WFTW Body: 

தங்கள் நாடு சுதந்திரமாகவும் விடுதலையோடும் இருப்பதற்கென போர்வீரர்கள் எவ்வளவோ அதிகமாய் தங்கள் நாட்டிற்காகத் தங்களை தியாகம் செய்ய முடிகிறதென்றால், நம்முடைய வாழ்க்கையின்மூலமாக எல்லா விதத்திலும் கர்த்தர் கனம் பெறவும், சாத்தான் வெட்கப்படவும் நாம் எவ்வளவு அதிகமாய் எல்லாவற்றையும் (நம் ஜீவனையும் கூட) மனமுவந்து தியாகம் செய்ய வேண்டும்!

உங்களுடைய வேலைகளில், இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் நீங்கள் தேவனிடமிருந்து கிருபையை பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். படிப்பிலும் வேலையிலும் உங்களுக்கு நல்ல யோசனைகளைத் தரும்படி நீங்கள் தேவனிடம் கேட்கலாம், அவர் உங்களுக்கு உதவி செய்வார். விசுவாசத்தோடு கேளுங்கள், அவர் உங்களுக்காக என்ன அற்புதத்தை செய்கிறார் என்று பாருங்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் அவர் உண்மையுள்ளவரென்று அவரை நிரூபணமாய்க் காணும்பொழுது தான் நம்முடைய விசுவாசம் பலப்படுகிறது. எல்லாச் சமயத்திலும் தேவனைக் கனம் பண்ணுங்கள். தேவனைக் கனம் பண்ணுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் மிகச்சிறந்ததையே பெற்றுக் கொள்ளுகிறார்கள். நான் மறுபடியும் பிறந்ததிலிருந்து இது மெய்யாயிருப்பதை நிரூபணமாய்க் கண்டிருக்கிறேன். அந்த நிச்சயமானது, நான் உலகம் முழுவதிலும் சென்று எல்லா இடத்திலும் உள்ள ஜனங்களுக்குக் கீழ்க்கண்டவற்றைக் கூறவேண்டுமென்ற வாஞ்சையைக் கொடுக்கிறது:

வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் தேவனைக் கனம் பண்ணுங்கள்.

எல்லாக் காலங்களிலும் உங்கள் பற்றுதல்களில் தேவனுக்கே முதல் இடம் கொடுங்கள்.

எப்பொழுதும் உங்கள் மனச்சாட்சியைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.

அப்போதுதான் ஒரு பயனுள்ள வாழ்க்கையை உங்களால் வாழமுடியும்.

இந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களது தாலந்துகளாலும், பூமிக்குரிய சாதனைகளாலும் ஒரு பிரயோஜனமுள்ள வாழ்க்கை வாழ்ந்துவிடலாம் என்று எண்ணுபவர்களே இந்த உலகத்தில் மிகப்பெரிய மதியீனர்கள் ஆவர். முடிவில், மனுஷருடைய தாலந்துகளோ, அவர்களது சாதனைகளோ, எதுவும் எவரையும் திருப்திசெய்யப் போவதில்லை.

யோவான் 15 ஓர் அற்புதமான அதிகாரம். நிலைத்திருப்பது என்பது கவலையோ, பதட்டமோ இல்லாத பரிபூரண இளைப்பாறுதலின் ஒரு சித்திரமாகும் (திராட்சைச் செடியின் கொடியைப் போல). தேவன் நம் வாழ்க்கையின் எல்லா விஷயங்களைக் குறித்தும் அக்கறையாய் இருக்கிறார் என்னும் நமது விசுவாசத்தின் விளைவுதான் இது. கடினமான வேலையும் உழைப்பும் இருக்கலாம், ஆனால் கவலையோ பதட்டமோ இருப்பதில்லை. மரத்திலிருந்து கிளைக்கு எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கும் சத்தானது எப்போதும் நாம் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

இரண்டு காரியங்களுக்காகக் கர்த்தரைத் தேடுங்கள்:

1. அவர் நம்மை நீதிமான்களாக்கியது (justification) எவ்வளவு பெரிய வல்லமையான செயல் என்பதை, அதாவது, உண்மையிலேயே இன்று வரை நீங்கள் ஒருபோதும் பாவமே செய்யாததைப் போல உங்களை அவர் காண்கிறார் என்பதை, தம் வசனத்திலிருந்து உங்களுக்குக் காண்பிக்கும்படியாக அவரைத் தேடுங்கள்.

2. எல்லா மனுஷருடைய அபிப்பிராயங்களிலிருந்தும் முற்றிலும் விடுதலையாக்கப்படும்படியாக தேவனைத் தேடுங்கள்.

ஜனங்கள் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்ற எண்ணத்துக்கு எவ்வளவாய் நாம் அடிமைப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்வதே இல்லை. இந்த இரண்டு காரியங்களைக் குறித்தும் நீங்கள் பிரயாசப்படுவீர்களானால் கர்த்தருடைய கரங்களில் ஒரு உபயோகமான பாத்திரமாய் இருப்பீர்கள். பெரும்பாலும், நாம் நமது கடந்தகாலத் தோல்விகளைக்குறித்த எண்ணங்களில் ஊர்ந்து கொண்டிருக்கும்போது நாம் மிகவும் தாழ்மையாய் இருக்கிறோம் என்று நினைக்கச் செய்யும்படி சாத்தான் முயற்சிக்கிறான். ஆனால், நாம் ஒருவரிடம் (2பேதுரு 1:9) மிகவும் கடினமாய் நடந்துகொள்ளும்படி சோதிக்கப்படும்போது மட்டுமே நம் கடந்தகாலத் தோல்விகளை நினைத்துப்பார்த்து அந்த நபரிடம் இரக்கம் பாராட்ட வேண்டுமே ஒழிய மற்றப்படி அல்ல.

இந்த இரண்டு விஷயங்களிலும் நீங்கள் தெளிவாக இருந்தால், உங்களுடைய வாழ்க்கையானது, எதுவும் தன்னைக் கீழ்நோக்கி இழுக்கமுடியாத ஒரு ராக்கெட்டைப் போல விண்ணில் பாய்ந்துவிடும். இந்த விஷயங்களை நீங்கள் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி அறிவுப்பூர்வமாக அறிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள். தேவனுடைய வார்த்தையை அப்படியே விசுவாசித்து நம்புங்கள்.

சுய-ஆக்கினைத்தீர்ப்பும் மனச்சோர்வும் எப்பொழுதுமே சாத்தானிடமிருந்து மட்டுமே வருகின்றன. நீங்கள் ஒருபோதும் கடந்தகாலத்தில் வாழவே கூடாது. உங்களுடைய கடந்தகாலத் தோல்விகளைக் குறித்து - கடந்தகால வெற்றிகளையும் குறித்து கூட - நினைப்பதை நிறுத்தி விடுங்கள். நீங்கள் தோல்வியடையும்போது உடனடியாகக் குதித்து எழும்பித் தொடர்ந்து ஓடுங்கள். உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதேயுங்கள்.