WFTW Body: 

அப்போஸ்தலனாகிய பவுல் 2கொரிந்தியர் 2:14 -இல், “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணுகிற,...தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று கூறுகிறார். லிவிங் வேதாகம(Living Bible) மொழிபெயர்ப்பில், "தேவனுக்கு நன்றி! ஏனெனில், கிறிஸ்து செய்திருப்பவற்றின் மூலமாக, அவர் நம்மீது வெற்றிபெற்றிருக்கிறார்" என்று கூறுகிறது. ஆகவே, நாம் வெற்றியுடன் வாழ, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவன் நம்மை ஜெயிக்க வேண்டும்.

ஒருநாள் எல்லா முழங்காலும் முடங்கி, இயேசுவே ஆண்டவர் என்பதை அறிக்கை செய்யும் (பிலிப்பியர் 2:10,11). ஆனால் இப்பொழுதே, உங்கள் மாம்சத்திற்குள்ளிருக்கும் ஒவ்வொரு விருப்பம் என்னும் முழங்கால் யாவும் முற்றிலும் முடங்கி இயேசுவே ஆண்டவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உங்களை ஆளும் அந்த இச்சைகள், இயேசுவே உங்கள் சரீரத்தின் ஆண்டவர் என்பதை வணங்கி ஒப்புக்கொள்ள வேண்டும்.

"கர்த்தருடைய பட்டயம் தலை (வடக்கு) துவங்கி பாதம் (தெற்கு) மட்டுமாக எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் புறப்படும். அப்பொழுது கர்த்தராகிய நான் என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்." (எசேக்கியேல் 21:4,5).

"இயேசு கிறிஸ்துவே எல்லாவற்றிலும் (முதன்மையான இடத்தைப் பெறவேண்டும்) முதல்வராயிருக்கவேண்டும்” (கொலோசெயர் 1:18) என்ற இலக்கை நோக்கியே தான் தேவன் கிரியை செய்துகொண்டிருக்கிறார். இதையே நீங்களும் உங்கள் இலக்காகக் கொண்டால், உங்கள் வாழ்க்கைக்கும் அவருக்குச் சாட்சியாக இருப்பதற்கும் எல்லா நேரங்களிலும் தேவனுடைய உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கலாம்.

உங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கும் விதத்திலும், நீங்கள் எவ்விதமான புத்தகங்களைப் படிக்கிறீர்கள் என்பதிலும், நீங்கள் எவ்வித இசையைக் கேட்கிறீர்கள் என்பதிலும், நீங்கள் என்ன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறீர்கள் என்பதிலும், எவ்விதமான நண்பர்களுடன் பழகுகிறீர்கள் என்பதிலும், உங்கள் பேச்சிலும், இப்படி எல்லாவற்றிலும் கிறிஸ்துவே முதன்மையான இடத்தைப் பெற்றிருக்க வேண்டும். இயேசுவை எல்லாவற்றிற்கும் ஆண்டவராக ஏற்பது என்பதின் அர்த்தம் இதுதான். அப்போதுதான் தேவன் உங்களை எல்லாப் பகுதியிலும் ஜெயித்திருக்கிறார் என்று நீங்கள் சொல்ல முடியும். இது ஒரே இரவில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல. ஆனால் இதை உங்கள் நீண்ட கால இலக்காக வைத்து, அதை நோக்கித் தொடர்ந்து பிரயாசப்படுங்கள். அப்பொழுது நீங்கள் அந்த இலக்கை நாடோறும், ஆண்டுதோறும் நெருங்கி வருவீர்கள்.

இயேசு உலகத்தின் பாவங்களைச் சுமந்துதீர்த்த தேவ ஆட்டுக்குட்டி. இப்போது நாம், "அடிக்கப்படும் ஆடுகளைப்போல” (ரோமர் 8:35) பிறர் நமக்கு எதிராகச் செய்யும் பாவங்களைச் சுமந்துதீர்க்கும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். இதோ, நெருப்பும், கட்டையும் (நம் வாழ்க்கையின் சூழ்நிலைகள்) மோரியா மலையில் இருந்தது போல் தயாராக இருக்கிறது. ஆனால் கேள்வி என்னவெனில், (ஈசாக்கு தன் தகப்பனிடம் கேட்டது போல்) "ஆட்டுக்குட்டி எங்கே?" (ஆதியாகமம் 22:7) என்பதாயிருக்கிறது. "நீங்கள் அந்த ஆட்டுக்குட்டியாக இருக்க வேண்டும்" என்பதே அதற்கான பதிலாகும்.