WFTW Body: 

"சகலமும் அவருக்காகவே இருக்கிறது" (ரோமர் 11:36). தேவன் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார். எனவே, நித்தியத்திற்குரிய சகல காரியங்களும் அவரில் இருந்தே துவங்குவதால், அவரிலேயே தங்கள் முழுநிறைவை அடைகின்றன. சகலமும் தேவனால், அவருடைய மகிமைக்காவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அது, தேவன் சுயநலமாக நம் மகிமையை விரும்புபவர் என்பதால் அல்ல. அவர் முழுவதுமாக தம்மில் தாமே நிறைவு பெற்றவராயிருக்கிறார், மேலும் அவருடைய நிறைவை இன்னும் முழுமைபெறச் செய்யும் வகையில் நாம் அவருக்கு வழங்கக்கூடியது என்று எதுவும் இல்லை. அவருடைய மகிமையை நாம் தேடும்படி அவர் நம்மை அழைக்கும்போது, ​​அதுவே நம்முடைய வாழ்வின் உயர்ந்த நன்மைக்கான வழி என்பதனால் தான் அவர் நம்மை அப்படி அழைக்கிறார். இல்லையெனில், நாம் சுயத்தை மையம் கொண்டு, பரிதாபமானவர்களாய் இருப்போம்.

சகலமும் தம்மை மையமாகக் கொள்ளவேண்டும் என்பது தேவன் தம்முடைய சிருஷ்டிப்பில் உட்படுத்தியிருக்கும் ஒரு பிரமாணமாகும். அந்தப் பிரமாணத்தை சுயாதீன சித்தமுள்ள ஜீவராசிகளால் மட்டுமே மீற முடியும். உயிரற்ற சிருஷ்டியானது (சூரியன் மற்றும் சந்திரன் போன்றவை) அதனை சிருஷ்டித்தவருக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து அவரை மகிமைப்படுத்துகிறது. ஆனால் ஆதாமோ அந்தப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியவில்லை; அதன் பின்விளைவுகளை நாம் மனிதகுலத்தின் துயரத்தில் பார்க்கிறோம்.

"உமது நாமம் பரிசுத்தப்படுவதாக" என்பதே இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்த ஜெபத்தில் உள்ள முதல் விண்ணப்பமாகும். இதுவே ஆண்டவராகிய இயேசுவின் இருதயத்தில் முதன்மையான ஏக்கமாக இருந்தது. அவர் "பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்" என்று ஜெபித்து, சிலுவையின் வழியே அவரை மகிமைப்படுத்துவதாயிருந்தபடியால் அந்த வழியை அவர் தெரிந்துகொண்டார் (யோவான் 12:27,28).

"பிதாவின் மகிமை" என்ற ஓர் உயர்ந்த இலட்சியம் மட்டுமே, கர்த்தராகிய இயேசுவின் வாழ்க்கையை ஆளுகை செய்தது. அவர் செய்த அனைத்தும், பிதாவின் மகிமைக்காகவே இருந்தது. அவருடைய வாழ்க்கையில் 'பரிசுத்தமானது', 'லௌகிகமானது' என்ற தனித்தனி பகுதிகள் எதுவும் இல்லை. எல்லாமே பரிசுத்தமாக இருந்தது. எப்படி அவர் பிதாவினுடைய மகிமைக்காக பிரசங்கித்து, வியாதியஸ்தரை சொஸ்தமாக்கினாரோ, அதுபோலவே அவர் பிதாவினுடைய மகிமைக்காக மேஜைகளையும் இருக்கைகளையும் உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் அவருக்கு ஒன்றுபோல பரிசுத்த நாளாகவே இருந்தது; தேவனுடைய ஊழியத்திற்குக் கொடுக்கப்பட்ட பணத்தையும், அல்லது ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தையும் போலவே அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கு செலவிடப்பட்ட பணமும் பரிசுத்தமாக இருந்தது.

இயேசு பிதாவின் மகிமையை மட்டுமே நாடி, பிதாவின் அங்கீகாரத்திற்காக மட்டுமே முழு அக்கறை காட்டினபடியால், அவர் எப்பொழுதுமே பரிபூரண இளைப்பாறுதலுள்ள இருதயத்துடன் வாழ்ந்தார். அவர் பிதாவின் முகத்திற்கு முன்பாக வாழ்ந்தார்; மனிதர்களின் கனத்தையோ, புகழையோ பொருட்படுத்தவில்லை. "சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான்" என்று இயேசு கூறினார் (யோவான் 7:18).

மாம்சீகமான கிறிஸ்தவன், எவ்வளவு தான் தேவனுடைய மகிமையைத் தேடுவது போல் பாசாங்கு செய்தாலும், உண்மையில் அவன் தன் உள்ளத்தின் ஆழத்தில் தனது சொந்த கனத்திலேயே ஆர்வமாக இருப்பான். ஆனால் இயேசுவோ ஒருபோதும் தனக்கான எந்தவொரு கனத்தையும் தேடவில்லை. மனிதனுடைய புத்திக்கூர்மையில் தொடங்கி, சுய புத்தியினாலும் தாலந்துகளாலும் செயல்படுத்தப்படும் காரியம் எப்போதும் தன்னை (மனிதனை) மகிமைப்படுத்துவதிலேயே முடிவடையும். ஆத்துமாவில் தொடங்கும் எதுவும் சிருஷ்டியை மட்டுமே மகிமைப்படுத்தும். ஆனால் நித்தியத்தின் யுகங்களில், வானத்திலோ அல்லது பூமியிலோ எந்த மனிதனுக்கும் கனத்தையோ மகிமையோ தரக்கூடிய எதுவும் இருக்காது. காலத்தை வென்று, நித்தியத்தின் நுழைவாயிலில் நுழையும் அனைத்தும் தேவனிடமிருந்தும், தேவன் மூலமாகவும் தேவனுக்காகவும் இருக்கும்.

தேவனைப் பொருத்த வரையில், ஒரு செயலுக்குப் பின் உள்ள நோக்கமே அந்தச் செயலுக்கு மதிப்பையும் தகுதியையும் தருகிறது. நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் தான், ஆனால் அதை ஏன் செய்கிறோம் என்பது அதைவிட வெகு முக்கியமானதாயிருக்கிறது.