WFTW Body: 

புதிய உடன்படிக்கை ஊழியமானது புத்தி சாமர்த்தியத்திலிருந்து அல்லாமல் ஜீவியத்திலிருந்தே பாய்ந்தோட வேண்டும்.

பழைய உடன்படிக்கையின் கீழ், அவர்களுடைய தனிப்பட்ட ஜீவியம் கற்பு நெறி தவறியதாய் இருந்தாலும், அதுபோன்ற மனிதர்களையும் தேவன் உபயோகித்தார். சிம்சோன் தொடர்ந்து பாவத்தில் ஜீவித்துக் கொண்டிருந்தபோதும், இஸ்ரவேல் ஜனங்களை பல ஆபத்துகளிலிருந்து அவனால் இரட்சிக்க முடிந்தது. அவன் வேசித்தனம் செய்தபோதும் தேவனுடைய ஆவி அவனைவிட்டு விலகிவிடவில்லை. அவன் என்று தன் முடியை இழந்து தேவனோடு செய்த உடன்படிக்கையை முறித்தானோ, அப்போதுதான் தேவனுடைய அபிஷேகம் அவனை விட்டு விலகியது. அதுபோலவே, தாவீதுக்கும் அனேக மனைவியர்கள் இருந்தார்கள் என நாம் காண்கிறோம். இருப்பினும் தேவனுடைய அபிஷேகம் அவனிடம் நிலைத்திருந்தது மாத்திரமல்லாமல் அவன் “வேதவாக்கியங்களையும்” எழுதினான்!

ஆனால் புதிய உடன்படிக்கையின் ஊழியமோ முற்றிலும் வித்தியாசமானதாகும். 2கொரிந்தியர் 3-ம் அதிகாரம், பழைய உடன்படிக்கையின் கீழான ஊழியத்திற்கும், புதிய உடன்படிக்கையின் கீழான ஊழியத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நேர்த்தியாய் எடுத்துரைக்கிறது. அடிப்படையில், அந்த வித்தியாசம் இதுதான்; பழைய உடன்படிக்கையின் கீழ், ஆசாரியர்கள் பிரமாணங்களை கவனமாய் கற்று, அந்தப் பிரமாணங்களில் தேவன் என்ன கூறியிருக்கிறார் என்பதை ஜனங்களுக்குப் போதிப்பார்கள். ஆனால் புதிய உடன்படிக்கையிலோ, தம்முடைய உள்ளான ஜீவியத்திலிருந்தும், தம் பிதாவோடு இணைந்து நடந்த அனுபவத்திலிருந்தும் தேவனுடைய வார்த்தையைப் பேசிய “இயேசுவையே" நாம் பின்பற்றுகிறோம்! நம் ஜீவியத்திலிருந்து ஊழியம் செய்வதற்கும், நம்முடைய அறிவிலிருந்து பிரசங்கிப்பதற்கும் இடையில் ஏராளமான வித்தியாசம் இருக்கிறது.

“தகவலை” மாத்திரமே ஜனங்களுக்கு அறிவித்திடும் ஒரு பிரசங்கி பழைய உடன்படிக்கையின் பிரசங்கியே ஆவார். அவர் கொண்டு வரும் தகவல் கூற்றுகள் அனைத்தும் துல்லியமாய் இருக்கக்கூடும். ஆனால், அவரோ “ஜீவனை” ஜனங்களுக்குத் தரவில்லையென்றால், அவர் நிச்சயமாய் புதிய உடன்படிக்கையின் ஊழியன் அல்லவே அல்ல. பழைய உடன்படிக்கை யானது எழுத்தின்படியான உடன்படிக்கையாகும். ஆனால் புதிய உடன்படிக்கையோ ஜீவனை அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கையாகும். எழுத்து கொல்லும், ஆவியோ, ஜீவனைத் தந்தருளும்!

பழைய உடன்படிக்கையில், இஸ்ரவேல் ஜனங்கள் கைக்கொள்ளும்படியாக தேவன் “பிரமாணங்களை” அவர்களுக்குத் தந்தார். ஆனால், புதிய உடன்படிக்கையில், “இயேசு என்ற நபரில்” தேவன் நமக்கு ஒரு மாதிரியைத் தந்திருக்கிறார். அவருடைய ஜீவியமே மனுஷருக்கு ஒளியாய் இருக்கிறது. இன்று உலகத்திற்கு ஒளியாய் இருப்பது ஒரு உபதேசமோ அல்லது போதகமோ அல்ல! மாறாக, இயேசுவின் சொந்த ஜீவன் நம் மூலமாய் வெளிப்படுவதே உலகிற்கு ஒளியாய் இருக்கிறது. இதைத் தவிர வேறு எதுவானாலும்... அது, சுவிசேஷத்தின் அடிப்படையிலான தெளிவான உபதேசங்களாய் இருந்தாலும், “அது இருள்தான்!” என்பதை நாம் உணர்ந்திடுவோமாக.

சங்கீதம் 119:105-ல் காண்பது போல், பழைய உடன்படிக்கையில் “எழுதப்பட்ட தேவனுடைய வசனமே” வெளிச்சமாய் இருந்தது. ஆனால், அந்த வசனம் மாம்சமாய் மாறி, இயேசுவே உலகத்திற்கு ஒளியாய் மாறினார் (யோவான் 8:12). அவருடைய “ஜீவியமே” மனுஷருக்கு ஒளியாய் பிரகாசித்தது! (யோவான் 1:4), இதை இயேசு சீஷர்களுக்குத் தெளிவாய் போதித்தபோது “நான் உலகத்தில் இருக்கும் வரையில்தான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்” என தெளிவுபடுத்தினார் (யோவான் 9:5), ஆனால் அவர் பரலோகத்திற்குச் சென்றுவிட்டபடியினால், இப்போதோ “நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்” என்றே கூறிச் சென்றார் (மத்தேயு 5:14). ஆகவேதான், நம் ஜீவியத்தின் மூலமாக அந்த வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்வது நம் மேல் விழுந்த மாபெரும் பொறுப்பாய் இருக்கிறது!

பழைய ஏற்பாட்டின் ஆசரிப்புக்கூடாரமானது, சபையைக் குறித்த ஒரு சிறந்த மாதிரி எனக் கூறலாம். அந்தக் கூடாரத்தில் 1) வெளிப்பிரகாரம் 2) பரிசுத்தஸ்தலம் 3) தேவன் வாசம்புரியும் மகா பரிசுத்த ஸ்தலம், என மூன்று பகுதிகள் உண்டு. வெளிப்பிரகாரத்தில் இருக்கும் ஜனங்கள், தங்கள் பாவங்கள் மாத்திரம் மன்னிக்கப்பட்ட விசுவாசிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். இவர்கள், தங்கள் ஸ்தல சபையில் எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கூட்டங்களுக்கு வருவார்கள், செய்திகளைக் கேட்பார்கள், காணிக்கைகளை செலுத்துவார்கள், அப்பம் பிட்டுக்கொள்ளுவார்கள், வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். பரிசுத்தஸ்தலத்திலிருக்கும் ஜனங்களோ, விளக்குத்தண்டை ஏற்றி வைத்து, பலிபீடத்தில் தூபமிட்ட லேவியர்களைப் போல சபையில் 'ஏதாகிலும் சில வேலைகளைச்' செய்வார்கள். ஆனால், மகா பரிசுத்தஸ்தலம் வந்தடைந்தவர்களோ, புதிய உடன்படிக்கையில் பிரவேசித்தவர்களாய், தேவனுடைய ஐக்கியத்தை நாடி, மற்ற சீஷர்களோடும் ஒரே சரீரமாய் இணைந்திருப்பார்கள். இவர்களே, தங்கள் “ஜீவனிலிருந்து ஊழியம் செய்து, மெய்யான சபையின் மூல ஆதாரமாய் இருப்பார்கள்! இவர்களே சபையின் முக்கிய இயந்திரமாய் செயல்பட்டு, சாத்தானோடு நேரடியாய் யுத்தம் செய்து, கிறிஸ்துவின் சரீரமான சபை கறையற்றதாய் இருக்கும்படி பாதுகாக்கிறவர்களாயும் இருப்பார்கள்! இருப்பினும், இன்றைய அநேக சபைகளில், இதுபோன்ற “மையக் கருவாகிய” ஜனங்கள் இன்னமும் காணப்படாமலேதான் இருக்கிறார்கள்.

மிகச் சிறந்த சபையாய் இருந்தாலும் அல்லது மிக மோசமான சபையாய் இருந்தாலும், எல்லா சபைகளின் வெளிப்பிரகாரத்திலும் இருப்பவர்கள் முழுஇருதயமற்றவர்களும், உலக ஆசை கொண்டவர்களும், தங்களுக்கானதைத் தேடுகிறவர்களும், பணத்தை நேசிப்பவர்களும், சுகத்தையும் சொகுசையும் விரும்புகிறவர்களுமாகிய ஒரேவிதமான ஜனங்களாய் இருப்பார்கள். ஆனால் ஒரு சிறந்த சபையோ, பக்தியுள்ள தலைவர்களைத் தன் “வலுவான மையக் கருவாகப்" பெற்றிருக்கும்.

பொதுவாய் இந்த மையக் கருவானது ஒருவரோடு ஒருவர் ஒன்றான ஐக்கியமாய் மாறிய இரண்டு சகோதரர்களிலிருந்து துவங்கி, அவர்களோடு தேவன் வாசமாயிருந்து, அந்தக் மையக் கரு அளவிலும், ஐக்கியத்திலும் வளரத் தொடங்கி விடும். இவ்வாறாகவேதான், “இரண்டு வேறுபட்ட கூறுகள் தாயின் கருப்பையில் ஒன்றாய் சேர்வதன்மூலம்” ஒரு மானிடக் கருவும் வளரத்தொடங்குகிறது. அந்தக் கரு பெரியதாய் வளர்ந்தாலும், அதன் திசுக்கள் யாவும் இசைவுடன் இணைக்கப்பட்டேயிருக்கும். இருப்பினும், ஏதாவது ஒரு சமயத்தில் இந்த திசுக்கள் சிதறிவிட்டால், அதுவே, அந்த சிசுவின் அழிவாய் மாறிவிடும்!

இதுபோலவேதான், கிறிஸ்துவின் சரீரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு ஸ்தல சபை கட்டப்படுவதும் இருக்கிறது. ஆம், அந்த “மையக் கரு” சிதறிவிட்டால், வெளிப்பகுதியில் உள்ள கட்டமைப்புகள் மாத்திரம் வெறும் ஒரு ஸ்தாபனமாய் இயங்கிக்கொண்டிருந்தாலும், உண்மையான சபையானது ஒழிந்து போய்விட்டிருக்கும்!

(அடுத்த வாரம் தொடரும்…..)