எனது நீதிமொழிகளில் ஒன்று இதோ: "ஞானமுள்ள மனிதன் பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வான். சாதாரண மனிதன் தன்னுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வான். ஆனால் ஒரு முட்டாள் தன்னுடைய சொந்த தவறுகளில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டான்".
ஒரு தகப்பனாக, நான் மற்ற தகப்பன்மார்களிடம் கண்ட தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்பினேன். என் மகன்கள் என்னைப் பின்பற்றுவதற்கு நான் எவ்வித முன்மாதிரியை அவர்கள் முன் வைக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். 'வாழ்க்கையின் இறுதிவரையிலும், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவதும், எல்லா மனிதர்களிடமும் ஞானமுள்ள அன்பில் நிலைத்திருக்க வேண்டும்' என்பதே நான் அவர்கள் முன் வைத்திருக்கும் மாதிரி என்று நம்புகிறேன்.
தொந்தரவு தரும் மக்களிடமிருந்து நல்ல தூரத்தை வைத்திருப்பது ஞானம். மேலும் ஞானமானது உங்கள் அன்பை நிர்வகிக்க வேண்டும். உங்கள் பெட்ரோல் டேங்க் (உங்கள் இருதயம்) முழுவதும் அன்பு நிறைந்ததாக இருக்க வேண்டும், ஆனால் ஞானம் ஓட்டுநர் இருக்கையில் இருக்க வேண்டும். இல்லையெனில், மனுஷீக அன்பு பல மதியீனமான காரியங்களைச் செய்துவிடும். உங்களுடைய அன்பு "பகுத்தறிவில் (ஞானத்தில்) பெருக வேண்டும்" (பிலிப்பியர் 1:9). நீங்கள் ஒருவரையும் வெறுக்கவோ, யாரிடமும் கடினமாகவோ நடந்துகொள்ளக் கூடாது. உங்களை வாழ்த்தாதவர்களை நீங்கள் வாழ்த்துங்கள். எல்லா நேரத்திலும், எல்லா மனிதர்களிடமும் மரியாதையுடன் பேசுங்கள் (1பேதுரு 2:17 -ல் சொல்வது போல்). உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்கிறவராய் இருங்கள்.
பரிசேயர்கள் இயேசுவை "பெயல்செபூல்" என்று அழைத்தபோது, அவர் அவர்களை மன்னித்தார் (மத்தேயு 12:24,32). அவர்கள் அவரை வழக்குமன்றத்துக்கு இழுத்துச் சென்று, அங்கு அவர் மீது பொய்க்குற்றம் சாட்டியபோது, அவர் அவர்களை ஒருபோதும் பயமுறுத்தவில்லை, ஆனால் தம்முடைய காரியத்தை பிதாவிடமே ஒப்புவித்தார் (1பேதுரு 2:23). அதுபோல, நாம் இயேசுவின் அடிச்சுவடுகளையே பின்பற்ற வேண்டும்.
எதோ ஒரு பரிசேய நபர் உங்கள் மீது குற்றம் சாட்டினால் (அல்லது உங்களை ஒரு நாள் வழக்கு மன்றத்திற்கு இழுத்து சென்றால்), இயேசு கூறியதை நினைவில் கொள்ளுங்கள்: "நீங்கள் அனைவராலும் வெறுக்கப்படுவீர்கள். உங்களை வழக்கு மன்றத்துக்கு இழுத்துச் செல்வார்கள். ஆனால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள். நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். (அதனால், நீங்கள் அங்கு அமைதியாக இருக்க வேண்டியதில்லை!). மனுஷருக்கு பயப்பட வேண்டாம், மறைக்கப்பட்ட அனைத்தும் வெளியரங்கமாகும். ஆனால் முடிவுபரியந்தம் (எல்லாரிடத்திலும் அன்பில்) நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்கும் காலம் வரும்" (மத்தேயு 10:16-30; மத்தேயு 24:9-13; யோவான் 16:2).
எனவே, எப்போதும்:
(1) முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,
(2) எப்போதும் மற்றவர்களிடம் ஞானம் நிறைந்த அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாயிருங்கள்.
கிறிஸ்தவத்தில் உள்ள ஒவ்வொரு குழுவும் தங்கள் வேதப்புத்தகத்தை உயர்த்தி, "நாங்கள் சொல்வது சரி. தேவன் எங்களோடு இருக்கிறார்" என்று கூறுகிறார்கள். அவர்களில் யார் சொல்வது சரியானது? ஆண்டவரிடமிருந்து எனக்கு இதில் ஒரு தெளிவான பதில் கிடைத்தது: "தேவன் எப்போதும் உண்மையைப் பேசுபவர்களிடமும் (அந்த உண்மை அவர்களுக்கு எதிராக சென்றாலும்), எப்போதும் மற்றவர்களிடம் ஞானம் நிறைந்த அன்பில் நிலைத்திருப்பவர்களிடமும் (அதாவது, ஒருபோதும் மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாதவர்களிடமும் தீங்கு செய்ய விரும்பாதவர்களிடமும்) இருக்கிறார்."
உங்கள் வாழ்க்கையை, எப்பொழுதும் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவதில் செலவிடுவீர்களாக. அதாவது, உங்கள் படிப்பில் அல்லது வேலையில் சிறப்பாக செயல்படுவதும், கிறிஸ்தவர்கள் எல்லாத் துறைகளிலும், நேர்மையான வாழ்க்கையிலும், மற்றவர்களிடம் தன்னலமற்ற அன்போடும் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை எடுத்து காட்டுவதாகும்.
எந்த ஒரு விஷயத்திலும் உங்களை யாராவது குறைகூறினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு அறிவுரை சொல்லுகிறேன்: உங்களைத் தற்காத்துக்கொள்ள ஒருபோதும் முயற்சி செய்ய வேண்டாம். ஏசாயா 54:17 -ன் படி கர்த்தர் தாமே உங்களைப் பாதுகாக்கட்டும்: "உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும்; இது என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்". பெரும்பாலான மனுஷர்களிடம் காரியங்களைத் தெளிவுபடுத்த முயற்சிப்பது பயனற்றது. தேவன் சர்வவல்லமையுள்ளவராயிருக்கிறார்; அவருடைய நீதி அக்கினி போன்றது, அது நம்மைப் போன்ற அற்பமானவர்களிடமிருந்து எந்த பாதுகாப்பையும் தேடுவதில்லை.