எசேக்கியேல் 36:25-37 -ல் உள்ள வசனங்கள், புது உடன்படிக்கை வாழ்வின் ஓர் அழகான தீர்க்கதரிசனம். தேவன் விரும்புகிற கிறிஸ்தவ வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதைக் குறித்து இங்கே விவரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது எல்லா விக்கிரகங்களையும் நம்முடைய இருதயத்திலிருந்து நீக்கி, முற்றிலுமாக நம்மை சுத்திகரித்து, பிறகு கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு சதையான இருதயத்தைக் கொடுத்து, நம்முடைய உள்ளத்திலே அவருடைய பரிசுத்த ஆவியை வைத்து, அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும் செய்து, எல்லா அசுத்தத்திலிருந்தும் நம்மை இரட்சிப்பதாகக் கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். (எசேக்கியேல் 36:25-29). ஆனால் நாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணி, அதை நமக்கு செய்யும்படி கேட்டுக்கொண்டால் மாத்திரமே இவைகளெல்லாம் நமக்கு நடக்கும் (எசேக்கியேல் 36:37). இப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் கேட்கவில்லையென்றால் அது நமக்கு கிடைக்காது. இப்படிப்பட்ட மகிமையான வாழ்க்கைக்குள் நாம் வரும்போது, நம்முடைய கடந்தகால வாழ்வை நினைத்து "நம்மை நாமே அரோசிப்போம்" (எசேக்கியேல் 36:31). இதுவே ஆவியினால் நிறைந்த மனிதனுடைய ஒரு பிரதான அடையாளமாயிருக்கும். அவன் தன்னுடைய மாம்சத்தில் காண்கிற எல்லா பாவத்தையும் அருவருத்து "நிர்பந்தமான மனிதன் நான், பாவிகளில் பிரதான பாவி நான்" (ரோமர் 7:24; 1தீமோத்தேயு 1:15) என்று கதறுவான். ஆவியினால் நிறைந்த ஒரு மனிதன், எந்தவொரு பாவத்தையும் முதலாவது தன்னுடைய மாம்சத்தில் கண்டு அதைக்குறித்து அரோசித்த பிறகே அந்த பாவத்தை மற்றவர்களிடத்தில் காண்பான். தேவனிடத்தில் எவ்வளவு அதிகமாக கிட்டிச்சேருகிறோமோ அவ்வளவு அதிகமாக நம்முடைய சொந்த பாவத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாயிருப்போம்.
எசேக்கியேல் 37-ம் அதிகாரம், உயிர்த்தெழுதல் ஜீவியத்தின் ஓர் உவமை. தேவன் எசேக்கியேலை, உலர்ந்த எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கிற்குக் கொண்டு சென்று, முதலாவது இந்த உலர்ந்த எலும்புகளுக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும்படி சொன்னார். தேவ வசனம் கடந்து சென்று எலும்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து, மாமிசம் அந்த எலும்புகளை மூடியது. ஆனால் அவைகளுக்கு தேவ வசனம் மாத்திரமே போதுமானதாயிராமல், அதை காட்டிலும் அதிகமான மற்றொன்றும் தேவைப்பட்டது. அது தான் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை. பரிசுத்த ஆவியானவர் இந்த மரித்த சடலங்களின் மேல் வந்தவுடனே அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, கர்த்தருக்குப் போர்சேவகர்களாக வல்லமையான சேனையாய் நின்றார்கள். கர்த்தர் இன்று சபைக்கு செய்ய விரும்புகிறதை இங்கே ஒரு வரைபடமாகப் பார்க்கிறோம். அநேக கிறிஸ்தவர்கள் சரியான உபதேசத்தை உடையவர்களாயிருந்தாலும், ஆரம்பத்தில் இந்த உலர்ந்த எலும்புகளைப் போல தான் விரைப்பாக, சடலத்தைப் போலிருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கும்போது கிறிஸ்தவர்களாக ஒன்றுகூட ஆரம்பித்து, (எலும்பு எலும்போடு சேருகிறது) ஒரு நேர்த்தியான வாழ்க்கை வாழத் தொடங்குகிறார்கள் (சதை எலும்புகளை மூடும்போது சற்று அழகு காணப்படத்தான் செய்கின்றது). ஆனால் இந்த கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய வல்லமையான சேனையாயிருப்பதற்கு இன்னுமொரு காரியம் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் தரிப்பிக்கபட வேண்டும். இதுவே 37 ஆம் அதிகாரத்தின் செய்தியாகும்.
எசேக்கியேல் 43 -ல் ஆலயத்தை விட்டு நீங்கிய கர்த்தருடைய மகிமை புதிய ஆலயத்திற்குத் திரும்ப வருவதைக் குறித்து வாசிக்கிறோம். பெந்தேகோஸ்தே நாளிலிருந்துதான் புதிய உடன்படிக்கையின் சபை ஸ்தாபிக்கப்பட்டது. "இது என்னுடைய சிங்காசனம் இருக்கும் இடம்" என்று கர்த்தர் சபையை அழைக்கிறார் (எசேக்கியேல் 43:7). "அதனுடைய முழு இடமும் மகா பரிசுத்தமாய் இருக்கும்" என்று புது உடன்படிக்கை சபையின் பிரமாணம் விவரிக்கப்பட்டிருக்கிறது (எசேக்கியேல் 43:12). பழைய உடன்படிக்கை ஆலயத்தின் மேற்கு முனையிலிருந்த ஒரு சிறிய அறை மட்டுமே "மகா பரிசுத்தம்" என்றழைக்கப்பட்டது. அந்த இடத்தில் தான் தேவன் வாசமாயிருந்தார். ஆனால் இந்த புது உடன்படிக்கை சபையில் முழு சபையும் (ஆலயம்) மகா பரிசுத்தமாயிருக்கும். இன்று சபையை தேவனுடைய ஆலயமாக கட்ட இந்தவொரு அடிப்படையான பிரமாணத்தைப் பின்பற்ற வேண்டும். அதென்னவென்றால், சபையிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் முற்றிலும் பரிசுத்தமாயிருக்க வேண்டும். பாவத்தை எந்த வடிவத்திலும் யாரிடத்திலும் பொறுத்துக் கொள்ளக்கூடாது.
இப்படிப்பட்ட பரிசுத்த ஆலயத்திலிருந்து (ஆவியினால் நிறைந்த சபை அல்லது ஆவியினால் நிறைந்த தனிநபர்) தண்ணீர் சொட்ட ஆரம்பித்து, பிறகு அது நதியாக மாறி முடிவிலே அநேக நதிகளாக மாறுகிறது (எசேக்கியேல் 47). இந்த பகுதியைத்தான் இயேசு யோவான் 7:37-39 -ல் மேற்கோள் காட்டினார். அங்கே பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு மனிதனுக்குள்ளிருந்து "ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" என்று கூறினார். இந்த ஜீவத்தண்ணீருள்ள நதிகள் பெந்தேகோஸ்தே நாளில் ஆரம்பமாகி, அன்றிலிருந்து இன்றுவரை தேவபக்தியுள்ள புருஷர்கள் மற்றும் ஸ்திரீகள் மூலமாக பாய்ந்தோடுகிறது. இந்த வாழ்க்கை பெரிய நதியாக மற்றும் பல நதிகளாக மாறுவதற்கு முன்பு சில சொட்டுக்களாகத் தொடங்குகிறது.
எசேக்கியேல் 47:3-6 -ல் “ஆவியினால் நிறைந்த வாழ்வு” வாழ்வதென்றால் என்ன என்பதின் ஒரு சிறிய அளவிலான ருசியை எசேக்கியேலுக்கு கர்த்தர் கொடுத்தார். எசேக்கியேலைப் படிப்படியாக இந்த நதிக்குள் வழிநடத்தினார். அதிலே 500 மீட்டர் கடந்தப்பிறகு தண்ணீர் கணுக்கால் அளவை தொட்டது. இன்னும் 500 மீட்டர் கடந்தப்பிறகு அது முழங்கால் அளவைத் தொட்டது. மற்றுமொரு 500 மீட்டர் கடந்தப்பிறகு தண்ணீர் அவனுடைய இடுப்பு அளவைத் தொட்டது. பிறகு இன்னுமொரு 500 மீட்டர் கடந்தப்பிறகு, நதி அதிக ஆழமாயிருந்தபடியால், எசேக்கியேல் தரையிலிருந்து அவருடைய பாதங்களை உயர்த்த வேண்டியதாகி, நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டார். தேவனோடு நடப்பதில் நாமும் எசேக்கியேலைப் போல தொடர்ந்து முன்னோக்கி செல்லலாம். அல்லது ஏதாவது ஒரு நிலையில் நின்று விடலாம். நாம் விரும்புவதை விட அதிக தூரம் செல்ல தேவன் நம்மை ஒருபோதும் பலவந்தம் பண்ணமாட்டார். எலியாவை எலிசா பின்பற்றும்போது (2இராஜாக்கள் 2), எலிசா தான் ஏற்கனவே பெற்றுக்கொண்டதில் திருப்தியடைந்துவிட்டாரா, அல்லது இன்னும் அதிகம்பெற பசிதாகமாயிருக்கிறாரா என்று எலியா தொடர்ச்சியாக எலிசாவை பரிசோதித்தார். எலிசா தேவனுடைய சிறப்பானதை பெறும்வரை திருப்தி அடையாமலிருந்தபடியால் தன்னுடைய ஜீவியத்தின்மேல் இரட்டிப்பான அபிஷேகத்தைப் பெற்றார். இதேபோலவே எசேக்கியேலும் இங்கே பரிசோதிக்கப்படுகிறதைப் பார்க்கிறோம். அவர் "நீச்சாழம் தண்ணீர்" வரும்வரை நதியில் கடந்து சென்றுகொண்டேயிருந்தார். நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஓர் அளவுக்கு மாத்திரம் அனுபவித்து விட்டு, அந்த கட்டத்திலேயே தேவனுடைய மிகச் சிறப்பானதை பெறாமல் நின்று விடலாம்.
இதையும் கவனித்துப் பாருங்கள்: தண்ணீர் எசேக்கியேலினுடைய கணுக்கால் வரைக்கும் அல்லது முழங்கால் வரைக்கும் அல்லது இடுப்பு வரைக்கும் இருக்கும்பொழுது அவருடைய பாதங்கள் இன்னும் தரையில்தான் இருந்தது. ஆனால் நம்முடைய பாதங்கள் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட பிறகுதான் நாம் உண்மையிலே ஆவியினால் நிறைந்திருக்கிறோம் என்பதை அறியக்கடவோம். இந்தக் கட்டத்தில் தான் "நாம் பூமியிலிருந்தும், பூமிக்குரிய ஆசையிலிருந்தும், உலகப் பொருட்களின் பிடியிலிருந்தும்” விடுபட்டு, "நம்முடைய சுயசித்தத்தின்படி அல்லாமல் தேவனுடைய சித்தத்தின்படி ஆவியினால் வழிநடத்தப்படுகிறோம்".
இந்த புத்தகத்தின் கடைசி வசனத்தில் இந்தப் புது உடன்படிக்கை சபையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது "கர்த்தர் இங்கே இருக்கிறார்" - யேகோவா ஷம்மா என்பதாகும். இப்படிப்பட்ட சபையைக் கட்ட நீங்களும் நானும் அழைக்கப்பட்டிருக்கிறோம் இந்த சபையிலே, கர்த்தர் தம்முடைய சகல மகிமையோடும் நம்மத்தியில் இருக்கிறார் என்பதை ஜனங்கள் கண்டு கொள்வார்கள். ஆனால் அதைக் கட்டுவதற்கு எசேக்கியேலைப் போல முழுமையாகக் கீழ்ப்படிகிற ஜனங்கள் கர்த்தருக்குத் தேவை.