிறார்கள். இது முற்றிலும் முட்டாள்தனமானது. கிறிஸ்தவரல்லாதவர்கள் தாங்கள் நீண்ட நேரம் ஜெபித்தால், தேவன் நிச்சயமாகத் தங்கள் வேண்டுதலைக் கேட்பார் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

கர்மேல் மலையில், பாகாலின் தீர்க்கதரிசிகள் பல மணி நேரம் - ஒருவேளை ஆறு மணி நேரம் அல்லது அதற்கு மேல் - ஜெபித்தார்கள், ஆனால் எதுவும் நடக்கவில்லை. எலியா எழுந்து அரை நிமிடம் ஜெபித்தார், உடனே அக்கினி இறங்கியது. ஒரு ஜெபத்தின் நீளம் காரியமல்ல, நீண்டநேர ஜெபம்தான் தேவன் ஜெபத்தைக் கேட்பதற்குக் காரணம் என்று நினைப்பது தவறானதாகும். இதை நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

இரவு முழுவதும் ஜெபித்தால், தங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படிக் கூறியது யார்? ஜெபத்திற்குப் பதிலைக் கொண்டுவருவது விசுவாசமும், பாவத்திலிருந்து விடுபட்ட இருதயமும்தான். இவைதான் மிக முக்கியமானவை. “என் இருதயத்தில் நான் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், கர்த்தர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்” என்று சங்கீதம் 66:18 கூறுகிறது.

நீங்கள் இரவு முழுவதும் ஜெபித்தாலும் பரவாயில்லை, உங்கள் ஜெபம் எவ்வளவு அற்புதமாக ஒலித்தாலும் பரவாயில்லை. சரி செய்யப்படாத பாவம் இருந்தால், உங்கள் இருதயத்தில் அறிக்கை செய்யப்படாத பாவம் இருந்தால், உங்களுக்கும் உங்கள் சகோதரனுக்கும் இடையேயான உறவில் விரிசல்கள் இருந்தால், நீங்கள் ஒருவரை மனம்புண்படுத்திவிட்டு வந்து தேவனிடம் ஜெபித்தால், தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்கவே மாட்டார். போய் உங்கள் சகோதரனுடன் அந்தக் காரியத்தைக் குறித்து ஒப்புரவாகுங்கள். உங்களுக்கும் தேவனுக்கும் இடையில் அல்லது உங்களுக்கும் உங்கள் சகோதரனுக்கும் இடையில், அறிக்கை செய்யப்படாத மற்றும் சரி செய்யப்படாத பாவம் இருந்தால், நீங்கள் ஒரு நிமிடம் ஜெபித்தாலும் சரி, அல்லது பத்து மணி நேரம் ஜெபித்தாலும் சரி, உங்கள் நேரத்தைத்தான் வீணடிக்கிறீர்கள் என்பது நிச்சயம்.