இரக்கம் என்பது பரிசேயம் என்னும் விஷத்திற்கு ஒரு சிறந்த விஷமுறிவாகும். மற்றவர்களிடத்தில் இரக்கமாயிருப்பது என்றால், நமக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது என்பதைவிட மேலான ஒன்றாகும். நல்ல சமாரியன் உவமையிலே, இரக்கம் என்றால் என்ன என்று இயேசு விளக்குகிறார் (லூக் 10: 25-37 - இரக்கம் என்ற சொல்லின் பயன்பாட்டை 37-ஆம் வசனத்தில் கவனியுங்கள்).
இந்த இடத்திலே வேத பண்டிதன் ஒருவன் இயேசுவிடத்திலே வந்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வது எப்படி என்ற கேள்வியை எழுப்பினான். அதற்கு இயேசு, தேவனிடத்திலே முழு இருதயத்தோடு அன்பு கூற வேண்டுமென்றும், தன்னைப் போல் பிறனை நேசிக்க வேண்டுமென்றும் பதிலளித்தார். ஆனால் அந்த வேத பண்டிதனோ (இன்றைய நாட்களில் உள்ள வேத பண்டிதர்களைப் போலவே), "சில விதமான மக்கள்மீது தனக்கிருந்த அன்புத்தாழ்ச்சியை நியாயப்படுத்தும் பொருட்டு" (வ 29 LB) இயேசுவிடம் தனக்கு அயலான் யாரென்று கேட்டான். அவன் தன்னை நியாயப்படுத்தின விதமே அவனை ஒரு பரிசேயன் என்பதை அடையாளப்படுத்திவிட்டது. ஆகவே இயேசு அவனுடைய கேள்விக்கு ஒரு விளக்கத்துடன் பதில் கொடுத்தார்.
இந்த உவமையிலே, வழியருகே குற்றுயிராய் கிடந்த ஒரு மனிதனை ஆசாரியன் (தேவனுடைய வீட்டின் மூப்பன்) ஒருவன் புறக்கணித்துச் செல்வதை வாசிக்கிறோம். அவன் தேவையுள்ள ஒரு மனிதனைக் கண்டும் அக்கறையற்றவனாய்ச் செல்கிறான். ஒருவேளை அந்த மனிதன் அவனுடைய அந்தரங்கப் பாவத்தினிமித்தம் சிட்சிக்கப்படுவதாக அந்த ஆசாரியன் நினைத்திருக்கக்கூடும். அல்லது இரவு வேளையிலே அந்த மனிதன் எவ்விதத் துணையுமின்றி அந்த வழியிலே சென்றது தவறான செயல் என்று அவன் மீது குற்றம் கண்டுபிடித்திருக்கலாம். அந்த ஆசாரியனை யோபுவுக்குப் பிரசங்கித்த அந்த மூன்று பிரசங்கிமார்களுக்கு மிகச் சரியாய் ஒப்பிடலாம். நாமும் கூட மற்றவர்கள் துன்பப்படும்போது, அவர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, பலவிதமான தவறுகளையும் அவர்கள்மீது கற்பனை செய்து, அவர்களை குற்றப்படுத்த முனைகிறோம். மனிதருடையத் தேவை என்று வரும்போது, நாம் எவ்வளவு அக்கறையற்றவர்களாய்க் காணப்படுகிறோம்! "பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயிருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை. நீங்கள் எனக்குப் பாட்டுக்களைப் பாடி, பிரசங்கங்களைச் செய்தீர்கள். ஆனால் என்னுடைய தேவையிலே எனக்கு உதவி செய்யவில்லை" என ஆண்டவர் நம்மிடம் கூறுகிறார்.
அந்த ஆசாரியன், துன்பப்படுகிற மனிதனுக்கு உதவி செய்வதைவிட, எருசலேம் கூடுகைக்குச் சரியான நேரத்திற்குப் போக வேண்டுமென்பதிலேதான் அதிக ஆர்வம் கொண்டிருந்தான். கூட்டங்களுக்குச் சரியான நேரத்திற்குச் செல்லும் அநேகர் முடிவிலே நரகத்தைச் சென்றடைவார்கள் என்பதை நினைவில் இருத்தி வையுங்கள். அதன் பின்பு, ஒரு லேவியன் (தேவனுடைய வீட்டிலுள்ள ஒரு சகோதரன்) அவ்வழியேக் கடந்து போனான். அவனும் தேவனால் சோதிக்கப்பட்டான். அவனும் கூட்டத்திற்குக் குறித்த நேரத்திற்குப் போகவேண்டுமென்பதிலேயே குறியாக இருந்தானே தவிர, மனுஷருடையத் தேவையைப் பற்றியெல்லாம் சற்றும் அக்கறைப்படவில்லை. இவ்விரு மதவாதிகளும் தேவன் தங்களோடு பேச வேண்டுமென முண்டியடித்துக்கொண்டு கூட்டத்துக்குப் போனார்கள். தேவன் வழியிலேயே அவர்களோடு பேசியதை அவர்கள் கடுகளவும் உணராதவர்களாய், தேவனுடைய சத்தத்திற்குச் செவிடரானார்கள். வழியிலே அவர்கள் எதிர்கொண்ட தேவையுள்ள மனிதனுக்கு உதவி செய்யாததினிமித்தம், இப்போது அவர்கள் பாடுகிற பாட்டு, ஏறெடுக்கிற ஜெபம் மற்றும் பக்தி ஆகிய அனைத்துமே வீணானது என்று தேவன் பேசுவதை அவர்கள் கேட்கவேயில்லை. தேவ பக்தியுள்ளவர்கள் படும் உபத்திரவங்களைக் கொண்டு அவற்றைக் காண்போரைத் தேவன் சோதிக்கிறார்.
நம்மில் ஒருவராகிலும் அந்த இரு மதவாதிகள் மீதும் கல்லெறிய முடியாது. ஏனென்றால், ஏதாவதொரு சமயத்திலாகிலும் நாமும் அவர்களைப் போலவே நடந்திருப்போம். நாம் அந்த ஆசாரியனைப் போலவும், லேவியனைப் போலவும் நம்மைக் காண்போமானால், தீவிரமாய் அதற்காக மனந்திரும்பி, வரும் நாட்களில் வித்தியாசமானவர்களாய் மாறுவோமாக. ஆசாரியன், லேவியன் ஆகியோரைப் போன்றே நாமும் இப்பூமியில் தேவனைப் பிரதிபலிக்கும்படி அவரால் வைக்கப்பட்டிருக்கிறோம். நாமோ அவரைச் சரியான விதத்தில் பிரதிபலித்துக் காண்பிக்கவில்லை என்பதை அறிந்தவர்களாய், ஆழமாய் மனந்திரும்ப வேண்டும்.
முடிவாக, புறக்கணிக்கப்பட்ட சமாரியனே (ஆசாரியன், லேவியன் ஆகியோரைப் போல தெளிந்த உபதேசத்தைப் பெற்றிராத மற்றொரு ஸ்தாபனத்தைச் சார்ந்த ஒரு சகோதரன்) அந்த காயப்பட்ட மனிதனுக்கு உதவி செய்யும்படி தேவனால் பயன்படுத்தப்பட்டான். அந்த சமாரியன் ஓர் ஆசாரியனாகவோ, லேவியனாகவோ இருக்கவில்லை. அவன் பிறருக்கு நன்மை செய்ய சுற்றித் திரிகிறவர்களில் ஒருவனாக, தேவையிலுள்ளவர்களுக்கு யாரும் அறியாவண்ணம் உதவும்படி சந்தர்ப்பத்தைத் தேடுபவனாக இருந்தான். காயப்பட்ட அம்மனிதனை அவன் நியாயந்தீர்க்கவில்லை. அம்மாதிரியான விபத்து தனக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆதலால் அவன் இரக்கம் உள்ளவனாக இருந்தான். தேவையிலுள்ள ஒரு சகோதரனுக்கு உதவி செய்வதற்காக தன்னுடைய நேரத்தையும், பணத்தையும் செலவழிக்க அவன் தயங்கவில்லை.
மாம்சத்தின் வழியாகத் திறக்கப்பட்ட புதிதும் ஜீவனுமான வழியை அங்குதான் உண்மையிலேயே நாம் காண்கிறோம்: கிறிஸ்து மாசத்தில் வெளிப்பட்டார் என்றால் அதுஅன்பு மாம்சத்தில் வெளிப்பட்டது என்பதாகும். அது இரக்கம் மாம்சத்தில் வெளிப்பட்டது என்பதாகும். அது நன்மை மாம்சத்தில் வெளிப்பட்டது என்பதாகும்.