சாத்தானுடைய முக்கியமான ஆயுதங்களில் ஒன்று “பயம்”. அவன் அதைத் தொடர்ச்சியாய்ப் பயன்படுத்துகிறான். விசுவாசிகள், மற்றவர்களை பயமுறுத்தவோ அல்லது மிரட்டவோ செய்தால், (அறியாதிருந்தாலும்) அவர்கள் சாத்தானோடே ஐக்கியம் கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் பயன்படுத்துவது சாத்தானுடைய ஆயுத களஞ்சியத்திலிருக்கும் ஓர் ஆயுதமல்லவா? “தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல்..” (2தீமோத்தேயு 1:7). பயம் என்பது எப்போதும் சாத்தானுடைய ஓர் ஆயுதமாயிருக்கிறது. எனவே மனுஷர் நமக்கு விரோதமாகப் பயன்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களுக்கும், பயமுறுத்தும் தந்திரங்களுக்கும் நாம் பயப்படக்கூடாது. அப்படிப்பட்ட மனுஷர்கள் தங்களை “விசுவாசிகள்” என அழைத்துக்கொண்டாலும் கூட அவர்கள் எல்லாரும் சாத்தானின் ஏவலாளிகளாக இருக்கிறார்கள். இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய, வாழ்நாள் முழுவதற்குமான ஒரு பாடமாகும்.
ஜனங்களை “பயமுறுத்தும்” விதமாக நாம் பிரசங்கித்திடவும் கூடாது. நரகத்தைப் பற்றி ஜனங்களை எச்சரிப்பதற்கும் அவர்களை பயமுறுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இயேசு ஒருபோதும் யாரையும் பயமுறுத்த முயற்சிக்கவில்லை. பல்வேறு வசனங்களை மேற்கோள் காட்டி நம்மைக் குற்றஉணர்ச்சிக்கும் ஆக்கினைக்குள்ளாக்குதலுக்கும் கொண்டுவர முயற்சிக்கும் போதகர்களுக்கு நாம் ஒருபோதும் பயப்படக்கூடாது. விசுவாசிகள் தங்கள் சபையை விட்டு வெளியேறினாலோ அல்லது தங்களுக்கு தசமபாகம் கொடுக்கவில்லை என்றாலோ, தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு அவர்கள் உள்ளாவார்கள் என்று அவர்களை பிரசங்கியார்கள் பயமுறுத்துகிறார்கள். இவை அனைத்தும் சாத்தானுடைய தந்திரங்களே.
“கர்த்தருக்கு பயப்படும் விஷயத்தில், தீவிரமான மோப்பசக்தியைப் போன்ற கூர்மையான உணர்வு அவருக்கு இருக்கும்” (ஏசாயா 11:3-இன் துல்லியமான கருத்து). ஒரு போலீஸ் நாய் ஒரு குற்றவாளியின் வாசனையை நுகர்ந்து அவன் சென்ற பாதையை பல சாலைகளின் சந்திப்பினூடேயும் கண்டறிவது போல, தேவனுக்கு எது பிரியம் என்பதை மிகத் தெளிவாக அறிந்திடும் வகையில், பரிசுத்த ஆவியானவர் நமது உணர்திறனை மிகவும் கூர்மையாக்க விரும்புகிறார். பல குரல்கள் நம் காதுகளில் ஒலிக்கிறதான எவ்வித சந்திப்புகளிலும் நாம் நிற்கும்போதும், தேவனை மகிமைப்படுத்தும் பாதை எதுவெனக் கண்டறியச் செய்வார். இந்தப் பகுதியில் நீங்கள் யாவரும் தீவிரமான மோப்பசக்தியைப் பெற்றிடுங்கள். சுற்றிலும் பாவமும் ஒழுக்கக்கேடும் சூழ்ந்திருக்கும் ஒரு தீய தேசத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களை சுத்தவான்களாகக் காத்துக்கொள்ளுங்கள்.
சாத்தானுடைய பிரதான ஆயுதங்களில் மற்றொன்று, நம்மை சோர்வுக்குள்ளாக்குவது. சோர்வு என்பது எப்பொழுதுமே, ஆம், எப்பொழுதும் அது சாத்தானிடம் இருந்து தான் வருகிறது. ஒருபோதும் அது தேவனிடத்திலிருந்து வருவதல்ல. உடல், பொருள், படிப்பு, மற்றும் ஆவிக்குரிய சம்பந்தப்பட்ட அல்லது வெறெந்தக் காரியமாக இருந்தாலும், அது உங்களை சோர்வுக்குள்ளாக்க நீங்கள் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
பிசாசின் நோக்கமே உங்களை முதலில் சோர்வுறச் செய்து, அதன்மூலம் உங்களைப் பாவத்துக்குள்ளாக நடத்துவதுதான். (படிப்பினிமித்தம் அல்லது வேலையினிமித்தம் வீட்டைவிட்டு வெளியூரில்/வெளிநாட்டில் இருக்கும் வாலிபராய் நீங்கள் இருந்தால்) நீங்கள் கவனமாய் இராவிட்டால் தனிமையும், வீட்டைக் குறித்த ஏக்கமும் கூட உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமாகிவிடும். நீங்கள் போரிட்டு அதை மேற்கொள்ள வேண்டும். தேவன் உங்களுக்குக் கிருபை தருவார்.
நீங்கள் காணமுடியாததும் நினைத்திராததுமான, உங்களுக்கு முன்னிருக்கும் ஆபத்துக்களைக் குறித்து தேவன் முன்கூட்டியே உங்களை எச்சரிப்பாராக. தேவன் உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்து உங்களைப் பாதுகாப்பாராக.
தம்மிடத்தில் விசுவாசத்தோடு கேட்பவர்களுக்கு தேவன் ஞானத்தை வாக்குப் பண்ணியிருக்கிறார் (யாக்கோபு 1:5). நீங்கள் கேட்கவில்லை என்றாலோ, அல்லது நீங்கள் கேட்டும் உங்களுக்குத் தேவையான ஞானத்தை நிச்சயமாக தேவன் தருவார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றாலோ, அது உங்களுக்குக் கிடைக்காது.
நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தேவனது குறிக்கோள் அல்ல, கிறிஸ்துவைப் போல் உங்களை மாற்றுவதுதான் அவரது குறிக்கோள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்தெந்த பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தேவன் காண்கிறாரோ, அதை உங்களுக்குக் கொடுப்பார். ஆனால், அது பிரதானமானது அல்ல - ஏனென்றால் பணத்தைக் குவித்துவைக்கும் தொல்லையை தேவன் உலகப்பிரகாரமான ஜனங்ளுக்குத்தான் கொடுத்திருக்கிறார் - நமக்கு அல்ல (பிரசங்கி 2:26).