தான் பரிசுத்தவான் என்று சொல்லிக்கொள்கிற ஒருவரிடத்தில் திவ்விய அன்பு காணப்படாவிட்டால், அவரிடத்திலுள்ள பரிசுத்தம் பரிசேயத்தனமான 'நீதியே' ஒழிய, மெய்யான பரிசுத்தம் அல்ல! அது போலவே தன்னிடத்தில் எல்லோரிடமும் காட்டும் அன்பு இருக்கிறது என்ற சொல்லிக்கொள்கிறவரிடத்தில், நீதியும் பரிசுத்தமும் காணப்படாவிட்டால் அவர்களும் வஞ்சிக்கப்பட்டவர்கள்தான்!! இன்னும் அநேகர், தங்களிடத்திலுள்ள மேலோட்டமான மாம்ச ஈர்ப்பின் உணர்வுகளைக்கூட தெய்வீக அன்பு என்று தவறாய் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
பரிசேயர்களிடத்திலோ, உலர்ந்த வறட்சியான 'நீதி' தான் காணப்பட்டது. அவர்கள் கடினமான, உயிரற்ற எலும்புக்கூடுகளைப் போலவே இருந்தார்கள். அவர்களிடத்தில் சத்தியம் கொஞ்சம் காணப்பட்டது! ஆனால், அது கோணலாயும் ஒவ்வாததாயும் இருந்தது!!
இயேசுகிறிஸ்துவினிடத்தில் சகல சத்தியமும் இருந்தது! அந்த பரிசேயர்களைவிட, தேவ பிரமாணத்தின் ஒவ்வொரு எழுத்திற்காகவும் அவர் அதிக வைராக்கியமாய் இருந்தார்! ஆனால் அவரோ, ஈரம் இல்லாத எலும்பாய் இல்லை! தேவன் விரும்புகிறபடி, மனிதர்களுக்கு எப்படி எலும்புகள் மாமிசத்தால் போர்த்தப்பட்டுள்ளதோ, அப்படியாக ஒளியானது அன்பினால் போர்த்தப்பட்டு இருக்கவேண்டும்!! அவர், சத்தியத்தைப் பேசினார், அதை அன்புடன் பேசினார் (எபேசியர் 4:5). அவருடைய வார்த்தை அதிகாரமுடையதாயும் இருந்தது..... ஆனால், அதே சமயத்தில் கிருபை பொருந்தினதாகவும் இருந்தது!! (லூக்கா 4:22,36).
இயேசுவினிடத்தில் காணப்பட்ட “இந்த மகிமையை” நமக்குக் கொடுக்கவும், நம் மூலமாய் வெளிப்படுத்தவுமே பரிசுத்த ஆவியானவர் விருப்பமாய் இருக்கிறார்!
தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் அன்பாய் 'நடக்கிறார்' என்று சொல்லப்படவில்லை, தம் முழு ஜீவியத்திலும் இயல்பாகவே அன்பாய் இருக்கிறார். இயேசுவினிடத்தில் வெளிப்பட்ட தேவனுடைய மகிமை இதைத் தெளிவாய் காண்பிக்கிறது. இயேசுகிறிஸ்து அன்பான நடக்கை உடையவராய் மாத்திரம் காணப்படவில்லை. அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார் (அப்போஸ்தலர் 10:38) என்பதும் உண்மைதான். ஆகிலும், அவையாவும் அவரது ஆள்த்துவம் முழுமையையும் நிறைத்திருந்த அன்பின் வெள்ளத்திலிருந்து பிரவாகித்தவைகளேயாகும்!
மனத்தாழ்மைக்கும், பரிசுத்தத்திற்கும்போலவே, அன்பு உதிக்கும் இடமும் நம்முடைய உள்ளான மனுஷனிலிருந்துதான்! ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதனின் உள்ளத்திலிருந்தே ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் (யோவான் 7:38,39). நம்முடைய வார்த்தைகள், செய்கைகள், ஆள்த்துவம் (Personality) யாவற்றுக்கும்... நம்முடைய எண்ணங்களும் நோக்கங்களும் (attitutes) ஒரு வாசனையை வெளிப்படுத்துகின்றன. மற்றவர்கள், வெகு சுலபமாய் இந்த வாசனையைக் கண்டு கொள்ளமுடியும். நம்முடைய எண்ணங்களும் நோக்கங்களும் பிறரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கிறதாயும், தன்னலம் உடையதாயும் இருக்கும்போது, நம்முடைய அன்பான வார்த்தைகளோ செய்கைகளோ ஒன்றுமில்லாமல்தான் இருக்கும்! எனவேதான் “தேவன் உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகின்றார்!” (சங்கீதம் 51:6) என வேதம் கூறுகிறது.
எல்லா மனிதர்களுக்கும் இயேசு பெரும் மதிப்பு கொடுத்து, அவர்கள் எல்லோரையும் மதித்தார். அறிவாளிகளையும் பண்புள்ளவர்களையும் தெய்வ பக்தியுள்ளவர்களையும் மதிப்பது மிகவும் எளிது. கிறிஸ்துவுக்குள் நம்முடைய சக விசுவாசிகள் எல்லோரையும் நாம் நேசிக்கும் போது, நாம் மிகப்பெரிய உச்சக்கட்டத்துக்கு வளர்ந்து போலவும் நம்மை எண்ணக்கூடும்! ஆனால், “எல்லா மனிதரிடத்திலும்” அன்புகூர்ந்த இயேசுவினிடத்தில்தான் தேவனுடைய மகிமை பிரதிபலித்தது. இயேசு ஒருபோதும் பிறருடைய ஏழ்மையையோ, அறியாமையையோ, அவலட்சணத்தையோ, பண்பாடற்ற தன்மையையோ வைத்து அவர்களை அவமதிக்கவில்லை. ஏனெனில், இந்த முழு உலகமும் அதிலுள்ள யாவும் சேர்ந்து ஒரு மனிதனுடைய ஆத்துமாவுக்கு விட்ட ஈடானது அல்ல என்றே இயேசு குறிப்பிட்டார் (மாற்கு 8:36). அப்படித்தான் அவர் மனிதர்களுக்கு மதிப்புக்கொடுத்தார்.. ஆகையால் தான், அவர் எல்லா மனிதரிடத்திலும் மகிழ்ச்சியாய் இருக்கமுடிந்தது! அவர், மனிதர்களை வஞ்சிக்கப்பட்டவர்களாகவும் சாத்தானால் கட்டுண்டவர்களாகவும் கண்டு, அவர்களை விடுதலை ஆக்கும்படியே தவிப்படைந்தார்!
இயேசு பொருட்களைவிட மனிதர்களை மிகவும் முக்கியமானவர்களாகக் கண்டிருந்தார். அவர்களை அவர் பெரிதும் நேசித்து அவர்களுடன் அவர் ஒன்றாகக் கலந்து “நாம் விரும்பப்படத்தக்கவர்கள்” என்று உணரும்படிச் செய்தார். அவர்களுடைய பாரத்தை பகிர்ந்து கொண்டு, வாழ்க்கைப் போரட்டத்தில் தோற்றுப் போயிருந்தவர்களுக்கு உற்சாகத்தையும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அன்பான வார்த்தைகளையும் சொல்லி அவர்களைத் தேற்றினார். அவர் ஒருபோதும் ஒரு மனிதனையும் வீணராக எண்ணியிருக்க மாட்டார். அவர்கள் அறியாமை கொண்டவர்களாகவும், கரடுமுரடானவர்களாகவும் இருந்தாலும், அவர்கள் நித்தியத்திற்குரிய சிருஷ்டிப்புகள்! மீட்கப்படவேண்டியவர்கள்! என்று அறிந்திருந்தார்.
மாறாக, பொருட்களையோ ஒன்றுமில்லாததாகக் கண்டார். அநித்தியமான உலகப் பொருட்கள் மற்றவர்களுடைய பிரயோசனத்திற்கு உபயோகப் பட்டாலொழிய, அதற்கு மதிப்பு இல்லை. ஒருவேளை, ஒரு குழந்தை இயேசுகிறிஸ்துவின் தச்சுக்கூடத்தில் நுழைந்து அதிக விலையுள்ள ஒரு பொருளை உடைத்திருக்குமானால், அது அவரை சிறிதும் பாதித்திருக்காது. ஏனெனில் அந்தப் பொருளைவிட அந்தக் குழந்தையே அதிக விலைமதிப்புள்ளது. அவர் ஜனங்களை நேசித்தார், பொருட்களையல்ல! பொருட்களையோ மற்றவர்களுக்கு உதவவே உபயோகப்படுத்தினார்!!
தேவன் பார்க்கிறவிதமாகவே நாமும் எல்லாவற்றையும் பார்க்கும் படிக்கே பரிசுத்தாவியானவர் நம்முடைய மனதைப் புதிதாக்குகிறார் (கொலோசெயர் 1:9). ஒரு மனிதனை நேசிப்பதென்பது, தேவன் அவனை எப்படி இரக்கத்துடன் பார்க்க விரும்புகிறாரோ அப்படியே பார்த்து நேசிப்பதுதான்.
தேவன் தம்முடைய ஜனத்தில் சந்தோஷமாய் மகிழ்ந்து, அன்பின் நிமித்தம் அமர்ந்திருப்பார்! என செப்பனியா 3:17 கூறுகிறது. அப்படியே இயேசுவும் தேவனுடைய ஆவியில் நிறைந்திருந்தபடியால், பிள்ளைகளிடத்தில் பிதா கொண்டிருந்த சந்தோஷத்தை அவரும் பகிர்ந்துகொண்டார்! மனம் புதிதாகிறதினாலே, தேவன் மனிதர்களைப் பார்க்கிறதுபோலவே பார்த்திடப் பழகியவர்களுடைய நிலையும் அப்படித்தான் இருக்கும்!! மனிதர்களைப்பற்றிய இயேசுகிறிஸ்துவின் சிந்தனை, எப்பொழுதும் நிலைகொண்ட அன்பாகவும், ஒருபோதும் அவர்களுடைய தோற்றத்தின்படியோ, பண்பு அறியா நாகரீகத்தின்படியோ குற்றம் கண்டு பிடிக்கிறதாக இருக்காது. ஆகையால்தான், அவருடைய ஆவியில் உள்ள ககந்த வாசனையினாலே பாமரமக்களும் அவர் சொல்வதைக் கேட்க சந்தோஷமாய் வந்தார்கள்! நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் பொழுது, இப்படிப்பட்ட அன்பைத்தான் தேவன் நம்முடைய இருதயத்திற்குள் வெள்ளமாய் பாய்ச்சுகின்றார் (ரோமர் 5:5).