எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை தலைவர்
WFTW Body: 

பெர்கமு சபையின் மூப்பர் பிலேயாமைப் போலவே “மனுஷர்களுக்கு” அடிமையாகியிருந்தபடியினால் அந்தச் சபையில் பிலேயாமின் உபதேசங்கள் ஓங்கிச் செழித்து விட்டது!

ஒரு தேவ ஊழியர் எப்போதும் “சுயாதீனத்தில்” நிலைத்திருப்பவராய் இருக்க வேண்டும்! ஏனெனில் “நாம் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டபடியால் மனுஷருக்கு அடிமைகளாகி விடக்கூடாது” (1கொரிந்தியர் 7:23) என வேதம் நம்மை எச்சரிக்கிறது.

“பிலேயாமின் உபதேசம்” - என்ற போதகம் இரண்டு பகுதிகளை உடையதாகும். அவைகள் 1) பொருளாசை 2) வேசித்தனம் என 2பேதுரு 2:14,15 வசனங்களில் காண்கிறோம்.

பணத்தை நேசிக்கிறவன் தேவனைப் பகைக்கிறான் என்றும், உலகப்பொருட்களைப் பற்றிக் கொண்டவன் தேவனை அசட்டை செய்கிறான் என்றும் லூக்கா 16:13-இல் இயேசு தெளிவாகக் கூறினார்.

இந்த சத்தியத்தை நாம் தெளிவாக நம்முடைய சபையில் பிரசங்கிக்காவிட்டால் “பிலேயாமின் போதகங்கள்” நம்முடைய சபையிலும் செழித்தோங்கி, சபையில் உள்ள சகோதர சகோதரிகளைப் பணப் பிரியர்களாய் மாறும்படிச் செய்துவிடும்.

ஆனால், இயேசு போதித்தவற்றை நாமும் போதிக்க வேண்டுமென்றால், பணத்தின் வலிமையான பிடியிலிருந்து முதலாவது நாம் விடுதலை பெற்றிருக்க வேண்டும். பணத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதைவிட கோபத்திலிருந்தும், கண்களின் இச்சையிலிருந்தும் விடுதலை பெறுவது எளிது என்றே கூறலாம்! ஆம், ஒரு தொடர்ச்சியான யுத்தத்தின் மூலமாகவே இத்தீமையை நாம் ஜெயித்திட முடியும்!

பண ஆசையே “எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” (1தீமோத்தேயு 6:10) என்ற உண்மையை நாம் தெளிவாய் கண்டிருக்கிறோமா? ஏனென்றால் கோபத்தையும், கண்களின் இச்சையையும் தீமையென அறிந்திருக்கும் அநேகர், பணத்தை நேசிப்பது தீமையென அறியாதிருக்கிறார்கள். ஆகையால் தான் இன்று அநேகர் பணத்திற்கு அடிமைகளாய் மாறிவிட்டார்கள். அவ்விதமாய், “தாங்கள் தேவனைப் பகைத்து அவரை அசட்டை செய்கிறோம்” என்ற உண்மையை சிறிது கூட உணராதிருக்கிறார்கள்.

“முழுநேர ஊழியர்கள்” எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் அநேகர், பிலேயாமைப்போல “பண ஆசைக்கு” அடிமைகளாயிருக்கிறார்கள்! இவர்கள் பணக்கார விசுவாசிகளின் வீடுகளையே சந்திக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்களுக்குக் கணிசமான காணிக்கைகளையும், அன்பளிப்புகளையும் தருவார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள். இதனிமித்தமே, இப்பணக்கார, பிரபல்யமான ஜனங்களின் பாவங்களைக் கடிந்துகொள்வதற்கு முடியாமல் இவர்களுடைய வாய் அடைக்கப்பட்டு விடுகிறது. தங்களுக்குக் கணிசமான காணிக்கைகள் கிடைக்கும் என நன்கு அறிந்திருக்கும் சபைகளுக்குப் பிரசங்கிக்கும்படியே இவர்கள் “ஊழியப் பயணம்” மேற்கொள்ளுகிறார்கள். இது போன்ற பிரசங்கிகள் தேவனுக்கு எவ்வாறு ஊழியம் செய்ய முடியும்? அது, ஒருக்காலும் முடியாது!! இவர்கள் உலகப் பொருளுக்கும், பணத்துக்குமே ஊழியம் செய்கிறவர்கள்!! இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவராலும் முடியாதென இயேசு மிகத் தெளிவாகக் கூறிவிட்டார்.

புதிய உடன்படிக்கையின் கீழ், தேவனுடைய ஊழியர்களாவதற்கு விரும்புகிற யாவருக்கும் மூன்று முக்கியமான தகுதிகள் வேண்டும்:

1) இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பாவத்திலிருந்து விடுதலை பெற்றிருக்க வேண்டும் (ரோமர் 6:26),

2) இவர் ஒரு போதும் மனுஷர்களைப் பிரியப்படுத்துகிறவராக இருக்கக் கூடாது (கலாத்தியர் 1:10),

3) இவர் பணத்தை வெறுத்து, அதை அசட்டை செய்கிறவராய் இருக்க வேண்டும் (லூக்கா 16:13).

நாம் புதிய உடன்படிக்கை ஊழியராய் இருப்பதற்குத் தகுதி பெற்றிருக்கிறோமா அல்லவா என்பதை அறிந்து கொள்ள இந்த மூன்று பகுதிகளையும் நம் ஜீவியத்தில் தொடர்ச்சியாய் சோதித்தறிய வேண்டும்.

நாம் தேவனை வலிமையாக சேவிக்க வேண்டுமென்றால், பணமும், உலகப் பொருட்களும் எந்தவிதத்திலும் நம் ஜீவியத்தைப் பற்றிக் கொண்டிருக்கவே கூடாது.

மேலும், நாம் பிறரிடமிருந்து அன்பளிப்புகள் அல்லது பரிசுப் பொருட்களை வாங்குவதை வெறுப்பவர்களாயும் இருக்க வேண்டும். ஏனென்றால் “வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதே பாக்கியம்” (அப்போஸ்தலர் 20:35) என இயேசு தெளிவாகக் கூறியிருக்கிறார்.

பணத்தின் மீது கொண்டிருக்கும் பிடிப்பிலிருந்து நாம் விடுதலை பெறாவிட்டால், நாம் தேவனிடத்தில் அன்புகூரவேண்டிய விதத்தில் அன்புகூரவோ அவரைச் சேவிக்க வேண்டிய விதமாய் சேவிக்கவோ முடியவே முடியாது. இந்நிலையில், “தேவனை நேசிக்கும்படி” நாம் பிறரை வழிநடத்தவும் முடியாது. அது மாத்திரமல்ல, பிலேயாமின் போதகத்தில் கட்டுண்டவர்களை விடுவிக்கவும் நம்மால் முடியாது!

பிலேயாமின் போதகத்தில் மறைந்திருக்கும் மற்றொரு கேடு “வேசித்தனம்” ஆகும். இந்தப் போதகம், சபையில் உள்ள சகோதர சகோதரிகள் எவ்விதத் தடையுமின்றி ஒருவரோடு ஒருவர் சுதந்திரமாய் சேர்ந்து பழகுவதற்கு அவர்களை ஊக்குவிக்கிறது. வெளி 2:14-ஆம் வசனம் சுட்டிக்காட்டுகிறபடி, மோவாபியப் பெண்கள் இஸ்ரவேல் புத்திரரிலுள்ள வாலிபர்களோடு தாராளமாய்ப் பழகுவதற்கு இந்த பிலேயாம் வழிவகுத்தான் என வாசிக்கிறோம். இந்தச் செயல் இஸ்ரவேலர்களை மோசமான வேசித்தனத்திற்குள் நடத்திவிட்டது. இதனிமித்தம் தேவன் ஒரே நாளில் 24,000 பேர்களைச் சங்கரித்தார் (எண்ணாகமம் 25:1-9).

முடிவில், இஸ்ரவேல் ஜனங்களின்மீது உண்டான வாதையை “பக்திவைராக்கியம் கொண்ட பினெகாஸின் ஈட்டி முனை” நிறுத்தியது. இதனிமித்தம் இஸ்ரவேல் மீது தேவன் கொண்டிருந்த கோபமும் தணிந்தது. பினெகாஸின் பக்தி வைராக்கியமான செய்கையைக்கண்ட தேவன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவராய், ஒரு நித்திய ஆசாரியப் பட்டத்துக்குரிய உடன்படிக்கையை அவனுக்குக் கொடுத்தார் (எண்ணாகமம் 25: 11-13). அன்று போலவே, இன்றும் சபையிலுள்ள சகோதர சகோதரிகள் தாராளமாய்ப் பழகுவதற்கு எதிராய் தீவிர வைராக்கியம் கொண்டவர்களையே தேவன் எப்போதும் கனம் பண்ணுகிறார்!

இந்த இடத்தில் மூப்பர்களாய் இருக்கும் நாம் நம்முடைய சொந்த நடத்தையில் சிறந்த மாதிரியாய்த் திகழ வேண்டும். சபையிலுள்ள நம்முடைய சகோதரிகளிடம் நாம் கொண்டிடும் நடத்தைகளில் மிகுந்த கவனமுடையவர்களாய் இருந்து, ஒருவித பக்தியற்ற நீண்ட சம்பாஷணைகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாய் நம்மிடத்தில் அடிக்கடி பேச விரும்பும் சகோதரிகளிடத்தில் மிகுந்த கவனம் கொண்டிருக்க வேண்டும். நாம் சகோதரிகளிடத்தில் பேச ஆசை கொண்டவர்களாய் இருந்தால் தேவனுடைய சபையை நடத்துவதற்கு நாம் தகுதியற்றவர்கள்! ஒரு பூட்டிய அறைக்குள் சகோதரிகளிடம் நாம் ஒருக்காலும் தனித்துப் பேசவே கூடாது. சகோதரிகளுக்கு ஆலோசனை சொல்லும் போது, நம்முடைய மனைவியை கூட வைத்துக் கொண்டு அல்லது சபையிலுள்ள இன்னொரு மூத்த சகோதரனைக் கூட வைத்துக்கொண்டு ஆலோசனை சொல்லுவதே எப்போதும் நல்லது!

சமாரியாவின் கிணற்றண்டையில் இயேசு ஒரு ஸ்திரீயிடம் பேசுவதை சீஷர்கள் கண்டபோது, “அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப் பற்றி ஆச்சரியப்பட்டார்கள்” என எழுதப்பட்டிருக்கிறது (யோவான் 4:27). ஏனென்றால், பொதுவாக ஒரு ஸ்திரீயிடம் இயேசு ஒருபோதும் தனியாய் பேசியதேயில்லை! ஆம், “தோற்றத்தில்கூட தீமையாய்த் தோன்றுகிற” எந்தக் காரியத்தையும் செய்யாதிருக்க இயேசு மிகுந்த கவனம் கொண்டிருந்தார். இதுவே நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டிய நல்ல மாதிரியாகும்.