இயேசு முதன்மையாகப் பேசிய தவறான மனப்பான்மை கோபம் ஆகும். நம் வாழ்க்கையிலிருந்து கோபத்தை நாம் முற்றிலும் அகற்ற வேண்டும். இரண்டாவதாக, அனைத்து கிறிஸ்தவர்களிடமும் (எல்லா மனிதர்களிடமும் கூட) உள்ள மற்றொரு பெரிய பிரச்சனை, ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறதான பாலியல் இச்சைக்குரிய சிந்தனை. (சரீரப்பிரகாரமாக) விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்பது பழைய ஏற்பாட்டுத் தரம் என்று மத்தேயு 5:27-28 வசனங்கள் கூறுகிறது. உங்கள் மனைவி அல்லாத ஒரு பெண்ணை நீங்கள் தொடாமல், அவளுடன் விபச்சாரம் செய்யாமல் இருந்தால், அது போதுமானது. அது தான் பழைய ஏற்பாட்டு தரம்.
ஆனால் இயேசு அந்தத் தரத்தை உயர்த்தினார். மோசே மலைக்குச் சென்று பத்துக் கட்டளைகளுடன் கீழே வந்தது போல, இயேசு மலைக்குச் சென்று மலைப்பிரசங்கத்தைப் பிரசங்கித்தார். அந்தப் பத்துக் கட்டளைகளின் அளவை அந்தக் கட்டளைகளின் ஆவிக்கு உயர்த்தினார். கோபம் என்பது கொலையைப் போன்றது என்றும், உங்கள் கண்களால் இச்சையோடு பார்ப்பது விபச்சாரத்தைப் போன்றது என்றும் அவர் விளக்கினார் - வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் அந்தப் பெண்ணுடன் உங்கள் மனதில் விபச்சாரம் செய்கிறீர்கள் என்றும் உங்கள் உள்ளான வாழ்க்கை தூய்மையற்றதாக இருந்ததால், தேவனுடைய பார்வையில் அதுவே விபச்சாரம் என்றும் இயேசு கூறினார்.
பரிசேயர்களின் அடையாளம் என்னவென்றால், அவர்கள் கோப்பையின் வெளிப்புறத்தை, அதாவது தங்கள் வெளிப்புற வாழ்க்கையைத் தூய்மையாக வைத்திருந்தார்கள். தனது வெளிப்புற வாழ்க்கையைச் சுத்தமாகவும், உள்ளான சிந்தனை வாழ்க்கையை அசுத்தமாகவும் வைத்திருக்கும் ஒரு கிறிஸ்தவர் ஒரு பரிசேயரே ஆவார். அவர் தெரிந்தோ தெரியாமலோ நரகத்திற்குச் செல்கிறார். நம்மில் பலருக்கு இதன் தீவிரம் புரியவில்லை.
கடந்த (35) ஆண்டுகளில், சில பாவங்களுக்கு எதிராக நான் அதிகம் பிரசங்கித்துள்ளேன், குறிப்பாக இரண்டு பாவங்களாகிய கோபமும் பாலியல் இச்சை நிறைந்த சிந்தனைகளையும் குறித்துப் பிரசங்கித்துள்ளேன். மக்கள் என்னிடம் நான் ஏன் அவற்றிற்கு எதிராக இவ்வளவு அதிகமாகப் பேசுகிறேன் என்று கேட்டுள்ளனர். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இருக்க வேண்டும் என்று இயேசு கூறிய உடனே முதலில் இந்த இரண்டு பாவங்களையும் குறிப்பிட்டதால் தான் என்று நான் அவர்களுக்குச் சொல்கிறேன். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து பரிசேயர்களின் (மதவாதிகளின்) நீதியை விட உங்கள் நீதி உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று சொன்ன உடனேயே, இயேசு குறிப்பிட்ட முதல் இரண்டு பாவங்கள் கோபமும் பாலியல் இச்சையான சிந்தனையான பகுதியில் தான் இருந்தது. நான் அவற்றிற்கு எதிராக அதிகமாகப் பிரசங்கிக்க இதுவே முதல் காரணம்.
இந்த இரண்டு பாவங்களுக்கும் எதிராக நான் பிரசங்கிக்க இரண்டாவது காரணம் என்னவென்றால், அவற்றில் ஈடுபடுவதால் ஏற்படும் ஆபத்து, நரகத்திற்கு கொண்டு செல்லும் என்று இயேசு மலைப் பிரசங்கத்தில் இந்த இரண்டு பாவங்களைக் குறித்துப் பேசினார். பெரும்பாலான மக்கள் அதை நம்புவதில்லை. மலைப் பிரசங்கத்தில் இயேசு நரகத்தைப் பற்றி இரண்டு முறை மட்டுமே பேசினார், அது இந்த இரண்டு பாவங்களைக் குறித்துப் பேசினார் (மத்தேயு 5:22,29-30). எனவே இந்த இரண்டு பாவங்களும் மிகவும் மோசமானவை என்று நமக்குச் சொல்கிறது.
இயேசு மலைப்பிரசங்கத்தில் நரகத்தைப் பற்றி இரண்டு முறை மட்டுமே பேசியது கோபம் மற்றும் பாலியல் இச்சையான சிந்தனை தொடர்பாக இருந்தது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. எனவே இவை தேவனின் பார்வையில் மிகவும் கடுமையான பாவங்களாக இருக்க வேண்டும், இன்று அவற்றிற்கு எதிராக போதுமான பிரசங்கம் இல்லை. கோபத்தை ஜெயங்கொள்வதைப் பற்றிய செய்தியை நீங்கள் கடைசியாக எப்போது கேட்டீர்கள் என்று யோசிக்க முடிகிறதா? என் முழு வாழ்க்கையிலும் அதைப் பற்றிய செய்தியை நான் கேட்டதில்லை என்று நினைக்கிறேன். தொலைக்காட்சி, டேப்கள், சிடிகள் மற்றும் பல தேவாலயங்களில் நிறையப் பிரசங்கங்களை நான் கிறிஸ்தவ உலகில் சுற்றித் திரிந்த 50+ ஆண்டுகளில் கேட்டிருக்கிறேன். ஆனாலும் பாலியல் இச்சையான சிந்தனை முறைகளை ஜெயங்கொள்வதைப் பற்றிய செய்தியை நான் ஒருபோதும் கேட்டதில்லை. இந்த இரண்டு பகுதிகளிலும் பிரசங்கிப்பவர்களைப் பிசாசு ஏன் தடுத்திருக்கிறான்?
பிரசங்கியார்கள் ஜெயம் பெறவில்லை என்பதுதான் முதன்மையான காரணம். அவர்கள் இன்னும் அடிமைகளாக இருந்தால், அதைப் பற்றி எப்படிப் பேச முடியும்? இரண்டாவதாக, பிரசங்கியார்கள் பெரும்பாலும் தங்கள் சபைகளில் மக்களை வெளிப்பிரகாரமாக அழகாகக் காட்டி அவர்களிடமிருந்து பணம் சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே இயேசு அதிகம் பேசிய இந்த இரண்டு விஷயங்களை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இவை இரண்டும் ஒரு நபரை இறுதியாக நரகத்திற்கு நேராய் நடத்திச் செல்லும் என்று இயேசு கூறினார், அது மிகவும் சீரியஸான காரியம்.
இயேசு பத்துக் கட்டளைகளை எடுத்து, அந்தக் கட்டளைகளுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை மக்களுக்கு காட்டினார்.
உங்கள் மனைவி அல்லாத ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பது பாவம் என்பதைப் புரிந்து கொள்ள நீங்கள் மத்தேயு 5ம் அதிகாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பெண்ணை இச்சையுடன் பார்க்கும் எவரும் (விசுவாசியாக இருந்தாலும் சரி, அவிசுவாசியாக இருந்தாலும் சரி) ஏற்கனவே தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று என்று இயேசு கூறினார். இச்சை என்பது ஒரு வலுவான ஆசையைக் குறிக்கிறது. இது எவ்வளவு சீரியஸானது என்றால், உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு என்று அவர் கூறினார்! நீங்கள் கண்களின் இச்சையால் சோதிக்கப்படும் போது முழு இருதயங்கொண்டவர்களாக இருந்து, ஒரு குருடனைப் போல் நடந்து கொள்ள வேண்டும். அதை மேற்கொள்ள ஒரே வழி இதுதான். நீங்கள் அதை லேசாக எடுத்துக் கொண்டு, "சரி, தேவன் படைத்த அழகைத் தானே நான் ரசிக்கிறேன்" என்று சொல்லக்கூடாது. இந்தப் பாவத்தை நாம் நியாயப்படுத்தப் பல வழிகள் உள்ளன, அநேகர் அப்படிச் செய்கிறார்கள். இந்தப் பகுதியில் ஒருவர் கவனக்குறைவாக இருக்கும் போது, உலகம் முழுவதிலும் உள்ள பல போதகர்கள் போல, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் சரீரப்பிரகாரமாக விபச்சாரத்தில் விழுவார்கள்.
மத்தேயு 5-ல் இயேசு கற்பித்தது, தேவ பயமுள்ள மனிதர்களுக்கு தெரியாத புதிய விஷயமல்ல. இயேசு அதைப் பேசுவதற்கு முன்பே யோவான் ஸ்நானகன் அதை அறிந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். யோபு அதை அறிந்திருந்தார் (யோபு 31:1,4,11). தேவனுக்குப் பயப்படும் எவரும், யோபுவை போல, வேதம் இல்லாவிட்டாலும் கூட, தன் மனைவி இல்லாத ஒரு பெண்ணை பாலியல் இச்சையுடன் பார்த்தால், அது தேவனுக்கு முன்பாக ஒரு பாவம் என்று முடிவு செய்வார்கள். அது தவறு என்று நமக்குள் ஏதோ ஒன்று சொல்கிறது. அது தேவன் உங்களுக்குக் கொடுக்காததைத் திருடுவது போன்றது. உங்களிடம் வேதம் இல்லாவிட்டாலும், உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை நீங்கள் திருடும்போது, அது ஒரு பாவம் என்று உங்கள் மனசாட்சி உங்களுக்குச் சொல்லும். அதைச் சொல்ல உங்களுக்கு ஒரு கட்டளை தேவையில்லை. தேவன் மீதுள்ள பயபக்தி அதைச் சொல்லும். இயேசு கற்பித்ததைப் பார்க்கும்போது அதை நினைவில் கொள்வது ஒரு அற்புதமான விஷயம்.
இன்று பல விசுவாசிகள் தங்கள் கண்களால் பாலியல் இச்சை கொள்ளும் விஷயத்தை இவ்வளவு லேசாக எடுத்துக் கொள்வது எப்படி? ஏனென்றால், யோபுவுக்கு இருந்ததைப் போல, தேவ பயம் இல்லாததே இதற்குக் காரணம். இன்றைய கிறிஸ்தவர்களுக்கு வேத அறிவு இருக்கிறது, ஆனால் தேவ பயம் இல்லை. வேதாகம கல்லூரி சென்று வேதத்தைப் படித்து இறையியலில் முனைவர் பட்டம் பெற்றாலும், பெண்களை இச்சிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அது நமக்கு என்ன கற்பிக்கிறது? வேதத்தைப் பற்றிய மூளை அறிவும், வேதாகம கல்லூரியிலிருந்து "பட்டம் பெறுவதும்" உங்களைப் பரிசுத்தமாக்காது என்பதை நமக்குக் கற்பிக்கிறது. அநேக வேதாகம மொழிபெயர்ப்புகளும் ஒத்தவாக்கிய வேதாகமங்களும் இருப்பதால் இன்று அதிக வேதாகம அறிவு உள்ளது. நம் மொபைல் போன்களிலும், சிடிகளிலும் கூட வேதாகமம் உள்ளது, மக்கள் தங்கள் வாகனங்களை ஓட்டும்போதும் கேட்க முடிகிறது. ஆனால் இவ்வளவு அதிகமாக அறிவு இருந்தாலும், தேவபயம் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
நமக்குத் தேவ பயம் இருக்குமானால் மலைப் பிரசங்கத்தைப் படிக்காமலேயே நாம் தெரிந்து கொள்ளக்கூடிய பல விஷயங்களை இயேசு மலைப்பிரசங்கத்தில் போதித்தார். இவற்றில் சில நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும்: கோபம் பாவம், பெண்களை இச்சிப்பது பாவம், மற்றும் இங்கே எழுதப்பட்டுள்ள பல விஷயங்கள். எனவே, நீங்கள் பாவத்தில் தொடர்வது அறிவு இல்லாததால் அல்ல; தேவ பயம் இல்லாததால் தான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். இது கிறிஸ்தவ வாழ்க்கையின் "அ, ஆ, இ,..." ஆரம்ப பாடம் ஆகும், அது நம்மிடம் இல்லை என்றால், அதிகமாக வேதம் வாசிப்பதோ அல்லது செய்திகளைக் கேட்பதோ நம்மைப் பரிசுத்தமாக்க முடியாது.