WFTW Body: 

கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஒவ்வொருவரும் சாத்தானின் தாக்குதலுக்கு இலக்காக இருக்கிறார்கள். நாம் எந்த அளவிற்கு தேவனுக்குப் பயனுள்ளவர்களாய் இருக்கிறோமோ அந்த அளவுக்கு சத்துருவால் நாம் தாக்கப்படுவோம். இத்தாக்குதலைத் தவிர்த்திட நம்மால் முடியாது. சாத்தான் நிச்சயமாய் அவதூறுகள், பொய்யான குற்றச்சாட்டுகள், திரித்துக் கூறப்பட்ட கதைகள் போன்றவைகள் மூலமாய் நம்மைத் தாக்கிடவே செய்வான்! அதுமாத்திரமல்ல, அவன் நம்முடைய மனைவியையும், பிள்ளைகளையும் கூட தாக்குவான்!

இயேசுவின் ஜீவகாலத்தில் ஜனங்கள் அவரைப்பற்றிக் கூறிய தீமையானவைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். “அதே வார்த்தைகளைத்தான்” இன்றும், அவரைத் தாக்குவதற்கு ஜனங்கள் பயன்படுத்துகிறார்கள். “போஜனப்பிரியன், மதுபானப்பிரியன்” என்றும் (லூக்கா 7:34), “மதிமயங்கிய பைத்தியக்காரன்” என்றும் (மாற்கு 3:21), “பிசாசு பிடித்தவன்” என்றும் (யோவான் 8:48), “பிசாசுகளின் தலைவன்” என்றும் (மத்தேயு 12:24)... இன்னும் இதுபோன்ற பொல்லாத பெயர்களை வைத்து ஜனங்கள் இயேசுவைத் தாக்கினார்கள். மேலும், வேதமும் மோசேயும் கற்பித்த உபதேசங்களுக்கு விரோதமாய் இயேசு “கள்ள உபதேசம்" பிரசங்கிக்கிறார் என்றும் அவர்கள் கூறினார்கள் (யோவான் 9:29). இவ்வாறுதான், ஆண்டவரிடம் வந்து ஜனங்கள் சத்தியத்தைக் கேட்க விடாதபடி அவரிடமிருந்து அவர்களை விரட்டிவிட்டார்கள். ஆனால் இயேசுவோ, இதுபோன்ற ஜனங்களின் தாக்குதல் வாசகங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமென சிறிதேனும் சிந்திக்கக்கூட இல்லை! ஆம், தனிப்பட்ட விதத்தில் தம்மீது தாக்கிய எந்தக் குற்றச்சாட்டுக்கும் அவர் ஒருபோதும் பதில் பேசவே இல்லை. அவர்போலவே நாமும் அவ்விதமே இருந்திடக்கடவோம்! மாறாக, உபதேசரீதியான கேள்விகளுக்கு மாத்திரமே இயேசு பதில் கூறினார்! நாம் வாழும் இக்காலத்திலும், ஜனங்கள் இயேசுவை “அவர் ஒரு விபசாரக்காரன்” என்றுகூடப் பழி சாட்டுவதைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களை நியாயந்தீர்த்திட தேவன் வானத்திலிருந்து இறங்கி வருவதில்லை!

அப்போஸ்தலனாகிய பவுலையும் “வஞ்சகன்” “கள்ளத்தீர்க்கதரிசி" “ஜனங்கள் பொல்லாததாய் கருதிய ஒரு குழுவைச் சார்ந்தவன்” என்று அவன் சென்றவிடமெல்லாம் அழைத்தார்கள் (அப்போஸ்தலர் 24:14; 28:22). இவ்வாறாக, பவுலின் பிரசங்கங்களை ஜனங்கள் கேட்கவிடாதபடியும் முயற்சித்தார்கள்.

இதே கதிதான் சபையின் சரித்திரத்தில் வந்த வலிமையான தேவ மனிதர்களாகிய ஜான் வெஸ்லிக்கும், சார்லஸ் பின்னிக்கும், வில்லியம் பூத்திற்கும், வாட்ச்மேன்-நீக்கும் இன்னும் ஒவ்வொரு மெய்யான தேவனுடைய தீர்க்கதரிசிக்கும் ஏற்பட்டது.

இயேசுவைப்போல் மாற அப்படிப்பட்ட ஒரு கிரயத்தை செலுத்த நாம் வாஞ்சிக்கிறோமா? அல்லது மனுஷருடைய கனத்தை நாம் இன்னும் தேடுகிறோமா?

நாம் நொறுக்கப்படும்பொருட்டு, தவறாய் புரிந்துகொள்ளப்படவும், தவறாய் நியாயந்தீர்க்கப்படவும், பொய்யாய் குற்றம் சாட்டப்படவும், பொதுவெளியில் சிறுமைப்படுத்தப்படவுமாய் கடந்து செல்ல தேவன் நம்மை அனுமதிக்கிறார். அப்படிப்பட்ட எல்லா சூழ்நிலைகளிலும் நம்மைத் துன்புறுத்துகிற மனுஷரைப் பார்க்க நாம் மறுக்கவேண்டும். அது நம் சகோதரர்களாகவோ அல்லது நம் எதிரிகளாகவோ யாராகயிருப்பினும், ஒரு பொருட்டல்லவே. ஒவ்வொரு யூதாஸ்காரியோத்தின் கரத்திற்குப்பின்னால் நம் பரம பிதா நாம் பானம்பண்ணப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் நம் பிதாவின் கரத்தைக் காண்போமானால், எவ்வளவு கசப்பும் வலியும் இருந்தாலும் அந்த பாத்திரத்தை மகிழ்ச்சியோடு பருகுவோம். மாறாக யூதாசை மட்டும் காண்போமெனில், நம்முடைய பட்டயத்தை எடுத்து (பேதுருவைப்போல்) ஜனங்களின் காதுகளை (அல்லது அவர்களுடைய நற்பெயரை) வெட்டிவிடுவோம்.

நாம் தாக்கப்படும்போதோ அல்லது தவறாய் குற்றம் சாட்டப்படும் போதோ உள்ள சமயங்களில், அவருடைய பலத்த கரத்திற்குக் கீழாக நம்மைத் தாழ்த்தும்படியே தேவன் விரும்புகிறார். இவ்வாறு நம்மைத் தாழ்த்த வழிநடத்தும் கரம் மனிதனுடையதல்ல, “அது தேவனுடைய கரம்” என்பதை நம் கண்கள் கண்டுவிட்டால் நம்மை நாம் தாழ்த்துவது நமக்கு மிக இலகுவாயிருக்கும்!

கடந்த வருடங்களில் “விசுவாசிகள்” என்னைப்பற்றியும், என் போதகங்களைப்பற்றியும் பல்வேறு வகையான தீமைகளைச் சொல்லியிருக்கிறார்கள்! நான் மாத்திரமல்லாமல், என் குடும்பத்தையும் சேர்த்து பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி... அவைகளை விமர்சித்து சிறு கைப்பிரதிகளையும் “புத்தகங்களையும்கூட” எனக்கு விரோதமாய் வெளியிட்டிருக்கிறார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில், "அவர்களுக்கு எந்தப் பதிலும் எழுதவேண்டாம்" என்றே ஆண்டவர் எப்போதும் எனக்குச் சொல்வதுண்டு. ஆகவே நானும் அவைகளைக் குறித்து அமைதியாய் இருந்துவிடுவேன். இதன் விளைவாய் ஆண்டவர் என்னிலும், என் குடும்பத்தாரிடத்திலும் மாபெரும் “பரிசுத்தமாகுதலின் சுத்திகரிப்பின் கிரியைகளைச்” செய்திருக்கிறார். ஆம், இவ்வாறாகவே தீமையும் நமக்கு நன்மையாக கிரியை செய்யும்படியாய் தேவன் செய்துவிடுகிறார்!

“கர்த்தருக்கே ஏற்ற ஒரு நாளில், அவர் இந்த கார்மேகங்களையெல்லாம் அகலச் செய்து, பிரகாசிக்கும் சூரிய ஒளியை உதிக்கச் செய்வார்" என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். ஆகிலும், அந்த காலத்தைத் தீர்மானிப்பது அவரேயல்லாமல், நானல்ல! (அப்போஸ்தலர் 1:7). அதுவரை நான் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய பலத்த கரத்திற்குள் என்னை நானே தாழ்த்தி அடங்கியிருப்பதுதான்! யாருக்கு முன்பாகவும் நின்று என்னை நியாயப்படுத்துவது என்னுடைய வேலையேயல்ல! அந்த வேலையை நான் செய்யத் தொடங்கிவிட்டால், வேறு எந்த வேலையும் செய்வதற்கு எனக்கு நேரமேயிருக்காது!

கன்னானாகிய(CopperSmith-தாமிரக்கொல்லன்) அலெக்சந்தரைப் பற்றி பவுல் கூறியதுபோலவே, நம் எதிரிகளுக்கு, அவர்களுடைய கிரியைகளுக்குத்தக்கதாக “கர்த்தரே” பலனளிப்பார்! (2தீமோத்தேயு 4:14). ஆகவே, இதுபோன்ற பழிவாங்குவதற்குரிய விஷயங்களை கர்த்தரிடம் ஒப்புக் கொடுத்துவிடுவதே நமக்கு மிகுந்த பாதுகாப்பானதாகும் (ரோமர் 12:19).

ஆம், எல்லா விஷயங்களையும் தேவனிடம் ஒப்புக்கொடுப்பதே மேன்மையான வாழ்க்கையாகும். ஏனெனில், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதை அவர் நன்கு அறிவார்! “சகலமும்” அவருடைய அதிகாரத்திற்கே உட்பட்டிருக்கிறது! நல்லதொரு சிற்பியாய், நம்மில் இயேசுவை வடிவமைப்பதற்காக அவரே பாறையை நேர்த்தியாய் செதுக்கிக் கொண்டிருக்கிறார். பாறையின் “சில பகுதிகள்" கடினமானதாய் இருக்கிறபடியால், அவைகளைச் செதுக்குவதற்கு, இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளையும், எதிர்ப்புகளையும் அவர் உபயோகிக்க வேண்டியதாய் இருக்கிறது! இவ்வாறு அவருடைய செதுக்குதலுக்கு நாம் அடங்கியிருந்தால், முடிவில், கிறிஸ்துவுக்கு ஒப்பான மனிதர்களாய் நாம் வடிவம்பெற்று, ஆவிக்குரிய அதிகாரத்தையும் பெற்றிட முடியும்!

தாம் நடத்தப்பட்ட ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் இயேசு தம் பிதாவின் கரத்தைத் தெளிவாய் கண்டபடியால், தம்மைக் காட்டிக் கொடுத்த யூதாஸையும் “சிநேகிதனே!” என அவரால் அழைக்க முடிந்தது! இவ்வாறு நம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய சர்வவல்லமையுள்ள ஆளுகையை நாமும் காணமுடிந்தால், அச்சூழ்நிலைகளில் நம்மை நாமே தாழ்த்துவது நமக்கும் எளிதாய் மாறிவிடுமே! இதனிமித்தம், ஏற்ற சமயத்தில் நம்மை உயர்த்துவதும் தேவனுக்கு எளிதாய் இருக்கும்! ஆம், நம் தோளின்மீது விழுந்த அழுத்தங்களை 'எப்போது' அகற்றி, அதே தோளின்மீது தம் அதிகாரத்தை ‘எப்போது' தரவேண்டும் என்ற “ஏற்றவேளையை” தேவனே அறிந்திருக்கிறார். எனவேதான் நாம் அவருக்காகவே காத்திருக்க வேண்டும்! இவ்வாறு 'கர்த்தருக்காக காத்திருக்கிற' ஒருவர்கூட ஒருபோதும் ஏமாற்றம் அடைந்தோ அல்லது வெட்கம் அடைந்தோ போவதில்லை! (ஏசாயா 49:23).