WFTW Body: 

உலகிலேயே மிகப்பெரிய காரியம் தேவனை அறிந்துகொள்வது தான். ஏனென்றால், நாம் தேவனை அறிந்திருக்கும் போது, நாம் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்துகொள்வோம். நாம் உறுதியான அடித்தளத்தின் மீது நிற்கிறோம் என்பதை அறிந்திருப்பதால், முழு உலகமும் நமக்கு எதிராய் வந்தாலும், நாம் வாழ்க்கையை எதிர்கொள்ள தைரியமுடையவர்களாயுமிருப்போம். தேவனை அறிந்துகொள்ள நேரம் பிடிக்கும். ஆகவே நீங்கள் சிறுவயதாயிருக்கும்பொழுதே தேவனை அறிந்துகொள்ளத் துவங்குவது நல்லது. தேவனை அறிந்துகொள்வதற்கு, இந்த உலகிலுள்ள அனைத்தையும், ஒப்பீட்டளவில் (relatively), குப்பை என்று கருத விருப்பமுடையவர்களாயிருக்க வேண்டும். அதன் பொருள் என்னவென்றால், உலக ஜனங்கள் மிகப்பெரியது என்று கருதும் காரியங்கள் உங்களை ஈர்க்காமல் இருக்கவேண்டியது மட்டுமல்லாமல், அவை உங்களுக்குக் குப்பையாகத் தோன்றவேண்டும்! பவுலுக்கு அப்படித்தான் இருந்தது (பிலிப்பியர் 3:8 -ஐ பார்க்கவும்).

இந்த உலகத்தில் பணத்தையோ, இன்பத்தையோ, கனத்தையோ, உயர்வையோ நாம் நாடிச் செல்வோமானால், நம்முடைய கைகள் குப்பைகளால் நிறைந்திருப்பதை நித்தியத்தின் தெளிவான வெளிச்சத்தில், ஒரு நாளில் நாம் கண்டுகொள்வோம். அப்பொழுது, தம்முடைய ஐசுவரியத்தை நாம் சுதந்தரித்துக் கொள்ளும்படி தேவன் சதா நம்மை அழைத்துக்கொண்டிருக்க, குப்பைகளைப் பற்றிப் பிடிப்பதிலேயே நாம் நம்முடைய பூமிக்குரிய வாழ்வை செலவிட்டிருந்ததைக் கண்டுகொள்வோம். ஆகவே ஞானமுள்ளவர்களாயிருந்து, பூமிக்குரிய காரியங்களைப் பயன்படுத்த மாத்திரம் செய்யுங்கள் (ஏனென்றால், இங்கே நாம் வாழ்வதற்கு அவை நமக்குத் தேவை); ஒரு கோப்பைக் கூழுக்காக உங்கள் சுதந்தர வீதத்தை இழந்துபோகாதபடி, அவைகள் எவற்றாலும் பிடிக்கப்பட்டுவிடாதீர்கள்.

நீங்கள் உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து கருத்துள்ளவர்களாயிருக்கிறீர்கள் என்பதை தேவன் பார்க்கும்போது, அவருடன் கொண்டிருக்கும் உங்களது உறவைக் குறித்து நீங்கள் வஞ்சிக்கப்பட்டுப் போகாதபடிக்கு, உங்கள் வாழ்க்கையில் அசைக்கப்படக் கூடிய எல்லாவற்றையும் அவர் அசைப்பார். உங்கள் ஆவியைக் குறித்து அவர் வைராக்கியம் உள்ளவராயிருக்கிறார். ஒரு புத்தகத்தின் மூலமாகவோ (வேதப்புத்தகம்), அல்லது வேறொரு நபரின் மூலமாகவோ அல்லாமல், நீங்கள் தேவனை தனிப்பட்ட வகையில் அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

நாம் சரிசெய்ய வேண்டிய எந்தக் காரியத்தையும் இப்பொழுதே சரிசெய்து கொள்ளும்படி, அவர் நம்முடைய மெய்யான நிலைமையை நமக்குக் காண்பிக்கிற அவருடைய அன்புக்காக அவரை நாம் ஸ்தோத்திரிப்போமாக. நாம் பாவத்தை வெறுத்து நம்மைத் தூய்மையாகக் காத்துக்கொள்வது மட்டும் போதாது. இல்லை. நாம் ஆண்டவராகிய இயேசுவுடன் ஓர் ஆழமான தனிப்பட்ட உறவுக்குள் வர வேண்டும். இல்லாவிட்டால், நம்மைச் சுத்திகரித்துக் கொள்வதெல்லாம், வெறும் ஒரு ‘தார்மீக சுய-முன்னேற்ற செயல்முறைத் திட்டமாக’ (Moral Self-Improvement Program) மாறிவிடும். ஆண்டவரோடு ஒரு நெருங்கிய உறவைக் கட்டுவதற்கு, முதலாவது, பாவம் என்று அறிந்த எந்தக் காரியமாயிருந்தாலும், அதைக் குறித்த உணர்வைப் பெற்ற மாத்திரத்தில் அதற்காக துக்கித்து, அதை அறிக்கை செய்து, உங்கள் மனச்சாட்சியைத் தூய்மையாகக் காத்துக்கொள்ள நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அடுத்ததாக, ஒரு நாளில் அடிக்கடி ஆண்டவரோடு பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது மாத்திரமே, ஒரு நாளில், உங்களைச் சுற்றிலுமுள்ள எல்லாம் நொறுங்கிக் கீழே விழும்போது நீங்கள் நிலைத்து நிற்க முடியும்.

தேவனை அறிந்துகொள்வதே நித்திய ஜீவன் (யோவான் 17:3) என்பதால், நீங்கள் ஆண்டவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே உங்கள் எல்லாரையும் குறித்து எனக்கிருக்கிற மிகப்பெரிய வாஞ்சையாயிருக்கிறது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருக்கும் கிறிஸ்தவக் குழுக்களாலும் போதகர்களாலும் நான் எதிர்க்கப்பட்டு, பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்பட்ட போது, அசைக்கப்படாமலும், இளைப்பாறுதலோடும், எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள்மீது அன்புடனும் இருக்கும்படி எனக்கு உதவியது இந்த எனது ஆண்டவரை அறியும் அறிவுதான். உங்களில் ஒவ்வொருவரும் இதேவிதமாகவும், நான் ஆண்டவரை அறிந்திருக்கும் விதத்தைக் காட்டிலும் இன்னும் மேலான வகையில் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன்.