எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   சீஷர்கள்
WFTW Body: 

இயேசு 30 வருடங்களாக தனக்கு நேரிட்ட எல்லா சோதனைகளிலும் உண்மையுள்ளவராய் இருந்த காரணத்தினிமித்தம், அவரது 30-வது வயதிலே தேவனுடைய அங்கீகாரம் அவர் மேல் வந்து தங்கியது. அவர் தன்னையே மையமாக வைத்து வாழாமல், பிதாவையே மையமாகக் கொண்டு வாழ்ந்தார். அவர் ஒருபோதும் தமக்கேப் பிரியமாய் நடக்கவில்லை (ரோம 15:3). அவருடைய ஞானஸ்நானத்தின் போது, பிதா அவரைப்பற்றி, "இதோ, இவர் என் நேசக் குமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்" என்றுதான் சாட்சி பகர்ந்தாரே அன்றி, "இவர் என் நேசக் குமாரன், இவரை நான் ஆசீர்வதித்திருக்கிறேன்" என்று சொல்லவில்லை. பிந்தின சாட்சியானது அர்த்தமற்றதாகும். இயேசுவைப் பொறுத்தவரை இந்த முந்திய சாட்சிதான்அவருக்கு எல்லாமாக இருந்தது. இயேசுவைப் பின்தொடருகிற நாமும் இதையே இலக்காய் வைத்து ஓட வேண்டும்.

ஆதாமின் பிள்ளைகளான நாம், சுயத்தை மையமாக வைத்து வாழ்வதையே சுபாவமாகக் கொண்டுள்ளோம். எல்லாக் காரியங்களும் நம்மைச் சுற்றியே வட்டமிட வேண்டும் என்றும் நமக்கே சேவை புரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடனும்தான் நாம் வளருகிறோம். மனந்திரும்பிய பிறகும், தேவனும் நமக்கு ஊழியம் செய்து, நம்மை எல்லாவிதத்திலும் ஆசீர்வதிக்க வேண்டுமென விரும்புகிறோம். அவரிடத்தில் பாவமன்னிப்பின் ஆசீர்வாதத்தைப் பெற்று கிறிஸ்தவ ஜீவியத்தைத் தொடங்கின நாம், அதன் பின்பு வரிசையாக சரீர சுகம், பொருளாதாரப் பெருக்கம், வேலை வாய்ப்பு, வீடு, திருமணக் கூட்டாளி என்று ஆசீர்வாதங்களை விரிவாக்கிக் கொண்டே போகிறோம். நம்முடைய கண்களுக்கு முன்பாகவும், பிறருடைய கண்களுக்கு முன்பாகவும் நாம் ஆழ்ந்த 'மத ஈடுபாடுடையவர்' என்னும் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, இன்னமும் சுயத்தை மையமாக வைத்து வாழ்வதிலே வலிமையுள்ளவர்களாக இருக்க முடியும். நம்மைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கிற அந்தச் 'சுற்றுப் பாதையிலே' (orbit) இப்போது இயேசுவையும் இணைத்துவிட்டோம். அவரிடத்திலிருந்து என்னவெல்லாம் கிடைக்குமோ, அவை எல்லாவற்றையும் பெற விழைகிறோம். உணவு கிடைத்தால் போதும் என்ற மனநிலையுடன் வந்த கெட்ட குமாரனையும் தகப்பன் ஏற்றுக்கொள்ளத்தான் செய்தார். அது போலவே சுய நலத்திலேயே ஊறிப்போன நோக்கங்களை உடையவர்களாய் நாம் இருந்தாலும், தேவன் நம்மை ஏற்றுக் கொள்ளுகிறார். நாம் நமது சுயத்தையே மையமிட்டு வாழுகிறவர்களாய் இருந்தாலும், அவர் நம்மீது கொண்ட அன்பின் மிகுதியினிமித்தம், நாம் அவரிடத்தில் போக வேண்டுமென ஏக்கம் உடையவராகவே அவர் இருக்கிறார். வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம் என்பதுதான் உண்மையான ஆவிக்குரிய தன்மை கொண்ட தெய்வீக சுபாவமாகும். இதில் பங்கு பெற வேண்டும் என்பதை வெகு சீக்கிரத்திலேயே உணர்ந்துவிடுவோம் என்பதே நம்மைப்பற்றி அவருடைய நம்பிக்கையாயிருக்கின்றது. ஆனால் பெரும்பான்மையான விசுவாசிகளின் மத்தியிலே இந்த உணர்வை தேவனால் ஏற்படுத்த இயலாமலேயே போய்விடுகின்றது. அவர்கள் 'நான்', 'எனக்கு', 'என்னுடையது' என்னும் சிந்தனை கொண்ட சுய-மையத்தை உடையவர்களாக, பொருளாதார மற்றும் சரீர ஆசீர்வாதங்களுக்காகவே வாழ்ந்து, மரிக்கிறார்கள்.

நமக்குக் கிடைக்கப் பெற்ற இந்த ஒரே வாழ்க்கையில் தேவனிடமிருந்து எந்த அளவுக்கு எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற விருப்பத்திலிருந்து நம்முடைய மனமானது விடுபட்டு, நம்மிடத்திலிருந்து தேவன் எந்த அளவுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற விஷயத்தில் நம்முடைய மனமானது மறுரூபம் அடைய வேண்டும். இதைத்தான் நாம் முதிர்ச்சி அடைதல் அல்லது பூரணமடைதல் என்கிறோம். நம்முடைய மனம் புதிதாவதினால்தான் நாம் மறுரூபமடைய முடியும் (ரோம 12:2). இந்தக் காரியந்தான் சீயோன் மலையிலே ஆட்டுக்குட்டியானவரோடு நிற்கும்படிக்கு 144000 பேரைத் தகுதிப்படுத்தியது (வெளி14). ஒருவர் கோபத்தை, எரிச்சலை, அசுத்த சிந்தனைகளை, பண ஆசையை மேற்கொள்ளுவதால் மாத்திரமே அவர் ஆவிக்குரிய தன்மையுள்ளவராக மாறிவிட முடியாது. அவர் தனக்காக வாழுவதை நிறுத்தும் போதுதான் ஆவிக்குரிய தன்மையைப் பெற முடியும். நமது சுய இலாபம், நமது சுய வசதி, நமது சுய சௌகரியம், நமது சுய சித்தம், நமது சுய உரிமைகள், நமது சுய கனம், நம்முடைய சொந்த ஆவிக்குரிய தன்மை போன்றவற்றைத் தேடுவதை நிறுத்திவிடுவதுதான் ஆவிக்குரியத் தன்மையாகும்.

, எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும் என்று கேட்ட சீஷர்களுக்கு ஒருமுறை கூட 'நான்', 'எனக்கு', 'என்னுடையது' என்ற வார்த்தைகளை பயன்படுத்தாத ஜெபத்தைத்தான் இயேசு கற்றுக் கொடுத்தார் (லூக் 11:1-4). நாம் பிதாவின் நாமம், ராஜ்ஜியம், சித்தம் ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுத்து, அதன் பிறகு எனக்கு, எனக்கு, எனக்கு என்று சொல்லாமல் எங்களுக்கு, எங்களுக்கு, எங்களுக்கு என்று சொல்லுவதின் மூலம் சக விசுவாசிகளுடைய நலனிலும் அக்கறை உடையவர்களாய் ஜெபிக்கும்படியே இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். இந்த வார்த்தைகளை ஒரு கிளிப்பேச்சைப் போல மனனம் செய்து ஒப்பிப்பது மிகவும் எளிதான செயலாகும். ஆனால் இதை நடைமுறை வாழ்க்கையில் அப்பியாசிக்க வேண்டுமானால், எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கி விட்டு, நம்முடைய இருதயத்தில் தேவனையே மையமாகக் கொண்டிருப்பது மிக அவசியமாகும். நாம் நம்மை நாமே நியாயந்தீர்ப்பதில் நேர்மை உள்ளவர்களாக இருப்போமானால், வாழ்நாளெல்லாம் நம்முடைய வசதிகளையும், உரிமைகளையும் இச்சையுடன் தேடும் சுயவிருப்பப் பிரமாணத்தை நம்முடைய அவயவங்களில் உள்ளதை அடிக்கடி காணலாம்.

தேவனுடைய ராஜ்ஜியத்தையே முதலாவதாகத் தேட வேண்டுமென்றே இயேசு நமக்குக் கற்பித்தார். அதாவது நம்முடைய 'சுயத்தை' அரியணையிலிருந்து கவிழ்த்துவிட்டு, தேவனுக்கும், அவரது விருப்பங்களுக்கும் முதலிடம் தருவதே அதன் அர்த்தமாகும். இப்பூமியில் பிதாவின் சித்தத்தைச் செய்வதற்காக இயேசு பரலோகத்தின் வசதிகளைத் துறந்தார். பவுல், தர்சு பட்டணத்தில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபராக ஆடம்பரமாய் இருப்பதன் மூலம் கிடைக்கும் வசதிகளை எல்லாம் துறந்தவராய், கர்த்தருக்காக உபத்திரவங்களை எதிர்கொள்ளும் ஓர் அப்போஸ்தலனாய் இருப்பதையே தேர்ந்தெடுத்தார். அப்போஸ்தலர் ஒவ்வொருவருமே இத் தியாகம் நிறைந்த தேவ-மைய வாழ்க்கையையே வாழ்ந்தனர். இன்றைய 'சுற்றுலாப் பிரசங்கிகளைப்' போலல்லாது, தேவனுடைய ராஜ்ஜியம் இப்பூமியில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள்.

ஒருவேளை நாம் கோபத்தையும், அசுத்த சிந்தையையும் ஜெயித்து பரிசுத்தத்தை அடைந்திருந்தாலும், நம்முடைய சொந்த வசதிகளையும், சௌகரியங்களையும் தேடுகிற காரியம் நம்மில் காணப்படுமானால், நாம் அடைந்த பரிசுத்தம் போலியானது என்பதில் சற்றேனும் ஐயமில்லை. இது அநேகரால் உணர்ந்து கொள்ளப்படாத விஷயமாகும். இதினிமித்தம் சாத்தானால் அவர்களை எளிதில் வஞ்சிக்க முடிகின்றது. நிறைய கிறிஸ்தவர்கள் பல நாடுகளுக்குப் பயணித்தும், புலம் பெயர்ந்தும் தங்களுடைய சௌகரியத்தையும், வசதியையும், செல்வத்தையும் தங்களுக்கென்று தேடிக் கொள்ளுகிறார்கள். அவர்களால் தேவ ஆசீர்வாதங்களைத் தங்களது வாழ்க்கையில் பெற முடிந்தாலும், அவரது அங்கீகாரத்தைப் பெறவே முடியாது. ஏனெனில் ஒருவனாலும் தேவனுக்கும், செல்வம், சுகம், வசதி முதலிய உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய இயலாது. நம்முடைய ஜீவியத்திலும், நம்முடைய பிள்ளைகளின் ஜீவியங்களிலும் தேவ ஆசீர்வாதம் நிரம்பி இருப்பதைப் பார்த்து, இது தேவன் நம்மீது சந்தோஷமாக இருப்பதற்கான ஓர் அடையாளம் என்று நம்பிக் கொண்டிருப்போமானால், சாத்தான் நம்மை நன்றாய் வஞ்சித்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். தேவ ஆசீர்வாதம், தேவ அங்கீகாரம் என்பன இருவேறு துருவங்களாகும். நம்முடைய பூவுலப் பயணத்தின் முடிவில் நாம் பெறக்கூடிய சாட்சியானது, 'அவன் தேவனுக்குப் பிரியமானவன்' (எபி 11:5) என்று ஏனோக்கு பெற்ற சாட்சியைப் போலவே இருக்க வேண்டும். வெறும் மூன்று வார்த்தைகள் மட்டும்தான் என்றாலும், ஒருவன் தன்னுடைய பூலோக வாழ்க்கையில் பெறக்கூடிய வலிமையான சாட்சி என்று இதைவிட வேறு எதுவுமே இருக்க முடியாது. இயேசுவும், பவுலும் பெற்ற சாட்சியும் இதுதான். வெறுமனே 'அவன் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன்' என்ற சாட்சியானது ஒரு மதிப்பும் இல்லாததாகும். மில்லியன் கணக்கான அவிசுவாசிகளுக்கும் இவ்வித சாட்சி உண்டு. தேவ ஆசீர்வாதத்தைத் தேடாமல், அவருடைய அங்கீகாரத்தை மட்டும் தேடுகிறவர்களையே தேவன் எதிர்பார்க்கிறார்.