(கடந்த வாரத்தின் தொடர்ச்சி…)
எபிரெயர் நிருபத்தின் முதல் வாக்கியமே “பூர்வகாலங்களில் தேவன் தீர்க்கதரிசிகள் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் (பேசினார்); ஆனால் இப்பொழுதோ தம்முடைய குமாரன் மூலமாய் பேசியிருக்கிறார்” என்றே கூறுகிறது! பழைய உடன்படிக்கையானது பெரும்பாலும், “இதைச் செய்வாயாக”, “இதைச் செய்யாதிருப்பாயாக” என்று தேவனிடமிருந்து வந்த கட்டளைகளைப் பெற்று அளிப்பதாய் இருந்தது. ஆனால் புதிய உடன்படிக்கையோ அவருடைய குமாரன் மூலமாய் நமக்கு தேவனிடத்திலிருந்து “ஜீவனைப்" பெற்று அளிப்பதாய் இருக்கிறது.
இதினிமித்தமே, பிதாவானவர் இந்த பூமிக்கு இயேசுவை ஒரு பாலகனாய் அனுப்பினார். இயேசுவை இந்த பூமிக்கு பூரண வளர்ச்சி பெற்ற ஒரு புருஷனாய் அனுப்பிட தேவனுக்கு எந்த சிரமமும் இல்லை. இருப்பினும், அவர் ஒரு பாலகனாய் வந்ததின் நோக்கம், தம் குழந்தைப் பிராயத்திலிருந்தே நம்மைப் போன்ற அனுபவங்களை அனுபவிக்கும்படியும், நாம் சந்திக்கும் சோதனைகளைச் சந்திக்கும்படியுமேயாகும்!
ஆனால் அநேக கிறிஸ்தவர்களோ, இயேசுவை அவரது கடைசி 3½ வருட ஊழியத்தையும், அவரது கல்வாரி மரணத்தையும் வைத்தே சிந்திக்கிறார்கள்! அதாவது, 99% விசுவாசிகள், இயேசு நாசரேத்தூரில் தம்முடைய முதல் 30 ஆண்டு காலம் எவ்வாறு ஜீவித்தார் என்பதை சற்றேனும் சிந்திக்கவில்லை எனக் கூறுவது சரியென்றே நான் எண்ணுகிறேன். ஆம், அவருடைய பிறப்பை தியானிக்கிறார்கள்.... அதைத்தான் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவும் செய்கிறார்கள்! பின்பு, அவருடைய மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் தியானிக்கிறார்கள்... அதையும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறார்கள்! இதோடு கொஞ்சம் சேர்த்து, அவர் செய்த அற்புதங்களையும் தியானிக்கிறார்கள்... அவ்வளவுதான்!
இவர்களில் ஒருவர்கூட இயேசுவின் வாழ்க்கையில் உள்ள பிரதானமான பகுதியைக் குறித்து சிந்திப்பதே இல்லை! அவர் இந்த பூமியில் வாழ்ந்த வாழ்க்கையில் அவரது ஊழியம் 10% மாத்திரமேயாகும்! அதாவது 33½ வருடங்களில் 3½ வருடங்கள் மாத்திரமே! அவருடைய பிறப்பும், அவருடைய மரணமும் ‘ஒருநாள்' நடந்த நிகழ்ச்சிகளேயாகும். மாறாக, அவரது ஜீவியத்தின் பெரும் பகுதி நாசரேத்தூரில் அவர் வாழ்ந்த 30 ஆண்டு காலமாகும். இந்த 30 ஆண்டு கால ஜீவியத்தை ஆதாரமாகக் கொண்டே அவருடைய முழு ஊழியமும் இருந்தது! தம் ஊழியத்தில் அவர் பிரசங்கித்த பிரசங்கங்களைத் தயாரிப்பதற்கு அவருக்கு 30 ஆண்டுகள் பிடித்தது! தம்முடைய “மலைப்பிரசங்கத்தை” இன்றைய பிரசங்கிகளைப் போல், புத்தகங்களையும், ஒத்தவாக்கிய அகராதிகளையும் ஆராய்ந்து மூன்று முக்கியக் குறிப்புகளை எடுத்துக்கொண்டு, பிரசங்கங்களை ஆயத்தப்படுத்தி, அகர வரிசைப்படி பிரசங்கிப்பதைப்போல் இயேசு பிரசங்கிக்கவில்லை. இல்லவே இல்லை! அந்தப் பிரசங்கம், அவர் வாழ்க்கையிலிருந்தே புறப்பட்டு வந்தது. அதைத் தயார் செய்திட அவருக்கு 30 ஆண்டுகள் பிடித்தது. இதினிமித்தமே அவருடைய பிரசங்கம் வல்லமையாய் இருந்தது! “அதிகாரமுடையவராய்” அவர் போதித்ததை ஜனங்களும் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்! (மத்.7:28, 29).
பழைய உடன்படிக்கையில் எரேமியா தீர்க்கதரிசியிடம் தேவன் "சில குறிப்பிட்ட நாட்களில் அவ்வப்போது மாத்திரமே பேசினார்” என நாம் வாசிக்கிறோம். இவ்வாறு தேவன் தனக்குப் பேசியதை இந்த எரேமியா தன்னுடைய வேதபாரகன் பாரூக்கிடம் (Baruch) ஒப்பித்தான்! எரேமியா தனக்கு ஒப்பித்ததை பிழை ஏதும் இல்லாமல் பாரூக் கிரமமாய் எழுதிவைத்தான். இதுபோலவேதான், தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியிடமும் “சில குறிப்பிட்ட நாட்களில் மாத்திரமே” அவன் யூதா ஜனங்களுக்கு என்ன கூறவேண்டும் என்பதைப் பேசினார். அதை எசேக்கியேல், ஜனங்களிடத்தில் சென்று அப்படியே கூறிவிடுவார். அது நல்லதுதானே! இன்றும் அவ்வித பிரசங்கங்கள் இருந்தால், 'அதுகூட மேன்மையானது’ என்றே நாம் கூறலாம்!
ஆனால் புதிய உடன்படிக்கையின் ஊழியமோ, இதைக்காட்டிலும் மேன்மையானதாகும்! பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளிடம் சில குறிப்பிட்ட நாட்களில் மாத்திரமே பேசியதைப்போல் அல்லாமல், தேவன் “ஒவ்வொரு நாளும் இயேசுவிடம் பேசினார்”. இயேசுவும், “ஒவ்வொரு நாளும்” தம் ஜீவியத்திலிருந்து ஜனங்களுக்குப் பேசினார். அவருடைய ஜீவியத்திலிருந்தே அவருடைய ஊழியம் புரண்டோடி வந்தது. இதுவே “உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்” என்ற வசனத்தின் பொருளாகும்! (யோவான் 7:38).
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி ஒரு தூதுவனாக மாத்திரமே இருந்தார். ஒரு தூதை அல்லது செய்தியைக் கொடுப்பதற்கு, அவருக்கு நல்ல ஞாபகசக்தி இருந்தால் மாத்திரமே போதும். ஆனால் புதிய உடன்படிக்கையிலோ, பிறருக்குக் கொடுக்கும்படி தேவன் ஒரு தூதை நமக்குத் தராமல், “தமது ஜீவனை” இப்போது தருகிறார்! ஆகவே, இப்போது உங்களுக்குத் தேவையாய் இருப்பதெல்லாம், வெறும் ஞாபகசக்தி அல்ல, நல்ல ஜீவியமாகிய இயேசுவின் திவ்விய ஜீவனே உங்களுக்கு வேண்டும்!!
இந்த வித்தியாசத்தை சற்று விளக்கமாகக் கூற விரும்புகிறேன்: ஒரு குழாயில் தண்ணீர் பிடித்து (தேவனிடமிருந்து ஒரு தூது பெற்று) அதைக் கொண்டுவந்து ஊற்றுவதுதான், பழைய உடன்படிக்கையின் ஊழியத்தைக் காட்டுவதாய் இருக்கிறது! இன்னும் தண்ணீர் வேண்டுமென்றால், நீங்கள் மீண்டும் குழாயடிக்குச் செல்ல வேண்டும் அதாவது, மற்றொரு செய்தியை அல்லது தூதைப் பெற்றுவர வேண்டும்!
ஆனால் புதிய உடன்படிக்கையிலோ, தேவன் நமக்கு இயேசுவின் ஜீவியமாகிய ஒரு ஜீவ ஊற்றை நமக்குள் தந்திருக்கிறார். அந்த ஊற்றானது நமக்குள்ளிருந்து தொடர்ச்சியாய் பாய்ந்தோடிக் கொண்டேயிருக்கும்! ஆகவே, இப்போது ஒரு செய்தியை அல்லது ஒரு தூதைப் பெறுவதற்கென்று, ஒவ்வொரு சமயமும் நாம் தேவனிடம் செல்லத் தேவையில்லை! ஆம், அவர் நம்மையே ஒரு செய்தியாக மாற்றுகிறார்! நமது ஜீவியமே ஒரு செய்தியாக இருக்கிறபடியால், அந்த ஜீவியத்திலிருந்தே இப்போது நாம் பேசுகிறோம்!
இன்று அநேக ஜனங்கள் “மொண்டு வந்து ஊற்றும்” ஊழியத்தையே பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு ஊற்றுபவர்களில், சிலரிடம் ஒன்றும் இருப்பதில்லை.... சிலரோ ஊற்றுவதற்கு ஏதாகிலும் பெற்றிருப்பார்கள்! எப்படியிருந்தாலும் இந்த இருவருமே “மொண்டு ஊற்றும் ஊழியத்தை” மாத்திரமே பெற்றிருக்கிறபடியால், இவர்கள் இருவரின் பாத்திரமும் சீக்கிரத்தில் வற்றிவிடுகிறது!
ஆனால், சமாரியா ஸ்திரீயிடம் இயேசு கூறிய போதோ, “நித்திய ஜீவனுடைய ஊற்றுக்கண்ணை” அவளுக்குள் வைப்பதாகவும், அதிலிருந்து ஜீவநதி தொடர்ச்சியாகப் புரண்டோடும் என்றும் இயேசு கூறினார். நித்திய ஜீவன் என்பதின் மெய்யான அர்த்தம், தேவனுடைய சொந்த ஜீவனேயாகும்!
இந்த ஜீவியமே, நமக்குள்ளிருந்தும் பாய்ந்து செல்ல ஆண்டவர் விரும்புகிறார்...... ஆம், வெறும் செய்தி மாத்திரமல்ல! இதுவே புதிய உடன்படிக்கையின் ஒப்பற்ற ஊழியமாகும்!